வண்ணதாசன் : எழுத்தில் ஓடும் ஆறு

வண்ணதாசன் : எழுத்தில் ஓடும் ஆறு

எஸ்.ராமகிருஷ்ணன்

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். இந்தத் தலைப்புப்போல அத்தனை பொருத்தமான தலைப்பு கொண்ட ஒரு சிறுகதைத் தொகுதி வேறு ஏதாவது வெளிவந்திருக்கிறதா தெரியவில்லை. ஒருவகையில் அது கல்யாணி அண்ணனின் மனதை வெளிப்படுத்தும் ஒரு தலைப்பு. தமிழ்ச் சிறுகதையுலகில் வண்ணதாசனின் பங்களிப்பும், தொடரும் படைப்பிலக்கியச் செயல்பாடுகளும்  நாமும் எழுதலாமே என்று பலருக்கு உத்வேகம் தந்திருக்கின்றன. நானும் அவரிடமிருந்தே தினசரி வாழ்விலிருந்து கதைகள்  எழுத வேண்டும் என்ற தூண்டுதலைப் பெற்றேன்.

கோவில்யானையை என்னதான் நெருங்கிச் சென்று  தும்பிக்கையைத் தொட்டு விளையாடினாலும் அதன் மீதான தீராத வியப்பு குறைவதேயில்லை. ரத வீதியில் யானை நடந்து செல்லும்போது ஏற்படும் கம்பீரமும் மணிச்சப்தமும் அலுப்பதேயில்லை. 

யானையோ காட்டு மரங்களைப் பல்குச்சி போல முறித்துப் போடும் அதன் வலிமையை மறைத்துக் கொண்டு குழந்தைகளை அள்ளித் தூக்கி அம்பாரம் வைத்துக் கொள்கிறது.

கோவிலில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் யானை தீராத மயக்கமுடையதுதான். யானைகள்  உரத்துக் குரலிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வதில்லை. அதன் இயல்பிலே அது யாவரையும் கவர்ந்துவிடுகிறது. எல்லா வயதினருக்கும் அதன் மீதான மயக்கம் ஒன்று போலவேயிருக்கிறது.

என் அனுபவத்தில் வண்ணதாசனின்  உறவும் அவரது படைப்பிலக்கியமும் அத்தகையதே.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக அகிரா குரசோவாவின் ஸ்ட்ரேடாக் என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வண்ணதாசன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்னஞ்சல் எனது ஸ்பாமில் சென்று மாட்டிக் கொண்டு பல நாட்களாக நான் படிக்கவேயில்லை. மறுபடியும் அதை அனுப்பி வைத்தார். அன்றைய இரவில் இரண்டு மூன்று முறை அந்த மின்னஞ்சலைப் படித்திருப்பேன்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு சலாகுதீன் ஸார் நாலைந்து அகிரா குரோஸோவா கொடுத்தார் இப்போது கிடைத்திருக்கிற வடிகட்டின தனிமையில் அவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் தெருநாய். அது என்னுடைய இன்றைய மனநிலைக்கு மிகவும் சரியாகப் பொருந்துவதால் அதிலிருந்து. ‘Stray Dog’ நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

எல்லா உயர்கலைஞனும் வரைந்து காட்டுவது ஒரு பிரபஞ்ச மனிதனின் அடிப்படைச் சாயல்களையே என்ற இடத்தில் நம்மை அல்லது என்னை, அது நிறுத்திவிட்டு நகரும்போது மனம் அடைகிற சலனம் அல்லது அமைதியே, உங்களுடன் பேசத் தூண்டியிருக்க வேண்டும். அந்த 122 நிமிடங்களில், நான் ஒவ்வொரு இடங்களில் மனோரமாவை, தேவ் ஆனந்தை, திலகனை, ரொம்ப முக்கியமாக சாவித்திரியை, அப்புறம் அந்த அம்மாவின் முகத்தில் பெயர் உறுதிப்படாத எம்.எஸ்.திரோபதி, எம்.எஸ். எஸ்.பாக்கியம் போன்ற பழைய தமிழ்த் திரைப்பட ஏழை அம்மா ஒருத்தியை எல்லாம் கண்டு கொண்டு இருந்தேன்.

ஒரு படப்பிடிப்பின் வெளிச்சம், காமெரா கோணம், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தின் கீழ்வருகிற அசைவு, உடல் மொழி எல்லாம் அச்சடித்தது மாதிரி ஒரே மாதிரியாகவே இருக்க முடியும் போல இருக்கிறது.

முராகாமி தன் உயர் அதிகாரியின் வீட்டுக்கு ஒரு பின் இரவில் வருகிறான். அந்தக் காட்சியில், அந்தக் காட்சிக்குத்  தேவையில்லாதது எனத் தெரிவதை, மிகத் தேவையானதாக வைத்திருப்பது தான் அகிராவாக இருக்க வேண்டும்.

மூன்று பிள்ளைகளும் அப்பா வருவதைப் பார்த்து ஓடிவந்து கட்டிக் கொள்கின்றன. அப்புறம் வாசல் நடையில் உட்கார்ந்து விளையாட ஆரம்பிக்கின்றன. ஒரு பிள்ளை மத்தாப்புக் கொளுத்துகிறது. படியேறும் முன்பு அம்மா வந்து செப்புச் சாமான்களை ஒதுங்க வைத்து வழி உண்டாக்கிக் கொடுக்கிறாள். அந்தக் காட்சியின் முடிவில் குழந்தைகள் தூங்குகிற அறையைக் கொஞ்ச நேரம் அவர்கள் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள். புத்தகம் படித்த கையோடு ஒரு குழந்தை குப்புறத் தூங்குகிறது.

அந்தத் துப்பாக்கியைத் திருடினவன் உதைபட்டு மல்லாந்து விழுகிறான். எல்லாக் காட்சிகளிலும், எல்லாக் கதா பாத்திரங்களையும் திரும்பத் திரும்ப வியர்வையைத் துடைத்துக்கொள்ள வைக்கிற வெயில் அப்போதும் அடிக்கிறது. விழுகிறவனின் கண் கூச்சத்தில் அசைகிறது ஒரு புல்லின் பூவும் அதன் மீது பறந்து அமர்கிற ஒரு தட்டானும். இந்த வாழ்வு எப்படிக் கடைசிவரை பயில வேண்டிய ஒரு மொழியாகவே தன்னை வைத்துக் கொள்கிறதோ, அப்படித்தான் போல நல்ல திரைப்படங்களும்.

மின்னஞ்சலை வாசித்த முடித்த உடனே அகிரா குரசோவாவைத் திரும்பப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. கூடவே இந்த மனிதர் அகிரா குரசோவா பற்றி எழுதினாலும் சரி ஆண்டாளைப் பற்றி எழுதினாலும் சரி எப்படி இத்தனை உயிரோட்டத்துடன், படிப்பவன் கையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் நெருக்கமும் கொண்ட எழுத்தைக் கொண்டிருக்கிறார் என்று வியப்பாக இருந்தது. உடனே பதில் அனுப்பினேன்.

எழுதத் துவங்கிய நாட்களில் ஜி.நாகராஜன், குபரா, சம்பத், வண்ணதாசன், வண்ணநிலவன், அழகிரிசாமி, ந.முத்துசாமி, மௌனி என்று தேடித்தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். வண்ணதாசன் அப்போது வத்தலகுண்டில் வேலை செய்து  கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அவரைச் சந்தித்து வரும் நண்பர்கள் சொல்லும் உற்சாகத்திலிருந்தும் அவரது கதைகள் தந்த நெருக்கத்திலிருந்தும் நான் உடனே சென்று பார்த்து பழக  வேண்டியவர் வண்ணதாசன் என்று தோன்றியது.

ஆனால் யாரை நாம் நெருக்கமாக நினைக்கிறோமா அவர்களிடம் நேரில் செல்வதற்கும் பழகுவதற்கும் தான் எங்குமில்லாத தயக்கமும் வந்துவிடுகிறது. ஒருவேளை அப்படி இருப்பதுதான் உண்மையான அன்போ என்னமோ?

எனது பழைய தண்டவாளம் என்ற கதையைப் படித்துவிட்டு வண்ணதாசன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் வண்ணநிலவன் விட்ட இடத்திலிருந்து அவரைப் போலவே  கதை எழுதத் துவங்கியிருக்கிறீர்கள் என்று வாழ்த்தியிருந்தார். அந்த மகிழ்ச்சிதான் அடுத்த கதையை எழுத உத்வேகமாக இருந்தது.

வண்ணதாசன் மதுரையில் வேலை செய்த நாட்களில் நான் மதுரையிலே சுற்றியலைந்து கொண்டுதானிருந்தேன். ஆனால் தேடிப்போய்ப் பார்க்க ஏனோ தோன்றவேயில்லை. அடிக்கடி கோணங்கி அவர் வேலை செய்த வங்கியில் சென்று சந்தித்து வந்த விபரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பார். மதுரை அரசரடியில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரின் பின்புறம் உள்ள வீதியில் வண்ணதாசன் குடியிருந்தார் என்பது கூடத் தெரியும். ஆனால் தேடிப்போகவேயில்லை. ஒரு நாள் இரவு கோணங்கி, வண்ணதாசன் வீட்டிற்குப் போகலாம் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

பார்த்தவுடனே சிரிப்பும் அன்புமாக வரவேற்று அருகில் அமர்த்திக் கொண்டார். காபி சாப்பாடு என்று நிறைவான உபசரிப்பு. அன்று இரவு அவரது வீட்டின் மொட்டை மாடியில் பாயை விரித்து உட்கார்ந்து கொண்டு ஒரு சொம்பு தண்ணீரைக் குடித்துக் கொண்டு விடியவிடியப் பேசிக் கொண்டிருந்தோம்.

அந்த இரவில் லேசான குளிரோடு கூடிய காற்றிருந்தது. அதிகம் நட்சத்திரங்கள் இல்லை. எழுத வேண்டும் என்று என்னுள் ஊறிக்கொண்டிருந்த  கிராமத்தின்  பருவநிலை  மாற்றங்களைப் பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தேன்.  கோணங்கி அவரது சமீபத்திய கதைகளைப் பற்றிப் பேசினார். வண்ணதாசன் மிகக் குறைவாகவே பேசினார். ஆனால் அந்தப் பேச்சில் இருந்த நெருக்கம் நாங்கள் பேசியதில் இருந்ததா என்று தெரியவில்லை. 

பின்னிரவில் எங்கள் பேச்சு மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. சாலை வெறிச்சோடியிருந்தது. அடுத்த வீட்டு மனிதர்கள் துயிலின் ஆழ்ந்த பிடிக்குள்ளிருந்தனர். கழுதை ஒன்று மட்டும் தெருவிளக்கின் அருகில் முன்னங்காலைத் தூக்கித் தாவிய படியே சென்றது. நூற்றாண்டுப் பழமையான மதுரையின் தொல் வீதியொன்றில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தது போலிருந்தது என்று மறுநாள் கோணங்கி சொன்னார். நானும் அந்த மனநிலையில்தானிருந்தேன்.

பலநேரம் மனம் நழுவும் உரையாடல்கள் நமது பிரக்ஞையிலிருந்து நகரை, வீடுகளை, அருகில் உள்ள மனிதர்களை மறந்து அறியாத புனைவு வெளிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அன்றும் அப்படியே நேர்ந்தது.

அதன் பிறகு வண்ணதாசன் மதுரையிலிருந்து இடம்பெயர்ந்து சென்னை சென்றார்.  இரண்டு வருசத்தின் முன்பு என்னோடு கல்லூரியில்  படித்த  நண்பன்  ஒருவன் வண்ணதாசன் குடியிருந்த அதே வீதியில் ஒரு வீட்டை வாங்கியிருந்தான். அதைப் பற்றிச் சொல்லியதும், நானாக, ஒருநாள் உன்வீட்டில் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருக்கலாம் என்று சொன்னேன்.

இதற்காகவே மதுரைக்குக் கிளம்பிச் சென்றேன். நானும் இரண்டு உள்ளூர் நண்பர்களுமாக வண்ணதாசன் குடியிருந்த வீட்டைத் தாண்டி நண்பன் வாங்கியிருந்த வீட்டிற்குச் சென்று மொட்டைமாடியில் அமர்ந்து கொண்டோம். அது கோடைக் காலத்து இரவு என்பதால் காற்றில்லை.

பேச்சு துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் நண்பர்கள் உறங்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் விழித்த படியே  தொலைவில்  தெரியும்  வண்ணதாசன்  குடியிருந்த  வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வீட்டின் மாடியில்தான் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அங்கே இப்போது யார் குடியிருப்பார்கள். அவர்களுக்கு வண்ணதாசனைத் தெரிந்திருக்குமா? அங்கே இன்னொரு முறை போய் இது போல ஒரு இரவு பேசமுடியுமா என்று ஏதோ யோசனைகளுடன் அந்த வீட்டையே பார்த்தபடி இருந்தேன்.

பின்னிரவு நீண்டிருந்தது. பல நாட்களின் இரவுகள் ஒரே ஜாடையில் இருக்கிறதே என்று தோன்றியது.  முன்பு போலவே இன்றும் தெருவில் யாருமில்லை. இறங்கி வீதியில் நடந்தேன். கம்பி போட்ட ஜன்னல்களுக்கு உள்ளே விடிவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. தெருவின் சுபாவம் இரவில் வேறுபட்டதாக இருக்கிறது. தொலைவில் ஒரு மனிதன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். சைக்கிளின் சப்தம் நீண்ட நேரம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

பரிச்சயம் இல்லாத அந்த வீதியில் வசித்த அத்தனை பேரும் எனக்கு மிகவும் வேண்டியவர்கள் போன்ற தொரு மனநிலை உருவானது. வண்ணதாசன் இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பார் என்றும் யோசித்துக் கொண்டேன்.

விடிகாலையில் கிளம்பி மதுரைப் பேருந்து நிலையத்திற்குச் சென்றேன். ஒரு பழக்கடையில் சிறுவன் ஆப்பிள் பழங்களைத் துடைத்துக் கொண்டிருந்தான். இவன் வண்ணதாசனின் கதைகளில் வந்தவன்தானே என்று அவன் மீது ஒரு ஸ்நேகபாவம் உருவானது. விடிகாலை முதல் பேருந்திற்காகக் காத்திருக்கும் பெண்களில் ஒருத்தி முகம் கழுவித் துடைத்து, பொட்டு வைத்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.

எங்கோ ரேடியோவில் அதிகாலையிலும் பி.சுசிலாவின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடும்பம் விடிகாலையில் எவரது திருமண விழாவிற்கோ போவதற்காக, குளித்து திருநீறு பூசி வெளுத்த உடைகளுடன் பாதித் தூக்கம் அப்பிய விழிகளுடன் நின்று கொண்டிருந்தது. பிச்சைக்காரப் பெண் ஒருத்தி சிக்கு பிடித்த தலையை சீப்பால் வாரி வாரி இழுத்துக் கொண்டிருந்தாள். பேருந்தின் வெளிச்சம் முகத்தில் அடித்தவுடன் கண்களை மூடிக் கொண்டு வெட்கப்பட்டாள். 

வேஷ்டி விலகிக்கிடக்க உறங்கும் குடிகாரன். பயணிகள் உடமை காப்பக அறையின் வெளிச்சுவர் எங்கும் வெற்றிலைக் கறைகள். காலை நாளிதழ்களைப் பிரித்து கடைவாரியாக எண்ணி அடுக்கும் ஆட்கள். பேருந்து நிலையத்தின் விடிகாலைக் காட்சிகள் ஒருபோதும் மாறாதவை. இந்தக் காட்சிகளின் மீது என் கவனத்தை உருவாக்கியதற்கு வண்ணதாசனின் மிச்சம் என்ற சிறுகதைக்கு முக்கிய இடமிருக்கிறது. பேருந்து நிலையத்தின் பின்னிரவும், விலைமகளின் தூக்கமற்ற விடிகாலையும், புலரும் நாளின் காட்சிகளையும் குட்டியப்பனையும், சோணையையும் எப்படி மறக்க முடியும்?

தனுமை என்ற வண்ணதாசனின் சிறுகதையை எத்தனை முறை படித்தாலும் அதன் வசீகரம் குறைவதேயில்லை. இதில்தான் தனு போகிறாள் என்ற முதல்வரியில் நாலே சொற்கள்தான். ஆனால் அதைச் சொல்லும் குரல் உலகில் இதுவரையில்லாத அதிசயம் ஒன்றைச் சுட்டிக்காட்டுவது போலத்தான் அறிமுகப்படுத்துகிறது. உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் நடுவில் செல்லும் பழைய பேருந்தும் ஞானப்பனும் நமக்கு அறிமுகமாகிறார்கள்.

நடக்க முடியாமல் நடக்கிற தனுதான் நாயகி. அவள் மீதான ஏக்கத்தில் மொழியற்றுப் போன ஞானப்பன்.  கறுப்புக்  குதிரையெனத்  திமிர்ந்து நடக்கும் டெய்சி வாத்திச்சி. ஞானப்பனுக்குக் கிடைப்பது தனு உதிர்த்த ஒரு நீலப்பூ. ஆர்பனேஜின் தனிமையில் படிப்பு மனதில் நிற்க மறுக்கிறது.

தேரிமணல் போலவே அவனது ஆசைகளும் தன்வசம் மீறிப் பறந்து போகின்றன. தனிமை அவனுக்குள் எண்ணிக்கையற்ற கனவுகளை உருவாக்கி அழிக்கிறது. வெயிலும் எதிர்பாராத மழையும் அவனது மன நிலையின் இரண்டு குறியீடுகளாகின்றன.

அவன் மனஅவஸ்தை அறிந்தவள்  போல  டெய்ஸிவாத்திச்சி  அவனைக் கட்டியணைத்து தனலட்சுமிதான் வேணுமாக்கும் என்று சீண்டிவிட்டுப் போகிறாள்.

தனுவிற்காகக் காத்திருக்கும்  ஞானப்பனின் வெளிப்படுத்தப்படாத நேசம் தான் கதை. அகப்புறச் சூழல்கள் நுட்பமாகத் தீட்டப்பட்டுள்ளன. முறிந்த முள்ளைப் போல கதை படித்து முடித்தபிறகும் வலி இருந்து கொண்டேயிருக்கிறது.

சிறுகதைகளைக் கவித்துவமான நுட்பத்துடன் எழுதத் தெரிந்த கலைஞர் வண்ணதாசன். அவரது கதை மனிதர்கள் நம் கண்முன்னே உலவும் அன்றாட உலகைச் சார்ந்தவர்கள். நாம் அறிந்த மனிதர்களின் அறியாத மனவுலகை, அற்ப சந்தோஷங்களை, பகிர்ந்து கொள்ளப்படாத வலியைச் சொல்கின்றன வண்ணதாசனின் கதைகள். நினைவுகளும் நடப்பும் பின்னிக்கலந்த கதை  சொல்லும்முறை அவருடையது.

அவரது கதைகளின் ஊடாகத் தாமிரபரணி ஆறு நிசப்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படித்துறையும் கல்மண்டபமும்,பேராச்சியும், நெல்லையப்பர் கோவிலும், ரத வீதிகளும், சன்னதித் தெருவும், மூடப்பட்ட ரயில்வே கேட்டும், மேம்பாலமும், சிவப்பு , வெள்ளைப் பூக்கள் உதிரும் மரங்களும், பெயர் தெரியாத பறவைகளும், ஜங்ஷன் டாக்ஸி நிறுத்தமும், சாரலும், வெயிலும், வேம்பும், முருங்கையும், கிருஷ்ணன் வைத்த வீடும், கோயில் கொடையும், வாழ்வைத் தொலைத்த மனிதர்களும், கடந்த கால நினைவில் புதையுண்டு இன்றைய உலகின் நெருக்கடியைச் சந்திக்கமுடியாத ஆண்களும் பெண்களும் நிரம்பியிருக்கிறார்கள்.

புது எழுத்து இதழில் வெளிவந்த வல்லிகண்ணன் பற்றிய ஒரு கட்டுரையில் அந்த ஒரே ஒரு ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் ஒரு முழுநாவலின் கதாமனிதர்களும் அல்லவா போய்க் கொண்டிருக்கிறார்கள் என்று வண்ணதாசனின் ஒரு வரியிருக்கிறது.

அந்த ஒற்றை வரியின் நிஜம் போல அவரது கதைகளின் ஊடாகத்  திருநெல்வேலியும் அங்கு வாழும் மனிதர்களும், அவர்களின் உறவும் பிரிவும், சுகதுக்கங்களும் இடம்  பெற்றிருக்கின்றன என்று தோன்றியது.

வண்ணதாசனின் சிறுகதைகளை வாசிக்கையில் எப்போதும் ரஷ்யச் சிறுகதையாசிரியர்களே நினைவிற்கு வருகிறார்கள். ரஷ்யக்கதை சொல்லும் முறையில் நிலமும் புறச்சூழலும் மனிதர்கள் மீது செலுத்தும் ஆளுமை மிக முக்கியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில்தான் வண்ணதாசன் கதைகள் ரஷ்யக்கதைகளை நினைவு கொள்கின்றன.

அதிலும் சமீபமாக வாசிக்கும்போது சிங்கிஸ் ஐத்மாதவ்வும் ஆண்டன் செகாவும் நிறைய நினைவிற்கு வருகிறார்கள். ஒருவகையில் வண்ணதாசனின் சிறுகதைகள் செகாவின் கதைமரபைச் சார்ந்தவை. இருவருமே பிரதான சிறுதையாசிரியர்கள். நாவல் எழுதியதில்லை. ருஷ்யக் கதைமரபு கதாபாத்திரங்களின் மன நிலையை புறச்சூழலின் மீது வைத்துச் சொல்லப்படுபவை. குறிப்பாக பெண்களின் அகவுலகைச் சித்தரிப்பதில் செகாவ் உன்னதக் கலைஞன்.

செகாவின் பெண்கள் அழகிகள். ஆனால் அடிமனதில் துயரம் கொண்டவர்கள். காதலுக்காகத் தன்னை அழித்துக் கொள்பவர்கள். வண்ண தாசனின் கதையுலகிலும் அதிகம் பெண்களே இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தங்களது இயல்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொள்வதில் உள்ள தடைகளை அறிந்திருக்கிறார்கள். பிரியமானவர்கள் பொருட்டு கஷ்டங்களைத் தாங்கிக் கொள்கிறார்கள். பிரகாசிக்கும் அன்புதான் அவர்களின் பொது குணம்.. அந்த அன்பின் பொருட்டு அவர்கள் தாங்கும் வலி பெரியது.

குறிப்பாக அவரது ஆறு என்ற சிறுகதை நினைவிற்கு வருகிறது. அவரது பலகதைகளின் முக்கிய புள்ளி இந்தக் கதை என்று தோன்றுகிறது.  கதையின்  முதல்வரி  குஞ்சம்மாவிற்கு ஆற்றைப் பார்க்கப் போக வேண்டும் போல இருந்தது என்று துவங்குகிறது.

தன்அம்மாவிற்கு கண்ணுக்கு மருந்து போடுவதற்காக மருத்துவமனைக்கு வந்து காத்திருக்கிறாள் குஞ்சு. அம்மாவோ தன்னைத் தனியே விட்டுப் போய்விடாதே என்று சிறு பிள்ளை போல முரண்டு பிடிக்கிறாள். அம்மாவின் கண்பார்வையில் குறைபாடு வந்தது இப்போதுதான், ஆனால் அவள் பலகாலமாகவே கண்ணைக்கட்டிக் கொண்டு தான் வாழ்ந்திருக்கிறாள் என்று அம்மா இழந்து போன பூர்வீகச் சொத்தை, நிகழ்வுகளைக் கதை விவரிக்கிறது. அம்மா தனியாக எங்கேயும் போனதேயில்லை. அப்பா தான் அவளது உலகம். பதினைந்து வயதில் திருமணமாகி வந்தவள் அம்மா. பதினாறு வயதில் அக்கா பிறந்திருக்கிறாள்.

குஞ்சுவிற்கு இருபத்திஐந்து வயது முடிந்தும் திருமணம் நடக்கவில்லை. வேலையும் கிடைக்கவில்லை. அவளது சொந்த மாமாகூட தன் பையனுக்கு வெளி இடத்தில் மாப்பிள்ளை பார்த்துக் கட்டி வைத்துவிட்டார். வெற்றிலை கைமாறிய நாளில் அம்மா அடுப்படி நடையில் தலை வைத்து சாப்பிடாமல் அழுது  கொண்டிருந்தாள். குஞ்சு தன் வீடு வீழ்ச்சியின் கைகளில் விழுந்து கொண்டிருப்பதை  உணர்ந்த  போதும் ஆற்றைப் போல சளைக்காமல் ஓடிக் கொண்டு தானிருக்கிறாள்

அவளது கனவில் ஆறு பல தடவை  வந்திருக்கிறது. அவள் ஆற்றோடு கூடவே பறந்திருக்கிறாள். அந்தக் கனவு அவளுக்குப் பிடித்திருந்தது. அன்றைக்கும் அவள் ஆற்றைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஆறு தெரியவில்லை. ஆனால் பாலம் தெரிகிறது.  பாலம் தெரிந்தாலே ஆறு தெரிந்த மாதிரிதான். கதை முடிகிறது.

கதையின் ஊடுவெட்டாக இரண்டு பெண்களின் கடந்தகாலமும் சமகாலமும் பீறிடுகின்றன. சொந்தம், உறவு, யாவும் பொய்த்துப்போன வாழ்க்கையில் அவர்கள் ஆற்றைப் போல தன் இயல்பாக ஓடுவது மட்டுமே வாழ்க்கை என்று நம்புகிறார்கள். ஆறு தன் வயதைப் பற்றி என்றாவது கவலைப்படுகிறதா? தன் மீது மிதந்து செல்லும் குப்பைகளுக்காக முகம் சுழிக்கிறதா? ஆறு ஒரு நம்பிக்கை. அதன் போக்கு வாழ்வின் மீதான பிடிமானம்.

இரண்டு பெண்களின் கதையின் ஊடே பார்வதி அக்கா, நீலா மச்சி, வீரவநல்லூர் பெண், தங்கத்துசித்தி என்று இன்னும் சில பெண்கள் நினைவு கொள்ளப்படுகிறார்கள். அன்றாடச் சம்பவம் ஒன்றின் பின்னே தீராத ஏக்கமும் தனிமையும், வேதனையிலும் வாழ்வின் மீதான பிடிமானமும் கொண்ட பெண்களின் அகம் சித்தரிக்கப்படுகிறது.

இதுதான் வண்ணதாசனின்  கதையுலகம். குடும்பமே அவரது மையப்புள்ளி. அதன் வீழ்ச்சியும்  நிலைகுலைவுமே அவரது கதைகளின் அடிநாதம். சிறிய சந்தோஷங்களைத் தவிர அந்த மனிதர்கள் வேறு எதையும் அனுபவிக்கவேயில்லை. தெருவும் வீடுகளும் காலமாற்றத்தில் அடையாளம் அற்றுப் போய்க் கொண்டேயிருக்கின்றன.  ஆறுகூட முன்புபோல இல்லை. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. ஆனாலும் மனது கடந்த காலத்திற்கு ஏங்கிக் கொண்டேயிருக்கிறது.

ஊரைபிரிந்து போகின்றவன் தன்கூடவே ஊரின் நினைவுகளையும், ஆற்றையும் கொண்டுதான் போகிறான். அது உருவமற்று அவனுக்குள் ஓடிக் கொண்டுதானிருக்கிறது என்பதையே வண்ணதாசனின் படைப்புகள் விவரிக்கின்றன.

சகமனிதன் மீதான அன்பும் அக்கறையுமே அவர் படைப்புகளின் பிரதானக் குரல். வன்முறையும், உக்கிரமும் கொண்ட மனிதர்கள் அவர் கதையுலகில் இல்லை. வாழ்வின் இடையறாத முன்னகர்வுதான் கதையைக் கொண்டு செல்கின்றன. கருணையும் சௌந்தர்யமும்தான் வண்ணதாசனின் இரண்டு கண்கள் என்று வண்ணநிலவன் குறிப்பிட்டிருக்கிறார். அது சரியானதொரு மதிப்பீடு என்று உணர முடிகிறது.

எனக்கு வண்ணதாசன் கதைகளில் அவர் கதாபாத்திரங்களுக்கு இடும் பெயர்களை ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பெயர்கள் முன் கேட்டு அறியாதவை. அல்லது அந்தப் பெயர்களைக் கேட்டமாத்திரத்தில் மனதில் அவர்களைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகிவிடுகின்றது.  குறிப்பாக சாலா, புஜ்ஜி, பக்கா, குஞ்சு, சோணை, பியோ, அல்போன்ஸ், கபீர், லோகா, சித்தேசன், ஜர்டி, விருத்தா, பரமு, கிட்டி, செண்டையா, டெய்சி, சைலப்பன், தீப்பாச்சி, டொமினிக், ஆயன், நிஸபர். இந்தப் பெயர்கள் உருவாக்கும் கிளர்ச்சிகளே கதையின் வாசிப்பை நெருக்கமாக்கிவிடுகின்றன.

வண்ணதாசன் கதைகளில் வரும் சிறுவர்கள் அசலானவர்கள். அழகிரிசாமியிடமும் கிருஷ்ணன் நம்பியிடமும் சிறுவர்களின் மனதைத் துல்லியமாக வெளிப்படுத்தும் எழுத்து சாத்தியமாகியிருந்தது. அதற்கு நிகரானது வண்ணதாசன் கதைகள்.

இவர் கதைகளில் வரும் சிறுவர்கள் சிறுவயதிலே வேலைக்குப் பழக்கப்படுத்தப்பட்டு பால்யத்தை இழந்தவர்கள். எப்போதாவது தன்னை மீறி வெளிப்படும் பால்யத்தை அடையாளம் கண்டு கொண்டு ஏங்குபவர்கள். தூம்புவாயில் கொட்டும் தண்ணீரைக் குற்றால அருவியாகக் கொள்ளும் இந்தக் குழந்தைகளின் இயலாமை வண்ணதாசனின் வரிகளில் வலிமையான உணர்ச் சிப்பாங்கோடு வெளிப்பட்டுள்ளது.

1962இல் எழுதத் துவங்கிய வண்ணதாசன் எனும் கல்யாண சுந்தரம், திருநெல்வேலியில் பிறந்தவர். இலக்கிய விமர்சகர் தி.க.சிவ சங்கரன்  அவர்களின்  புதல்வர். இன்றுவரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நவீனத் தமிழ்க் கவிதையுலகில் இவரது இடம் முக்கியமானது. கல்யாண் ஜி என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார்

வண்ணதாசன் சென்னைக்கு மாறுதலாகி வந்து மேற்குமாம்பலத்தில் வசித்த போது இரண்டு முறை அவரைக் காணச் சென்றிருக்கிறேன். பலமுறை இளையபாரதியோடு சேர்ந்து அவரது குல்மொகர் அபார்ட் மெண்டிலும் அசோக்நகர் வீட்டிலும் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு போதும் அவர் அதிகம் பேசியதில்லை. பேச்சின் இடத்தை தன் சிரிப்பாலும் மௌனத்தாலும் நிரப் பக்கூடியவர் வண்ணதாசன்.

புனைவெழுத்தைத் தாண்டி வண்ணதாசனின் கூடுதலான சிறப்பு அம்சம் அவரது கடிதங்கள், தன் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்கள் தனித்து நூலாக வெளிவந்திருக்கின்றன. கடிதங்களை வெறும் அந்தரங்க தகவல்கள் பரிமாறும் வடிவம் என்ற தளத்திலிருந்து உருமாற்றி தன் எண்ணங்களை, மனப்பதிவுகளை, வாசித்த புத்தகங்களை, சந்தித்த மனிதர்களை, அன்றாட வாழ்வின் வியப்பை கவித்துவமாக எழுதும் அற்புத ஆற்றல் கொண்டவர் வண்ணதாசன்.

யானையைக்கூட
அடிக்கடி பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து

என்று வண்ணதாசன் எழுதியிருக்கிறார். இதுதான் அவர் படைப்புகளை ஏன் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று கேட்கும் வாசகனுக்கான நிரந்தர பதில். கண்ணில் படும் பருண்மைகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். மண் புழுக்களைப் பற்றி அக்கறை கொள்ள ஈரமான மனதும் ஆழ்ந்த கவனமும், சகஉயிர்களின் மீதான அன்பும் வேண்டும். அது வண்ணதாசனிடம் நிறையவே இருக்கிறது

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து. Bookmark the permalink.

One Response to வண்ணதாசன் : எழுத்தில் ஓடும் ஆறு

  1. நூற்றாண்டுப் பழமையான மதுரையின் தொல் வீதியொன்றில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தது போலிருந்தது என்று மறுநாள் கோணங்கி சொன்னார். நானும் அந்த மனநிலையில்தானிருந்தேன். – எஸ்.ராமகிருஷ்ணன்.

    வாசகபர்வம் நூலிலேயே இதை வாசித்திருக்கிறேன். அந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் அந்நூலிலுள்ள எழுத்தாளர்களின் தீவிர வாசகனாகி விடுவார்கள். அந்தளவு எஸ்.ராமகிருஷ்ணன் ஒவ்வொருவர் மீதும், அவர்களின் எழுத்துகள் மீதும் நம்மை ஆர்வம் கொள்ள வைக்கிறார். அற்புதமான பகிர்வு. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s