அதெல்லாம் ஒரு காலம்!

அதெல்லாம் ஒரு காலம்!

தெல்லாம் ஒரு காலம்!

நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடை களுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல… உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும்.

மு.பழனி, பமேலா ராதா, எஸ்.வி.அன்பழகன், காசர்கோடு மலையப்பன், ஆனந்தன், அசோகன், லிங்கம், காயத்ரி, ஆர்.சோமு, பரமன், கார்த்திகா ராஜ்குமார், சிவகங்கை ரவி என்று எத்தனை பேரிடம் இருந்து எவ்வளவு கடிதங்கள்! இவை தவிர… வல்லிக்கண்ணனும், ராமச்சந்திரனும், சின்னக் கோபாலும், அம்பையும், ரவிசுப்ரமணியனும் எழுதிய கடிதங்கள் இன்னொரு பக்கம். மல்லிகைப் பூ என்றால் தினசரி பார்க்கலாம். மனோரஞ்சிதம் அப்படியில்லை. அப்படி எப்போதாவது மிகச் சுருக்கமாக எழுதி, மிக நெருக்கமாக உணரவைத்து வருகிற ந.ஜயபாஸ்கரனின் கடிதம். மாணிக்கவாசகத்தின் ஒரே ஒரு கடிதம்.

இத்தனை பேருக்கும் வேலை இருந்தது; படிப்பு இருந்தது; சொல்ல முடிந்ததும், முடியாததுமாக எவ்வளவோ இருந்தன. கூடவே, பக்கம் பக்கமாக எழுதுவதற்கான நேரமும், மனமும் இருந்தன. கடிகாரத்துக்கு என்ன, இன்றைக்கு 24 மணி நேரம், அன்றைக்கு 48 மணி நேரமா?

அதே சின்ன முள், பெரிய முள்! வெயில் காலம் என்றால், பகல் நீளம். மழைக் காலம் எனில், இரவு கூடுதல். அன்றைக்குக் கரைந்த காகம்தான் இன்றைக்கும் கரை கிறது. முடி திருத்தும் கடைகளில் கன்னித் தீவு படிக்க இன்னும் சிறுவர்கள் வந்துகொண்டு இருக்கக்கூடும். நசுங்கித் தகடான மஞ்சள் செவ்வந்திப் பூக்கள், கல்லறைத் தோட்டத் துக்கு இப்போதும் வழி காட்டு கின்றன. சுவரொட்டி ஒட்டு பவர் விரல்களிலும் வாசிப்பவர் கண்களிலும் மாற்றமில்லை. பெரும்பாலானவர்கள் மல்லாந்து தான் தூங்குகிறோம். தபால் காரர்கள், கடிதங்களை இன்னும் சைக்கிள்களில் வந்துதான் விநியோகிக்கிறார்கள். ஆனால், கடிதங்கள் காணாமல் போய் விட்டன. கடிதங்கள் மட்டுமா? கடிதங்கள் எழுதுபவர்கள்கூட!

ராதா, இப்போது ஏதேனும் ஒரு பெரிய மகப்பேறு மருத்துவமனை வைத்திருக்கக்கூடும். எஸ்.வி.அன்பழகன் பற்றி கோலார் நண்பர்கள் கொடுத்து வந்த தகவல்களும் இப்போது குறைந்துவிட்டன. காயத்ரி இப்போது எந்தப் பள்ளியில் ஆசிரியை? எனக்கு ஓஷோவை அறிமுகப்படுத்திய ஆர்.சோமு இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்? ராஜா ஹேர்கட்டிங் சலூன் முகவரிக்குக் கடிதம் போட்டால், மலையப் பனுக்குக் கிடைத்துவிடுமா?

மருத்துவர், பொறியியலாளர் எல்லாம் அவ்வப்போது எங்காவது சந்தித்து, தங்களுடைய கல்லூரி நாட்களைப் புதுப்பித்துக்கொள்வது போல, எனக்குக் கடிதம் எழுதியவர்களை, நான் கடிதம் அனுப்பியவர்களை எல்லாம் ஏதாவது ஒரு முகவரியின் கீழ் சந்திக்க முடிந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்! நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, மதுரை, மேற்கு மாம்பலம் என்று நிறைய முகவரிகள் மாறிக்கொண்டு இருந்தாலும், அந்த 21.இ. சுடலைமாடன் கோயில் தெரு முகவரியிலிருந்துதானே நான் எல்லோரையும் தொடத் துவங்கினேன். அங்கே எல்லோரையும் சந்திப்பதுதானே பொருத்தமானது!

அந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட வேண்டியவராக, அஞ்சலக ஊழியர் நந்தகோபால் இருப்பார். அவர் எனக்கு வெறும் ‘போஸ்ட்மேன்’ மாத்திரமல்ல… என் 34 வயதுக்கு உட்பட்ட உலகத்தில் அவர் மிக முக்கியமான மனிதராக நட மாடிக்கொண்டு இருந்தவர்! நந்தகோபாலை மறக்க முடியாதவராக ஆக்கியது, அவர் தரும் தபால்கள் மட்டுமல்ல… அவருடைய காளி வேஷம்தான்! தசராவாக இருக் கட்டும், திரிபுரசுந்தரி அம்மன் கோயில் கொடையாக இருக்கட்டும், நாக்கைத் தொங்கப் போட்டபடி காளியாக அவர் நடந்து வரும்போது, அவருடைய சைக்கிளோ, காக்கி உடுப்போ, தபால் கட்டுகளோ கொஞ்சம்கூட நமக்கு ஞாபகம் வராது. பக்கத்தில் போனால்கூடச் சிரிக்க மாட்டார். காளி எப்படிச் சிரிக்கும்?

மதுரையிலிருந்து பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டு இருக்கிறேன். சாத்தூரா, கோவில்பட்டியா… ஞாபகமில்லை. தசரா நேரம்தான். ஒரு காளி இல்லை, இரண்டு மூன்று பேர் காளி வேஷம் போட்டு வந்துகொண்டு இருக்கிறார்கள். எனக்கு மூன்று காளிகளுமே நந்தகோபாலாகத்தான் தோன்றியது. எல்லாப் பட்டுப்பூச்சிகளும் ஒரே பட்டுப்பூச்சி எனில், எல்லா காளியும் ஒரே காளியாகத்தானே இருக்க முடியும், கல்கத்தா காளி உட்பட! ‘யாதுமாகி நின்றாய் காளி! எங்கணும் நீ நிறைந்தாய்.’ நந்தகோபாலை அப்புறம் எங்கும் பார்க்க முடியவில்லை. குறுக்குத் துறை ஆற்றில் குளித்துவிட்டு எதிரே வருபவராக, நேதாஜி போஸ் மார்க்கெட்டில் பொங்கலுக்குப் பனங்கிழங்கும் மஞ்சள் குலையும் வாங்கி வருபவராக அல்லது பேரனையோ, பேத்தியையோ, குட்டை வாத்தியார் பள்ளிக்கூடத்தில் கொண்டுவந்து விடுகிற ஒருவராகப் பார்க்க முடிகிற தினம் இதுவரை வரவில்லை.

நான் இன்னும் கடிதங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கதைகளோ, கவிதைகளோ எழுதாத காலத்தில்கூட, யாராவது ஒருவருக் குக் கடிதம் எழுதுவதை நிறுத்தியதே இல்லை. சொல்லப்போனால், அப்படிக் கதையோ, கவி தையோ சாராதவர்களு டன் நான் பகிர்ந்து கொண்ட விஷயங்கள், அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டவை எல்லாம் இந்த வாழ் வின் செறிவான, நுட்ப மான பகுதிகளை உள்ளடக் கியவை. ஒரு ஸ்ரீதேவி சரவண குமாரோ, ஒரு சாம்ராஜோ எனக்கு எழுதியிருக்கிற கடிதங்களிலிருந்து நான் மிகப் பிரகாசமான பகல்களை யும் மிக இருண்ட இரவுகளையும் அறிந்திருக்கிறேன்.

சிதம்பரம்பட்டியிலோ, காளாம்பட்டியிலோ பூத்து நிற்கிற மல்லி கைச் செடிகளைப் போல, வேறெந்த ஊரின் கொல்லன் பட்டறை களிலோ தயாராகி வருகிற குறு வாள்களையும் வீச்சரிவாள்களையும் அவற்றால்தான் எனக்குச் சொல்ல முடிந்தன. விடுபட முடியாத போதையின் சுழல்களுக்குள் மூச்சுத் திணறிக்கொண்டு, மண்புழுவின் மேல் பாறாங்கல்லை வைத்தது போலத் தனிமையின் நசுங்கலில், உறக்கம் வராத இரவுகளில் எழுதிய சில கடிதங்களையும் மனிதர்களையும் நான் என்னுட னேயே வைத்திருக்கிறேன்.

‘கஷ்டப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள்’ என்கிற விவிலிய அடையாளத்தை வாழ்க்கை தொடர்ந்து உச்சரித்துக்கொண்டுதான் இருக் கிறது. ஒரு சுமைதாங்கியின் முக்கியத்துவம், எந்த ஒரு நடுகல்லின் முக்கியத்து வத்துக்கும் குறைந்தது அல்ல. நிழல் மரங்களுக்கு அருகில் நடப்பட்டு இருக்கிற சுமை தாங்கிகளுக்குப் பெரிய வடிவமைப்புகள் எதுவும் அவசியமில்லை. இரண்டு கல் தூண்கள், மேலே குறுக்கே ஒரு கல்பாலம். நின்றவாக்கில் உங்கள் தலைச் சுமைகளை இறக்கிக்கொள்ளலாம். தகிப்பாறிய பின் தோள் மாற்றிய சுமையுடன் மேலும் பயணம் தொடரலாம். நிறையக் கடிதங்கள் அப்படியே இருந்தன; மிக எளிமையாக, நேரடியாக, ஆரம்ப காலக் கடிதங்கள் எல்லாம் ஒரு சிட்டுக் குருவிச் சிறகினை அல்லது கோழித் தூவலை ஊதி ஊதி, நாலைந்து பேராக அதைக் காற்றிலேயே தக்கவைத்து, தரையிறங்கிவிடாமல் மேலே மேலே தள்ளுகிற விளையாட்டு போல இருந்தன. இப்போதைய கடிதங்கள் வாழ்வின் துயரம் நிறைந்த பகுதிகளை, அன்றாடத்தில் பக்கத்து மனிதர்கள் செவிகொடுக்கத் தயங்கி அப்புறம் நகர்வதை, மிக நேரடியான சொற் களில் பகிர்ந்துகொள்பவை. மிகவும் நெருங்கிய உறவினரின் பூதவுடல் வீட்டுக் கூடத்திலிருந்து தெருவுக்கு நகரும்போது உண்டாகிற அழுகை போல, வெடித்துப் பீறிடுகிற, நாகரிகம் பார்க்காத உணர்வுடன் கூடியவை.

இந்தப் புதிய வருடம் துவங்கிப் பத்து தினங்களுக்குப் பிறகுதான், இந்த 2008ம் ஆண்டின் முதல் கடிதத்தை, அம்ருதா வெளியிட்டிருக்கிற ஒரு புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட நிலையில், திலகவதி அவர்களுக்கு எழுதுகிறேன். ஒரு தொலைபேசியிலோ, செல்போனிலோ இதைப் பகிர்ந்துகொண்டு இருக்க முடியும். எதிர்ப்பக்கத்தில் இருப்பவர்களுக்கு அது சௌகரியமான ஒன்றாகக்கூட இருக்கலாம். ஆனால், கடிதம் எழுதத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. இன்னும் மின் கடிதம் எழுதத் துவங்காதவர்களை, முழுக்கால் சட்டை அணியாமல் வேட்டி கட்டுபவர்களாக, ஐந்து நட்சத்திர விடுதிகளின் கண்ணாடிக் கதவுகளூடே துடைக்கப்படாத புழுதிச் செருப்புகளுடன் நுழைபவனாகப் பார்ப்பவர்கள் இருக்கக்கூடும்.

என்னிடம் மடிக் கணினி இருக்கிறது. மின்னஞ்சல் முகவரிகூட எனக்கு உண்டு. ஆனாலும், எங்கள் வாசல் கதவில் தொங்கவிடப்பட்டு இருக்கிற சற்றுத் துருவேறிய தகரத் தபால் பெட்டியை நான் தினசரி திறந்து பார்த்துக்கொள்கிறேன். எதற்கு அஞ்ச லகங்களுக்கு விடுமுறை தருகிறார்கள் என்கிற அளவுக்கு முன்பு இருந்த பதற்றம் இப்போது தணிந்துவிட்டது. அப்படியரு தினத்தில்தான், இந்தக் கவிதையை எழுதுவதற்குக் காரணமான பறவைச் சிறகு எங்களுடைய அந்தத் தகரப் பெட்டியைத் திறக்கும்போதும் இருந்தது.

‘தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத ஏமாற்றம்.

இன்று எப்படியோ
என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்.

எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை?’

இன்றும் திறந்து பார்க்கப் போகிறேன்… ஒரு பறவையின் கடிதத்துக்காக!

Advertisement

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s