மரம்

மரம்

ங்கள் வீட்டிலிருந்து பார்த்தால், சீட்டுக்கட்டு க்ளாவர் மாதிரி இருக்கும். எத்தனையோ வருஷங்களாக அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அப்படியேதான் இருக்கிறது.

இப்போதும் ஒரு சாயலில் அது பச்சை க்ளாவர்தான். முன்பைவிட அடர்த்தியாக, அழகாக, கிளையும் இலையுமாக இருக்கிறது. அறுபது வருடங்களில் நமக்கு என்னவெல்லாம் ஆகிவிடுகிறது. அதற்கு ஒன்றும் ஆகவில்லை. செழிப்பாக இருந்தது. வாலிபம் திரும்பின மாதிரி என்று சொல்லலாம். அப்படியும் முடியாது. இப்போதுதான் அதற்கு வாலிபமே வந்திருக்கும் போல!

மரத்தை மனிதர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ… மரங்கள் மனிதர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

மாமரம் போலவோ, புளிய மரம், நவ்வாப்பழ மரம் போலவோ கல்லெறி படுகிற அவஸ்தை எதுவும் அற்றது இந்த க்ளாவர் மரம். இவ்வளவு பெரிய காம் பவுண்டுக்குள் இத்தனை வருஷமாகத் தனியாக நிற்பதுதான் அதனுடைய மிகப் பெரிய துயரமாக இருக்கும். மரங்களுக்குத் தனிமையெல்லாம் கிடையாது என்று எப்படிச் சொல்ல முடியும்?

அந்த மரத்துக்கு என்ன பெயர்? நாங்கள் ‘சோப்புக்காய்’ மரம் என்போம். அதன் காயை நசுக்கித் தண்ணீரோடு சேர்த்துக் கசக்கினால், சோப்பு நுரை போல வரும். அதனால் அந்தப் பெயர். ஒரு பெரியப்பா அதை ‘நெக்கட்டங்காய்’ என்று சொன்ன ஞாபகம். அந்தப் பெயர் அந்த மரத்தைவிடவும் விநோதமாக அல்லவா இருக்கிறது. பூந்திக்கொட்டை என்று கேட்டால் மூலிகை மருந்துக் கடைகளில் கொடுக்கிறார்கள். காசுக் கடை தங்க ஆசாரிகள் இந்த பூந்திக்கொட்டையை வைத்து நகைகளுக்கு அழுக்கு எடுப்பதைப் பார்த்திருக்கிறேன்.

எங்கள் தெருவில் அநேகமாக எல்லோர் வீட்டிலும் ஒரு ஓவல் டின் டப்பாவில் சோப்புக்காயைக் காயப்போட்டு அள்ளிவைத் திருப்பார்கள், நகை இருந்தாலும் இல்லாவிட்டாலும். முதலில் பூந்திக்கொட்டையைச் சேகரித்துக் கொண்டு, அப்புறம் நகைகளைச் சேகரிக்கக் கூடாதா என்ன?

60, 70 வருஷமாக நிற்கிற மரத்துக்குப் பக்கம் அதே போல வயதுள்ள ஒரு ‘பாங்கிணறு’ இருக்கிறது. இவ்வளவு பெரிய கிணற்றுத் தண்ணீரை ஒரு சொட்டுக்கூட இல்லாமல் இந்த மரம்தான் உறிஞ்சி யிருக்கும் போல. மைதானம் மாதிரி கிடக்கிற இடத்தில் இதுவரை வேறு ஒரு புல்பூண்டும் வளரவில்லை என்பது ஒரு ஆச்சர்யம்!

காக்கை எச்சம் போட்டாலே அடுத்த மழைக்குள் இடுப்பு வரை வளர்ந்துவிடுகிற வேப்பங்கன்று கூடவா இங்கு முளைக்காது. எத்தனை பிள்ளைகள் இங்கே சடுகுடு விளையாடுகிறார்கள்… பம்பரக் குத்து, பேந்தா, எறிபந்து எல்லாம் அந்தந்தப் பருவத்துக்கேற்ப, விளையாடாத வருஷம் உண்டா? யாராவது ஒருத்தர் ஒரு எச்சில் மாங்கொட்டையை வீசாமலா இருந்திருப்பார்கள்? தவணாப்புளி அரைக்க வீட்டிலிருந்து ஒருத்தருக்கும் தெரியாமல் உருட்டிக்கொண்டு வந்த புளியில் இருந்த கொட்டையை எறிந்திருக்க மாட்டார்களா? ஒரு மாங்கன்றோ புளியங்கன்றோ இதுவரை ஒன்றுகூடக் கண்ணில் தட்டுப்படவில்லை என்பது எவ்வளவு ஆச்சர்யமானது!

குப்பைக் கீரை காடாக வளர்ந்து கிடந்திருக்கிறது. படைபடையாகத் தட்டான்கள் பறந்ததும் பிடித்து வாலில் நூலைக் கட்டிப் பறக்க விட்டதும் ஞாபகம் இருப்பதால், ஒருவேளை தும்பைச் செடி வளர்ந்துகிடந்திருக்கலாம். தும்பைச் செடி இருந்திருந்தால், பொன் வண்டும் தும்பைப் பூவை ஒன்றுக்குள் ஒன்றாகச் செருகி முறுக்குச் சுற்றின் ஞாபகமும் வந்திருக்குமே!

தட்டான்கள் நினைவு வருகிறதே தவிர, எந்தப் பறவையும் அந்த மரத்தில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்த அடையாளமே கிடையாது.

பறவை இல்லவே இல்லை என்று முற்றிலும் சொல்லிவிட முடியாது. ஏதோ ஒரு பெரிய கிழட்டுக் கழுகு விரட்ட விரட்டப் போகாமல், அந்தப் பாழ் கிணற்றின் துலாக் கல்லில் அப்படியே கிறங்கித் தூங்குகிறது மாதிரி இரண்டு நாட்கள் உட்கார்ந்திருந்ததும் ஒரு நாள் காலையில் அது காணாமல் போனதும் உண்டு.

எங்கள் தெருவிலுள்ள அத்தனை பேருமா சாது? பிள்ளைகள் இந்த மாதிரி கிழட்டு நாய்களையோ, சீத்துவமில்லாத கழுகுகளையோ பார்த்தால் கல்லெடுத்து அடிக்காமலா இருப்பார்கள்? ‘கள்ளப் பிராந்து, கள்ளப்பிராந்து’ என்று நாங்கள் விரட்டிக்கொண்டு இருந்தோம். அந்தப் பக்கமாகப் போகிற யாரோ ஒருத்தர், அன்றைக்கு வியாழக்கிழமை என்றும், வந்திருப்பது கிருஷ்ணர் என்றும், அதைத் துன்புறுத்துவது பாவம் என்றும் சொன்னார். மேற்கொண்டு, எங்களை எங்கள் படிப்பு தொடர்பான பயங்களுக்குத் தள்ளி, ‘கல்லெடுத்து எறிஞ்சா, உங்களுக்குப் படிப்பு வராது’ என்று வேறு சொல்லிவிட்டார்.

இப்போது யோசித்தால், அப்படி எங்களைப் பயம் காட்டியவர், அதற்கு முன்போ, பின்போ, எங்கள் தெரு வழியாக வந்துபோகவே இல்லை என்று தெரிகிறது. அவர் அரபு மனிதர்கள் போலத் தாடியும் வெள்ளை வலையால் ஆன துணித் தொப்பியும் வைத்திருந்தார் என்பதையும் அவரைப் போலவே ஒரு ராவுத்தர் எங்கள் தெருவுக்கு அடுத்த தெரு ஆரம்பிக்கிற இடத்தில் சச்சவுக்க மாக இருக்கிற கிணற்றில் விழுந்து இறந்துபோனது உண்டு என்பதையும் யாரோ சொல்லியிருக்கிறார்கள். இப்படிப் பட்ட புரளிகளையெல்லாம் யார் முதலில் கிளப்பிவிடுகிறார்கள் என்பது ஒருபோதும் தெரிவதே இல்லை.

இந்தத் தெருவில் நடுச் சாமத்தில் தலைப்பாகையும், சல்லடமும், சுருட்டும், சாராயமுமாகச் சுடலைமாடன் நடமாடுவதைப் பார்த்திருப்பது போல, அடுத்த தெருக் கிணற்றில் அந்த சாகிப் சலார் சலார் என்று குதிப்பது காதில் விழுந்திருக்கிறதாகச் சொல்வார்கள், கதர்க்கடைப் பாட்டையா வீட்டு ஆச்சியும் சுப்பமக்காவும்.

அதிலும், இந்த சுப்பமக்காள் பேய்க் கதைகள் சொல்வதில் பிரசித்தமானவள். அவளைப் பார்த்தாலே, அப்படித்தான் இருக்கிறதாகவும் பேயே பேய்க் கதை சொன்னால் பலிக்காது என்பதால், அதைத் தாராளமாகப் பிள்ளைகள் கேட்கலாம், ஒரு கெடுதலும் இல்லைஎன்றும் அடித்துச் சொல்லிவிட்டார்கள். போதாதா?

ஆட்டுரலில் தோசைக்கு அரைக்க, சுப்பமக்கா ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி உட்கார்ந்ததும், வளவில் இருக்கிற எல்லாப் பிள்ளைகளும் அவளைச் சுற்றி உட்கார்ந்துகொள்ளும். ‘பேய்க் கதை சொல்லு’ என்று நேரடியாக யாரும் கேட்க மாட்டார்கள். ‘சுப்பமக்கா! நீ ஆத்துக்குப் போன கதை சொல்லுதியா?’ என்பார்கள். சுப்பமக்கா ஒரே ஒரு பேயைத்தான் குறுக்குத் துறை ஆற்றுக்குப் போகும்போது பார்த்திருக்கிறாள். அந்த ஒரே ஒரு கதையைத்தான் தினசரி சொல்கிறாள். சொல்கிறவள், கேட்கிறவர்கள் இரண்டு பேருக்குமே அலுப்பில்லாமல் ஒரே கதையை ஆயுசு பூராவுக்கும் சொல்வதற்கு ஒரு கெட்டிக்காரத்தனம் வேண்டும் அல்லவா!

சுப்பமக்காவின் கெட்டிக்காரத்தனம் ஒருபுறம் இருக்க, மறுபடியும் அந்த க்ளாவர் மரத்துக்கு வருவோம். வேறு எந்த மரமும் முளைக்க விடாத, எந்தப் பறவையும் கூடு கட்ட அனுமதிக்காத இந்த மரம், தன் எல்லைக்குள் யாரையும் ரொம்ப காலம் அண்டவிடாமல் இருப்பதைப் பார்த்தால் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது. தன்னு டைய மர்மத்தின் பக்கங்களைத் தானே புரட்டிப் பார்த்து ரசிப்பது போல அதன் கிளைகள் காற்றுக்கு அசைவது தெரிகிறது.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை, ‘கட்டளை ஆபீஸ்’ என்று போன தலைமுறையிலும் ‘கேட் வாசல்’ என்று எங்கள் தினங்களிலும் அறியப்பட்ட ஒரு கட்டடம் இந்த இடத்தில் இருக்கிறது. ஒரு அலுவலகத்துக்காகப் பெரிய அளவில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட, பல அறைகளுள்ள நேர்த்தியான கட்டடம்.. அது ஏன் இப்படி ஓட்டுச் சார்ப்புக்கள் இறங்கி, அங்கங்கே சிதிலமாகி, எல்லாச் சுவர்களும் கரியெழுத்துக்களாலும் வரைபடங்களாலும் நிரப்பப்பட்டு, புழக்கமே இல்லாமல் ரொம்ப காலமாக அடைத்துக்கிடக்கிறது என்பது உறுத்தலாகத் தெரிகிறது. பளீர் என்று வெயில் அடித்த ஒரு முழுப் பரீட்சை லீவில், பத்து இருபது குரங்குகள் இந்தக் கட்டடத்தின் உச்சியில் ஓடுவதும் சாடுவதுமாக இருந்த ஞாபகத்திலிருந்து வெளியே துள்ளி விழுந்தது போல, இரண்டு மூன்று குரங்குகள் சண்டை போடும்போது உண்டாக்கிய சப்தம், அவை போன பிறகும் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு குரங்குகூட இந்த மரத்தில் ஏறி விளையாட வில்லை என்பதுதான் இங்கே முக்கியமான விஷயம்.

மற்ற மூன்று பக்கத்துச் சுவர்களும் இருக்க, தென்பக்கத்துச் சுவரின் மேற்கு மூலை மட்டும் தரைமட்டமாகவே கிடப்பது எதனால் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. நிச்சயம் இவ்வளவு நேர்த்தியான கட்டட அமைப்பு உள்ள ஒரு இடத்துக்குத் தென்பக்கத்துச் சுவரை மட்டும் எழுப்பாமல் இருந்திருக்க மாட்டார்கள். அப்படி எழுப்பப்பட்ட சுவர் எப்போது, என்ன காரணத்துக்காக விழுந்திருக்கும் என்பது யூகிப்புக்கு உரியது இல்லை. ஆனால், நிச்சயம் காரணம் வலுவான ஒன்றாகவே இருக்கும். அதற்குப் பிறகுதான் இந்தக் கட்டடம் மூடப்பட்டு, இதற்கிருந்த ‘கட்டளை ஆபீஸ்’ அந்தஸ்து காணாமல் போயிருக்க வேண்டும்.

அது நெல்லையப்பர் கோயில் யானையும் இல்லை; பொட்டல் புதூர் யானையும் இல்லை. ஏதாவது பெரிய வீட்டுக் கல்யாணத்துக்கோ, திருவிழாவுக்கோ போய்விட்டு வருகிற போக்கு யானையாக இருக்கும். அரசடிப் பாலத்து வாய்க்காலில் அல்லது பிராமணக்குடி வாய்க்காலில் குளிப்பாட்டிக் கூட்டி வருகிறார்கள். எங்கள் தெரு, டானா மாதிரி கீழ் மேலாக இருந்து, தென்வடலாகத் திரும்பும். யானை தெற்குப் பக்கமிருந்து வருகிறது. தும்பிக்கையில் தென்னங்கீற்று உருள்கிறது. தெற்கேயிருந்து கிழக்கே திரும்புகிற மூலையில் இருந்து பார்த்தால் இந்த மரம் தெரியும்.

யானை அந்த மரத்தைப் பார்த்ததா இல்லையா என்றெல்லாம் தெரியாது. பெரிய பிளிறல்களாகத் தும்பிக்கையை உயர்த்திப் போட ஆரம்பித்து விட்டது. இடத்தைவிட்டு நகரவே இல்லை. பாகன்கள் ஒரு சத்தம், இரண்டு சத்தம் கொடுத்துப் பார்த்தார்கள். மேற்கொண்டு பிளிறியதே தவிர, ஒரு அடி முன்னால் செல்லவில்லை. யானை பிளிறுகிற சத்தத்தில் வீட்டுக்குள் இருந்து பெண்கள் எல்லோரும் தெருவுக்கு வந்துவிட்டார்கள். தொட்டில் பிள்ளை பதறி அழுகிற சத்தம் ஜன்னலின் வலைக்கு வெளியே கேட்டது.

பாகன்களில் மூத்தவர் முதலில் தரையைப் பார்த்துக்கொண்டே யானையைச் சுற்றி வந்தார். ஏதோ அவர் சொல்லச் சொல்ல, ஒவ்வொரு காலாக அது உயர்த்தியது. யானையின் இடது புறமாக நின்று, கையில் இருந்த பிரம்பால் முருங்கை மரத்தைத் தட்டினார். குறுக்கே போகிற மின்சாரக் கம்பிகளின் உயரத்தைப் பார்த்தார். சற்றுத் திரும்பி சோப்புக்காய் மரத்தையே பார்த்தார். பார்த்தபடியே யானையின் காதையும் கழுத்தில் கிடந்த சத்தியக் கயிற்றையும் தொட்டார். மேற்கொண்டு ஒன்றும் செய்யாமல் யானையைத் திரும்பவும் வந்த பாதையிலே திருப்பிக்கொண்டு, ஒரு முறை அந்த மரத்தைப் பார்த்தார். அவர் துப்பிவிட்டுப் போன வெற்றிலைச் சாறு இடது பக்கத்துச் சுவரில் ரொம்ப நாட்கள் இருந்தது.

இன்னும் கொஞ்சம் யோசித்தால் இது சற்று மனநிலை பிறழ்ந்தவர்களைச் சதா தன்னிடம் ஈர்த்துக்கொண்டே இருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. இந்தத் தெருவுக்கு அதிகம் சம்பந்தமில்லாத, அயலூர்க்காரரான திரவியம் சித்தப்பாவுக்கு ஏன் இந்த இடம் பிடித்துப்போயிற்று என்று தெரியவில்லை. எங்கள் தெருப்பிள்ளை கள் பூராவும் அவரை விரட்டி விரட் டிக் கல்லால் அடித்திருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அவர் இந்தப் பக்கம் நடமாடிக்கொண்டே இருப்பார். நெடுக்குவாட்டில் கறுப்புக் கோடுகள் போட்ட ஒரு சட்டையுடன் அவர் இந்தக் கட்டடத்தைச் சுற்றி ஓடுவதை இந்த க்ளாவர் மரம் அசையாமல் அல்லவா பார்த்துக்கொண்டு இருந்தது.!

‘கோட்டிச் சொக்கன்’ என்ன, ரொம்ப தூரம் தள்ளியா இருந்தான்! இந்த மரம் பார்த்துக்கொண்டு இருக்கிற இதே தென்மேற்கு மூலையில், தெரு பைப் பக்கம் ஒரு திண்ணை மாதிரி இருக்கிறதே, அதிலேயேதான் எப்போதும் ‘புலி, புலி’ என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

அவன் எந்தக் காட்டுக்குப் போயிருப்பான்? எந்தப் புலியைப் பார்த் திருப்பான்? அப்படியே காட்டுக்குப் போய்ப் புலியைப் பார்த்தாலும் இப்படியா நிறுத்தி நிதானமாக பள்ளிக்கூட வகுப்பறையில் புலியைப் பற்றி பாடம் எடுப்பது போல, போகிறவர்கள் வருகிறவர்களிடம் சொல்லிக்கொண்டு இருப்பான்?

ஒருவேளை, இந்த மரம் இருந்த வனத்தைத்தான் கோட்டிச் சொக்கன் பார்த்திருப்பானோ? அவன் முன்னொரு காலத்தில் அரசனாக இருந்த சமயம், அவனுடைய வனசுந்தரியை இந்த மரத்தின் கீழ்தான், எத்தனையாவதோ முன் ஜென்மத்துப் புலி அடித்துக் கொன்றிருக்குமோ?’ அவள்தான் ஒரு யட்சியைப் போல, காய்க்காத கனியாத இந்த மரத்தில் இடம்கொண்டு உட்கார்ந்திருக்கிறாளோ? எந்தப் புல்பூண்டும் வளராததற்கும், எந்தப் பறவைகளும் கூடு கட்டாததற்கும், இந்தக் கிணறு தண்ணீரின்றி பாழ்த்துப் போகவும் அவளேதான் காரணமோ?

ஒரு கிழட்டுக் கழுகு இரண்டு நாட்கள் கழுத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்துவிட்டு, யார் கண்ணிலும் படாமல் ஒரு நாள் பறந்து போனதே, அதுகூட அந்த யட்சியைப் பார்க்க யாரோ வந்து போனதன் அடையாளம்தானோ? அதனால்தான், கல்லால் அடிக்க வேண்டாம் என்று தடுத்த அரபித் தொப்பிக்காரர்கூட, அடுத்த தெருக் கிணற்றில் விழுந்து இறந்து போனவர் சாயலில் இருந்தாரோ? யட்சிகள் இளமையாக வந்து மோகத்தோடு வழிமறித்துக் கூப்பிடுவது போலத்தான், இது திரவியம் சித்தப்பாவை மறுபடி மறுபடி இங்கே கூட்டி வந்ததோ?

வருடங்கள் ஆக ஆக, அடர்ந்து பச்சையாக ஒரு குமரியைப் போல மரம் இருப்பதற்குக் காரணம், அந்த வனசுந்தரிதானா? இந்தத் தென்மேற்கு மூலை வழியாகத்தான் அந்தப் புலி தாவிச் சாடியதா?

இப்போது அதெல்லாம் முடியாது. காம்பவுண்ட் சுவர் கட்டிவிட்டார்கள். ஆள் உயரம் இருக்கும். இது எல்லாம் ஒரு உயரமா என்பது போலத் தட்டான்கள் பறந்துகொண்டு இருந்தன.

மரம் பார்த்துக்கொண்டே இருக்கிறது. உங்கள் தெருவில் இப்படி ஒரு மரம் இருக்கிறதா? இருக்கும். நீங்கள் சரியாகக் கவனித்திருக்க மாட்டீர்கள்!

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

One Response to மரம்

  1. சுந்தர் சொல்கிறார்:

    மனிதர்களையே கவனிக்காத பொழுது மரங்களை யார் கவனிக்க போகிறார்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s