‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’

http://abedheen.wordpress.com/2010/09/16/aq-paranthaman-lette/

வண்ணதாசன் நேர்காணல் – தீராநதி

தீராநதி : இப்போது புத்தகம் வெளியிடுவது மிக எளிய செயலாகி-விட்டது. உங்கள் முதல் கதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ எப்படி வெளிவந்தது? கணினி இல்லாத அந்தக் காலத்தில் இந்திய அளவிலான சிறந்த நூல் தயாரிப்பிற்கான பரிசு அந்த நூலுக்குக் கிடைத்ததே?
வண்ணதாசன் : அப்போது முன்னூற்றுச் சொச்சம் ரூபாதான் சம்பளம். கையில் பெரிய சேமிப்பு எல்லாம் கிடையாது. ஆனாலும் தொகுப்புப் போட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அஃக் பரந்தாமனிடம் ஒப்படைத்தாயிற்று. அவருடைய கஷ்டம், என்னுடைய சிரமம் எல்லாவற்றையும் மீறி புத்தகம் அருமையாகத் தயாராயிற்று. என் சிநேகிதன் ஆர்.பாலுதான் கடைசித் தவணைக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றினான். நானும் கோபாலும்தான் சேலம் போய் எடுத்துக்கிட்டு வந்தோம்.
ஒரு ட்ரெடில் அச்சகத்தை வைத்துக்கொண்டு பரந்தாமனால் மட்டும்தான் இவ்வளவு அழகாக அச்சடிக்க முடியும். புத்தகத்துக்கு இரண்டாம் தேசிய விருது கிடைத்ததுதான் எல்லோருக்கும் தெரியும். `கலைக்க முடியாத ஒப்பனைகள்’ நூலுக்காகப் பரந்தாமன் அச்சடித்திருந்த லெட்டர்பேட், தொடர்பு அஞ்சலட்டைகளைப் பார்த்தால் அதற்கு முதற்பரிசே கொடுக்கத் தோன்றும். பரந்தாமன்தான் டில்லி போனார். அவர்தான் விருது வாங்கி வந்தார். அவர்தானே வாங்கவும் வேண்டும்.

***

பரந்தாமன் கடிதம் :

ப்ரிய வண்ணதாசன் – கடன் வறுமையையும் கூட்டிக்கொண்டு வந்தது. வறுமைக்கு நல்ல பசி. அது எங்களை வாங்கிக்கொண்டது. எங்களுக்குக் குச்சிக் கிழங்குகளை வாங்கினாள் சத்யா. இந்தத் தொகுப்பை நாங்கள் அச்சிட முயன்றபோதெல்லாம் சாப்பிட முடியாமல் போனது. சாப்பிட முயன்றபோதெல்லாம் அச்சிட முயலாமல் போனது. தவிர்க்கவே முடியாத தருணங்களில் தாங்கள் தொகுப்புக்காக அனுப்பி வைத்த பணத்தை யோசித்து யோசித்து வேறுவழியே இன்றி சில நூறுகளை நாங்கள் பண்டமாற்றுச் செய்தோம் – பருக்கைகளாக. திடீரென்று ஒருநாள் வந்த திருப்பத்தூர்காரர்கள் வீட்டாரிடம் விலைபேசி அச்சகத்தைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். அன்று மங்கலம் சந்திரசேகரனிடம் பேசிக்கொண்டிருந்த இலக்கியப் பேச்சும் குடித்துக்கொண்டிருந்த கொத்துமல்லிக் காப்பியும் ரொம்ப ருசியாக இருந்தன. இந்தத் தொகுப்பு மிக அழகாகவே வந்திருக்கிறது.  என்றாலும் எனக்கான மன அமைதியற்ற நீட்சியின் சோகத்தில் அவசரமாக நேர்ந்துபோன குறைபாடுகளை இந்நூலின் இரண்டாம் பதிப்பில் நிவர்த்திசெய்து கொடுக்க எங்கிருந்தாலும் வருவேன், ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’தாம் கடைசி. ‘எனக்குப் பசித்துக்கொண்டே இருக்கிறது’ என்று ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன். நான் சொன்னது ‘எந்தப் பசியை?’ என்று நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பசியைப் புரிந்துகொள்வது என்பது எல்லாவற்றிலும் மேலான காரியம். கலைஞனை வீடுதான் முதலில் கொல்கிறது. ஓர் உண்மையான சோதனைக்காரனின் யுத்தம் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பார்வைதான் அந்நியமாதலுக்குக் காரணமாகிறது. அப்பாவையும், அம்மாவையும், நண்பர்களையும், ஏன் சமூகத்தையுமே ‘யாரோ’ என்றாக்கி விடுகிறது. மாட்டுத்தொழுவத்துக்குக் கொட்டகை போட என்று, மின்சார பாய்கிற வயரில் மோதுகிறது என்று, சாமி ஊர்வலம் போகும்போது இடிக்கிறது என்று – நான் சின்ன செடியாக வைத்து வளர்த்த என் ப்ரிய வேப்ப மரத்தின் மூன்று பெரிய கிளைகளை வெட்டி விட்டார்கள். பூவும் பிஞ்சுமாய்  மீதம் இரண்டு கிளைகளே இருக்கிற இதன் நிழலில்தான் எங்கள் வீட்டு அடுப்பு இருக்கிறது – இன்னும். நன்றிகளுடன் – பரந்தாமன்.

***

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , . Bookmark the permalink.

One Response to ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’

  1. பாலா சொல்கிறார்:

    அன்புள்ள அண்ணா (கொஞ்சம் தயக்கம் – என்னவென்று அழைக்க).. 1986-1988 – மூன்றாண்டுகள் நெல்லையில் படித்தேன். ம.தி.த இந்துக் கல்லூரியில் தங்கி, கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில். நெல்லை அப்போது பிடிக்கவேயில்லை. கோவையில் இருந்து வந்ததாலோ என்னவோ. பின்னர், பு.பியில் துவங்கி, உங்களையும், வண்ணநிலவனையும் வந்தடைந்த போது..நிறைய இழந்து விட்டோமோ என்று தோன்றும். பின்னர் இரண்டாண்டுகள் கல்லிடைக் குறிச்சியில் இருந்தேன். என்ஃபீல்ட் நிறுவனத்தின் இயற்கை வேளாண் பண்ணையின் அதிகாரியாக. கல்லிடைக்குறிச்சி புகைவண்டி நிலையத்தின் எதிரில் உள்ள ஒரு பெரும் பங்களா.. அதன் உப்பரிகையில் அமர்ந்திருப்பது ஒரு சுகம்.. தினம் காலை 6:30 மணிக்கு ஒரு நீராவி எஞ்ஜினில் ஓடும் ஒரு புகை வண்டி வரும். அப்போது, நல்ல ஃபில்டர் காப்பியுடன் இந்து படித்துக் கொண்டிருப்பேன். சில சமயங்களில் தென் மேற்குப் பருவக்காற்றின் சாரல் மெல்லிய சல்லாத்துணி தொடுவது போல் தொடும். உங்கள் கதைகள் அத்தகைய ஒரு இன்பத்தைத் தருகின்றன.. உங்கள் நினைவும்..

    அன்புடன்

    பாலா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s