‘அபிதா’

நான் பழுத்திருந்தபோது
பழம் கடிக்க வராமல்
உளுத்துவிட்டதும்
புழு பொறுக்க
ஓடி வரும்
மனம் கொத்தி
நீ!’

– இதை நான் எழுதி இருபத்தைந்து வருடங்கள்கூட இருக்கலாம். கவிதைக்கு ‘அபிதா’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தேன். லா.ச.ரா-வின் தலைப்பு.

இதழ்கள், பச்சைக் கனவு, ஜனனி என்றும், புத்ர, சிந்தா நதி, பாற்கடல் என்றும் பரந்து அலையடித்துக்-கிடக்கிற லா.ச.ரா–வின் இன்னொரு தெறி அபிதா.

அபிதா என்றால் அபித குசலாம்பாள். உண்ணாமுலை அம்மன். அடைய முடியாதவள். சுருக்கமாக அபி.

ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அடைய முடியாதவள். இப்போதும் மனம் கொத்துகிறவர்கள். ‘அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது’ என்பது தேவதாஸ் பாடல். இப்போதும் எனக்குக் கண்டசாலாவின் குரல்தான் தேவதாஸின் குரல். ‘மும்தாஜே முத்தே என் பேகமே’ என்கிற சி.எஸ்.ஜெயராமனின் குரல்தான் ஷாஜகானின் குரல்.

லா.ச.ராவின் ஞாபகத்துடன் அபிதாவைப் படிக்க வேண்டும் போல இருந்தது. புத்தகத்தைக் காணோம். யாராவது வாங்கிப் போயிருப்பார்கள். நல்ல புத்தகங்கள் ஆறு மாதிரி. நகர்ந்துகொண்டே இருக்கும். என்னிடமிருந்து நகர்ந்துபோனவை போல, இங்கே நகர்ந்து வந்திருப்பவற்றுக்கும் குறைவில்லை. விக்ரமாதித்யன் கையெழுத்துப் போட்டிருக்கிற ‘ஜமீலா’ என் புத்தக அலமாரியில் இருக்க, என்னுடைய ‘அபிதா’ வேறு யாரிடமோ இருப்பாள். அபிதா எங்கோ இருப்பாள் அல்லது எங்கும் இருப்பாள். இப்படிச் சொற்களின் பகடை உருட்டி எத்தனை சதுரங்கம்! சொற்களின் அகல் ஏற்றி எத்தனை திருக்கார்த்திகை!

நேற்று அபியின் அம்மாவுடன் பேசும்போது, ஒரே அழுகை. ‘போன கார்த்திகைக்கு அபி இருந்தாளே. காலேஜ் விட்டு வந்து எவ்வளவு பெரிய கோலம் போட்டிருந்தா. எத்தனை விளக்குப் பொருத்திவெச்சா. இப்படிப் பண்ணுவானு தெரியாமப்போச்சே.’

எங்களுக்கும் தெரியாமல்தான் போயிற்று. அன்றைக்கும் காலையில் எட்டு எட்டரைக்கு அபியைப் பார்க்கிறோம். அப்பர்குளத்தில், இசக்கி அம்மன் கோயில் கொடை. நாங்கள் கிளம்பிக்கொண்டே இருக்கிற நேரம். அநேகமாக எல்லோரும் புறப்பட்டு வெளிவந்தாயிற்று. வீட்டைப் பூட்ட வேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது!

நான் வாசல் கோலத்தில் நிற்கிறேன். பழைய கொண்டைய ராஜு வரைகிற காலண்டர்களில் தாமரைப் பூவில் லட்சுமி நிற்பது மாதிரி, கோலம் இதழ்களாகப் பூத்து என் கால்களையும் வேட்டி நுனியையும் மூடியிருக்கிறது. ஒரே ஒரு பழுத்த வேப்பிலை மட்டும் பெருவிரல் பக்கம்.

அபி ஒரு பொம்மை மாதிரி வந்துகொண்டு இருந்தாள். பதினேழு வயதுப் பொம்மை. கையில் ஒரு பாத்திரத்தில் பால். இன்னொரு ஜவ்வுத்தாள் பையில் பூக்கள்.

என்னைப் பார்த்ததும் சிரித்தாள். எல்லா முகத்துக்கும் எல்லாச் சிரிப்புக்கும் இன்னொரு பிரதி இருக்கும். அசல் நகல் என்றெல்லாம் இல்லை. இரண்டுமே அசல். அபி முகம் அம்பை-பாலன் குடும்பத்திலுள்ள யார் முகத்தையோ எனக்கு ஞாபகப்படுத்தும்.

முகம் வேறு, சிரிப்பு வேறு இல்லை. அபிக்குச் சிரிப்புதான் முகம். சிரித்துக்கொண்டே அபி என் பக்கம் வந்தாள்.

அவளுடைய அப்பா, அம்மா, எல்லாம் அன்றைக்கு வெளியூர் போக இருப்பது எனக்குத் தெரியும். ‘ஊருக்குப் போய்விட்டார்களா?’ என்று கேட்கிறேன். விவரம் சொல்கிறாள். போய்விட்டார்களாம். பாலுவைப் பற்றி கேட்கிறேன். ‘பாலு பெரியப்பா காலையிலயே போயிட்டாங்க. டீ போட்டுக் கொடுத்தேன். குடிச்சிட்டுக் கிளம்பிட்டாங்க.’

இந்த தேநீர்த் தகவல் எனக்காக. அபி தயாரிக்கிற தேநீர் எனக்குப் பிடிக்கும். அவள் கொடுத்த முதல் தேநீரைக் குடித்து முடிக்கும் வரை, அவள் சிரிப்பு காத்திருந்தது. ஒவ்வொன்றைச் சொல்லும்போதும் ஒரு சிரிப்பு. ஆரம்பத்தில் அல்லது முடிவில் சிரித்துக்கொண்டுதான் அபியால் பேச முடியும்.

‘அத்தை எங்கே?’ என்றதும் வீட்டுக்குள் கையைக் காட்டினேன். மற்றவர்கள் என்றால், இங்கேயிருந்து சத்தமாகப் பேசியிருப்பாள். அபி நின்றாள். பூட்டிவிட்டு அத்தை வாசலுக்கு வரும்போதுதான் பேச ஆரம்பித்தாள். கோயிலுக்குப் போகிறதாக, பூவும் பாலும் எடுத்துச் செல்வதாக, அம்மா போகச் சொல்லியிருப்பதாக எல்லாம்.

நானும் அபியும் முன்னால் நடக் கிறோம்.

பெண் குழந்தைகளுடன் நடக்கும்போது ஒரு சந்தோஷம் வரும். இன்னார் குழந்தை, இத்தனை வயது என்பதைத் தாண்டின ஒன்று அது. அப்படி நடக்கும்போது தெருவே அழகாக இருக்கும். சாயி அபார்ட்மென்ட்ஸ் காவல்காரரைப் பார்த்து, ‘இன்றைக்குக் குழாயில் தண்ணீர் வருகிறதா?’ என்று கேட்கத் தோன்றும். மேல்நிலைத் தொட்டிப்பக்கம் இஸ்திரி போடுகிறவரின் பெட்டியிலிருந்து பொரிப் பொரியாகப் பறக்கிற ஆரஞ்சுப் புள்ளியைப் பிடிக்கக் கையை வீசுவோம்.

‘குட்டி போடப் போகுது போல… வயிறு பெருசா இருக்கு’ என்று சுவர் ஓரமாகப் போகிற பூனையைப் பார்த்துச் சொல்வோம். டென்னிஸ் விளையாடி-விட்டுப் பைக்கில் போகிறவர் அணிந்திருக்கும் வியர்வையில் நனைந்த மஞ்சள் டி-ஷர்ட் ரொம்பப் பிடித்துப்-போகும்.

இத்தனைக்கும் அந்தப் பிள்ளைகள் அதுபாட்டில் நம் பக்கத்தில் நடந்து வரும். நாம் நம் போக்கில் அதனுடன் போய்க்கொண்டு இருப்போம்.

அபியுடன் பேசிக்கொண்டே போனேன். ‘அத்தை பின்னால் வருகிறாளா?’ என்று கேட்டேன். கொடைக்குப் போய்விட்டு நாங்கள் எப்போது திரும்புவோம் என்பதைச் சொல்லி, அபியின் அப்பா, அம்மா ஊருக்கு வருவது பற்றிக் கேட்டு, ‘நாளை பார்க்கலாம்’ என்று சொல்லித் திரும்பினேன்.

‘சரி மாமா’ என்று சொல்லிவிட்டே அபி நேராகப் போனாள். அந்தச் சிரிப்பில் எந்த அடையாளமும் இல்லை. கோயிலுக்குப் பறித்திருந்த பூக்கள் அபியால் எடுத்துச் செல்லப்படுகிற மலர்ச்சியுடனேயே இருந்தன. பால் பாத்திரம் சிறிதும் நலுங்கவில்லை. அனைத்திலும் மறுநாளைப் பற்றிய உத்தரவாதம் இருந்தது.

எல்லா உத்தரவாதங்களின் மீதும் அபி கறுப்புக் கோடு கிழித்திருப்பது மறுநாள் அதிகாலையில்தான் தெரிந்தது.

சாமக்கொடைக்கு விழித்திருந்து சாமி கும்பிட்ட எல்லோருடைய கண்களிலும் குங்குமம் சிதறியிருந்தது. காற்றில் கணியான் கூத்துக்குரலும், தப்பு அடிக்கிற சத்தமும் இன்னும் இருந்தன. பந்தல் மூலையில் கட்டப்பட்டு இருந்த வெள்ளாட்டுக் குட்டியின் நேற்றைய குரல் மட்டும் அந்த இடத்தில் கறுப்பாகத் துள்ளிக்கொண்டு இருந்தது. பஞ்சாயத்துக் குடிநீர்க் குழாயை மூடாமல் தண்ணீர் தெறிப்பதை யாரோ ‘வேஸ்ட்டாப் போகுது’ என்று நிறுத்தச் சொல்கிற சத்தம் கேட்டது.

கைலாசம் வேகமாக செல்போனை நீட்டினான். பாலு பேசினான். ‘கொடை முடிஞ்சு சாமி கும்பிடட்டும் என்றுதான் ராத்திரியே கூப்பிடலை’ என்றான். அபியைப் பற்றிச் சொன்னான். அபியின் அப்பா பெயரைச் சொல்லி, ‘இவனுக்கு இந்தத் தும்பம் வேண்டாம்’ என்றான்.

இசக்கி அம்மனுக்குப் பொங்கலிடும்போது எரித்த ஓலைச் சாம்பல் காற்றில் பறந்து வந்து, பாலு சொல்கிற ஒவ்வொரு தகவலிலும் அப்பின. எங்களால் தாங்க முடியவில்லை. முக்கியமாக என்னால்! நான்தான் கடைசியாகப் பார்த்தவன்.

பந்தலுக்கு வெளியே பார்த்தால், அபி வெயிலுக்குள் போய்க்கொண்டு இருக்கிறாள். கையில் பூ. பால் பாத்திரம். மறுபடியும் பார்க்கையில் வெயில். வெயில் மட்டும்.

‘அவருடைய இயற்பெயர் அங்கப்பன் என்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியலை’ என்றுதான் என் நண்பர் ஆரம்பித்தார்.

தல்லாகுளத்தில் ‘கருப்பட்டி’ என்றுதான் அவரைச் சொல்வார்களாம். சில பேர் சொல்வதை நாம் திருப்பிச் சொல்கிறபோது, ஏதாவது ஒன்று அதில் குறைந்துபோகும். அல்லது கூடிப்போகும். அங்கப்பன் விஷயம் சற்றுத் துக்கமானது. எதற்குக் கூட்டவும் குறைக்கவும்? என் நண்பர் சொல்கிற மாதிரியே இருக்கட்டும்.

‘அவரு மேயர் முத்து காலத்தில் வார்டு கவுன்சிலரா இருந்திருக்காரு. ஒருவகைக்கு என் சொந்தக்காரர்தான். ரோட்ல பார்த்தா, ‘மாமா’ன்னு கூப்பிடுவேன். ‘டே, இளிச்சவாப் பயலே! உன் அப்பனுக்குத்-தான்டா நான் மாமன். ஒனக்குத் தாத்தாடா!’ம்பார்.

இன்னொரு நாளைக்கு ‘என்ன தாத்தா?’ன்னு பக்கத்தில் போவேன். ‘என்னடா, குப்பைத்-தொட்டி நல்லா இருக்கானா?’ என்று விசாரிப்பார். குப்பைத்தொட்டி என்கிறது எங்க அப்பாவுடைய சின்ன வயதுப் பட்டப் பெயர். ‘உன்னோட அப்பன் எப்போ பார்த்தாலும் குப்பைத்-தொட்டி பக்கத்துல-தான் விளையாண்டுகிட்டுத் திரிவான்’ என்று சிரிப்பார்.

யாரையோ கல்யாணம் செய்திருக்கிறார். இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே பிடிக்காமல்போயிற்று. அனுப்பிவைத்துவிட்டார். அதற்குப் பிறகு ஒன்றும் பண்ணிக்கொள்ளவே இல்லை.

கருப்பட்டிக் கடை, கருப்பட்டிக் கடை என்று அவருடைய கடையைச் சொல்வார்கள். ஆசாரித் தெருவுக்கும் மூக்கப்பிள்ளைத் தெருவுக்கும் நடுவில் இருக்கும். கொஞ்ச நாள் நடத்தியிருப்பாரோ என்னவோ, அநேகமாக எல்லா நாட்களிலும் கடைக் கதவை ஒருக்களித்துச் சாய்த்திருப்பார். ஒரு குற்றாலத் துண்டுதான் திரை. அது பேருக்குதான். மறைக்கிறதை விடக் காட்டினதுதான் அதிகம். உள்ளே சீட்டுக் கச்சேரி விடாமல் நடக்கும்.

சாயந்திரமோ, ராத்திரி சினிமா விட்டோ அந்தப் பக்கம் போனால், ஒரு மரப்பலகையைப் போட்டுத் தாத்தா படுத்திருப்பார். அல்லது, பாக்கியம் கடையில் கொஞ்ச நேரம் நின்று வருகிறவர்கள் போகிறவர்களை விசாரிப்பார். ‘சோத்துக் கடைத் தெருவுல செருப்புக் கடை போட்டிருந்தியே, எப்படிறா போகுது? அடியேய்… வாயைத் தொறந்து சொல்ல முடியலையாக்கும்’ என்பார். ‘பள்ளப்பட்டியிலே கட்டிக்குடுத்திருக்கிறவளுக்கு எத்தனை பொடுசு? மாப்பிள்ளை எங்கே, பாண்டியராஜபுரம் மில்லுலதானே இருக்கான்?’ என்று கேட்பார். சொர்ணக்காவின் பிள்ளைகளைச் சோறு சாப்பிடச் சொல்லி அதட்டுவார். நமக்கு அவர் சொர்ணக்காவையே திட்டுவது போல இருக்கும்.

‘கை வெச்ச பனியன், வேட்டி, ஆறுமுகம் கடை இட்லி, காணும் காணாததுக்குச் சீட்டு விளையாட்டு. அக்குதொக்கு கிடையாது. கையில இருக்கிற காசு சகாக்களுக்கு. ‘சாப்பாட்டுக்கு மயக்கம் இல்லாத’ எழுபத்திரண்டு வயதுக் கருப்பட்டி மேல் பொறாமை இல்லாமல் எப்படி இருக்கும்?

‘தாத்தா’னு எதிர்க்க நின்னுதான் கூப்பிடுதேன். ‘யாரு?’ங்கிறார். அடையாளம் சொன்ன பிறகு, ‘அட, குப்பைத்-தொட்டி மகனா!’ன்னு தோளில் கையை வைக்கிறார். ‘உங்க அப்பன் ரிட்டயர் ஆயிட்டானா, வேலை பார்க்கிறானா?’ என்று பிடரி முடியை இழுக்கிறார். ‘அங்கப்பன் கேட்டாம்னு சொல்லு’ என்று என் காலர் எலும்பைப் பிரியமாக அமுக்குகிறார்.

எழுபதுங்கிறாங்க. எழுபத்தஞ்சு இருக்கும்கிறாங்க. இவ்வளவு தூரம் ஒருத்தன் தனியா இருந்தாச்சு. தல்லா-குளத்தையும் கோரிப்பாளையத்தையும் சுத்திச் சுத்தி, சட்டை போடாம, நெஞ்சு முடியைக் காட்டிக்கிட்டு அலைஞ்சாச்சு. ராஜா ராணி பார்த்தாச்சு. ஜோக்கர் பார்த்தாச்சு. ஆனால், அவருக்கும் ஏதோ கவலை இருந்திருக்கு. மூச்சு முட்டியிருக்கு உள்ளுக்குள்-ளேயே.

சீட்டுக்கச்சேரி துவங்குவதற்கு முந்திய ஒரு பிற்பகலில் கருப்பட்டித் தாத்தா மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக்கொண்டார். அள்ளிப் போட்டுக்கொண்டு, ராஜாஜி ஆஸ்பத்திரி. அங்கேயிருந்து நேரே தத்தநேரி. அவ்வளவுதான் மனுஷன் கதை!

எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு நண்பர் என்னைப் பார்த்துக் கேட்டார்… ‘‘ஒரு மனுஷனுக்கு எழுபது வயசுக்கு மேல் அப்படி என்ன சார் தாங்க முடியாத சோகம் இருந்திருக்கும், இப்படிச் சட்டுனு ஒரு தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டுக்கிற அளவுக்கு? எதனால சார் அவர் அப்படிப் பண்ணியிருப்பாரு?’’ – கேட்டுவிட்டு, தலை வெடிக்கப்போவது போல் இரண்டு நெற்றிகளிலும் கை வைத்துக்கொண்டார் நண்பர்.

‘‘ஏன்… ஏன்… என்கிறதுதான் சார் புழு குடைகிற மாதிரி என்னைக் குடைஞ்சுக்கிட்டு இருக்கு’’ என்று எங்கேயோ பார்த்தார்.

புழு குடைகிறது என்கிற அவர் வார்த்தையை-விடக் கூடுதல் வார்த்தை யில் அந்தக் கேள்வியின் இம்சையை முன் வைக்க முடியாது.

எழுபத்திரண்டு வயதுக்கு மேல் எந்தச் சோகம் புதியது? அங்கப்பன் தன் இத்தனை வருட வாழ்க்கை முழுவதுமே பாரத்தை ஒவ்வொன்றாக ஏற்றிக்கொண்டேதான் வந்திருக்கிறாரா? உப்புக்கல்லாய் அவர் கடலுக்குள் தூக்கிப் போட்டுக்கொள்வதைத்-தான் இதுவரை பார்த்துக்கொண்டு இருந்தோமா?

ஏதோ ஒரு ஐம்பத்து மூன்றாவது சீட்டைக் கண்டுபிடிக்கத்தான் இதுவரை அவரது சீட்டுக் கட்டைக் கலைத்துப் போட்டபடி இருந்தாரா? இந்த கருப்பட்டி என்கிற பெயரின் கசப்பையே அவரால் விழுங்க முடியவில்லையா?

போகிற வழியில், சிலசமயம் நசுங்கின ஒரு சின்ன தீப்பெட்டியும், அடுக்கடுக்காகச் சிதறின மெழுகுக் குச்சிகளும் கிடக்குமே… அதைப் பார்த்ததும் தன்னைப் பொருத்திக்கொள்ளத் தோன்றிவிட்டதா?

அபியின் பதினேழு வயதுக்கு அவளுக்கு என்ன கஷ்டம் தெரிந்திருக்கும்? ‘ஓரி உலகெல்லாம். உலகெல்லாம் சூரியன்’ என்று கலைச்சுக் கல்லைப் போட்டுப் பிடிக்கிற மாதிரிதானே ஒவ்வொரு தினமும் அவளுக்கு விளையாட்டாக இருந்திருக்கும்! எட்டுப் பூவோ, பத்துப் பூவோ அவள்தானே ஒவ்வொன்றாகக் கோயிலுக்கு அன்றைக்குப் பறித்திருப்பாள்! ஒரு தேநீருக்குச் சரியான கரண்டி அளவில் இனிப்புச் சேர்க்கிற விரல்கள் இருந்திருக்கத்தானே செய்கின்றன! அந்தப் பாதித் துண்டு கேக் சாப்பிடுகிற நொடி வரை இந்த வாழ்வு ருசியற்றுப்போகவில்லையே! தன்னுடைய கடைசித் தொலைபேசி அழைப்புகளில் எந்தத் தடயங்களையும் விடாமல், அலைகள் துடைத்துவிடும்படியாக கடலின் கரையில் நடப்பது போலத்தானே அவள் நடந்திருக்கிறாள்!

அந்த எட்டே முக்கால் மணியில் என்னிடம் விடைபெற்றுச் செல்லும்போது, அபி சிரித்துக்கொண்டுதானே போனாள்? அந்தச் சிரிப்புதான் பற்றிக்கொண்டதா?

ஒவ்வொரு பொம்மையாக, புத்தரின் மரப் பிரதிமைகளைத் தீக்குள் எரிந்து, இரவு முழுவதும் குளிர்காய்கிற ஜென் துறவியின் கதையை நாம் வாசித்திருக்கிறோம்.

எதிர்ப்பின் அடையாளமாகத் தீக்குளித்துக்கொண்ட ஓர் இளம் புத்தபிக்குவின் புகைப்படத்தை ஆங்கில தினசரி ஒன்று வெளியிட்டதைப் பல வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறோம்.

நாம் ஜென் துறவிகள் இல்லை; புத்தபிக்குகளும் இல்லை.

பின் எதற்காக இப்படியெல்லாம் தீக்குளிக்கிறோம்? அடைந்ததாலா, அடைய முடியாததாலா?

ஏன் என்னும் புழு இன்னும் குடைந்துகொண்டே இருக்கிறது???

                                   ……………………………..

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ‘அபிதா’

 1. வடகரை வேலன் சொல்கிறார்:

  // பின் எதற்காக இப்படியெல்லாம் தீக்குளிக்கிறோம்? அடைந்ததாலா, அடைய முடியாததாலா?//

  இந்தக் கேள்விக்கு விடைதெரிந்தால் வாழ்வின் சூட்சுமம் பிடிபட்டு விடுமே?

 2. rudhran சொல்கிறார்:

  மீண்டும் தலை வணங்க வைக்கிறது இந்த எழுத்து.

 3. ramjiyahoo சொல்கிறார்:

  பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் சுல்தான் .

 4. Pingback: Tweets that mention ‘அபிதா’ | வண்ணதாசன் -- Topsy.com

 5. சென்ஷி சொல்கிறார்:

  மிகச்சிறப்பான கட்டுரைகளுள் ஒன்று. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுல்தான்

 6. வண்ணதாசனின் இக்கட்டுரை படித்து லா.ச.ரா’ வின் அபிதாவை தேடிப்படித்தேன். என்னை மிகவும் நெகிழ வைத்தது இருவரின் எழுத்தும். இரண்டின் இறுதியிலும் அபிதாவின் முடிவைத்தான் தாங்க முடியவில்லை. தல்லாகுளம் வீதிகளையும் இக்கட்டுரை நினைவிற்கு கொண்டு வந்தது. நன்றி.

 7. Thirumalaisamy P சொல்கிறார்:

  மறக்க முடியாத விவரிப்பு; வாழ்வின் சூட்சமங்கள் இப்படி எதோ ஒரு புள்ளியில் துவங்கி எதோ ஒரு புள்ளியில் நிலைகொள்கின்றன;

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s