கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது

கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது 

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=906

31-10-2006

அன்புமிக்க தீப.நடராஜன் அவர்களுக்கு, 

வணக்கம். 

சற்று முந்தித்தான் ராஜு ஆட்டோவில் புறப்பட்டான். எத்தனை வயதானாலும், நமக்கும் சரி பிள்ளைகளுக்கும் சரி, இப்படிப் பத்துநாள் எட்டிப் பார்த்துவிட்டுப் போவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. சொல்லப் போனால், என் தனிப்பட்ட அனுபவத்தில், அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கும்போதுகூட இந்த அளவுக்குக் கஷ்டமாக உணர்ந்தது இல்லை.  

நாளைக்குப் போய்ச் சேர்ந்து தொலைபேசுகிறவரை, இந்த மழைக்காலத் தவளைகளின் சேர்ந்திசையைக் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இவ்வளவு தவளைகளும் புரட்டாசி ஐப்பசிவரை எப்படி மூச்சுக் காட்டாமல் இருக்கமுடிகிறது என்பது தெரியவில்லை.  

யானையைக்கூட

அடிக்கடி பார்க்க முடிகிறது 

மாதக் கணக்காயிற்று 

மண்புழுவைப் பார்த்து 

என்று நான் முன்பு எழுதியிருக்கிறேன். ரொம்ப காலத்துக்குப் பிறகு, (மழைத்தண்ணீர் வரித்துக் கொண்டு ஓடுகிற ஜல்லி ரோட்டில், மண்புழுக்கள் நெளிந்து போய்க் கொண்டிருந்தன. தண்ணீரை எதிர்த்துப் போகிற திசையையே அவை தேர்ந்தெடுக்கின்றன.) இன்று பார்க்க முடிந்தது. நிச்சயம் எங்கள் வீட்டுப் பக்கமாக ஒரு யானை வரும் சந்தர்ப்பமில்லை. 

*

   உங்கள் கடிதத்தில் 17ம்தேதி போட்டிருக்கிறீர்கள். எனக்கு எட்டு நாட்கள் கழித்து 25ம்தேதிதான் கிடைத்தது. 25 கூட அல்ல 26ல். நாங்கள் இதற்கு முன்பு குடியிருந்த முகவரியில் போய்த்தேடிவிட்டு, பைய நடந்து இந்த-19, சிதம்பர நகர், பெருமாள்புரம், திருநெல்வேலி-7 வீட்டிற்கு நேற்று வந்தது. ஒரு கடிதத்தை எழுதி எழுதின ஒரு வாரத்திற்கு அப்புறம் அதை அனுப்புகிறதில், நீங்களும் என்னை மாதிரித்தான்போல. 

*

இன்றோடு, லேகியம் சாப்பிடச் சொல்கிறது மாதிரி ஒரு மண்டலத்துக்கும்மேல் ஆகிவிட்டது, ஆஸ்பத்திரிக்குப் போய். ஜிஹிஸிறி சிகிச்சை நடந்து இன்றோடு முப்பத்தி ஒன்பது நாட்கள் முடிந்துவிட்டது.  

வீட்டுக்குள்ளேயே (அந்தக் காலத்து) சமைஞ்ச பிள்ளைமாதிரி அடைந்து கிடப்பதைத்தவிர வேறு பாதிப்பு ஒன்றுமில்லை. அதைச் சொன்னதும் மேலூர், இடைகால், மகராஜநகர், கோயம்புத்தூர் என்று ஆளாளுக்குப் புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டார்கள்.  

இவ்வளவுதூரம் தொடர்ந்து படித்தால் ஜீரணம் ஆகுமா என்று தெரியவில்லை. அதற்காக சுக்குக் குடிக்கிறமாதிரி அவ்வப்போது மக்கள் தொலைக்காட்சியில் மாமா சொல்கிற கதைகளைக் கேட்டுக் கொள்கிறேன். நெல்லை கண்ணன் குறுந்தகடுகள் இரண்டை அவரே கொடுத்தார், இஞ்சிமுரப்பாத் துண்டுமாதிரி. 

*

   விழா அன்றைக்கு ராத்திரியே சுண்டுவலி ஆரம்பித்துவிட்டது. பொட்டுக்கூடத் தூங்கவில்லை. மற்றவர்களுக்கு எல்லாம் நிமிஷமாகவும் வினாடியாகவும் கழிந்த ராத்திரி, எனக்குச் சொட்டுச் சொட்டாக. 

வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போவதற்கு ஏதாவது தூரக் கணக்கெடுப்பு எடுத்திருந்தால், நான்தான் அதிக தூரம் நடந்ததற்கு அன்றைக்கு ரிக்கார்டு உண்டு பண்ணியிருப்பேன். ஆனால் மறுநாள் அதிகாலை அந்த ஐந்தருவிச் சாலை, சாரலில் நனைந்து கிடந்த அழகைத் தரிசிக்கத்தான் அப்படித் தூங்காமல் கிடந்தேனோ என்னவோ.  

அப்படி ஒரு அழகான காலை, அழகான பாதை அது. நான் இன்னும் அங்கேதான் நடந்துகொண்டிருக்கிறேன் இதை எழுதும்போது.  

*

  எதிர்பாராத உடல்நலிவு, எதிர்பாராத செலவு என்பவை தவிர பெரிய அளவில் வலியோ அவஸ்தையோ இல்லை. (சிறுநீர் பிரியாமல், திருநெல்வேலியில் இறங்கினதில் இருந்து, மருத்துவமனையில் கதீட்டர் போடுகிறவரை, பட்ட அவஸ்தை தனி ரகம். மகப்பேறு சமயத்தில் சூலிகள் எல்லாம் எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள் அந்தக் கொடுமையை.) 

கதை எழுதி நான்கைந்து வருடங்கள் ஆயிற்று. “டச் விட்டுப்போச்சு” என்று சொல்லும்படியான சிநேகிதமா நமக்கும் எழுத்துக்கும். நீங்கள் தாய்பாலா அரங்கத்தில் நாங்கள் நுழைந்ததும் கட்டிப் பிடித்ததுமாதிரி அப்படியே “ஆவி சேர்த்து”கட்டிப் பிடித்துக் கொள்ளவேண்டும் அதை மறுபடி என்று இருக்கிறது. மூடியைத் திறந்திருக்கிறேன். எழுதாத பேனா நிப் நுனியில் மை உறைந்து போகிறது மாதிரி கொஞ்சம் மக்கர் பண்ணுமோ என்று நினைத்தேன்.  

அப்படி ஒன்றும் இல்லை. ரொம்ப நேரம் சம்மணம் கூட்டி உட்கார்ந்திருந்தால் கால் மரத்துப்போகுமே அதுமாதிரி இருக்கிறது. இரண்டு உதறு, தரையில் இரண்டு தட்டுத் தட்டிவிட்டு எழுத ஆரம்பித்திருக்கிறேன். இரண்டு கதைகள் எழுதியாயிற்று. இன்னும் ஏழெட்டு எழுதினால், ஏற்கனவே கைவசம் இருப்பதையும் சேர்த்து, இன்னொரு தொகுப்புக்கு ரெடி பண்ணிவிடலாம்.  

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் எல்லாம் என்னத்துக்கு என்று தோன்றினாலும், மாலையும் கழுத்துமாக இரண்டு பேரும் “மணவடை”யில் உட்கார்ந்தால் சந்தோஷமாகத்தானே இருக்கும்.  

தினகரன் தீபாவளி மலரில் கதையைப் பார்க்கும்போது அப்படித்தானிருந்தது. அம்ருதாவுக்கு ஒன்று அனுப்பியிருக்கிறேன்.  

*

அம்மா நான்கு மாதங்களாகச் சங்கடப்படுகிறார்கள். அம்மாவோடு அப்பாவுக்கும் சங்கடம். எண்பது வயதுவரைக்கும் கவலையில்லாமல் ராஜாமாதிரி இருந்தவிட்டு (ராஜாவுக்கும் பரிபாலனக் கவலை இல்லாமலா இருக்கும்) இப்போது அம்மாவைக் கவனிக்கவேண்டிய சூழ்நிலை.  

எங்களுக்குக் கஷ்டம். ஒருவகையில் அம்மாவுக்கு சந்தோஷம்.  

*

இந்தக் காலத்தில் யார் “காயிதம்” எழுதுகிறார்கள். அதுவும் இப்படி ஏழெட்டுப் பக்கம். கார்டு, கவர் வாங்கினாலே இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். அதுவும் “தபால்போட வந்தேன்”என்று சொன்னால், “கூரியர்ல போட்டால் டாண்ணு நாளைக்கு காலையில கையில கொண்டுபோய் “இந்தா பிடி”என்று கொடுத்திருவானே” என்று சிரிக்கிறார்கள். இதுக்கு என்ன சிரிப்பு வாழ்கிறது. சரி கழுதைப்பயல்கள் சிரித்தால் சிரித்துவிட்டுப் போகட்டும். அவர்களுக்குத் தெரிந்த அருமை அவ்வளவுதான்.  

*

குடும்பத்தினர் எல்லோர்க்கும் எங்களது அன்புடன், 

கல்யாண்ஜி. 

கடிதச் சேகரம்: கழனியூரன் 

குறிப்பு:- தீப. நடராஜன் – ரஸிகமணி டி.கே.சி. அவர்களின் பேரன்.

Advertisement

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது

  1. ramji_yahoo சொல்கிறார்:

    அரிய பொக்கிஷம் இமாதிரியான பதிவுகள்.

    உங்கள் வலை பக்கத்தை தொடர ஆசை, அந்த மெனு இல்லையே

  2. sulthansi சொல்கிறார்:

    எனக்கு வலைப்பூக்களை வடிவமைப்பதைப் பற்றி அதிகம் தெரியாது. இது ஒரு தொடக்கநிலை என்பதால் மேலும் மேலும் இவ்வலைப்பூவை சிறந்ததாக்க முயற்ச்சிப்பேன், நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s