கதாவிலாசம் உள்ளங்கை எழுத்து

வண்ணதாசன்

http://www.vikatan.com/av/2005/apr/03042005/av0702.asp

கதாவிலாசம்

எஸ்.ராமகிருஷ்ணன்

உள்ளங்கை எழுத்து

‘புல்லைக் காட்டிலும் வேகமாக வளர்வது எது?’ என்று கேட்கும் யட்சனுக்கு, ‘கவலை!’ எனப் பதில் சொல்கிறான் யுதிஷ்டிரன். மகாபாரதத்தில் வரும் இந்த ஒற்றை வரி, இன்றைக்கும் மனதில் ஒரு நாணல் போல அசைந்து கொண்டே இருக்கிறது. உதிர்ந்து கிடக்கும் மயிலிறகைக் கையில் எடுத்துப் பார்க்கும்போது, மயிலின் கம்பீரம் இறகிலே புலப்படுவது போல மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களின் எந்த ஒரு பாடலை வாசித்தாலும், அதன் பிரமாண்டமும், அழகும், வாழ்வு குறித்த நுட்பமான பதிவுகளும், சொல்லின் சுவையும் புரிகின்றன. இதிகாச கதாபாத்திரங்கள் துடுப்பில்லாத படகு ஆற்றில் அலைக்கழிக்கப்படுவது போல, வாழ்க்கை கொண்டுசெல்லும் பக்கமெல்லாம் அலைபடுகிறார்கள். ஆனால், ஒரு நாள் படகு எங்கோ திசை தெரியாத ஒரு கரையில் ஒதுக்கப்படுவது போல, அவர்களின் முடிவும் வெளிப்படுத்த முடியாத துயரமும் தனிமையுமாக எங்கோ கரைதட்டி நின்று விடுகிறது. யுகபுருஷர்களாக இருப்பவர்களுக்கும் வயதாகிறது. மூப்பு அவர்களின் காதோரம் நரைக்கத் துவங்கி, பார்த்துக்கொண்டு இருக்கும்போதே உடல் முழுவதும் நிரம்பிவிடுகிறது. ஸ்ரீகிருஷ்ணனும்கூட ஒரு வேடனின் அம்புக்குத்தான் பலியாகிறான். தர்மபுத்திரன் யுதிஷ்டிரன் சொர்க்கலோகம் செல்லும்போது, ஒரு நாயைத் தவிர அவனுடன் வர யாருமில்லை. மாவீரன் அஸ்வத்தாமாவோ நண்பர்களற்றுப் போகும் படியாக சாபம்கொண்டு, சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் காற்றில் அலைகிறான். தூக்கமற்றுப் போன திருதராஷ்டிரனுக்கு, ‘நியாய உணர்வைத் தவிர தூக்கத்தை வரவழைக்க வேறு மருந்து இல்லை!’ என்று நீதி சொன்ன விதுரனும், மகாபாரதத்தின் முடிவில் நிர்வாணியாக யாருடனும் ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாது என்பதற்காக நாக்கு புரண்டுவிடாமலிருக்க கூழாங்கல்லை நாவினடியில் புதைத்துக்கொண்டு சொல்லற்று அடர்ந்த காட் டினுள் தனியே போய் விடுகிறான். விதுரன் சொல்லை அறிந்தவன். ஒரு முறை திருதராஷ்டிரனிடம் விதுரன் சொல்கிறான்… ‘கோடரி யால் வெட்டப்பட்ட மரம் கூடத் திரும்பவும் முளைத்து விடக் கூடியது. ஆனால், கடுஞ்சொல்லால் துண்டிக்கப் பட்ட உறவு ஒருபோதும் சேர்வதே இல்லை!’ கங்கையின் கரைகளில் சுற்றி அலைந்த நாட்களில் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், பாறையின் மீது அமர்ந்தபடி ஆகாசத்தைப் பார்த்தபடியிருக்கும் துறவிகளை நான் கண்டிருக்கிறேன். பறந்து செல்லும் பறவையைப் பார்ப்பது போல மேகங்கள் கடந்துபோவதை அவர்கள் ஆனந்தத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். சில நேரங்களில் தங்களது பாறைகளிலிருந்து எழுந்து நின்று எதையோ கைகொட்டி ரசிப் பார்கள். ஆனால், என்ன காண்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது. இருள் கலையாத விடிகாலையில் கங்கையில் குளிப்பதற்காக, திரி விழுந்த சடாமுடியும் யோகம் பயின்ற உடலுமாகத் துறவிகள் வருவார்கள். சீற்றமான ஆற்றின் ஒரு பாறையில் அமர்ந்தபடி, அங்கே வரும் போகும் மனிதர்களைப் பார்த்துக்கொண்டு இருப்பேன். எனது நாட்டமெல்லாம் இயற்கையை அறிந்துகொள்வது மட்டும்தான். கங்கை பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருந்த மழைக்காலம் அது. ஆற்றின் விசை கடுமையாக இருந்தது. பல இடங்களில் காட்டு மரங்களை அடித்து இழுத்து வந்துகொண்டு இருந்தது ஆறு. வீட்டில் ஆறு மணிக்கு எழவே அலுத்துக்கொள்ளும் நான், அங்கே நான்கு மணிக்கு முன்னதாகவே விழித்துவிடுவேன். சாவகாசமாக மரங்களுக்கிடையில் நடந்து, பாறைகளின் மீதேறி கங்கை யோட்டத்தின் அருகில் வந்து நிற்கும் போது, நேற்றுப் பார்த்த பாறைகள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கும். மான்கள் நீர் அருந்த வருவது போல அத்தனை அமைதியாகவும் ஆசையோடும் ஆங்காங்கே துறவிகள் நீர்முகத்துக்கு வந்து சேர்வார்கள். எவரும் எவரையும் கண்டு வணங்குவதோ, நின்று பேசுவதோ இல்லை. கையில் கொண்டு வந்திருக்கும் பூக்களை நீரில் மிதக்க விட்டு, ஏதோ பூஜை செய்வார்கள். பிறகு,தண்ணீரை உள்ளங்கையில் ஏந்திப் பத்து முறை தீர்த்தம் போலக் குடிப்பார்கள். அப்புறம் நீரோட்டத்தின் விசையைப் பற்றிய பயமின்றி தண்ணீருக்குள் மூழ்கி எழுவார்கள். நான் நடுக்கத்துடன் தண்ணீருக்குள் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கமும் பயமுமாக இருப்பேன். ஈரம் சொட்டும் உடலுடன் பாறைகளில் ஏறித் துறவிகள் நடந்து செல்லும்போது, நீர்க்கோடுகள் பாறைகளில் வழிந்தோடும். எனது அன்றாட பழக்கம் சூரியன் உதயமாவது வரை ஒரே இடத்தில் நின்று ஆற்றைப் பார்த்துக்கொண்டு இருப்பது மட்டுமே! காரணம், சூரிய வெளிச்சம் எந்தப் பாறை வரை படுகிறது… காலையின் முதல் வெளிச்சத்தில் உலகம் எப்படியிருக் கிறது என்று காண்பதில் ஓர் ஆனந்தம். இதற்காகக் குளித்துவிட்டு பாறையில் நின்று கொள்வேன். ஒரு ஆமை தண்ணீருக் குள்ளிருந்து மேலே வருவது போல, சர்வ நிதானமாக காலைச் சூரியன் வெளிப்படும். ஆனால், பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அதுவே ஒரு ஓநாயைப் போல வேகம் கொண்டுவிடும். சூரியனின் முதல் கிரணங்கள் பாறையின் மீது ஒவ்வொரு நாளும் ஓரிடத்தில் விழுகின்றன. ஒருபோதும் ஒரே இடத்தில் வெளிச்சம் படுவதில்லை என்று கண்டறிந்தேன். அத்துடன் ஒவ்வொரு நாளின் காலையும் தனக்கென தனியான அடர்த்தியும் நறுமணமும்கொண்டதாக இருப்பதும் புரிந்தது. வெளிச்சத்தில் ஆறு புலப்படும்போது அங்கே யாரும் இருக்க மாட்டார்கள். ஆறு மட்டும் இருளில் கண்டதை விடவும் பிரமாண்டமானதாக, பொங்கிச் சீறி ஓடிக்கொண்டு இருக்கும். பாம்பின் நாக்கு சீறுவது போல மெதுவாக வெயில் எட்டிப் பார்ப்பதும் அடங்குவதுமாக இருக்கும். குளித்து எழுந்து தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பி வரும்போது, மலையின் வேறு வேறு முகடுகளில் துறவிகள் அமர்ந்திருப்பதைக் காண முடியும். அவர்கள் முகத்தில் களங்கமின்மையும் எதையோ அறிந்துகொண்ட ரகசியமும் பளிச்சிடும். நான் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டதெல்லாம் அதன் பிரமாண்டமும் மௌனமும் மட்டுமே! பேச்சு பழகுவது எளிது. பேச்சை விட்டு விலகுவது எளிதானதில்லை. பிரமாண்டமான மலை எப்போதும் மௌனமாகவே இருக்கிறது. உலகுக்கு ஒளியை வாரியிறைக்கிற சூரியன் சத்தமிடுவதில்லை. தொடர் ஓட்டப் பந்தயக்காரர்கள் ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்குப் பொருளை மாற்றி வாங்கிக்கொண்டு ஓடுவது போல, அத்தனை துல்லியமாக உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக் கின்றன இரவும் பகலும்! ஒரு முறை, பசி தாகத்தை விலக்கியபடி காட்டுக்குள் திரியும் விதுரனைக் காண்பதற்காகச் செல் கிறான் யுதிஷ்டிரன். உடல் மெலிந்து ஆளே உருமாறிப் போயிருந்த விதுரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு யுதிஷ்டிரனைக் கண்டதும், அவரறியா மல் கண்களில் பரிவும் அன்பும் வெளிப்படுகிறது. பாஷை நாவில் இருந்து கண்களுக்கு இடம் மாறிவிட்டது போல அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமலே ஒருவர் மனதை மற்றவர் புரிந்துகொள்கிறார்கள். விதுரன் தன் பார்வையின் வழியாகவே தனது சக்தியைத் தந்துவிட்டு, விலகிப் போய் விடுகிறார். பாஷை தேவையற்ற இடங்கள் வாழ்வில் அரிதாகவே ஏற்படுகின் றன. மருத்துவமனை படுக்கையில் நோயுற்றவன் தன் வயதைப் பற்றிய பிரக்ஞையின்றி தானாக கண்ணீர் விடுகிறான். ஆறுதலாக அவனது தலையைக் கோதிவிடும் போது ஏற்படும் சாந்தியை, பாஷையால் உருவாக்க முடியாது என்றே தோன்றுகிறது. வண்ணதாசன் என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர். நெருக்கத்தில் அவரை ‘கல்யாணி அண்ணன்’ என்று அழைப்பதுதான் பிடித்திருக்கிறது. அவரது கதைகள் நெருக்கடியும் பிரச்னைகளும் நிறைந்த வாழ்வின் இடையில் அன்பின் இருப்பையும், அன்பு வெளிப்படும் அரிய தருணங்களையும் வெளிப் படுத்துபவை. தமிழ்ச் சிறுகதை உலகுக்கு இவரது பங்களிப்பு தனித்துவமானது. அது கவித்துமானதொரு உரைநடையை சிறுகதை எழுத்துக்கு உருவாக்கியது. இம்பிரஷனிச ஓவியங்கள் போன்ற துல்லியமும் வண்ணங்களும் கொண்ட உருச்சித்திரங்கள் இவரது கதைகளில் சித்திரிக்கப்படுகின்றன. ஏதேதோ ஊர்சுற்றி நான் அறிந்து கொண்ட நிசப்தத்தை வண்ணதாசன் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே அறிந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக உள்ளது அவரது ‘கூறல்’ என்ற கதை. ‘ஒரு துண்டு தோசை வாயில் இருக்கிற நிலையிலே தாத்தா அழுவதைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்று துவங்கும் இக்கதை, காது கேளாத ஒரு தாத்தாவைப் பற்றியது. வீட்டுக்கு வருபவர்களின் உதட்டசைவை வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவராக இருந்தார் தாத்தா. மூப்பு அவரது பார்வையை மங்கச்செய்த போது சத்தம் நழுவி, உதட்டசைவும் நழுவி யார் வந்திருக்கிறார்கள் என்பதை உள்ளங்கையில் விரலால் எழுதிக் காட்டச் சொல்லிப் புரிந்துகொள்ளும் நிலை உருவாகிறது. ஒரு நாள், ஊருக்குப் போயிருந்த அவரது மகனும் மருமகளும் வர, ஏன் தாமதமாகிறது என்ற காரணத்தை ஒருவரும் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கோபத்தில், ‘ஒண்ணையும் என்கிட்டே சொல்ல மாட்டேங் குறீங்க…’ என்று சொல்லியபடி எச்சில் வடிய அழுகையை அடக்க முடியாமல் சாப்பாட்டை பாதியில் வைத்துவிட்டு எழுந்துவிடுகிறார். இதைக் கண்ட பேத்திக்கு அழுகை முட்டுகிறது. இன்று வரை தாத்தா, பாஷை தன் பிடியைவிட்டு நழுவிச் செல்லும் போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் அதை இழுத்துக் கட்டிப்போட்டு வைத்திருந்தார். ஆனால், பேச்சை அறிந்துகொள்ள முடியாமல் போவது தன் இருப்பை அர்த்தமற்று போகச் செய்கிறது என்ற உண்மையை அவரால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. எப்போதும் போல அவருக்குச் சவரம் செய்வதற்காக வரும் கிருஷ்ணன், பெரியவரை தான் சமாதானம் செய்து கூட்டிவருவதாகச் சென்று அவரது அவிழ்ந்து கிடந்த வேஷ்டியைக் கட்டிச் சாந்தப்படுத்தி சவரம் செய்யக் கூட்டி வந்து நாற்காலியில் உட்கார வைக்கிறான். அவரும் இரண்டு கைகளாலும் நாற்காலியைப் பற்றிக்கொண்டு அமர்கிறார். கால் பாதம் ஆடிக் கொண்டு இருக்கிறது. வெயில் கிருஷ்ணனின் கால்களில் படர்ந்து கொண்டு இருந்தது. தாத்தா சோப்பு நுரை அப்பிய முகத்துடன் அவனிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தார் என்று கதை முடிகிறது. சொல் நழுவி, தொடுதல் மட்டுமே சாத்தியமான மூப்பின் அரிய காட்சி அது. கதை சொல்பவர், வெளிச்சம் பாறைகளில் நழுவிச் செல்வது போல கதையை அதன் போக்கில் செல்லவிட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆதரவான ஒரு மனிதன் தோளைப் பிடித்துக் கூட்டி வந்தபோது தாத்தா மன ஆறுதலைப் பெற்றுவிடுகிறார். எல்லா நாட்களும் நடப்பது போலத்தான் அன்றைக்கும் சவரம் நடக்கிறது. ஆனால், அது ஒரு அபூர்வமான காட்சியைப் போல மாறிவிடுகிறது. காற்றில் பறக்கும் சோப்பு நுரை போல நிமிட நேரத்தில் கடந்து போய்விடும் வாழ்வின் அரிய காட்சி அது. அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார் வண்ணதாசன். Ôப்யூஜி மலையின் மீது ஒரு எறும்பு ஊர்கிறது’ என்று ஒரு ஜென் கவிதை இருக்கிறது. கவிதையாக இந்த ஒரு வரிக்கு என்ன அர்த்தமிருக்கிறது என்று யோசிக்கக் கூடும். இந்த வரிக்குப் பின்னால் ஒரு அனுபவம் உள்ளது. ஜென் குரு ஒருவர் ப்யூஜி எரிமலையின் மீது பல நாட்கள் கஷ்டப்பட்டு ஏறி, அதன் உச்சிக்குச் செல்கிறார். அங்கே நின்று பெருமிதம் கொள்ளும்போது, அவரது காலடியில் ஒரு எறும்பு ஊர்ந்து செல்கிறது. அதைக் கண்ட மறுநிமிடம் அவர் பரவச நிலையை அடைந்து விடுகிறார். இக்கவிதை, கொந்தளிக்கும் எரிமலையின் மீது ஒரு எறும்பு நிதானமாக செல்வதைக் காட்டுவதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அல்லது, இன்னொரு தளத்தில் எரிமலையின் மீது ஏறிவிட்ட தாக மனிதர்கள் பெருமிதம்கொள்வதை ஒரு எறும்புகூடச் செய்கிறது என்றோ, ஒரு சிறிய எறும்பு ஊர்வதன் வழியாகத்தான் ப்யூஜி எரிமலையின் பிரமாண்டம் புலப்படுகிறது என்றோ, பல நிலைகளில் அர்த்தம் கொள்ளலாம். இப்படி அந்த ஒரு வரி எல்லையற்ற அர்த்தங்களை நோக்கி விரிந்துகொண்டே போகிறது. பிரமாண்டம் என்பது, யாரும் ஏற முடியாத மாபெரும் மலை மட்டுமல்ல. பனித்துளியில் சூரியன் தெரிவதும்கூட என்பதை இது போன்ற கதைகள்தான் மெய்ப்படுத்துகின்றன! நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான எஸ்.கல்யாணசுந்தரம் என்ற வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். திருநெல்வேலிக்காரர். 1962\ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் ப்ரியமும் கருணையும் நிரம்பியது. சகமனிதர்களின் மீதான அன்பும், அன்றாட வாழ்வு தரும் நெருக்கடியை மீறி மனிதன் நெகிழ்வுறும் அபூர்வ கணங்களைப் பதிவு செய்வதும் இவரது எழுத்தின் வலிமையாகச் சொல்லலாம். கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை. மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப் பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். கல்யாண்ஜி என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் and tagged . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s