”அகமும் புறமும்” பனை ஓலைகள்

”அகமும் புறமும்”

பனை ஓலைகள்

வெளியே உட்கார்ந்திருந்தோம்.

ஒரு வாகனம் நம்மைக் கடந்தது போல, தைப் பொங்கல் தினம் போய்க்கொண்டு இருப்பதை உணர முடிந்தது. சாயங்கால வெயில் மாதிரி அது ஒரு அபூர்வமான விதத்தில் கண் முன்னால் நகர்ந்துகொண்டு இருந்தது.

ஒவ்வொரு பண்டிகை வந்துவிட்டுப் போகும்போதும் ஒருவித உணர்வு உண்டாகிறது. துக்கம் என்று எடுத்துக்கொண்டால் துக்கம்; சந்தோஷம் என்று எடுத்துக்கொண்டால் சந்தோஷம்.

பார்க்கிற கோணத்தில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ‘இன்று வழக்கமான உற்சாகத்துடன் தமிழகமெங்கும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது!’ என்ற செய்தி வாசிப்புக்கு இடையே, அங்கங்கே பொங்கல் இடுவதையும் காட்டினார்கள். சுருசுருவென்று ஓலைகள் எரிகிற சத்தம் நுட்பமாகப் பதிவாகி இருந்தது.

வெளியே பனங்கிழங்கு வகிர்ந்துகொண்டு இருந்த சங்கரியம்மா படபடவென்று எழுந்து வந்து செய்திக்கு இடையில் காட்டப்படுகிற ஆரஞ்சுத் தீயையும் குலவையிடுகிற முகங்களையும் பார்த்துக்கொண்டு இருந்தாள். ‘அந்த ஓலை எரிகிற சத்தம் என்னமோ பண்ணுதுல்லா!’ என்று சொல்லும்போது பானை பொங்கி, ஓலைச் சாம்பலுடன் தளதளத்து ஒரு சிறு காத்திருப்புக்குப் பின், செய்தி வாசிப்புக்குள் வழிந்தது.

என்னவோ பண்ணத்தான் செய்கிறது!

சாக்கை விரித்து வெள்ளரிப் பிஞ்சு விற்கிற பெண் களையும் இப்படிச் சக்கடா வண்டியிலிருந்து ஓலையை இறக்கிப் போட்டுவிட்டு உட்கார்ந்திருக் கிற குடும்பத்தையும் பார்த்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர்களின் ஒவ்வொரு அசைவும் அவர்கள் வியாபாரத்துக்குப் புதிது என்று சொல்லியது. வெட்கப்பட்டபடி சிரித்துக்கொண்டு, சில்லரைக் கணக்கு பிடிபடாமல் வியாபாரம் செய்து அவர்கள் பிழைக்கவா.

‘ஓலையைத் தரிச்சுக் குடு’ என்று யாராவது சொன்னால், உடனே மறுபேச்சு இல்லாமல் வெட்டிக் கொடுத்தார்கள். அவர்களின் பதமான அரிவாள், பனை மட்டையில இருந்து ஓலையை அப்புறப்படுத்துகிற விதம் கச்சிதமாக இருந்தது. கண் மூடிக் கண் திறப்பதற்குள் ஓலை தனியாக, மட்டை தனியாக விழுந்தது.

எல்லாம் அப்புறப் படுத்தப்பட்டுத் தனித் தனியாகத்தான் விழுந்துகொண்டு இருக்கின்றன. எவ்வளவோ பனங்காடு அழிந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட இனத்தை அழிப்பதற்கு அந்த நிலம் சார்ந்த மரங்களை முதலில் அழித்தாலே போதும். ‘பனை மரக் காடே, பனைமரக் காடே’ என்று எம்.எஸ்.விஸ்வநாதனின் குரலில் ஒலிக்கும் பாடல், மீண்டும் பார்க்க முடியாத பனைகளைப் பற்றி மட்டுமா பாடுகிறது?

‘இந்தப் பனங்கிழங்கு இன்னும் பத்து வருஷப்பாடு இருந்தாலே ஆச்சர்யம்!’ வெந்த பனங்கிழங்கின் வாசனையுடன் வருத்தமான குரலில் அரிவாள்மணையின் முன்னாலிருந்து குரல் வந்தது. சுருண்டுகிடக்கிற மஞ்சள் நார், உயிரோடு இருப்பதைப் போல லேசாக அசைந்து ஆமோதித்தது.

தருவைத் தாம்போதி திரும்புகிற இடத்தில் மிச்சம்இருக்கிற பனைகளின் கூட்டம் இன்னும் எத்தனை காலம் இருக்கும்? யோசித்துப் பார்த்தால் தென்னையைவிட பனைமரம்தான் அழகாக இருக்கிறது. அழகு என்பதைவிடக் கம்பீரமாக பனைகள் பாடுகிறதாகக்கூடச் சிலசமயம் தோன்றுகிறது. சில துணுக்கு வெள்ளை மேகங்கள், மிச்சம் பூராவும் பின்னால் நீலவானம் விரிந்துகிடக்க, பனை விடலிகள் நிற்கிற தோற்றம் பஸ்ஸில் இருந்து பார்க்கும்போது, அது எந்த இடம் என்றாலும், ‘இறங்கி வா’ என்றுதான் கூப்பிடுகிறது. ஒரு தளபதியின் சமிக்ஞைக்குக் காத்திருப்பது போல, ஒரு யுத்தத்துக்கு அவை அணிவகுத்து நிற்பதாகக்கூட நினைப்பு வரும்.

இதே பனைகளை தேரிக் காடுகளில், மணல் மேடுகளுக்கு மத்தியில், கடற்கரை ஓரங்களில் பார்க்கையில் ஒரு பெரும் துக்கம் உண்டாவது எனக்கு மட்டும்தானா? திருச்செந்தூர் பக்கத்துக் கடற்கரை ஓரமா கவே கொஞ்ச தூரம் எட்டிப் போகும்போது, கடல் தன்னுடைய பாடுகளை அந்தப் பனை மரங்களிடமும், பனை தன்னுடைய நிராதரவைக் கடலினிடமும் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தன.

தியாகராஜனுக்கு ஊர் அந்தப் பக்கம்தான். அம்மன்புரம், உடன்குடி அல்லது திசையன்விளையாக இருக்கும். கல்லூரி விடுதியில் அடுத்த அறை. எப்போதும் ஊதாச் சட்டை போட்டிருக்கும் தியாக ராஜன், அருகில் யாரும் இல்லாத நேரத்தில், அவருடைய டிரங்க்குப் பெட்டியிலிருந்து நாட்டுக் கருப் பட்டிச் சிரட்டையை உடைத்துப் பண்டம் போலத் தின்றுகொண்டு இருந்ததை, நான் பார்த்ததும் எதற்காக அப்படி அழுதார்? சோளக் காட்டுக்காரர் சோளக் கதிரை ஒடித்துச் சாப்பிடுகிற மாதிரி, அவர் வீட்டில் காய்ச்சின கருப்பட்டியை அவர் சாப்பிடுகிறார். இதில் அழுவதற்கோ சிறு மைப்படுவதற்கோ என்ன உண்டு? கேன்டீன் மைசூர்பாகைவிட குறைச்சல் என்று யார் அவருக்குத் தப்பாகச் சொன்னார்கள்? தப்பும் சரியும் அவரவராகக் கண்டறிய வேண்டிய ஒன்றல்லவா?

என்னுடன் கேன்டீனில் இனிப்புச் சாப்பிட்டவர்களைவிட, உங்களைத்தான் நான் ஞாபகம் வைத்திருக்கிறேன் தெரியுமா! இந்த தினம் கருப்பட்டி யையும் கட்டெறும்புகளையும் விட்டு வெகுதூரம் போய்விட்டது. ஆனால், உங்கள் பச்சை டிரங்க் பெட்டியும், அதற் குப் பக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் மை பாட்டிலும் நீலக்கறை படிந்த வெள்ளைத் துணியுமாக நீங்கள் என் பக்கத்திலேயேதான் இருக்கிறீர்கள்.

உங்களைப் போலவே, முடிவற்ற பனை விடலிகளுக்கு உள்ளே இருந்து ஓலைகளைத் தரையோடு இழுத்துக்கொண்டு வருகிற ‘சமையப் பருவமான’ ஒரு செம்பட்டை முடிப் பெண் குழந்தையையும் இந்த எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் மறக்கவே முடியவில்லை. ஒரு கருக்கு மட்டையின் அழகை வரைய முடிகிற ஓவியனுக்கு, அந்தப் பெண்ணையும் கொடுத்து, தாராளமாக அந்தப் பனை விடலியையும் எழுதிவைக்கலாம்.

ஒரு பனை ஓலையின் வாசனையைத் தெரிந்தவனுக்கு சந்தன வாசம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் காப்பியங்களும் காவியங்களும் எழுதப்பட்டபோது, அப்படி எழுதுகிறவனைத் தூண்டிக்கொண்டே இருந்தவற்றில், அவனுடைய காதலியையும் அரச கட்டளைகளையும் தவிர, அந்தப் பனை ஓலைச் சுவடிகளின் வாசனையும் முக்கியமான ஒன்றாக இருக்கலாம்.

இப்போது எழுதுகிற இந்தக் காகிதங்களில் அப்படி என்ன இருக்கிறது? சமயா சமயத்தில் பஸ்ஸில் உடன் வருகிற அல்லது கோயில் பிராகாரத்தில் எதிர்ப்படுகிற சுற்றுலாப் பயணிகளின் வெள்ளைக்காரக் களை மாதிரி இவை பளிச்சென்று இருக்கிறதே தவிர, அந்த ஓலைச் சுவடியிடம் ஏற்படுகிற ஒட்டுதல் உண்டா?

தையெல்லாம் பற்றி எல்லாரிடமும் பேசிவிட முடியாது. சமயவேலிடம் பேசலாம். கிருஷியிடம் பேசலாம். சலாகுதீன் சாரிடம் பேசலாம். சலாகுதீன் சார்தான் பக்கத்தில் இருக்கிறார். ஆனால், அவருக்கு இப்போது இதையெல்லாம் கேட்க முடியாது போகலாம். எண்பது வயதுக்கு மேல் உள்ள அம்மா ‘தவறிப் போய்’ ஒரு வாரம்தான் இருக்கும். துக்கம் சிலவற்றை அனுமதிக்கிறது. சிலவற்றுக்குக் கதவு சாத்துகிறது.

சலாகுதீன் சார் எல்லாக் கதவுகளையும் திறத்தே வைத்திருந்தார். துக்கம் கேட்கப் போகும்போது எதை எதையெல்லாம் பேச மாட்டோமோ, அதை எல்லாம் நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். சுந்தர ராமசாமி, லா.ச.ரா என்று மரண விட்டத்தின் வெளி விளிம்பிலேயே பேச்சு இருந்தது. அந்த வீட்டு இழப்பின் மையத்தை நெருங்கும்போது, மறுபடி மறுபடி வேறு ஏதாவது ஒரு அலை தூக்கிக் கரையில் எறிந்தது. ஒரு சம்பிரதாய விசாரிப்பாகக் கூட, இறந்து போன அவருடைய அம்மாவின் பக்கம் கவனம் திரும்ப முடியவில்லை. அவருடைய மாலையிட்ட புகைப்படம் எதுவும்கூடத் தென்படவில்லை. ‘அம்மா எப்படி இருப்பாங்க? போட்டோ இருக்கா?’ என்று கேட்பதும் உசிதமாகப் படவில்லை. மனதுக்குள் நானாக வரைந்துகொண்டு இருந்த ஒரு படமும் தொடர்ந்த பேச்சுக்களால், முற்றுப்பெறாமல் விலகிக்கொண்டே இருந்தது.

சார் சாப்பிடச் சொன்னார். எனக்கு எதிரே, சாப்பாட்டு மேஜையைத் தாண்டின சுவரில் இரண்டு விசிறிகள் தொங்கிக்கொண்டு இருந்தன. கையடக்கமான சின்னஞ்சிறு பனை ஓலை விசிறிகள். ஓரங்களில் துணி உருட்டிவைத்துத் தைக்கப்பட்டு இருந் தன. பழைய சேலைகளில் கிழித்த துணி. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். சலாகுதீன் சார் தன்னுடைய நீண்ட அமைதிக்குப் பின் சொன்னார்… ‘எங்க அம்மாவோட விசிறிங்க!’

இதுவரையில் பகிர்ந்துகொண்டதை எல்லாம் விட, இப்போதுதான் ஒரு சரியான புள்ளியில் துக்கத்தைப் பகிர்ந்துகொள்வது போல இருந்தது. சாருடைய கண்கள் கலங்கிவிட்டிருந்தன. அந்த இரண்டு விசிறிகளையும் மீண்டும் பார்த்தேன்.

எனக்கு என்னவோ அவை சலாகுதீன் சாருடைய அம்மாவின் புகைப்படம் போலத்தான் தோன்றியது!………

00000000000000000000000000000000000000000000000000

0000000000000000000

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to ”அகமும் புறமும்” பனை ஓலைகள்

 1. வல்லம் தமிழ் சொல்கிறார்:

  வண்ணதாசனின் இயல்பான நடைக்கு என்னை இழந்தவன் அய்யா இப்படி ஒரு வலைத்தளம் இருப்பதை இன்று தான் அறிந்தேன் ,மகிழ்ந்தேன்..நன்றி

 2. கார்த்திகா சொல்கிறார்:

  பனையோலை ஏந்திப் பருகும் பத நீரின் வாசம் நினைவில் ஏறுகிறது.

 3. vishnupirakash சொல்கிறார்:

  எப்பவாவது கொஞ்சம் வாசிப்பவன் நான்,ஒருநாள் ஆனந்த விகடன் வாசிக்கும் பொது வண்ணதசனோட அகம் புறம் படித்தேன் ….
  எங்கேயோ தொடங்கி பயணிக்கின்ற அவர் வரிகள் முடியும் பொது மட்டும் என் மனதை நெருடி விட்டுப் போகும் இந்த பனை ஓலை விசிறியை போல ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s