மனநிலை???

நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரி யரை மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா?

உங்களோடு படித்தவர்களை அடையாளம் காண முடியாத தோற்றத்தில்… ஆனால், அடையாளம் காட்டுகிற அசைவுகளுடன் பக்கத்து நகரத்தின் சாலைகள் ஒன்றில் கண்டதுண்டா?

நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்க்கக்கூடும். அதற்கான சாத்தியங்களுடன்தான் இந்த வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்கள் இருக்கின்றன.

உங்களின் இந்த தினத்தை மைனாக்களின் குரல்கள் திறந்துவைக்கின்றன. தொங்கவிட்டி ருக்கிற பைகளில் வழக்கத்தைவிடக் குளிர்ந்திருக்கும் பால் பாக்கெட்டுகள். ஆட்டோ ஓட்டுபவர்களில் பாதிப் பேர் மாலை போட்டு, சந்தனக் கீற்று வைத் திருக்கிறார்கள். நட்சத்திர விளக்குகளின் மேல், டிசம்பர் வெயிலின் பாடல்கள். விளம்பரப் படச் சிறுவனின் கை விர லில் ஊர்கிற பச்சைப் புழுவைப் போல, இந்தப் பகலின் வெவ்வேறு மூலைகளில், மனநிலை தவறிய சிலர் எந்தத் தீங்குமற்று ஊர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

எழுத்துக் கூட்டி வாசிக்க முடிகிற அளவில் என்னிடம் எஞ்சியிருக்கிற அடிப்படை இந்தி, அவரிடம் கற்றது.மிகவும் அழகானவர். எப்போதாவது நான் முழுக்கைச் சட்டை அணிகிற பொழுதுகளில், அவரது ஞாபகம் வராமல் போகாது. மீசையற்ற முகத்தில் ஒருநாள் அசவரத்தில் பச்சைத் தாடி. அவருடைய பெருவிரலும் சுட்டு விரலும் மேல் உதடுகளின் மையத் தில் துவங்கி, எதிர்த் திசைகளில் நகர்ந்து, கடைவாய்களைத் துடைத்து, கீழ் உதட்டை இழுத்துவிட்டுக்கொள்ளும். இந்தச் சில விநாடிகளில், ஒரு பறவைக் குஞ்சு போல அவர் வாய் திறந்திருக்கும். மனநிலை பிசகியவராக மீண்டும் அவரைப் பார்க்கும்போதும் அவர் பறந்துகொண்டுதான் இருந்தார். நம்முடைய வானத்தில் அல்ல. அது பிரத்யேகமானது; திசைகள் அற்றது.

பத்மநாதசாமி கோயிலில் இருந்து வெளியே வந்துவிட்டிருந்தோம். உடன் வந்தவர்கள் கடைகளுக்குப் போயிருக்கிறார்கள்.

நான் ஆ.மாதவனின் சாலைத் தெருவை நினைத்தபடி நிற்கிறேன். எட்டாவது நாளும் சாளப் பட்டாணியும் ஞாபகத்தில். அந்த நாணு மேஸ்திரியையும் நாய் பாச்சியையும் செல்லப்பன் வரைந்திருந்த ‘தீபம்’ பக்கங்கள் புரள்கின்றன. கமுகுவளாகத்தில் ‘ழ’ போல உம்மிணி படுத்திருக்கிறான். பாப்பியும் குஞ்ஞியும் பப்படக் கடையில் நடமாடுகிறார்கள்.

இரவின் தணுப்பு வெயிலின் பொன்னு வெளிச்சத்தில், எல்லா ஊர் ரத வீதிகளையும் போல, சாலைத் தெருவும் அழகாகவே இருந்தது, அவனைப் பார்க்கிற வரைக்கும்.

எனக்கு அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடவேண்டும் போல் இருந்தது. மேல் சட்டை இல்லை. முழுக்கால் சட்டை மட்டும். தாடிக்குள் புதைந்த முகம். அடூர் பாஸியைப் போன்ற அவனுடைய சாயல் பிடிபட்டுவிட்டது. மிகுந்த துக்கத்துடனும், தயங்கியும் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். அவனுடைய கல்லூரிப் பதிவேட்டுப் பெயர் வேறு; வீட்டில் கூப்பிடுகிற பெயர் வேறு. இரண்டுமே அழகானவை.

அந்த இரண்டாவது பெயரைச் சொல்லிக் கூப்பிடும்போது, அவன் நிமிர்ந்து பார்த்தான். உள்ளே இழுத்திருந்த சிகரெட் புகை, வெயிலில் ஊதா நிறத்துடன் வெளியேறிக்கொண்டு இருந்தது. அவனேதான்; சந்தேகம் இல்லை. எழுந்து நடந்து செல்ல ஆரம்பித்த அவனை இப்போது என்ன செய்வது?

சினிமாக்களில் என்றால், அவனைப் பின்தொடர்ந்து கதாநாயகி ஓடியிருப்பாள். பிடித்து நிறுத்தி உலுக்கி, ‘நீதானே… நீதானே…’ என்று கதறியிருப்பாள். அவன் கைலியைக் கட்டிக்கொண்டு, மேல்துண்டுடன் பற்பசை நுரைக்க, ஹாஸ்டல் வேப்பமரத்தின் அடியில் நிற்கிற தோற்றத்தில், ஒரு பாடல் கூடத் துவங்கியிருக்கும். வாழ்க்கை அப்படி அல்ல. அது புத்தகத்திலிருந்து பிய்த்து எடுத்தது போல, இப்படி நட்ட நடுவில் இரண்டு பக்கங்களை மட்டும் காட்டும். முன்கதைச் சுருக்கங்களும், பின்கதைச் சுருக்கங்களும் வாசிக்கக் கிடைப்பதே இல்லை, கடைசி வரை!

வெயில் என்ன… சிறிய ஊரா பெரிய ஊரா, எவ்வளவு ஜனத்தொகை என்று விசாரித் துக்கொண்டா அடிக்கிறது? எருக்கலஞ்செடி நெற்று வெடித்து விதை பறப்பதற்குப் பெருமாள்புரம் என்ன, செட்டிக்குரிச்சி என்ன..?

ராமசாமியும் ராமகிருஷ்ணனும் அப்படித்தான் அந்த மக்காச் சோளக் காட்டுக்குள்ளும் சூரியகாந்திச் செடிகளுக்கு இடையிலும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். ராமசாமிதான் மூத்தவர். கையில் விலங்கு இருக்கும். கதாயுதத்தைச் சார்த்திவைத்திருப்பது போல, ஏதாவது ஒரு கட்டை அல்லது கம்பு தோளோடு. ஆனால், ஒரு அணில் பிள்ளைக்குக்கூடத் தொந்தரவு கிடையாது. அவருக்கு முன்பு அரூபமாக யாரோ வழிகாட்டிக்கொண்டு போவது போல, அவர் போய்க்கொண்டே இருப்பார்.

ராமகிருஷ்ணன் அவருடைய தம்பி. விலங்கு எல்லாம் கிடையாது. பஞ்சாயத்துப் போர்டு கட்டடத்துக்கு முன்னால் கயத்தாறு கழுகுமலை வண்டியோ, சத்யா வண்டியோ வந்து ரவுண்ட் அடித்துக் திரும்புகிற இடத்தில் நடந்துகொண்டு இருப்பான். பிள்ளைகள் பரீட்சைக்கு மனப்பாடம் பண்ணுவதற்காக லாந்திக்கொண்டே உரக்கப் படிப்பார்கள் இல்லையா, அதே மாதிரி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வரப்பு மேல் நடப்பது போல ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டு போவதும் திரும்புவதுமாக இருப்பான்.

சமயத்தில் இந்த இரண்டு பேரும், ஒருத்தர் சேவுக்கடைக்கு முன்னாலும் இன்னொருத்தர் அய்யனார் கோயில் வாசலில் ஆடுபுலி விளையாடுகிற கூட்டத்துக்குப் பாதுகாப்பு கொடுப்பது போலவும் நடந்துகொண்டு இருக்க, அவர்களுடைய வயசாளி அப்பா தூக்குச் சட்டியும் மண்வெட்டியுமாகக் குனிந்த தலை நிமிராமல் தோட்டத்தைப் பார்க்கப் போய்க்கொண்டு இருப்பார். பாவமாக இருக்கும்.

ராமகிருஷ்ணன் சாதாரணமாக இருக்கிற நாட்களில், எனக்கு எதிரே வந்தால், வணக்கம் சொல்வான். ‘வேலை இருந்தால் சொல்லுங்க சார்’ என்றுகூட ஒருமுறை கேட்டிருக்கிறான். எனக்கு அந்த அதிகாரம் இருந்தால், அந்தஇடத் திலேயே ஒரு நியமன உத்தரவைக் கையெழுத்திட்டுக் கொடுத்திருப்பேன்.

பார்த்த உடனே பிடித்துப் போகும்படியாக, மாசு மருவற்று ஓர் ஆலங்கட்டியைப் போல, எத்தனையோ முகங்கள் உள்ளங்கைக்குள் இருக் கின்றன. உருகுவதுகூட இல்லை. எத்தனை வருடங்களுக்கு அப்புறம் வந்து பார்த்தாலும், அதே தூணில் கால் தூக்கி நிற்கிற அதே யாளி மாதிரி, இருட்டுக்குள் கல்சிரிப்புடன் அந்த முகங்கள் அதே இடங்களில் தெரிவது எப்படி?!

திருநெல்வேலியில் ஏறின அந்தப் பெண் மாம்பலம் வரை அப்படியே பூப்போலச் சிரித்துக்கொண்டே இருந்தது. அந்தப் பெண், அவள் குடும்பத்தினர் நான்கு பேர், ஆறாவது பிரயாணியாக நான். அம்பாசமுத்திரமோ, ஆம்பூரோ, பிரம்மதேசமோ? அந்தச் சிரிப்புக்குள் தாமிரபரணி ஓடிக்கொண்டு இருந்தது. கரை தொட்டுப் போகிற சிரிப்பு. பாறைகள் முங்கிக்கிடக்கிற சிரிப்பு. பாலத்தின் மேல் பாசஞ்சர் ரயில் ஓடுகிற சிரிப்பு. அந்தப் பெண்ணின் சிரிப்பு வற்றவே இல்லை. எல்லாச் சிரிப்புக்கும் சேர்த்துவைத்து மற்ற நான்கு பேரும் பேசவே இல்லை. அல்லது, பேசினார்கள்… எனக்குக் கேட்கவில்லை.

அதற்கப்புறம் எத்தனை தடவை ரயில் ஏறினாலும், ஜன்னல் ஓரமாக அந்தப் பெண் உட்கார்ந்திருப்பது தெரிந்துகொண்டேதான் இருக்கிறது. இத்தனை வருடமும் அது மாம்பலத் தில் இறங்கவே இல்லையா?

பாத்திமாவுக்கு வயது கூடுதல். அவளும் இப்படிக் கந்தல் மூட்டைகளுடன் ஏதாவது ஒரு வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்திருப்பாள். அநேகப் பொழுதுகளில் அவள் பாடிக்கொண்டு இருப்பாள். மிக உயர்ந்த இந்துஸ்தானிப் பாடலின் உச்சத்தில் இருப்பது போல, அவளுடைய கைகள் மேலுயரும்போது பாத்திமாவை ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

அவள் மேல் படிந்திருக்கிற உப்புக் காற்றையும், சாம்பல் புழுதியையும், கொந்தளிப்பின் அலைகளையும் அகற்றிவிடும் அந்தப் புகைப்படம். அவளுடைய வீட்டுக் கண்ணாடியில் கடைசிச் சுய நினைவுடன் முகம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். தலை துவட்டிய ஈரத் துண்டை கம்பிக் கொடியில் உலர்த்தும்போது, அதுவரை இருந்த வெயில் மங்கி, ஒரு புதிய வெயில் வருகிறது. அந்த வெயிலில் பாத்திமா ஒரு பேரழகி ஆகிவிடுகிறாள். அடை பொரிந்து வெளிவந்த கோழிக் குஞ்சுகள் உண்டாக்குகிற சப்தத்தின் சுருதியில், பாத்திமா பாட ஆரம்பிக்கிறாள். புதுக்கிராமம் தெருவில் இருக்கிற இந்தப் படிக்கட்டுகூட மேடை போலத் தான் இருக்கிறது.

சொல்லப்போனால், ஏதோ ஒரு நுட்பத்துடன்தான் இவர்கள் எல்லோரும் அவரவர் இடத்தைத் தேர்ந்துகொள்கிறார்கள்.

எப்போது பார்த்தாலும் கெட்ட வார்த்தை பேசிக்கொண்டு அலைகிற சுப்ரமணியனுக்கு யார் அடிக்கடி மொட்டை அடித்துவிடுவார்கள்? கமால் பீடி விளம்பரத்தைத் திரும்பத் திரும்பக் கத்தியபடி எங்கள் தெரு வழியாகச் செல்கிறவர் பேட்டைக்காரரா, மேலப்பாளையத்தைச் சேர்ந்தவரா? மூட்டை மூட்டையாகக் கிழிசல் துணிகளைத் தோளில் சுமந்து அலைகிறவர், இரவில் அதை இறக்கிவைப்பாரா, மாட்டாரா? அவர்களுடைய தினங்களுக்கு இரவு உண்டா… கிடையாதா?

பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தரச் சொன்னால் கோபப்படுகிற அந்தப் பெரியவரை நிஜமாகவே அப்படி யாரேனும் சொத்தை எழுதி வாங்கிக்கொண்டுவிட்டு விரட்டியிருக்கவா செய்வார்கள்? அவருக்குச் சொத்துக்களின் மீது பைத்தியமா, சொத்துக்கள் கையைவிட்டுப் போனதால் பைத்தியமா? தான் பெண் என்பதையே மறந்து, இடுப்புக்கு மேல் திறந்துகிடக்கும்படி நடமாடுகிற இவளைத் தொந்தரவு செய்கிறவர்களும் இருப்பார்கள் அல்லவா? சூல் வயிற்றுடன் இந்தப் பேதைகளைப் பார்ப்போம் எனில், யார் மீது கோபப்படுவது? யாருக்காக வெட்கப்படுவது? டாக்ஸி ஸ்டாண்டையே சுற்றியும், பஸ்களை மறித்தும், ஒருவகையில் தன்னை மறந்த சந்தோஷத்துடன் மேல ரத வீதியில் திரிந்துகொண்டு இருந்த அந்தப் பொன்னம்மை, இப்படி ஆடிப்பாடும் நிலைக்கு ஆளாவதற்கான முகாந்திரங்கள் எல்லாம் உண்டா? எந்த லாரி டிரைவரிடம் அல்லது எந்தப் புறக் காவல் நிலையத்தில் இதற்கான பதில் கிடைக்கும்?

இவர்கள் நம் கண்முன் நடமாடிக்கொண்டு இருப்பது மட்டும் தெரிகிறது. இவர்களுடைய மரணம் பற்றிய குறிப்புகள் நம்மை ஏன் வந்து அடைவதே இல்லை? ‘இந்தச் சுப்ரமணியன் குத்துப்புரைமுக்கில் செத்துக்கிடக்கான்’ என்றோ, ‘எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு அலைவாளே, அவளைக் கம்பா நதி மண்டபத்துக்குப் பக்கத்துல லாரி அடிச்சுப்போட்டுட்டுப் போயிட்டுது’ என்றோ யாராவது நம்மிடம் சொல்லிக் கேட்டிருக்கிறோமா?

எந்த அடையாளமும் துர்வாடையும் அற்று, வன மிருகங்களும், பறந்து முடித்த பறவைகளும் யாராலும் வேட்டையாடப்படாத இயல்பு மரணத்தை அடைந்துகொண்டுதானே இருக்கின்றன. அதைப் போல, அவர்களும் எந்த எலும்புகளின் மிச்சமும் இன்றி, மரணத்தின் கண்காணாத சுடலைகளில் எரியூட்டப்பட்டுவிடுவார்களா?

அவர்கள் சுமந்து திரிந்த துணி மூட்டைகள் என்ன ஆகும்? அந்தக் கை விலங்கை எங்கே எறிவார்கள்? ராமகிருஷ்ணன் குறுக்கும் மறுக்கும் அடையாளம் இடப்பட்டது போன்ற ஓர் எல்லைக்குள் நடந்துகொண்டே இருப்பானே, அந்த இடத்தில் அவனுக்குப் பின் புல் முளைக்குமா? ஏன் புல் முளைக்க வேண்டும், பூ முளைக்கக் கூடாதா?

ஒரு திரைப்படம் முடிந்து, அதற்குப் பங்களித்தவர் பெயர்கள் எல்லாம் மெது மெதுவாக மேல் நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பதுபோல, இதுவரையில் எந்தெந்த ஊர்களிலோ, தெருக்களிலோ ரொம்ப காலத்துக்கு முன்பு பார்த்த முகங்கள் எல்லாம் வந்துபோய், வெற்றுத்திரையாகி நிற்கிறது மனசு.

சமீபத்தில், எந்தத் தெருக்களிலும் இப்படி ஒரு முகத்தைப் பார்க்கவில்லை. புதிய புதிய ஆயுதங்கள் தயாரிக்கப்படும்போது, புதிய புதிய காயங்களையும் அது உண்டாக்கத்தானே செய்யும்!

பழைய தலைமுறையின் கண்களுக்குப் பழைய பைத்தியங்களும், புதிய தலைமுறையின் கண்களுக்குப் புதிய பைத்தியங்களும் மட்டும் தெரியக்கடவது என்ற விநோத சாபம் ஏதா வது இருக்கிறதா?

மனத் தொய்வோ மன அழுத்தமோ இல்லாத, மனநல மருத்துவர்களின் கலந்தாய்வு தேவைப்படாத யாராவது ஒருவர் இதற்குப் பதில் சொன்னால் நல்லது.

ஒருவேளை, அந்த ஒருவரின் பட்டியல் நிரம்பி வழியலாம். அல்லது, காலியாகக்கூட இருக்கலாம். எதற்கும் இருக்கட்டும் என்று என் பெயரை முதலில் எழுதி இருக்கிறேன்.

நீங்கள் என்ன ஆட்சேபிக்கவா போகிறீர்கள்????????

                        ———————————————–

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , . Bookmark the permalink.

4 Responses to மனநிலை???

 1. durai சொல்கிறார்:

  rempa naalaikku appurama abi patissathum unkalodu pesiya santhosam kalyani. wellwritten ..ithuthan ningal.plase continue..

 2. Karthickeyan சொல்கிறார்:

  என் வாழ்நாளில் உங்களை ஒரு முறை சந்தித்து விட வேண்டும் கல்யாணி sir!!
  உங்கள் கதைகளை படித்த பிறகு என் மனதில் இப்பொழுதெல்லாம் எல்லாரிடையேயும் அன்பு சுரக்கிறது!!

 3. naadhan சொல்கிறார்:

  Dear Sir,

  let me have Mr.Vannadasan e mail id and his contact no

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s