என் கையில் விழுந்த சாக்லேட்!

என் கையில் விழுந்த சாக்லேட்!

வண்ணதாசன்” எழுதிய “அகம், புறம்” அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன்.

“பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா? அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தோழமை நிரம்பிய பெண்ணின் பெயரை அறிவதற்கு எனக்கு இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன” என்று அந்த நண்பர் சொல்லும்போதே, இத்தனை வருடங்களிலும் பெயர் அறியாஹ முகங்களின் அணிவகுப்பு துவங்கியதைத் தடுக்க முடியவில்லை. மஜீத்கள், சுஹ்ராக்கள் இளம்பருவத் தோழியை பஷீர் எழுதியது போல, முதிர் பருவத்துத் தோழி பற்றி யார் எழுதப் போகிறார்கள்? முதிர்பருவத்துத் தோழியே எழுதப் படாதபோது, முதிர் பருவத் தோழன் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!

“உங்க கிட்டே இதைச் சொல்லணும், அத்தான்!” அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிர பாதையில் வந்திருப்பான் போல, கையில் பை இருந்தது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் “நாகம்மாள்” புத்தகம் பக்கவாட்டில் எட்டிப் பார்த்தது. ஒரு முழுவேலை நாளின் எந்த அலுப்பும் இல்லாமல், முகம் பளிச்சென்று இருந்தது, “சொல்லு மாப்பிளே!” என்று நான் உட்காரச் சொல்கையில், முகம் இன்னும் கொஞ்சம் மலர்ந்தது. கொடியில் காயப் போட்டிருக்கிற சிவப்புச் சேலையில், இதுவரை மங்கியிருந்த வெயில், இரண்டு நிமிடங்கள் தீப்பிடித்த மாதிரி பிரகாசிக்கும்போது இப்படித் தான் இருக்கும்.

உடனே சொல்ல ஆரம்பிக்கவில்லை. இந்த வீட்டை இப்போது தான் முதலில் பார்க்கிறமாதிரி கொஞ்ச நேரம் இருந்தான். வாரப் பத்திரிகையை எடுத்து விசிறிப் புரட்டாலாகத் திருப்பிவிட்டு வைத்தான். உட்கார்ந்திருந்த சோபாவில் மிச்சம் கிடந்த காலியிடத்தைத் தடவிக் கொடுத்தான். மறுபடி சிரித்தான்.டக்கென்று “ஒண்ணுமில்லை அத்தான், நகைக்கடன் வாங்குறதுக்கு ஒரு புள்ளை வந்திருந்தது. உடனே நீங்க ஒண்ணும் யோசிச்சிராதீங்க, கல்யாணம் ஆகிக் கைப்பிள்ளை இருக்கு” என்று மேற்கொண்டு சிரித்தான்.

அந்தப்பெண் கன்னங்கரேர் என்ரு ஒரு சிலை மாதிரி இருந்தாளாம். அம்மன் கோயிலில் இருந்து அப்படியே பெயர்த்து எடுத்து வந்து, இப்படி நடு ஹாலில் காஷ் கவுண்டருக்கு முன்னால் நிறுத்தி வைத்தது போலவாம்! மூக்கு அப்படியாம்! கண் அப்படியாம்! பல் அப்படியாம்! சிரிப்பைப் பற்றிச் சொல்லவே முடியாதாம்! அப்படியே “கை எடுத்துக் கும்பிடணும்போலே” இருந்தாளாம்! இத்தனைக்கும் படிப்பு, நாகரிகம் எதுவும் இல்லையாம்!”தொப்”னு தண்ணிக்குள்ளே விழுந்து, விரலால் அடிச்சுப் போய் பறிச்சுட்டு வந்த தாமரைப் பூ மாதிரினு வச்சுகிடுங்களேன்” என்று அவன் சொல்லச் சொல்ல நான் எனக்குத் தெரிந்த முகங்களின் கற்பனையில் இருந்தேன். உலகமே அப்படித் தானே!

ஒருத்தர் வைத்த புள்ளிக்கு இன்னொருத்தர் போடுகிற கோலம் வேறு அல்லவா? நான் வரைந்த ஊஞ்சல் ஆடும் பெண்ணை, நீங்கள் பார்க்கும்போது ஆடுவது உங்களுக்கு நெருக்கமான பெண்தானே?

“அது அழகா இருக்கிறது எல்லாம் முக்கியமில்லை அத்தான்!”யம்மா! நீ ரொம்ப அழகா இருக்கே தாயி!”ன்னு அதைக் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லணும்னு எனக்குத் தோணினதுதான் ஆச்சரியம்!”

“சொல்லிட்டியா?”

“சொல்லிட்டேன்!”

“அடிகிடி, விழுந்ததா?”

“நான் சொன்னவுடனே அது முகத்திலே வெட்கத்தைப் பார்க்கணுமே!” கிட்டத் தட்ட அந்தப் பெண் வெட்கப் பட்ட விதத்தை அவன் நடித்தே காண்பித்து விட்டான்.

“அது வெட்கமா? மாப்பிளே! சந்தோஷம்! நீ சொன்னது, அது அதைக் கேட்டுக்கிட்டது இரண்டையுமே நம்ப முடியல்லே!” நான் சொல்ல, அவன் தங்கத் தாள் சுற்றின அந்தச் சாக்லேட் பட்டியை என் முன்னே நீட்டினான். “இதை நம்புகிறீர்களா? அது கொடுத்துட்டுப் போச்சு!” என்று என்னைப் பார்த்தான்.

“சாப்பிடாமல் அப்படியே வச்சுகிடப் போறியா?”

“யார் சொன்னா? உங்க கிட்டே சொன்ன மாதிரி எல்லாக் கதைகளையும், ஹரி அம்மா கிட்டே சொல்லிட்டு, அப்புறம் அல்லவா முடிவு பண்ணணும்? அதைச் சாப்பிடுறதா, வச்சிருக்கறதா என்று!”

சாக்லேட் பட்டி அவனுடைய உள்ளங்கையை நிரப்பியிருந்தது. நான் என்னுடைய கையைப் பார்த்துக் கொண்டேன்.

எல்லோர் கையிலும் இப்படி ஒன்றை வைத்துக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”

வண்ணதாசனின் எழுத்தின் ஒரு பகுதி, எனக்குப் பிடிச்ச இடத்தை மட்டுமே கொடுத்திருக்கேன். ஸ்கான் பண்ணிப் போடவேண்டாம்னு முடிவெடுத்ததுக்குக் காரணமே, மீண்டும் ஒரு முறை படிக்கிற ஆசையில் தான். அந்த இளைஞனின் தெளிவான மனமும், மனைவியிடம் இன்னொரு பெண்ணின் அழகைப் பற்றிச் சொல்லப் போவதையும், அவள் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும், எழுத்தில் அந்த உணர்வுகளை வண்ணதாசன் வடித்திருப்பதும்

சாக்லேட் என் கையிலேயே வந்துட்ட மாதிரி உணர்வு!

Posted by கீதா சாம்பசிவம் at 3/24/2008

http://sivamgss.blogspot.com/2008/03/blog-post_24.html

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , . Bookmark the permalink.

One Response to என் கையில் விழுந்த சாக்லேட்!

  1. சென்ஷி சொல்கிறார்:

    :))

    அருமை. பகிர்விற்கு நன்றி கீதாம்மா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s