”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?”

”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?”

இந்தக் கேள்வி காதில் விழுகையில் நான் ஏழுவளவு தாண்டி, திருநாவுக்கரசு மாமா வீடு தாண்டிப் போய்க்கொண்டு இருக்கிறேன்.

பிறந்து வளர்ந்த வீடு இருக்கிற தெருவில் ரொம்ப வருடங்கள் கழித்து நடந்து போகிறவனுக்கு என்னவெல்லாம் மனதுக்குள் நிகழுமோ, அவ்வளவும் என்னுள் நிகழ்ந்துகொண்டு இருந்தது. மேட்டு வீடு என்றும், மாம்பழக் கடை ஆச்சி வீடு என்றும், பழைய கறுப்பு வெள்ளை ஆல்பத்தின் புகைப்படங்கள் புரண்டு வருகிறபோது, பழுத்த அரசிலை ஒன்று உதிர்வது போல இந்தக் கேள்வி. ஒரு விநாடி, என்னைத்தான் யாரும் கேட்கிறார்களோ என்று தோன்றிவிட்டது.

இறந்த காலத்துக்குள் நுழைவது என்பது, கொஞ்சம் பித்துப் பிடிக்கவைக்கும்; கொஞ்சம் பித்தம் தெளியவைக்கும்.

‘கோட்டி பிடிச்சிருக்கா?’ என்பதற்கு, ‘பைத்தியம் பிடிச்சிருக்கா?’ என்று அர்த்தம். இதைக் கேட்டுக்கொண்டவர்கள் இரண்டு பேருமே பெண்கள். ஆனால், எந்தக் கோபமும் இல்லாமல் ஒரு சிநேகிதத்தோடும் பிரியத்தோடும் கேட்டுக்கொண்டார் கள். அப்படிக் கேட்ட பெண்ணிடம் சிரிப்பு தவிர, பீடி இலைகள் உள்ள ஒரு பெரிய பை இருந்தது. கழுத்தில் கயிறுதான் கிடந்தது. வீடு வெள்ளை அடிக்கும்போது செருப்பின் மீது தெறித்திருக்கிற சுண்ணாம்பு மாதிரி, இருக்கிற இடம் தெரியாமல் ஒரு மூக்குத்தி. அவ்வளவு பிரியமும் வழிகிற கண்கள்.

இந்தப் பெண்களுக்குத்தான் ஒரு மாயம் உண்டே! தானும் இன்னொருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, தன்னைத் தாண்டிப் போகிறவர்களை ஒரு நொடிக்குள் படம் பிடிக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார்களே… அப்படித்தான் அந்தப் பெண் என்னைப் பார்த்தது. அதுவும் சந்தோஷமாகவே இருந்தது.

சந்தோஷம் என்பது என்ன, இன்னா ருக்கு இவ்வளவு என்று எழுதியா வைத்திருக்கிறது? அப்படியன்றும் இல்லையே! பீர்க்கம் பூவில் வெயில் விழாமலா போகும்? எருக்கஞ் செடி முளைத்துக்கிடந்த பிச்சைப்பிள்ளை சாவடி காலி மனையில், ஆரஞ்சு நிற வண்ணத்துப் பூச்சிகள் எவ்வளவு பறந்தன. கழிப்பறைக் குழாயின் தண் ணீர்த் தெறிப்பில், கட்டணமில்லாத குட்டி வானவில்!

என்னைப் பார்த்த பெண்ணின் முகத்திலும் சந்தோஷம் வழுக்கிக்கொண்டு போயிற்று. சில பேரின் கன்னத்துச் சதை அப்படி. சிரிக்கும்போது திரண்டு நிற்கும். கண்கள் ஆற்று மணலில் புதைந்துகிடக்கிற சிப்பி மாதிரி ஒதுங்கி, அந்தத் திரட்சிக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும். அப்படித்தான் பார்வை புதைந்து நகர்ந்தது. நான் பார்க்கிறேன் என்பது தெரிந்ததும், சிநேகிதியைப் பார்த்துக்கொண்டே, வலது கையால் இடது பக்க முடியை ஒதுக்கிவிட்ட விரல்களில் மருதாணிச் சிவப்பு. காதோர முடி எல்லாம் நன்றாகத்தான் இருந்திருக்கும். அப்புறம் இந்த உள்ளங்கையையும் விரல்களையும் எப்படிக் காட்டுவது!

அந்தப் பெண் சந்தோஷமாகவே இருந்தது. இடது கைப் பையில், மரச்சீனிக் கிழங்கு தெரிந்தது. ஒருவர் மார்க்கெட்டுக்குப் போய்க் காய்கறி வாங்கி வருவதோ, இன்னொருவர் பீடி கம்பெனிக்குப் போவதோ பெரிய விஷயமில்லை. அவர்கள் இதுபோன்ற ஓர் ஒடுக்கமான தெருவில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொள்கிறார்கள். தோள்களில் சற்றுநேரம் கை வைக்கி றார்கள். ஒரு சிரிப்பைத் தொடங்கி வைப்பது போல் முதுகில் அடிக்கிறார் கள். சில சமயம் லேசாகப் பிடித்துத் தள்ளக்கூடச் செய்கிறார்கள்.

பேசாமல் இல்லை. பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். பேச்சு போதவில்லை. அது போதாமல் இப்படி ஏதாவது செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம், மின்சாரத்தைக் கம்பி வழியாகக் கடத்துவது மாதிரி, விரல்களிடமிருந்து தோள்களின் வழியாகத் தங்களின் சந்தோஷத்தை மற்றவர்களுக்குக் கடத்துகிறார்கள். அப்போதுதான் ‘கோட்டி பிடிச்சி ருக்கா?’ என்கிற வார்த்தைகள் வெளிப் படுகின்றன.

இவ்வளவு பிரியமாகப் பேசிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நிற்கிற இந்த இருவரையும் பார்ப்பதற்காகவே இன்றைக்கு இந்தத் தெருவுக்கு வந்தது போல இருந்தது.

இந்தத் தெருவில் இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதைப் போலத்தான் எல்லாத் தெருவிலும் எல்லாப் பெண்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்களா? தெருக்களில் மட்டுமா… அலு வலகங்களிலும் பெண்கள் அவர்களுக் குள் நிறையப் பேசிக்கொள்கிறார்கள். அதிகம் பேசாத சித்ராக்களுக்கு எப் போதுமே பேசிக்கொண்டு இருக்கிற தாமரைச்செல்விகளைப் பிடித்துப் போகிறது. பக்கத்து ஊர் பள்ளிக்கூடங் களுக்கு பஸ்ஸில் தினசரி போய் வந்து வேலை பார்க்கிற டீச்சர்கள் பேசிக்கொள்வதையும் சிரிப்பதையும் பார்த்தால், உலகிலேயே சந்தோஷமாக இருப்பவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்து டீச்சர்கள்தான் என்று தோன்றும்.

ஆனால், இந்தச் சிரிப்பையும் தினசரி வைத்துக்கொள்கிற பூவையும் வைத்து அவர்கள் வாழ்க்கையே துக்கம் அற்றது என்று தீர்மானிக்க முடியுமா? குற்றாலம் ஐந்து அருவியில் குளித்துவிட்டு ஈரச் சிரிப்போடு படியேறி வருகிற எல்லாப் பெண்களு டைய வீடுகளிலும் செண்பகப் பூவா பூத்துக்கொண்டு இருக்கிறது? வேறு எல்லா ஜன்னல்களும் திறக்க முடியாத படி அடைத்துக்கிடக்க, ஒரே ஒரு ஜன்னல் மூலம் வருகிற வெளிச்சம் மாதிரி, ஜன்னல் கம்பி நிழல்களுடன் இந்தச் சிரிப்பு விழுகிறது என்றும் இருக்கலாம். மழை தினங்களில் வீசி எறியப்படுகிற நனைந்த செய்தித்தாள் களை வாசிப்பது போல, இந்த ஈரமான முதல் பக்கங்களைத் தாண்டிய பிறகு எவ்வளவோ இருக்குமல்லவா?

எவ்வளவோ இருக்கிற மாதிரிதானே இந்தச் சிரிப்பும் இருக்கிறது! இந்தச் சிரிப்பை அவர்கள் வீட்டில் சிரிக்க முடியும், சிரிக்கவும் செய்கிறார்கள் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? பறக்கிற வரை பறந்து கொள்ளலாம் என்றுதான் வீட்டுக்கு வெளியே இவ்வளவு சிரிக்கிறார்கள்.

நான் இப்படிச் சிரிக்கிறேனா? இந்தத் தெருவில் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேனே, யாரைப் பார்த்தாவது சிரித்தேனா? இஸ்திரி போடுகிற ராமனிடம் பேசினேன். சிரித்தேனா? தேய்க்க இருக்கிற உருப்படியில் ஒரு கை தண்ணீரை உதறித் தெளித்துவிட்டு, இஸ்திரிப் பெட்டியை ராமன் நகர்த்துகிற சமயம் உண்டாகிற வாசனையின் மேல் விழுந்த கவனம், ராமனுடைய சிரிப்பின் மேல் விழுந்ததா?

வீரபாகு… என்னுடன் ஒரே பள்ளிக் கூடத்தில் படித்தவர். சின்ன வயதுப் பழக்கத்துக்கு, இப்படி ஆஸ்பத்திரியில் எதிரே வருகிற டாக்டரைக் கும்பிடுகிற மாதிரி கையை உயர்த்திக்கொண்டால் போதுமா? ஏன் இரண்டு வார்த்தைகள், அவர் கையைப் பிடித்துக்கொண்டு பேசியிருக்கக் கூடாது?

நான் பேசாதது மாதிரி, எனக்கு எதிரே வந்த அவர்களும் அப்படியேதானே சென்றுவிட்டார்கள்! ஆணுக் கும் இன்னொரு ஆணுக்கும் இடை யில் கண்ணுக்குத் தெரியாத மதில் எதுவும் இருக்கிறதா? ஒருவரை ஒருவர் தொடக் கூடாது என்று சத்தியம் பண்ணிவிட்டு வந்த மாதிரிதானே எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்! போகும்போது வரும்போது, நெரிசலுக் குள் தன்னை அறியாமல் இடித்து விட்டால்கூட, இப்போதெல்லாம் எப்படி முறைத்துப் பார்க்கிறார்கள்! ‘கண்ணு என்ன பொடனியிலா இருக்கு?’ என்று கேட்பதாகத்தானே அந்த முறைப்புக்கு அர்த்தம்?

ஆண்கள் எல்லோரும் அவரவர் வனத்தில் புகுந்து, அவரவர் குகைகளின் வாசலில் குறுக்காகப் படுத்து, யாரும் நுழைந்துவிடாமல் காவல் காத்துக்கொண்டு இருப்பவர்கள். அப்படித்தானா?

மனோதத்துவம்கூட ‘வன்மையுள்ளது எஞ்சும்’ என்கிற வன விதிகளுக்கே ஆதரவு சொல்லக்கூடும். இறுக்கமாகக் கை குலுக்குபவர்கள் உறுதியானவர்கள் என்றும், அடுத்தவர்களைத் தொட்டுப் பேசுபவர்கள் பாதுகாப்பு அற்றவர்கள் அல்லது பாதுகாப்பு தேடுபவர்கள் என்றும் வர்ணிக்கும்.

வாழ்க்கை தொடர்ந்து விதிகளைப் பொய்யாக்கிக்கொண்டேதான் இருக்கிறது. இது இப்படித்தான் என்று முடிவுகட்ட முடியாதபடி, தன் காலடிச் சுவடுகளைத் தானே அழித்துக்கொண்டு அது நகர்கிற விதம், யூகங்களுக்கு அப்பாற்பட்டது. அச்சடித்த புத்தக வரிகளின் மேல் சின்னஞ்சிறு பிள்ளையார் எறும்பு ஊர்வது போல, எந்தத் தடங்கலும் இன்றி அது ஊர்ந்துகொண்டு இருக்கிறது. அடுத்த பக்கங்களின் வாசிப்பு அல்ல, ஊர்ந்துகொண்டே இருக்கும் அந்த உயிரின் அழகு முக்கியம் என்று நமக்குப் பிடிபட்டால் போதும்.

செல்வராஜுக்குப் பிடிபட்டிருந்தது. அவர் அதிகாரியாக இருக்கிற பகுதியில்தான், என் சின்ன தாத்தா ஒருவர் இருந்தார். தாத்தாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப் பட்டோம். நான் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும், பிஸ்கட் பொட்டலங்களும் வாங்கியிருந்தேன். விசில் அடித் துக்கொண்டே வாகனத்தை ஓட்டும் பழக்கம் செல்வராஜுக்கு இருந்தது. ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு…’ பாடலை விசிலடித்துக்கொண்டே வந்தவர், நான் தாத்தாவைப் பற்றிச் சொல்லச் சொல்ல, விசிலடிப்பதை நிறுத்தினார்.

வெயிலில் வறுபட்ட புழுதிக்குள் வீடு செருகப்பட்டிருந்தது. நடையில், நிழலுக்குப் படுத்திருந்த வெள்ளை நாய் பதறி ஓடியது. வில் வண்டி நின்ற இடம் காலியாக இருக்க, மண் சுவர் மேல் வைத்த சோற்றுக் கற்றாழையின் கரும்பச்சை எங்களை உற்றுப் பார்த்தது.

வீட்டு வாசல் ஏறும்போது, உச்சந்தலை தட்டியதில் மக்கின கூரை ஓலை உதிர்ந்ததை செல்வராஜ் தட்டிவிட்டுக்கொண்டார். பனங்கிடுகுகளில் கரையான் கொடிக் கொடியாக ஏறியிருந்தது. பாம்புகளின் வாசனையை நான் கற்பனை செய்துகொண்டேன்.

அவ்வளவு பெரிய வீட்டில் தாத்தா மட்டும் படுத்திருந்தார். நான் ஹார்லிக்ஸ், பிஸ்கட் பொட்டலம் எல்லாவற்றையும் தாத்தா பக்கத்தில் வைத்தேன்.

எனக்குப் பேச்சு ஓடவில்லை. செல்வராஜ் அருமையாகப் பேசினார். நான் இங்கே வரும்போது சொன்ன விவரங்களின் சாரத்திலிருந்து எளிய விசாரிப்புகளை உருவாக்கி, அவர் பேசிய விதம் நன்றாக இருந்தது.

செல்வராஜ், தாத்தா படுத்திருந்த கட்டில் விளிம்பிலேயே உட்கார்ந்து, பேசிக்கொண்டு இருந்தார். தாத்தாவின் வேட்டியை விலக்கி, பாதங்கள் வீங்கி இருக்கிறதா என்று பார்த்தார். எல்லா கால் விரல்களிலும் சண்டைச் சேவல் மாதிரி நகம் கத்தி தீட்டியிருந்தது. காய்த்துப்போன கரண்டை. மறுபடியும் தாத்தாவின் வலது கையை எடுத்துத் தன் இரண்டு கைகளுக்குள்ளும் பொதித்து வைத்துக்கொண்டு பேசினார் செல்வராஜ்.

‘உடம்புக்கு என்ன செய்கிறது? என்ன ஆகாரம் சாப்பிடுகிறீர்கள்?’ என்பன போன்ற சாதாரண கேள்விகள்தான். ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தாத்தாவின் வலது கையை விடவே இல்லை.

தாத்தா என்னிடம் ஏதேதோ கேட்டார். பெரும்பாலும் உறவுகள் சார்ந்தவை. யார் யார் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது மாதிரி.

செல்வராஜ் என்னைப் பற்றித் தாத்தாவிடம் பெருமையாகச் சொன் னார். எப்போது பார்த்தாலும் நான் சின்ன தாத்தாவைப் பற்றியே பேசிய தாகவும், தன்னால்தான் இரண்டு பேரும் பார்க்க வருவது தாமதமாகி விட்டது என்றும் சொல்லும்போது, தாத்தா குனிந்து தரையையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

செங்கோட்டை பாசஞ்சரில் ராத்திரி இறங்கி நடந்து வந்து, அவர் கொண்டு வந்து தருகிற தாழம்பூக்களைப் பற்றி செல்வராஜ் சொல்லும்போது, இடது கை விரல்களால் தாத்தா கண்களைத் துடைத்துக்கொள்ளும்படி ஆயிற்று.

”அப்போ நாங்க புறப்படுதோம்” என்று சொல்லிவிட்டுத் தாத்தாவின் கையை மெள்ளத் தளர்த்தினார் செல்வராஜ். அவருடைய கைகளுக்குள் இருந்து தாத்தா தன் கையை எடுத்துக்கொள்ளும் வரை அமைதியாக இருந்தார். பின், எழுந்திருந்தோம்.

”எட்டிப் பார்க்கணும்னு தோணிச்சே… சந்தோஷம்!” தாத்தா கீழே பார்த்தார். அப்புறம் விளக்கு மாடத்தைப் பார்த்தார். அழுகையை அடக்குகிற சங்கடம் அது.

செல்வராஜ் அதுக்கப்புறம் சொன் னதுதான் அருமையானது… ”எத்தனை பூவுக்கு இந்தக் கை விதைச்சிருக்கும்! எத்தனை கோட்டை நெல்லை இது அறுத்திருக்கும்! அதை இவ்வளவு நேரம் மடியில வெச்சுக்க முடிஞ்சுதே… எங்களுக்குத்தான் சந்தோஷம்!” என்றார்.

”நாதியில்லாம ஒத்தையில கிடக்கேன். அடுத்த ஆள் ஸ்பரிசம் பட்டே வருஷக்கணக்காச்சு!”

ஸ்பரிசம் என்கிற வார்த்தையை சின்ன தாத்தா உபயோகிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த வார்த்தையுடன் உடைந்துகொண்டு பெருகியது அழுகை. அவர் செல்வராஜ் தோளின் மீது அப்படியே கைகளை ஊன்றிக்கொண்டார்.

சின்ன தாத்தா மறைந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. செல்வராஜ் இப்போது எந்த ஊரில் இருக்கிறாரோ? இந்தத் தெரு முடிவதற்குள், அவர் எதிரே வருவதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை. யாராவது வந்தால் நன்றாக இருக்கும்.

என் சின்ன வயது ஞாபகங்களின் கதவுகளைத் திறந்துகொண்டு யாரும் இப்போது வந்தால், கொஞ்ச நேரம் நானும் அவர்களுடைய கையைப் பிடித்துக்கொள்வேன்.

பெரிய கோபால் வரட்டும். யார்ட்லி பவுடர் வாசனையுடன் அலெக்ஸாண் டர் வந்தால் நல்லது. பாத்திரக் கடை ராமலிங்கம் வந்தால், ஹார்மோனியச் சத்தமும் கூடவே வரும். வேம்படித் தெரு பெரியம்மை வந்தால், ‘நல்லா இருக்குறியா அய்யா?’ என்று அவளே வந்து, என் கைகளைப் பிடித்துக் கொள்வாள்.

யார் கையையாவது பிடித்துக் கொண்டு, இந்தத் தெருவில் இப்படியே கொஞ்ச நேரம் நிற்க வேண்டும். கோட்டிக்காரத்தனமாக இருக்கிறதா?

கோட்டிக்காரனாக இருப்பதற்கு எனக்குச் சம்மதம்!

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to ”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?”

 1. சுகா சொல்கிறார்:

  இப்படி ஒரு கதை எழுத வண்ணதாசன் அண்ணாச்சியால் மட்டும்தான் முடியும். அவரது எழுத்தை எப்போது படித்தாலும் கோட்டி பிடித்து விடும். இப்போதும் பிடித்தது.

  நன்றி.

  சுகா

 2. ramji_yahoo சொல்கிறார்:

  ஒருவர் மார்க்கெட்டுக்குப் போய்க் காய்கறி வாங்கி வருவதோ, இன்னொருவர் பீடி கம்பெனிக்குப் போவதோ பெரிய விஷயமில்லை. அவர்கள் இதுபோன்ற ஓர் ஒடுக்கமான தெருவில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொள்கிறார்கள். தோள்களில் சற்றுநேரம் கை வைக்கி றார்கள். ஒரு சிரிப்பைத் தொடங்கி வைப்பது போல் முதுகில் அடிக்கிறார் கள். சில சமயம் லேசாகப் பிடித்துத் தள்ளக்கூடச் செய்கிறார்கள்.

  பேசாமல் இல்லை. பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். பேச்சு போதவில்லை. அது போதாமல் இப்படி ஏதாவது செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம், மின்சாரத்தைக் கம்பி வழியாகக் கடத்துவது மாதிரி, விரல்களிடமிருந்து தோள்களின் வழியாகத் தங்களின் சந்தோஷத்தை மற்றவர்களுக்குக் கடத்துகிறார்கள்.

  அதிகம் பேசாத சித்ராக்களுக்கு எப் போதுமே பேசிக்கொண்டு இருக்கிற தாமரைச்செல்விகளைப் பிடித்துப் போகிறது. பக்கத்து ஊர் பள்ளிக்கூடங் களுக்கு பஸ்ஸில் தினசரி போய் வந்து வேலை பார்க்கிற டீச்சர்கள் பேசிக்கொள்வதையும் சிரிப்பதையும் பார்த்தால், உலகிலேயே சந்தோஷமாக இருப்பவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்து டீச்சர்கள்தான் என்றுதான் தோன்றும்

  இந்த ஒரு கதைக்காகவே நூறு சாகித்ய அகடமி விருதுகள் கொடுக்கலாம் வண்ணதாசன் அவர்களுக்கு

 3. Salaikumar சொல்கிறார்:

  Wonderful….I felt as if I went back to the streets of nellai for 10 mins…. Velakku Maadam, Poda(r?)ni, Kotti, Valavu -nnu typical namma oor words paarthu romba santhosham.. Infact I forgot to use these words in chennai city life… I Miss Nellai…

 4. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

  //கோட்டிக்காரனாக இருப்பதற்கு எனக்குச் சம்மதம்!//
  எனக்கும்தான்:)

 5. Thirumalaisamy P சொல்கிறார்:

  “எத்தனை பூவுக்கு இந்தக் கை விதைச்சிருக்கும்! எத்தனை கோட்டை நெல்லை இது அறுத்திருக்கும்! அதை இவ்வளவு நேரம் மடியில வெச்சுக்க முடிஞ்சுதே… எங்களுக்குத்தான் சந்தோஷம்!” என்றார்”. – வசீகரமான நடை; அருமை …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s