காற்றின் அனுமதி – வண்ணதாசன்

காற்றின் அனுமதி – வண்ணதாசன்

http://azhiyasudargal.blogspot.com/2010/02/blog-post_19.html

‘அப்பா, நானும் வாக்கிங் வரட்டுமா ‘ – என்று தினகரி கேட்கவும் ‘ஓ. எஸ் ‘ என்று கூட்டிக்கொண்டு புறப்பட்டாயிற்று. நடக்கிறதுக்கு என்ன காசா, பணமா. அதே சட்டை, அதே வேட்டி, அதே செருப்பு என்று புறப்பட வேண்டியதுதான். மனது மாத்திரம் கொஞ்சம் புதிது. தாத்தா கோலப்பொடி போட்டு, துணியில் வடிகட்டின விபூதிபோட்டுத் துடைத்து வைத்த அரிக்கேன்லைட் சிமினி மாதிரி, நேற்றையப் புகை, நேற்றையக் கருப்பு, நேற்றைய எண்ணெய்க் கசடு, ஒன்றிரண்டு நுனிவிரல் ரேகையை எல்லாம் துடைத்துப் புதிதாக வைத்துக் கொள்கிற காரியம்தான் நடை.

இப்படி விடியற்காலம் எழுந்திருந்து நடந்து கொண்டிருப்பவனுக்கு, வேறு என்ன சாதுரியம் இருக்கப்போகிறது. மலை, காற்று, சூரியன் என்று எல்லாம் வேறு உலகத்து விஷயங்களாகிவிட்ட அலுவலக நடப்புகளில் மூன்று வருடங்களுக்கு ஒரு ஊர் என்பது நிச்சயம். மற்றவர்களுக்கும் ஆர்டர் வருகிறது. அவர்கள் கேட்ட ஊர், முயற்சி பண்ணின இடம் கிடைக்காவிட்டால், டக்கென்று லீவு போடுகிறார்கள். லீவு முடிந்த பிறகு மந்திரம் போட்ட மாதிரிக் கேட்ட ஊர் அல்லது அதற்குப் பக்கத்தில் கிடைத்துவிடுகிறது. மரங்கொத்திகளுக்கு மரங்கள் இருக்கிறபடியும், மீன் கொத்திகளுக்கு மீன்கள் இருக்கும்படியான நியதியை இயற்கை இன்னும் அனுசரித்துத்தான் வருகிறது.

‘என்னப்பா, இப்பவே இவங்க பீடி சுற்றிக்க்கிட்டு இருக்காங்க ‘ – வாசலை விட்டு வெளியே தெருவில் கால் வைக்கும்போதே, தூக்கத்தில் உப்பி மேலும் அழகான கண்களுடன் தினா இதைக் கேட்டாள். ஓய்வு சிலசமயம் அழகு தருகிறது. இயக்கம் இன்னும் சிலசமயங்களில் அழகு தருகிறது. எதிர்த்த நடையில் மடியில் சுளகும் பீடி இலையுமாக ஏறிட்டுப் பார்க்காமல் இருந்த அந்தப் பெண்ணின் பக்கத்தில், வாயில் ரப்பர் சூப்பானுடன் குழந்தை உட்கார்ந்திருந்தது.

எனக்கு வாசலில் இருந்து தெருத்திரும்புகிற இடம் முக்கியமானது. நகராட்சியின் எந்தக் கல் உருளைகளும் அறியாமல் தார் டின்னுக்கு ஜல்லிக் கல்லுக்கும் தப்பி, இந்தத் தெரு பிரதான ரோடுடன் சேர்கிற இடம், அப்படியே என்று பிறந்ததோ அதுபோலவே மாறாது இருந்தது. முண்டு முண்டாக எட்டிப் பார்க்கிற பாறைகள், சரல்vannathasan கற்கள் மணல் மெத்தை, நீர் அரித்துக்கொண்டு ஓடின பள்ளம், மறுபடியும் கொஞ்சம் தேங்காய் அளவு பாறைகள். ஒரு நதிபொங்கிப் புரண்டு பாய்வது போலவும் எந்தப் பாறையில் நுரைத்து எந்த இடத்தில் சுழித்து, எந்தக் கூழாங்கல்லை உருட்டி, எந்தக் கரையோரப் புல்லுக்குக் கூச்சம் காட்டும், என் பாதம் நனையுமா, கணுக்கால் நனையுமா என்ற கற்பனையுடன் நகர்கிற இடம் இது. இந்த ஒன்றுக்கும் உதவாத கற்பனையை, பிருபிருவென்று நம்மைத் தாண்டிப் போகிற ஒரு சைக்கிள் தடமோ, குறுக்கே ஓடுகிற பன்றியின் வால் சுளிப்போ உதறித்தள்ளி நச்சென்று யதார்த்தத்தில் அறைந்து விட்டுப் போகும். தினகரியின் வார்த்தையில் அந்த அறையில்லை. ஆனாலும் கற்பனைக்கு இடமற்றுப் போயிருந்தது.

இடதுபக்கமாகப் போ என்று தான் சாலைவிதிகள் சொல்லுகின்றன என்றாலும், நான் சரியாக எதிர்ப்பக்கம் போய் வலது சிறகிலேயே நடக்கிறது வழக்கமாகி விட்டிருந்தது. இடது பக்கத்திலிருந்த ஒர்க் ஷாப்புகளை, தண்ணீர்க் குழாயை, டாக்கடையை, சைக்கிள் கடைகளும் பார்பர் ஷாப்பும் இணைந்ததுபோல – ஒரு பக்கம் சைக்கிள் வரிசையும் ஒரு பக்கம் மரத்தடி நிழலில் நாற்காலியும் போஸ்டர் ஒட்டின சுவரில் கண்ணாடித் தொங்கலுமாக இருக்கிறதை, சின்ன ரெயில்வே கேட்டை, பெட்ரோல் பங்க்கை எல்லாம் இடது பக்கத்தில் இருக்க விட்டுவிட்டு, நான் வேப்பமர வரிசையின் பக்கமாகவே இத்தனை நாளும் போய்க் கொண்டிருக்கிறேன்.

‘தினகரி ‘ அந்தப் பக்கமாகவேதான் நடந்து போவீங்களா ? அப்பா ? ‘

‘ஆமா, தினா ‘

‘இந்தப் பக்கமாக நடக்கவே மாட்டாங்களோ ‘

‘மாட்டேன்னு இல்லை. அப்படியே பழகிப் போச்சு ‘

‘இன்னைக்குப் போகும்போது, இந்தப் பக்கமாப் போயிட்டு, வரும்போது அப்படியே வரலாமாப்பா ‘

‘சரி ‘

‘என்னப்பா, உடனே சரிண்ணு சொல்லிட்டாங்க ‘

‘நீ சொன்னா உடனே சரிதான், தினா ‘

‘அதெப்படி, ப்பா ‘

இப்படியெல்லாம் கேட்டால் என்ன சொல்ல. பன்னிரெண்டு வயதில் பதின்மூன்று வயதில் எப்படி இந்தத் தலைமுறைக்கு இந்தக் கேள்வி எல்லாம் வந்துவிடுகிறது. அன்றைக்குப் பாசஞ்சர் ரயில் இரண்டு பக்கமும் தண்டவாளத்தை ஒட்டிக்கிடக்கிற தாமரைக் குளத்தை வகிர்ந்து கொண்டு போகிறது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த பையன் குதிக்கிறான்.

‘அப்பா, அப்பா….தாமரைப் பூ, ப்பா ‘

‘ரொம்ம்ப இருக்குப்பா ‘

‘தண்ணீலதான் முளைக்குமோப்பா, நம்ம வீட்டிலே நட்டு வச்சா வளருமா ? ‘

‘குளத்திலே எவ்வளவு தண்ணீப்பா இருக்கும் ‘

‘என்னை முக்கி விடுமா ‘

‘உங்களை முக்கிவிடுமா ‘

‘தாமரைப்பூ மாத்திரம் எப்படிப்பா தண்ணியிலே முக்கமாட்டேன், கு ‘

உன்னை மூழ்கடிக்கிற, என்னை மூழ்கடிக்கிற தண்ணீரின் ஆழத்தில் தாமரைப்பூ மட்டும் ஏன் மூழ்கமாட்டேன் என்கிறது என்ற கேள்வியை போன தலைமுறை கேட்டிருக்குமா, வெள்ளத்தனையது மலர் நீட்டம் என்ற குறளை மனப்பாடம் செய்திருக்கும். ஆனால் கேள்வி கேட்டிருக்காது. இந்தத் தலைமுறைக்கு மனப்பாடம் தெரியாது. கேள்விகள். கேள்விகளில் தொற்றிக் கொள்கிற இயல்பான விஞ்ஞானம். மனம் இல்லாவிட்டால் மூளை, ஏதாவது ஒன்றை மாத்திரம் வைத்துக் கொண்டுதான் காலம்தள்ள வேண்டும் போல.

போய்க்கொண்டிருக்கும்போது நான் அந்த ஒற்றைப் பன்னீர்ப்பூ மரத்தை மட்டும் பார்த்துக் கொண்டேன். அது பூக்கிற காலமில்லை. என்றாலும் ரகசியமாகத் தனக்கென்று ஒரு பூக்கூடப் பூத்திராதா அந்த மரம். பூக்கிறதைவிட உதிர்கிறபோது அழகாயிருக்கிற வகைக்கு எப்படித் தனக்கென்று வைத்துக்கொள்ளத் தோன்றும். தினகரி சற்று விலகிப்போய் அந்தப் பன்னீர் மரத்துக்கு எதிராக உள்ளடங்கி இருந்த வாசல் கேட்டில் நின்ற மனிதனிடம் போய் ஏதோ பேசிவிட்டு வந்தாள்.

‘மூன்று ஆண்டென்னா இருக்கே…. மூணு டி.வி. இருக்காண்ணு கேட்டேன். ஆமாங்கிறாரு ‘

‘அந்த வாட்ச்மேனை முன்னாலேயே தெரியுமா. பேசிட்டு வர்ரே ‘

‘முன்னாடியே தெரிந்தால் தான் பேசணுமாப்பா ‘

தினகரி கேட்டதில் ஒரு பாதி உண்மையிருக்கிறது. முன்னாடித் தெரிந்தவர்கள் எதிர்ப்பட்டால் எல்லாம் பேசிக்கொண்டேவா போகிறேன் நான். தினகரிக்குப் போன வருடம் வகுப்பு எடுத்த மிஸ், போகிறபாதையில் அநேகமாகத் தன் வீட்டு நடையில்தான் நின்றுகொண்டிருப்பார்கள். ஹவுஸ் கோட்டும் கொண்டையுமாகப் பால் கவர் வாங்கிக்கொண்டு, பிரஷ் பண்ணிக்கொண்டு, அல்லது தொட்டியில் இருக்கும் நீண்ட பச்சையிலைகளையுடைய செடிக்கு ப்ளாஸ்டிக் கோப்பையில் நீர் வார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரியும். ஆனால் நான் சிரித்ததில்லை, பேசியதில்லை. இந்தப் பாதையின் கடைசியில் வரிசையாக இடதும் வலதும் அறிய முடியாத நீண்ட தொடராகச் சமைந்திருந்து நீலமும் மேகமும் ஆக நம்மைத் தொலைந்துபோக அழைக்கிற மலைகளே ஞாபகமாகப் போய்க் கொண்டிருக்கிற நடையின் போக்கில் யாரும் குறுக்கே வரும்படியாக நான் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் தினகரி ‘குட்மார்னிங் மேடம் ‘ என்று அவளே கூப்பிட்டு வணக்கம் சொன்னாள். ‘அப்பாவும் நானும்வாக் போறோம் மேடம் ‘ என்று என் கையைப் பிடித்துக்காட்டி இணக்கமாக விடைபெற்றாள். தலையைச் சாய்த்து சிரித்து டாட்டா காட்டினாள். கூச்சமாக இருந்தது எனக்கு. ஒருவருக்கொருவரின் பிரத்யேக உலகங்களில் அத்துமீறி இந்த அதிகாலையில் நுழைந்து விட்டதுபோல இருந்தது. தினகரி உற்சாகமாக இருந்தாள். முழுச் சிறகடிப்பும் வாய்க்கப்பெற்றுப் பறந்து கொண்டிருந்தாள். நான் நடக்கிறவனாக மட்டும் நடந்து கொண்டிருந்தேன்.

அந்த லெவல் கிராஸிங், அதையடுத்த பெட்ரோல் பங்க் தாண்டினால், மலையை நோக்கி ஒற்றையடித் தடம் போட்டது போல் பாதை கிடக்கும். இதன் இன்னொரு கிளையாகப் பிரிந்துபோகிற பாதையில் இருக்கிற சந்தடி இராது இங்கு. வானும் மலையும் நீல அடையாளங்களுடன் எல்லையில் இருக்க அலைந்து அலைந்து மிதக்கிற ஒற்றைக் கட்டுமரம்போல நான் நகர்ந்துகொண்டே இருக்கலாம். காற்று ஏகமாக வீசும். பனைமர உச்சியின் ஓலைகளைச் சலசலக்க வைத்து வெள்ளைப் புள்ளியிட்ட சிறு பறவைகள் பறக்கும். இரண்டு பக்கமும் வெட்டியெடுத்த பாறைகளின் பிளக்கப்பட்ட பளீரில் மோதி மோதித் திரண்ட காற்று உறுமிக்கொண்டே மேல் வரும். சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷனின் ஆளற்ற சிமெண்ட் பஞ்சுகள், வேப்பமரக்கன்றுகள் எத்தனைகாலம் ஆனாலும் ரயில்வே ஸ்டேஷன் வேப்ப மரங்கள் வளர்கிற பிள்ளைகள் மாதிரியே சிறிதாகவேதான் இருக்குமோ, வளைந்து பின்னலிடுகிற இரண்டு ஜோடித் தண்டவாளங்கள், அதைத் தாண்டினால் மாந்தோப்பின் அடர்ந்த இருளில் பழுக்கிற குயிலின் கொத்துக் கொத்தான குரல், மறுபடியும் ஹோவென்று ஆதிக்கம் செலுத்துகிற பாறைகள், இயற்கையின் அனாதி காலத்தின் மேல் நாகரிகமற்று இந்த தினத்தின் முத்திரை குத்துவதுபோல மஞ்சள் நிறத்தில் ஒரு பாறையில் உரக்க எழுதப்பட்டிருக்கிற உள்ளாடை உலக விளம்பரம்.

நான் நிஜமாக மனம் ஒன்றி நடக்கிற பகுதி அதுதான். சப்தங்களைக் கேட்டுக்கொண்டே வருகையில் சட்டென்று எல்லாம் சப்தமற்றுப் போகும். ஒற்றை வண்டைப்போல சிறகடிப்பின் விம்மலுடன் தன்னுடைய பறத்தலைத் தான் கேட்டுக் கிறுகிறுக்கிற மனதின் ரீங்காரம் சமீபிக்கும். அப்படிப்பட்ட சமீபத்தில் தரை தெரியாது, கரை தெரியாது, கடல் தெரியாது, மலை தெரியாது. வெளி அற்றுப் போயிருக்கும் வெளி.

தினகரிக்கும் அது கிட்டியதோ என்னவோ. இந்தப் பிற்பகுதி முழுவதும் அவளும் பேசாமலே வந்திருப்பதை உணரமுடிந்தது. இவ்வளவு தூர நடையில் வியர்வை அரும்பத் தொடங்கியிருந்த அவளைப் பக்கத்தில் அணைத்துக்கொண்டு, மாமரத்துக் கீழ் போனேன். சின்னமரம், மரத்தின் இடுப்பில் முள் சுற்றியிருந்தது. எக்கச் சக்கமான காய்ப்பு, விளைச்சலின் முழுமையில் சாம்பல் பூத்துக் கனியத் தொடங்கின நிலையில் நிறையக் காய்கள்.

‘மரத்திலேயே பழுத்திருமா அப்பா ‘

‘ஒண்ணே ஒண்ணு பறிச்சுக் கொடுங்களேன் ‘

‘ஒண்ணே ஒண்ணு ‘ப்பா ‘

‘ஏம்ப்பா பயப்படுதீங்க ‘

‘ஒண்ணும் சொல்லமாட்டாங்க அப்பா ‘

‘நீ பறிச்சுக் கொடுக்காட்ட என்னைத் தூக்கிவிடு. நான் பறிச்சுகிடுதேன் ‘

‘ஓ…எஸ்..காவல்காரர்கிட்டே நான் பதில் சொல்லிக்கிடுதேன் ‘

‘அதெல்லாம் இல்லை. ஒரு காய் பறித்தால் ஒண்ணும் கட்டிவச்சு உதைக்க மாட்டாங்க ‘

‘ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பதில் வந்ததேதவிர, நான் சொன்னது எதையும் தினகரி கேட்கிற மாதிரித் தெரியவில்லை. ஆனால் முரண்டுபிடிக்கிற குரலுமில்லை. ‘இதில் என்ன இவ்வளவு யோசிக்க ‘ என்கிறதுபோலத் தினகரியின் முகத்தில் சிரிப்பிருந்தது. தூக்கக்களை விலகிப் போயிருந்தது. இந்த விடிகாலை மாதிரி அடங்கின வெளிச்சமிருக்க இருந்தது. பள்ளிக்கூடம் திறக்கப் போகிற நாட்களில், நயினார்குளம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைகிற காலத்தில் எல்லாம் சொல்லி வைத்தாற்போல ஒரு குளிர்ந்த காற்றடித்து மனதை அப்படியே அள்ளிக்கொண்டு அலையுமே அதுபோன்ற ஒரு குளிர்ந்த காற்று அடித்தது. தினகரியின் சிகை, என் சிகை, வேட்டி எல்லாம் கலைந்து கலைந்து பறந்தன. அந்தக் குளிர்ச்சியைப் போலக் காற்றைப் போல, தினகரிக்காக ஒரு மாங்காய் பறிப்பதும் அந்த நேரத்தின் ஒரு பகுதியாக அடங்கும் என்று தோன்றியது, பயம் இல்லை. முள்பந்து உறுத்தவில்லை. காவல்காரன் வரமாட்டான். வந்தாலும் சொல்லிக்கொள்ளலாம் என்று தோன்றிற்று.

தினகரி தலைக்குமேலே உயர்ந்த என் கைகளில் இருந்தாள். சூரியனைக் கைகளில் ஏந்துகிற ஒரு சித்திரம் உண்டே, அது மனதில் வந்தது. மாமரம் சலசலத்தது. ‘இதைப் பறிக்கட்டுமா ப்பா ‘ என்று எதையோ தினகரி கேட்டது. எதையோ பறித்தது. ‘உனக்கொண்ணு பறிக்கட்டுமாப்பா ‘ என்று கேட்டு பதிலை எதிர்பாராமலே எனக்கும் ஒன்று பறித்துப் போட்டது.

‘போகலாமாப்பா ‘ என்று என்னிடம் கேட்கும்போது மாங்காயில் தினகரியின் முதல்கடி விழுந்திருந்தது, நான் காயின் திரட்சியில் விரல்களை உருட்டிக் கொண்டே என்னுடன் வந்த தினகரியை, அந்த வீட்டு வாட்ச்மேனிடம் பேசியதை, மேடத்திற்கு வணக்கம் சொன்னதை மாங்காயைப் பறித்துச் சந்தோஷமாகக் கடித்துக் கொண்டிருப்பதை, அந்தக் கடியின் பயமற்ற பல் பதிவை நினைத்துக் கொண்டிருந்தேன்.

மரம் சல் என்று அனைத்து இலைகளுக்குள்ளும் காற்றை அனுமதித்து லேசாக அசைத்தது. இரண்டு காய்களின் எண்ணிக்கை குறைந்ததே தெரியாமல், அணிலுக்குக் கடிக்கக் கொடுத்த சுகத்துடன் அந்தக் கிளை சற்றுக் கிறங்கித் தணிந்தது.

************

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s