ஒரு கூழாங்கல்

ஒரு கூழாங்கல்

 வண்ணதாசன்

http://www.chikkymukky.com/archive/issue01/Short_story_Kalyanji.htm

அப்போதே காந்திக்கும் செம்பாவுக்கும் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. காந்தி என்றால் வழக்கம்போலக் காந்திமதியின் சுருக்கம் என்று நினைத்துவிடகூடாது. முழுப்பெயர் அருணாசல காந்தி. அதே மாதிரி செம்பா பெயர் செண்பகம் மட்டும் அல்ல. செண்பகக் குழல்வாய்மொழி.

‘குழலாமணி இருக்கானா பாரு’, ‘குழலாமணி வீட்டில இரண்டு தேங்கா கிடந்தா வாங்கிட்டு வா’ என்று அம்மா எங்களிடம் சொல்வாள்.  அப்படிக் கூப்பிட எனக்குப் பிடிக்கவில்லை.  நான் செம்பா என்று என்னுடைய அக்கா சொல்கிறமாதிரிதான் சொல்வேன். அக்காவும்   செம்பாவும் ஒரெ கிளாஸ்.  அக்கா, செம்பா, நான் மூவரும் ஒன்றாகத்தான் ஸ்கூலுக்குப் புறப்படுவோம். அவர்கள் இரண்டு பேரும் வலதுபக்கம் திரும்பி, கல்லணை ஸ்கூலுக்குப் போய்விடுவார்கள். நான் நேரே எல். சொர்ணம் வீட்டுக்குப் போய்விடுவேன். அங்கிருந்து பன்னீர் பூ பொறுக்கிகொண்டே பள்ளிக்கூடம் போய்விட வேண்டியது தான்.

இதற்குள் எல்.சொர்ணத்துடைய அக்கா சுப்புலட்சுமி ஒருதடவை என் தலையிலே குட்டியிருப்பாள். அல்லது கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியிருப்பாள். சிலசமயம் அப்படியே குனிந்து நெற்றியில் முட்டுவாள்.

சுப்புலட்சுமி அக்கா என்றாலே மஞ்சட்பொடி வாசம், கன்னத்தில் முளைமுளையாய் பரு, பூனை முடி. எல்.சொர்ணம் வீட்டிக்குள் கட்டுக்கட்டாக உத்திரக்கட்டை வரை அடுக்கி வைத்திருக்கிற நூல் வாசமும் மஞ்சள்பொடி வாசமும் சேர்ந்து என்னவோ பண்ணும். என்ன செய்கிறோம் என்று தெரியாமல்  விளையாட்டுப் போல நாக்கை நீட்டின சமையம் சுப்பக்கா நாடியில் இரண்டு மூன்று முடி நீட்டமாக வளர்ந்திருப்பது தெரிந்தது.  அந்த முடி ரொம்ப காலத்துக்கு என்னைத் தொந்தரவு பண்ணிக்கொண்டிருந்தது என்பது உண்மை.  இத்தனைக்கும் அந்த அக்காவுக்கு சீக்கிரமே கல்யாணமாகி கொழும்புவுக்குப் போய்விட்டார்கள்.  காந்திக்கும் செம்பாவுக்கும் தான் கல்யாணமாகவில்லை.  இப்போது வரைக்கும் ஆகவில்லை என்றுதான் சொல்ல வருகிறேன்.

இதற்கு முன்பு ஒருதடவை நாராயணனுடைய கல்யாணத்திற்கு வந்திருந்தேன்.  கல்யாணம் இலஞ்சி கோவிலில் நடந்தது. அதற்கு காந்தி செம்பா இரண்டு பேரும் வந்திருந்தார்கள்.  பெண்வழியில் சொந்தமாக இருக்கும்.  ஒரு கருப்பு அம்பாசிடர் காரில் வந்து இறங்கினார்கள்.  காந்தி போஸ்ட் ஆபீஸில் பெரிய வேலையிலும் செம்பா பாங்க் வேலையிலும் இருப்பதாகச் சொன்னார்கள்.  பட்டாளத்துக்காரர் ஒருவருக்குப் பேசி காந்தியின் கல்யாணம் நின்று போனதாகவும் அதற்குப் பிறகு கல்யாணமே வேண்டாமென்று அவள் முடிவு செய்து விட்டதாகவும் கேள்வி.  செம்பாவும் ‘அக்காவுக்கு வேண்டாமென்றால் எனக்கும் வேண்டாம்’ என்பது போல இருந்துவிட்டாளாம்.  அது பெரிய விஷயம் தான்.

கல்யாண வயது தப்பி சற்று முதிர்ந்து இருந்த காந்தியிடம்  சின்ன வயதில் இல்லாத ஒரு அழகு வந்திருந்தது.  பூட்டுப் பூட்டாகக் கழற்றி தேய்த்து வெயிலில் காயவைத்த மன்னார் கோவில் விளக்கை மறுபடி ஒன்றாக மாட்டி நிமிர்த்தி வைப்பது இப்படித்தான் இருக்கும்.  என்ன, திரியைப் போட்டு பொருத்த ஆளில்லை.

காருடைய கதவை ‘டொப்’பென்று அடைத்து மூடிவிட்டு காந்தி முன்னால் வர, செம்பா பின்னால் வருகிறாள்.  செம்பாவுக்கே முப்பத்தைந்து முப்பத்தாறு இருக்கும்.  சிவந்து பூரித்திருந்தாள்.  கோவிலுக்கு நேர் எதிரே இருந்த மண்டபத்தில் உட்கார்ந்திருக்கும் எனக்கு செம்பாவை முன்பக்கம் பார்ப்பதை விட பின்பக்கம் இருந்து பார்ப்பது உசிதம் என்று தோன்றியது.  கனகாம்பரக் கலரில் ஒரு புடவை, உடம்போடு புடைத்து ஏறி இறங்குவதை சேர்ந்தார்ப்போல அதிக நேரம் பார்க்க முடியவில்லை.

இடது பக்கம் திரும்பி மலையையும் மேகத்தையும் பார்த்து மறுபடியும் செம்பாவைப் பார்த்தால் அவஸ்தையாக இருந்தது.  செம்பா கையில் ஒரு காமெரா வைத்திருந்தாள்.  நாலா புறங்களையும் திரும்பி நின்று புகைப்படங்கள் எடுக்கும் போது உயர்ந்த கைகளும் காமெராவில் புதைந்த முகமும் கண்சுருங்கின போது கன்னத்துச் சதையும் சுருங்கி மேலே ஏறினாலும் பார்க்கப் பார்க்க பரபரவென்று வந்தது.

கல்லைப் போல இந்த மண்டபத்தில் காலைத் தொங்க்ப்போட்டுக்கொண்டு காற்றுக்கு விலகுகிற வேட்டியை இழுத்து இழுத்து விட்டபடி நான் உட்கார்ந்திருக்கிறேன்.  இது செம்பாவுக்குத் தெரியாமலா இருக்கும். தெரியும்.  ஆனாலும் அப்படித் தெரியாத மாதிரி ஒரு பாவலா.  எனக்கு வந்த ஆத்திரத்தில் எழுந்திருந்து போய் அப்படியே செம்பாவை பின்னாலிருந்து கட்டி நொறுக்க வேண்டுமென்று தோன்றியது.

ஆத்திரமென்றால் அப்படியா செய்வார்கள்.  சத்தம் போட்டு கோபமாக நான்கு திட்டு திட்டவேண்டியது தானே என்று சொல்லக்கூடாது.  இதுவும் கோபம் தான்.  திட்டு தான்.  சொன்னால் புரியாது.  அதை அப்படிச் செய்தால் தான் சரியாக வரும். கோவிலுக்கும் நான் இருந்த இடத்துக்கும் இடையே அறுவடைக்கு அறுத்து கதிரடிப்புக்குக் காயப் போட்டிருந்தார்கள்.  சில சமயம் அறுப்பு விட்ட அன்றைக்குப் பார்த்து சரியாக மழை வரும்.  அப்படியெல்லாம் இன்று இல்லை.  எல்லாம் சரியாகத்தான் இருந்தது.  பச்சை நெல்லும் கதிரும் வைக்கோல் தாளும் பவுன் நிறத்தில் அந்தச் சச்சவுக்கத்தையும் நிறப்பி இருந்தது.

வெயிலின் பதம் அருமையாகப் பரவி ஒவ்வொரு நெல் கதிரையும் மினுங்க வைத்தது  அந்த வெயிலையும் கனத்துச் சாய்ந்த கதிரையும் பார்க்கிற சமயம் உண்டான கிளர்ச்சியைச் சொல்ல முடியாது.  கல்யாணமாகி இத்தனை வருஷங்களில் எது எதற்கு எப்படி ஆகும் என்று நம்மையும் உடம்பையும் பற்றி நமக்குத் தெரியாதா என்ன?  இது, இதுவரைக்கும் இல்லாத மாதிரி இருந்தது.  வெயில் இன்னும் கொஞ்சம் சுள்ளென்று அடித்தால் இந்த வாசனை உண்டாக்குகிற போதை ஆளைத் தூக்கிவிடக்கூடும்.  அது கூடப் பெரிதில்லை.  தூக்கி இப்படி முன்னாலும் பின்னாலும் திரும்புகிற செம்பா மாதிரி ஆட்கள் மேல் போட்டுவிடக்கூடாது.

சும்மா இருக்கவிடாமல் இப்படியெல்லாம் செய்தால் எப்படி?

குனிந்து இரண்டு கை கதிரை அள்ளி நெஞ்சோடு வைத்துக்கொண்டு செம்பா காந்தியைப் பார்த்துச் சிரித்தாள்.  “தலையை அப்படியே லேசாகச் சாய்த்து கண்ணை இடுக்கிச் சிரிக்காதே” என்று என்னை அறியாமல் நான் சத்தம் போட்டு விடக்கூடாது என்பதற்காக நானும் ஒரு வைக்கோலை எடுத்துக் கடித்தேன்.  இப்போது நான் காந்தியை நன்றாகப் பார்க்க முடிந்தது.  காந்தியின் தோற்றத்தில் வயது தெரிந்தது.  காலர் வைத்த ரவிக்கை, முக்கால் கை எல்லாம் இப்போது யார் போடுகிறார்கள்.  காந்தி அப்படித்தான் போட்டிருந்தாள்.  மேலே கழுத்தோடு கழுத்தாக.  கீழே ஒரு விரற்கடை அளவு இடுப்புத் தெரியாமல் கொசுவம் சொருகின சேலை வரை.  இடது கையில் ஒரு வாட்ச்.  வேறு எதுவும் கிடையாது.  கழுத்தில் ஸ்படிகமாலை போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் .  ஆனால் வெற்றுக்கழுத்தாகவே இருந்தது.  காரை எலும்பும் பள்ளமும் தெரிவதை ஒன்றும் செய்ய முடியவில்லை

இவ்வளவு நேரம் செம்பாவைப் பார்க்கும் போது உண்டானதைவிட அதிகப் படியாக காந்தியைப் பார்க்கும் போது எனக்கு ஏன் இப்படி ஆகவேண்டும் என்று தெரியவ்ல்லை.  உள் நாக்கு அடித்தொண்டை எல்லாம் உலர்ந்தது.  என்னிடத்தில் தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் இலந்தம் புதரும் நத்தைக்கூடுமாகக் கிடக்கிற வெயிலில் தரையோடு தரையாகப் படர்ந்த பிரண்டைக்கொடி மாதிரி இருக்கும் காந்தியைப் பார்த்து என்னவெல்லாமோ தோன்றுமா?  அதையெல்லாம் வெளியே கூடச் சொல்ல முடியாது.  அப்படி அசிங்கம் அசிங்கமாக யோசனை வரும்படி காந்தியிடம் ஏதோ இருந்தது.

பூர்ணலிங்கமும் அப்படியே சொன்னது தான் ஆச்சர்யம்.  அவனை ரொம்பக் காலத்துக்குப்பிறகு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற அவசரத்தில் பார்க்கிறேன்.

பூர்ணலிங்கம் எங்கள் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி பெரிய தெருவில் இருந்தான்.  வாய்க்காலை ஒட்டி அவர்களுடைய வீடு இருந்தது.  ஈரச்சேலையோடு குளிக்கிற தோற்றத்தில் உள்ள பெண்களை முதல் முதலில் என்னிடம் வர்ணித்தவன் அவன் தான்.  நம் மனதில் பதியவே பதியாத சில நடிகைகளைப் பற்றி அவர்களுடைய அங்க லட்சணம் பற்றி புதிது புதிதாக ஏதாவது சொல்வான்.  ஊச்சிலாக நாடி உள்ள அடர்த்தியாக முதுகில் சுருட்டை முடி தொங்குகிற ஒரு நடிகையின் வசீகரம் குறித்து அவன் சொல்லிய சிறிது காலத்தில் அந்தப் பெண் தற்கொலை செய்து இறந்து போனதாகப் பேப்பரில் வந்தது.

ஒரு மூடி போட்ட எண்ணை டின்னில் முறுக்கு சுசீயம் விற்றுக்கொண்டு டி எம் எஸ் குரலில் பாட்டும் போடுகிற பாலகிருஷ்ணனின் மனைவியை பூர்ணலிங்கம் எங்கே பார்த்தானோ?  சற்று வாத்து நடையாம் அவளுக்கு.  அப்படி நடக்கிற தினுசுக்கு பூர்ணம் சொல்கிற உதாரணத்தை கேட்கத்தான் முடியும்.  கேட்கும் போதே கூசுகிறதை எப்படி வெளியே சொல்வது.  “ஆனா, அப்படியே கடிச்சுத் தின்னுரலாம்” என்று அவன் முடிக்கும் போது நமக்கு என்னவோ மாதிரி இருக்கும்.  அப்படி இருக்கட்டும் என்று தானே அவனும் இதையெல்லாம் சொல்கிறான்.  அந்தப் பூர்ண லிங்கம் தான் காந்தியைப் பற்றிச் சொன்னான்.

என்னை அவசரமாக கையைப் பிடித்து ஓரமாக இழுத்தான்.  இவ்வளவு நெழிசலும் ஆடநீடாச் சத்தமுமாக இருக்கிற இடத்தில் ஓரமாவது சாரமாவது.  இரண்டு உள்பாவாடை எடுத்தால் ஒன்று இலவசம் என்கிற ஒரு விளம்பர போர்டு, பூவேணுமா என்று முகத்துக்கு நேரே நீட்டிக் கேட்கிற குரல், பீ காம்பிளக்ஸா அல்லது பான் பராக்கா என்று உறுதியாகச் சொல்ல முடியாத வகையில் ஒரு வாசனையுடன் செல்போனில் பேசுகிற ஒருத்தர், இதற்கு மத்தியில் நானும் அவனும் மட்டும் தனியாக இருப்பது போல பூர்ணலிங்கம் சொன்னான்.

“எத்தனையோ பேரைப் பார்த்தாச்சு.  நேத்து உங்க பக்கத்து வீட்டு காந்தியைப் பார்த்ததும் அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னு ஆயிட்டுது” என்று ஆரம்பித்தான்.   பார்க்கிறதுக்குத் தான் அவள் சோளத்தட்டை மாதிரி இருக்கிறாளாம்.  ஆனால் இந்த மாதிரி இருப்பவர்கள் மற்றதில் தீயாக நிற்பார்களாம்.  நல்லவேளை இதுவரை ஒருத்தனும் கட்டவில்லையாம்.  கட்டியிருந்தால் ராத்திரியோடு ராத்திரியாக ஓடிப்போயிருப்பானாம்.  தாக்கு பிடிக்க முடியாதாம்.  அவள் அங்கே நின்றால் இங்கே அனலடிக்கிறதாம்.  வேம்படியம்மன் பூக்குழியில் இறங்குவது லேசாம்.  இது கூடுதலாம்.  பில்பம் கூட மிஞ்சாதாம்.

பூர்ணலிங்கல் சுற்றிச் சுற்றி இப்படியே தீ, கங்கு என்று சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு வேடிக்கையாக இருந்தது.  “நல்லவேளை, நீ சுவரேறிக் குதிக்காமல் இருந்தே.  குதிச்சிருந்தால் அவ்வளவு தான்.  இன்றைய தேதிக்கு இப்படி உன்னை நான் பார்த்திருக்க முடியாது”.என்று சொல்லிவிட்டுப் போனது அதைவிடவும் பெரிய கூத்து.  ரயிலில் ஏறி உட்கார்ந்த பிறகு கூட நான் அதை நினைத்துச் சிரித்திருக்க வேண்டும்.

“என்ன நீங்களாக சிரிச்சுக்கிடுதீங்க” என்று சரசு கேட்டாள்.

நான் என்னத்தைச் சொல்ல.  இப்படி ஒண்ணும் சொல்லாததைப் பார்த்துவிட்டு, ”பாருட்டி உங்க அப்பாவை.  கோட்டி மாதிரி தானா சிரிச்சுக்கிட்டு இருக்கா” என்று மரகதத்திடம் சொன்னாள்.  சின்னப் பிள்ளைக்கு என்ன புரியும். பதிலுக்கு அதுவும் என்னைப் பார்த்துச் சிரித்தது தான் மிச்சம்.

அன்றைக்கு அப்படிச் சிரித்தேனே தவிர பூர்ணலிங்கம் சொன்னது சரிதானென்று இப்போது தோன்றிற்று.  என்ன நான் சொன்னது சரியாப் போச்சா என்று பச்சை வைக்கோலுக்குள் அவன் சிரித்தான்.

காந்தியும் அந்த நெல்கதிருக்கு ஊடாகத்தான் நடந்து வந்தாள்.  கடல் பிளந்து அவளுக்கு முன்பு வழி விடுவது போல நடை நிதானமாக இருந்தது.  குனியவில்லை. நிமிரவில்லை.  கால் தடுக்காமல் சேலையை உயர்த்திப் பிடிக்கவில்லை.  கைகளைக்கூட அதிகம் வீசக்காணோம். தலைக்கு, காற்றுக்குப் பறக்காமல் எப்படி நடக்க முடிகிறது.  மலையைப் பார்க்கிறாளா, கோபுரத்தைப் பார்க்கிறாளா, தென்னங்கீற்றா, வெய்யிலா, நேற்றோ சில தினங்களுக்கு முன்போ வெட்டிப் போடப்பட்டிருக்கிற நுங்குக் குலை மிச்சமோ, தென்வடலாக பறந்து கத்துகிற பச்சைக் கிளிகளா எதை என்று தெரியவில்லை.  எதையும் பார்க்கவில்லை.  அல்லது எல்லாவற்றையும் காந்தி பார்க்கிறாள்.  அப்படித் தான் சுருக்கமாகச் சொல்ல முடியும்.

காந்தி நடந்து கொண்டே இருந்தாள்.  மண்டபத்திலிருந்து நான் பார்க்கப் பார்க்க கோவில் மதிலின் சிவப்புப் பட்டைக்கும் வெள்ளைக்கும் இடையில் புகுந்தும் வெளிப்பட்டும் காந்தி செல்வது போல இருந்தது.  அந்தக் கல் மதில் எந்த இடத்திலும் காந்தி நுழைய வழிவிடத் தயாராக உருகியும் இளகியும் வழிந்து கொண்டிருந்தது.

காந்தியும் செம்பாவும் வாசலில் நுழைகிறார்கள்.  காந்தி இரு கரங்களையும் கூப்பிக் கொள்கிறாள்.  செம்பாவின் பின்புறம் அது இது எல்லாம் இப்போது ஒன்றுமில்லை என்றாகிவிட்டது.  காந்தி குனிந்து கல்படியை தொட்டு ஒற்றிக்கொள்கிறாள்.  ஒரு அணிலுக்குப் பின்னாக இன்னொரு அணில் கோவிலுக்கு உள்ளேயிருந்து அவளுக்கு பக்கவாட்டில் வெளியேறி ஓடி வந்ததை இப்போதும் மறக்க முடிய வில்லை.

யாரென்று கூட கண்டு கொள்ளாத செம்பாவின் மீது கோபம் வந்தது வாஸ்தவம் தான்.  அப்படியே பின்புறமாக கட்டி அந்தக் கதிரும் நெல்லுமாகப் புரட்ட வேண்டும் என்றும் இருந்தது.  எல்லாம் காந்தியைப் பார்க்கும் வரை தான்.  அவள் அப்படி நடையைத் தொட்டுக் கும்பிடும் போது, வெளியே ஓடி வந்த அணில் மாதிரி நானும் எங்காவது ஓடிவிட வேண்டும் என்று தோன்றி விட்டது.  கல்யாண வீட்டில் சாப்பிடவில்லை.  ஒருத்தரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.  செங்கோட்டை, ஆரியங்காவு, புனலூர் என்று மனம் போன போக்கில் போய்விட்டேன்.  அந்த பாஸஞ்சர் கொல்லம் வரை போனாலும் சரிதான்.

என் பக்கத்தில் கடகாப் பெட்டியில், ஏழிலைக் கிழங்குக்கு நடுவில், ஒரு பிராந்தி பாட்டிலில் இருந்த மிச்ச திரவம் ரயிலின் ஆட்டத்தில் அலம்பிக்கொண்டே வந்தது. அந்த அலம்பலும் பிராந்தி திரவமும் படுத்தியது.  என்னிடம் சிகரெட் தீர்ந்து போயிருந்ததால் கதவைத் திறந்து வைத்துக் காற்றாட நின்றவரிடம் கேட்டு ஒரு பீடி வாங்கினேன்.   முதல் இழுப்பின் அத்தனை புகையையும் வெளியே விடவில்லை.

அந்தப் புகை ஒரு பத்துப் பதினைந்து வருஷம் உள்ளேயே தான் இருந்தது. அப்பா என்னை ஒரு காலத்தில் திட்டுவது போல நிஜமாகவே எனக்கு ஏழு கழுதை வயதாகி விட்டது. இப்போது கூட அந்த பீடிப் புகை வெது வெதுவென்று உள்ளே சுழன்றபடி இருக்கிறது என்று தெரியும்.

மரகதத்துடைய கல்யாண அழைப்பிதழை யார் யாருக்கு அனுப்புவது என்று எழுத உட்கார்ந்திருக்கிறேன்.  ஆபீஸ் ஆட்கள், தெரிந்தவர்கள், ஸ்நேகிதர்கள் என்று என்னுடைய தனிப்பட்ட லிஸ்ட் அது. மரகதம் என் பக்கத்தில் உட்கார்ந்து அதை வாசித்துச் சொல்கிறாள்.  திருமணம் ஆகப்போகிற பெண்பிள்ளைகள் தன்னுடைய அப்பாக்களுக்குத் தருகின்ற அபூர்வமான நேரங்களில் ஒன்று அது.  யார் பெயரும் விட்டுப் போயிற்றா, சேர்க்க வேண்டுமா என்று நிதானிக்க சரசும் உட்கார்ந்திருக்கிறாள்.   ஒவ்வொன்றாக வாசித்துவந்த மரகதம், ‘அருணாசல காந்தி’ என்று வாசித்துவிட்டு, ‘அது யாருப்பா’?! என்கிறாள்.  சரசுவுக்கும் இந்தப் பெயர் பிடிபடவில்லை.  யார் என்கிறது போல என்னைப் பார்த்துத் தலையை அசைத்தாள்.

‘காந்தி’ என்கிறேன்.  அதற்கும் உதடு பிதுங்குகிறது.  ”நம்ம வளவுக்கு அடுத்த வளவு காந்தி ஞாபகமில்லையா.  செம்பாவுக்கு அக்கா”  என்று சரசுவிடம் சொல்கிறேன்.  சரசுவுக்கு யாரென்று தெரிந்துவிட்டது.  அதை நேரடியாக என்னிடம் சொல்லவில்லை.

‘உங்க அப்பா பெருவிரலை மறந்துருவா. சுண்டுவிரலை ஞாபகம் வெச்சிருப்பா’ என்று மரகதத்திடம் சொல்லிவிட்டு ‘அடுத்தால எவள் பேரு இருக்குன்னு வாசி’ என்று சரசு தரையைப் பார்த்தாள்.   எதற்குத் தரையைப் பார்க்க வேண்டும்.  என்னைப் பார்க்க வேண்டியது தானே?

மரகதம் லிஸ்டை ஒருகையில் வைத்து மறு கை விரல்களால் பேனாவை அசைத்தபடி இருந்தாள்.  பேனா மூடி சில சமையம் உதட்டுப் பக்கம் பட்டுத் திரும்பியது.  வைத்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கலாம்.  அழிந்தும் அழியாத மருதாணியின் காவி நிறம், லாரல் ரோஸ் நிறமையில் எழுதப்பட்ட அந்தக் காகித வெள்ளை இரண்டும் கண்ணில் பட்டது.  எழுந்துபோய் பளீரென்று அடிக்கிற வெயிலைப் பார்த்துவிட்டு வரவேண்டும் போல இருந்தது.

எப்போதும் பச்சைப் பெயிண்ட் அடிக்கப் பட்டிருக்கிற காந்தியின் பெரிய வீட்டின் அழிக்கதவுக் கம்பிகளில் ஈயப் பெயிண்டுடன் முன்னே வந்தது.  அவ்வப்போது வெட்டி விடப்படுவதும் வளர்வதுமாக இருக்கிற காந்தி வீட்டு போகேன்வில்லா மரம் நிலைகொள்ளாமல் பூத்துக் கொட்டி நாங்கள் உட்கார்ந்திடுக்கிற இடம் வரை சிவப்பை அனுப்பியது.

இப்படியெல்லம் நினைத்துக்கொள்ள அதிகம் போனால் இரண்டு நிமிடம் எடுத்திருக்குமா?  நான் நிமிர்ந்து பார்க்கும் போது மரகதம் அடுத்தடுத்த பெயர்களை வாசித்துக்கொண்டு இருந்தாள்.   நான் கவனிக்கவில்லை.  பிரஸ்ஸிலிருந்து அச்சடித்துக்கூட வந்திராத கல்யாண அழைப்பிதழில் அருணாசல காந்தி என்ற பெயரை எழுதத் துவங்கினேன்.  இன்னும் தரையைப் பார்த்துக் குனிந்திருந்தாள் சரசு.  எப்படியும் காந்தியை நேரில் பார்த்து அழைப்பிதழைக் கொடுத்தே ஆகவேண்டும்.  இவள் தரையைப் பார்த்தாலும் சரி, உத்திரக் கட்டையைப் பார்த்தாலும் சரி.

பொய் சொல்வது என்று தீர்மானித்து விட்டால் உலகத்தில் அதற்குப் பஞ்சமா என்ன? அரணாக்கயிறு வான்கப் போகிறேன் என்று இவர்களிடம் சொல்லிவிட்டு காந்தி வீட்டுக்குப் போய் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தாலும் இவர்களுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியப் போவதில்லை.  ஆனால் இதற்கெல்லாம் பொய் சொல்வது அனாவசியமல்லவா?  ”நான் நேரடியாக காந்தி வீட்டுக்குவரை போகிறேன்.  டவுனில் வேறு ஏதாவது ஜோலி இருக்கா” என்று கேட்டுவிட்டே போனேன்.  இருக்கிறது இல்லை என்று ஒரு பதிலும் வரவில்லை.  வராது என்று தெரிந்ததுதான்.

எப்போதாவது சில சமயங்களில் நம்முடைய மனதுக்குச் சரியாக ஒத்துப் போகும்படி எல்லாம் நடக்கிறது.  பைக்கில் போகவே சந்தோஷமாக இருந்தது.  ரோடு கழுவி விடப்பட்டது போல ராத்திரி மழை பெய்தால் அப்படித்தானே இருக்கும்.

சைக்கிளில் எதிரே வந்தவர் எனக்கு சலாம் வைத்துவிட்டுப் போனார்.  யார் என்று தெரியவில்லை.  பின்னால் இருந்த சாக்கில் எலுமிச்சம்பழத்தை மூடையாக கட்டி வைத்திருந்தார்.  மஞ்சள் மஞ்சேள் என்று ஒரே ஒரு எலுமிச்சம்பழம் இப்போது இந்தக் கழுவி விட்ட ரோட்டில் உருண்டு போனால் நன்றாக இருக்கும்.  அந்த வாசனைக்குப் பின்னால் கருவேப்பிலை வாசனையுடன் இருக்கிற டெம்போ. கோவில் வாசல் கடைகள் திறக்க இன்னும் நேரமாகும் என்றாலும் சவுரி முடிகள் தொங்குவதை நினைக்காமல் அந்த இடத்தை எப்படித் தாண்ட முடியும்..

இடதுபுறம் திரும்பியது ரத வீதி திறந்து கிடந்தது.  கந்தல் துணிமூட்டையை இடுக்கியபடி, இடுப்புக்குக்கீழ் அநேகமாக எல்லாம் தெரிய ஒருத்தர் போய்க்கொண்டிருந்த்தார். இந்த மாதிரி ஆட்களுக்கு என்று நடையில் எவ்வளவு ஒரு வேகம் வந்து விடுகிறது.  இத்தனை வேகமாக அவர்கள் எங்கிருந்து வருவார்கள்? எங்கே போவார்கள்.  இந்தத் தகரக் கொட்டகைக்குள் இருப்பது தேர் என்று அவர்களுக்குத் தெரியுமா?  ஒன்றன் மேல் ஒன்றாகப் பறந்து இறங்கி லாலாக்கடை மிக்ஸரைக் கொத்தும் காக்கைகளைப் பொறுத்தவரை அந்தக் கந்தல் துணிக்கும் என் முகத்துக்கும் வித்யாசம் உண்டா?

கிளிப்பச்சை முக்காடை இழுத்துவிடும் அவசரத்துடன் வளையல் கடை சேட் வீட்டுப் பெண் குறுக்காக நடந்து எங்கே போகிறது?  எப்படி இவர்கள் இப்படி உருவிவிட்டது போல இருக்கிறார்கள்.  ஏன் இப்போது தாமரைப் பூ ஞாபகம் வருகிறது.  பூ கூட அல்ல மொட்டு.  மொக்கு என்று சொல்வதை விட பொக்கு என்று சொன்னால் நன்றாக இருக்குமோ. கேரளா வைத்தியசாலையில் உள்ள போர்டில் வரையப்பட்டிருக்கும் நெல்லிக்காயும் நெல்லிக்காய்த் தைலபாட்டிலும் இப்போது இருக்குமா?

பைக்கில் வந்திருக்கக்கூடாது.  நடந்து வந்திருக்க வேண்டும். அந்தக் கோட்டிக்காரன் மாதிரி.  ‘உங்க அப்பாவைப் பாரு’ட்டி.  கோட்டி மாதிரி தானா சிரிச்சுக்கிட்டு உக்காந்திருக்கா’ என்று சரசு சொன்னது, மரகதம் பதிலுக்குச் சிரித்தது எல்லாம் நேற்று மாதிரி இருக்கிறது. ரயில் சத்தம் கூட இன்னும் கேட்கிறது.  அதற்குள் மரகதத்திற்கு கல்யாணம் வந்து விட்டது.  விடிந்தும் விடியாமலுமாக காந்திக்குக் கொடுக்க அழைப்பிதழை எடுத்துக்கொண்டு புறப்பட்டு இருக்கிறேன்.

இன்னும் நாலு எட்டு வைத்தால் போதும்.  வீடு வந்து விடும்.

நாங்கள் குடியிருந்த வீட்டில் மெஸ் வந்துவிட்டது என்று முன்னாலேயே தெரியும்.  இலையைப் போடுவதற்கு தெருவை ஒட்டித் தொட்டியை வைத்திருக்கிறார்கள்.  ஒன்றுக்கு இரண்டாக பசுமாடு குனிந்து தின்று கொண்டிருக்கிறது.  உன்னை யார் இங்கே எல்லாம் வரச்சொன்னார்கள் என்பது போல வயதான மாடு நிமிர்ந்து பார்த்தது.

அந்தப் பச்சை கேட் அப்படியே இருந்தது.  அலுமினியப் பெயிண்ட் மெழுகுவர்த்திச் சொட்டு இறங்குவ்து போல நடுக்கம்பியில் சற்று திரட்சியாகத் தெரியும். அதிலும் மாற்றமில்லை. அருணாசல காந்தியென்றும் செண்பகக் குழல்வாய்மொழி என்றும் தொங்குகிற பெயர்ப்பலகைகள் புதிது.  அதே இடத்தில், நிலைப்படியின் வலது மூலையின் உயரே, ஒரு வெள்ளைப் பொத்தான் போல, அழைப்புமணி.

நான் அதை அழுத்தவில்லை.  காந்தி என்று பெயரைச் சொல்லிக் கூப்பிட வேண்டும்.  அல்லது செம்பா என்று.  செம்பாவைக் கூப்பிட்டுத்தான் பழக்கம். ஆயுளிலேயே முதன்முதலாக இப்போதுதான் அந்தப் பெயர்களை உச்சரிப்பது போல இருந்தது.  இந்த வீட்டிற்குள்  என்னுடைய அக்கா குரலும், என்னுடைய குரலும் எத்தனை தடவை ஒலித்திருக்கும்?  அவற்றில் எப்போதும் போல ஒன்று, இந்த வீட்டுச் சுவரிலிருந்து, மச்சுப்படியில் இறங்கி, ஊஞ்சல் முனங்கலோடு அந்திமந்தாரைப் பூ அசைய, இப்போது திரும்பக்கேட்டால் எப்படி இருக்கும்.

நிலைக்கண்ணாடிக்குள் இருந்து கால்சட்டை போட்டிருக்கிற என்னுடைய குரல் நெளிந்துகொண்டு இடம்வலமாக வந்தாலும் சரி.  தொட்டில் கட்டுகிற இரும்பு வளையத்தில் எப்போதும் உட்கார்ந்திருக்குமே ஒரு குருவி, அது என் குரலை ஒரு குட்டி இறகாக உதிர்த்தால் ஆகாதா.  ஒரு பூனைக்குட்டி போல இந்தக் கதவை ஒட்டி பதிபோட்டுப் படுத்திருக்கிற என் குரலைத் தடவிக்கொடுக்க என் கைகளை நான் நீட்டினால் யார் என்ன சொல்ல முடியும்?

லேசாகக் கைபட்டதும் கதவு திறந்துவிட்டது.

பட்டாசாலில் இப்போது ஊஞ்சல் இல்லை. ஜன்னல் ஓரத்தில் சாய்வு நாற்காலி இருந்தது.  பக்கத்தில் சிறிய புத்தக அலமாரி. எட்டி எடுத்துக்கொள்கிற உயரம். உறுதியை இங்கே இருந்தே நிதானிக்க முடிகிற மரஸ்டூல்.  கவிழ்த்தி வைக்கப்பட்டிருக்கிற கண்ணாடி.  காந்தியுடையதாக இருக்கலாம்.

வேறு எவ்வளவோ இருக்க நான் அந்த ரவிவர்மா படத்தைத் தேடினேன்.  இந்த நொடி வரை அதை நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.  சட்டைக்குப் பித்தான் தைக்கும்போது தவறுதலாக ஊசி குத்தி, விரலில் இருந்து முத்துப் போல் ரத்தம் பூக்குமே, அது மாதிரி பிசுபிசுவென்று அந்தப்படம் மேலே வந்தது.

சிவபெருமான் கைலாயத்தில் நிற்க, கங்கை அவர்மேல் இறங்குகிற தோற்றம். மீசை வைத்த சிவன்.  காலைச் சற்று அகட்டி நிற்பார்.  முகம் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும்.  கம்பீரம், கனிவு, காதல் எல்லாம் தெரியும்.  அந்தப் படம் பட்டாசாலுக்கும் இரண்டாம் கட்டுக்கும் மத்தியில் உள்ள நிலைப்படிக்கு நேர் உயரே மாட்டியிருப்பார்கள்.  எப்போதும் ஒரு சிவப்பு குண்டு பல்பு எரியும்.  சிவப்பு வெளிச்சம் கண்ணாடியில் புரண்டு நடுவிலிருந்து வழிந்தபடி இருக்கும்.

இங்கிருந்து பார்க்கும்போது அந்த இடத்தில் சிவப்பு தெரிந்தது.  படம் தெளிவாகத்  தெரியவில்லை.  எனக்கும் வயதாகி இருக்கிறது இல்லையா.  ஒரு தெளிவின்மை இன்னொரு தெளிவு எதையும் தருமோ?  இப்போது வேறு விதமாக நினைக்க முடிந்தது.  அந்த கங்கை ஒரு வெளிச்சம் போல இந்த அறையில் பெருகி எனக்கு முன்பு வரை நகர்ந்து வருகிறது.  நான் ஒரே ஒரு கூழாங்கல் போலக் கிடக்கிறேன்.  இத்தனை பிரவாகத்துக்கு மத்தியிலும் ஒன்றே ஒன்றாக.  எந்தப் பாசியும் ஒட்டாமல், வழ வழ என்று எனக்கு நானே குளிர்ந்து.

சட்டென்று காந்தியைப் பார்க்காமல் அழைப்பிதழைக் கொடுக்காமல் இப்படியே திரும்பிப் போய்விடலாம் என்று தோன்றி விட்டது.  பாதி முதுகும் தோளும் தெருவாசல் பக்கம் பார்த்துவிட்டது.  அதற்குள் ‘யாருங்க’ என்று சத்தம் கேட்டது.  ‘எப்படி உள்ளே வந்தாய்’ என்று அதட்டல் இல்லை.  ‘யாரோ வந்து நிற்கிறார்களே’ என்ற பதட்டம் இல்லை.  பேறுகால வீட்டில் கட்டியிருக்கிற தொட்டில் துணியை தொட்டது போல இருந்தது.

காந்திதான் வந்து கொண்டிருந்தாள்.  அவரவர் வீடுகளுக்குள் அவரவர்க்கு ஒரு அசைவும் நடையும் இருக்குமே.  அதனுடன் காந்தி உருவம் நெருங்கிக்கொண்டிருந்தது.  பின்பக்கத்து இருட்டுக்குள் இருந்து வெளியேறி வருகிற காந்தியின் மேல் என்பக்கத்து வெளிச்சமும் பக்கவாட்டு ஜன்னலின் வழியான வெய்யிலும் வருகிற விதம் தண்ணீரில் மிதந்து அசைகிற ஒரு இலையைக் குனிந்து எடுக்கிறது போல இருக்கிறது.

ஒரு மின்னலில் இலஞ்சி கோவில் நடையை காந்தி குனிந்து தொட்டு கண்ணில் ஒற்றியது தெரிந்து மறைந்தது.  காந்தியை அப்படிக் கும்பிட வேண்டும் எனத் தோன்றியதும் கிடு கிடு என்று எனது இடது தொடைச் சதை நடுங்கியதும் ஒரே நேரத்தில் தான்.

காந்திக்கு என்னை அடையாளம் தெரிந்துவிட்டது.  எத்தனை காலமானாலும் எல்லோரும் அப்படியேதான் இருக்கிறோம் போல.

‘நல்லா இருக்கீங்களா சுந்தரம்?’ என்று காந்தி கேட்டாள்.  அது மாத்திரமில்லை.  அப்படிக் கேட்டது சற்று தூரத்தில்.  அந்த இரண்டு மூன்று அடி இடைவெளியிலேயே காந்தியின் கைகள் என் பக்கமாக உயர்ந்து நீளத் துவங்கிவிட்டது.  விரியும் சிறகுகள் போல இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டே காந்தி வருகிறாள்.  என்னை அப்படியே கட்டிக்கொள்ளப் போவ்து போல அகன்று இருக்கிற அந்தக் கைகளை மட்டும் பார்த்து நிற்கிறேன்.  என் கைகள் என் பார்வையுடன் உயர ஆரம்பிக்கையில் காந்தி என்னிடம் வந்து என்னுடைய இரண்டு கைகளையும் அவளுடைய இரு கைகளையும் எடுத்து பற்றிக்கொள்கிறாள்.  முதலில் சொன்னது போல என் பெயரைச் சொல்லவில்லை.  மரியாதை சேர்க்கவில்லை. ‘நல்லா இருக்கியா’ என்று கேட்டாள். என் வலது கையைப் பொத்திக்கொண்டு இன்னொரு கையால் பொத்தின கையைத் தட்டிக்கொடுத்தாள்.  காந்தியின் விரல் ஓரங்களில் உள்ளங்கை முழுவதிலும் வெள்ளை விழுந்திருந்தது.  மூக்கு நுனி, உதடுகள், காதுமடல் எல்லாம் சிவந்திருந்தது.  கண் இரப்பையும் உச்சிவகிடும் கூட.

செம்பாவை ஆளைக் காணோம்.  உள்ளே இருக்கிறாளோ என்னவோ.  இல்லாவிட்டால் கூட ஒன்றும் இல்லை.

‘உட்காரு சுந்தரம்’ என்று நாற்காலியைக் காட்டினாள்.  என் கையிலிருந்த அழைப்பிதழ் நடுங்கியது  மணிக்கட்டை காந்தி இறுக்கினாள்.  தோளில் தட்டிக்கொடுத்து ‘என்ன மகளுக்குக் கல்யாணமா?’ என்று சிரித்தாள்.  அந்தச் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. எனக்குப் பொங்கிப் பொங்கி அழுகை வந்தது.

காந்தியின் கைகளிலிருந்து என்கையை உருவிக்கொண்டேன்.  பத்திரிக்கையும் கையுமாக மடங்கி அப்படியே கால்கள் பக்கம் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன்.  என்னை அமிழ்த்தி உருட்டி ஆழத்துக்குக் கொண்டுபோவது போல அலையலையாக ஏதேதோ மேலே நனைத்து ஓடிக்கொண்டிருந்தது.

தலையை நிமிர்த்தி அந்த ரவிவர்மா படத்தைத் தேடினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக அது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , . Bookmark the permalink.

1 Response to ஒரு கூழாங்கல்

  1. Pingback: ஒளியிலே தெரிவது | வண்ணதாசன் – கடைசி பெஞ்ச்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s