கற்றது ‘மனம்’

ரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கிவிடுவான். ஆளுக்குத் தக்க பேச்சு எல்லாம் இராது. ஆனால், ஒவ்வொரு ஆட்களின் மடியிலும் பூப்போல கைப்பிள்ளையை உட்கார்த்திவைப்பது மாதிரி கொடுக்கிறதற்கு அவனிடம் ஒவ்வொன்றுஇருக்கும்.

அன்றைக்கு இரவு நல்ல மழை. சினிமாக் கொட்டகைக்குள் இருக்கும்போது பெய்கிற மழை ஒரு சாதாரண சினிமாவைக்கூட நல்ல சினிமா ஆக்கி-விடும். ஆனால், நாங்கள் பார்த்தது ஏற்கெனவே நல்ல சினிமா. ‘கற்றது தமிழ்’. நான்கைந்து பேராகச் சேர்ந்து பார்த்தோம்.

தியேட்டரைவிட்டு வெளியேற முடியாத அளவுக்கு மழை. ஒவ்வொருத்தரும் மழைத்துளியின் ஊடாக ஒவ்வோர் இடத்திடம் போய்க்கொண்டு இருந்திருப்பார்கள். ஒருத்தர் பூபால ராயரிடம்; ஒருத்தர் ஆனந்தியிடம்; ஒருத்தர் ‘பறவையே எங்கு இருக்கிறாய்’ பாடலிடம்; ஒருத்தர் மகாராஷ்ட்ராவின் நிலக் காட்சிகளிடம்; ஒருத்தர் அச்சன் கோயில்புல் வெளியிடமும் தண்டவாளங்களிடமும் பறந்து அமர்கிற ஒற்றைச் சிறகிடமும்;எல்லோரும் பிரபாகரிடமும். மழை அழைத்துச் சென்ற இடங்களும்மனிதர் களும், அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ராம் தங்கியிருந்த விடுதி வரை கூடவே வந்துகொண்டு இருந்தன, இருந்-தார்கள். ஒருத்த ரைப் பார்த்தால் அவரை யாரோ தட்டாமாலை சுற்றுகிற மாதிரி இருந்தது. எனது இடது கைப் பக்கம் நடந்து வந்தவர் கையில் ஒரு நசுங்கின கால்-பந்து இருந்தது. ஜவுளிக் கடைப் பையு டன் சேலையால் மழைக்கு முக்காடு போட்டுக்கொண்டு போகிற பெண், ‘நிஜமாத்தான் சொல்றியா?’ என்று அவருடைய கணவரிடம் கேட்கிறார். பெருகி ஓடி வருகிற மழைத் தண்ணீரைத் தாண்டிக் குதிக்கிறவர், பிரபாகர் மாதிரி ஆற்றுக்குள் சிவதாண்டவம் ஆடுகி றார். தார்ப்பாய் தொங் கிப் படபடக்க விரைகிற ஷேர் ஆட்டோவுக்குள் இருக்கிறவர் வெள்ளாட்டுக் குட்டிக்கு அகத்திக் குழை நீட்டுகிறார். ஏ.டி.எம். கூண்டுகளைப் பார்த்தால், நாம் அதற்கு உள்ளே இருக்கிறோமா, வெளியே இருக்கிறோமா என்ற கேள்வி வந்தது.

எந்தக் கேள்வியும் இல் லாமல், ஆனால் எல்லோரும் மழைக்குள்தான் இருந்தோம்.

பரமன் அறைக்குள் இருக்கிற எங்களையெல்லாம் பார்த்தான். ‘‘இப்படி வந்து வசதியாக உட்காருங்களேன்’’ என்று ராமுடன் வந்திருக்கிற நண்பரைச் சொன்னான். ‘‘இல்லை. இதே வசதியாத்தான் இருக்கு சார். பரவாயில்லை’’. ‘‘நாற்காலியைக் கொஞ்சம் கிழக்கே நகட்டுங்க’’ என்று பரமன் சொல்வதைக் கேட்டு அவரும் லேசாக நகட்டிக் கொண்டார். ஒரு விடுதி அறைக்குள் அதுவும் இப்படி மழை பெய்கிற இரவில், கிழக்கு மேற்கு எப்படித் தெரியும்? நகர்த்தின இடம்தான் கிழக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ‘‘இப்ப கொஞ்சம் முன்னாலவிட சௌகரியமாக இருக்குமே’’ பரமன் அவரைக் கேட்டதும் நிஜமாகவே முன்பைவிடச் சௌகரியமாக இருப்பது போல அவருக்குத்தோன்ற ஆரம்பித்துவிட்டது. சிரிப்பில் அது தெரிந்தது.

‘‘இப்படித்தான் ஒரு தடவை மெட்ராஸ் போயிருந்தேன். ரயில்ல எக்கச்சக்கமான கூட்டம். அன் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் வேற…’’ என்று தொடங்கியது பரமன் குரல். இப்படி ஆரம்பித் தாலே, ‘‘இனிமேல் இந்த இரவு உங்களு-டையது அல்ல, என்னுடையது’’ என்று அர்த்தம் அதற்கு.

அன்றைக்கு பரமன், சிவாஜிகணேசனை ஒரு மருத்துவமனையில் பார்த்ததையும் இயக்குநர் ஸ்ரீதர் வீட்டுக்கே போய் அவருடைய திரைப்படங்களைப்பற்றி இரண்டு மணி நேரம் பேசியதையும் சொன்னான். பேச்சை நேரடி-யாக சிவாஜியிடம் கொண்டுபோகவில்லை. முதலில் மருத்துவமனை பற்றி ஒரு சின்ன வர்ணனை. தனக்கும் அங்குள்ள ஒரு மருத்துவருக்கும் நடந்த சின்ன உரையாடல். அப்புறம், அந்த லிப்ட்டில் உடன்வந்த பெண்களைப் பற்றிய வசீகரத் தகவல். இவ்வளவையும் சொல்லும்போதே, எந்தக் கட்டத்தில் சிவாஜி வருவார் என்று எதிர்-பார்க்க ஆரம்பித்துவிட்டோம். சிவாஜி உட்கார்ந்திருந்த தோரணை, கும்பிட்ட விதம் எல்லாம் கண்ணுக்கு முன் தெரியும். சிவாஜி குரலி-லேயே, சிவாஜி பேசியதைச் சொல்வான். அப்புறம் பரமனாக. மறுபடியும் சிவாஜி குரலில்.

சொல்லி முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் அப்படியே இருப்பான். நம்மை மட்டும் மருத்துவமனையில் சிவாஜியுடன் விட்டுவிட்டு பரமன் வெளியே போய்விட்டது போல இருக்கும். திடீரென்று ‘‘எப்பேர்ப்பட்ட கலைஞன்’’ என்பான். ஸ்ரீதர் வீட்டுக் கதவைக் தட்டு-வதற்கு முன், நமக்குக் காட்டுகிற அடையாளம் அது.

‘‘நீங்க அவரைப் பார்த்-திருக்-கீங்களா?’’ என்று யாராவது ஒருத்-தரைக் கேட்கும்போது, எல்லோருமே ‘‘இல்லை’’ என்று தலையை அசைத்திருப்போம். அவர் மீசை, வெள்ளை உடை, கையைக் கட்டிக்கொள்கிறவிதம் எல்லாம் சொல்வான். குறிப்பாக மீசை பற்றி சொல்லும்போது, இனிமேல் நாமே அப்படி வைத்துக்கொள்ளலாம் போல இருக்கும். ஸ்ரீதரைப்பற்றி மேலும் சில கேள்விகளைக் கலைத்துப் போடுவான். போடப்போட, ‘ரத்த பாசம்’, ‘உத்தம புத்திரன்’, ‘மீண்ட சொர்க்கம்’, ‘கலைக் கோவில்’, ‘சுமைதாங்கி’, ‘அமர தீபம்’ என்று மாறி மாறிச் சீட்டுக்கள் விழுந்து குவியும். ரொம்பப் பிரபலமான படங்கள் அதில் இராது. அது ஓர் உத்தி.

புனர் ஜென்மத்திலிருந்து ‘உருண்டோடும் வாழ்வில்’ பாட்டைப் பாடுவான். ‘இருள் வேண்டுமா ஒளி வேண்டுமா’ என்று தன்னைப் பாடகனாகவே முற்றிலும் நம்பிவிட்ட குரலில் தொடரும்போது, அந்தக் காட்சியைவிடவும் இந்த அறைக்குள் இருக்கிற இருளும் ஒளியும் மாறும்.

‘கலைக் கோவில்’ படத்துக்கு பரணி வரைந்த போஸ்டரை ஞாபகப்படுத்துவான். ‘அவளுக்கு என்று ஒரு மனம்’ முத்துராமனை இந்தி நடிகர் ராஜ்குமாருடன் ஒப்பிட்டு ஏதோ சொல்வான். நமக்குப் புரியாது. ‘‘மிடில் கிளாஸ் லைபை தமிழ் சினிமாவுக்குள்ளே கொண்டாந்தது அவர்தான்’’ என்று ‘சுமைதாங்கி’யைப்பற்றி சொல்லும்போது, ‘மயக்கமா… கலக்கமா…’ பாடலில் ஜெமினி-கணேசன் காலால் தெருவில் கிடக்கிற கசங்கின தாளை உதைத்துக்கொண்டு போவார்.

நிச்சயம் ஸ்ரீதருக்குச் சந்தோஷமாகத்தான் இருந்திருக்கும். ‘‘நீங்க வந்து பேசிட்டுப் போனதில பாதி உடம்பு அவருக்குத் தேறின மாதிரி இருக்கு’’ என்று ஸ்ரீதர் மனைவி தேவ-சேனா மறு நாள் காலை பரமனுக்கு நன்றி சொன்னதில் எந்தச் சந்தேகமும் இல்லை எங்களுக்கு.

பரமன், நாகேஷ் பற்றிச் சொல்லி நான் கேட்டதில்லை. ஓவியர் மருது, சந்திரபாபு பற்றி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ட்ராட்ஸ்கி மருதுவும் பொதுவாக எப்போதும் வெள்ளைச் சட்டைதான் போட்டிருப்பார். தேர்ந்த ரகத்தில் மெல்லிய இந்த வெள்ளைச் சட்டைகளை இவர்கள் அணிவதற்கும் இவர்களின் சந்தோஷமான முகங்களுக்கும் பின்னால் நிச்சயம் ஏதாவது உளவியல் ஒற்றுமைகள் இருக்கக்-கூடும்.

சிரித்த முகம் இல்லாத கதைசொல்லிகளே இருக்க மாட்டார்கள். மருது எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டேதான் சொல்வார். அல்லது சொல்கிற மாதிரி இருக்கும். அது சந்திரபாபுவின் மரணத்துக்கு முந்திய கடைசி நிமிடங்களாக இருக்கட்டும் அல்லது எரிகின்ற ஓவியங்கள் பற்றிய புத்தகக் கடையாக இருக்கட்டும். அணிந்திருக்கிற கண்ணாடிச் சட்டங்களுக்குள் பிதுங்கி வந்து முட்டுகிறது போன்ற அவருடைய கண்களில் ஒரு சிரிப்பு, நம்முடைய வாசல் தரையில் தகடாக ஓடுகிற மழைத் தண்ணீர் மாதிரி பூசப்பட்டிருக்கும். அது சிரிப்புப் போலத்தான், ஆனால் சிரிப்பல்ல.

மிக மோசமான சோகத்தில் அழுகிற முகங்களை எடுத்த புகைப்படங்களில் இதை நாம் பார்க்க முடியும். அதாவது உச்சமான துயரத்தில் அது சிரிப்பின் வடிவம்கொள்கிற விதத்தை. மருதுவினுடையது மட்டுமல்ல, எல்லாக் கலைஞனின் கண்களும் இந்த வாழ்வின் சோகத்தை அந்தவிதமாகவே எதிர்கொள்கின்றன. மிக ஆழமான வரலாற்றுத் துயரங்களை அறிந்துகொண்டு இருப்பதால்தான், பிசிறும் கோணல்களும் இல்லாத நேர்த்தியான முகங்களை வரைவதில் அவர்களுக்கு நம்பிக்கை குறைந்து போகின்றன. சதா வடிவங்களை மீறுகிற, ஒரு கேலிச்சித்திரத்தை நெருங்குகிறதாகவே உள்ள, எந்த இடத்திலும் நிலையற்று நகரும் வீச்சுக்-களுடன் மருதுவைப் போன்றவர்களுடைய கோட்-டுப்படங்கள் அமைவது அதனால்தான் என்று நாம் புரிந்து-கொள்ள வேண்டும்.

மருதுவைவிட மருதுவின் ஓவியங்கள் அறியப்பட்டவை. சந்திரபாபுவையும் ஸ்ரீதரையும் சிவாஜிகணேசனையும் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கெனவே பிரபலங்கள். பிரபலங்களைப்பற்றிச் சொல்லும்போது கேட்கிற ஒவ்வொருவரிடமும் ஏற்கெனவே அந்த முகங்கள் இருக்கும். சில அசைவுகள் இருக்கும். ஒரு பாடலின் ஒலி அளவைக் கூட்டுவதோ, குறைப்பதோ போல, ஏற்கெனவே வரையப்பட்டுப் இருக்கிற சித்திரங்களை வேறு கோணங்களில் காட்டிவிட முடியும். சற்று எளிதும்கூட.

நாம் ஒரு முறைகூடப் பார்த்திராத இனிமேலும் ஒருவேளை சந்திக்கவே போகாத மனிதர்களையும், அவர்கள் நம்முடைய செவ்வாய்க்கிழமைகளில் அல்லது வியாழக்கிழமைகளில் வந்து பொருந்துவதைப் பற்றியும் சொல்வது கஷ்டம். ஆனால் சொல்பவர்கள் இருக்கிறார்கள். தங்கராஜ் அப்படித்தான்.

தினசரி நாற்பது கிலோ மீட்டர் பஸ்ஸில் அலுவலகம் போய்விட்டு வருபவர். பத்து வருஷங்களுக்கும் மேலாக தினமும் அதே பிரயாணம். கிட்டத்தட்ட அதே பஸ், கண்டக்டர், டிரைவர். கொஞ்சம் அதே பயணிகள். ஆனால் சலித்துக்கொண்டதே இல்லை. சலிப்பு வரவர, உடனுக்குடன் அதை சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்கிற வித்தை அவருக்குத் தெரிந்திருக்கிறது. உண்மையி-லேயே அது வித்தைதான். மூன்று பந்துகளை மாறிமாறி மேலே வீசிச் சுழற்றுகிற வித்தை. எந்த ஒரு பந்தும் கையில் தங்காது. ஆனால், எல்லாப் பந்துகளும் கையில் வந்து போய்க்கொண்டு இருக்கும். வித்தைக்காரரிடம் கேட்டால், ‘‘எல்லாம் ப்ராக்டீஸ்தான்’’ என்று சிரிப்பார்.

தங்கராஜிடம் அந்த வித்தைச் சிரிப்பு உண்டு. எல்லாவற்றையும் அவரால் அப்படி மேலே போட்டுச் சுழற்றிக்கொண்டே நம்முடன் சிரித்துச் சிரித்துப் பேச முடியும். ஒரு தினத்தின் எந்தப் பகுதியையும் காட்சிகளாக அரங்கேற்றிவிட முடிபவராக அவர் இருப்பதால், அவருக்கு எதிரே முன்வரிசை நாற்காலிகள் ஒன்றில் இடம் பிடிக்க, ஒவ்வொரு முறையும் நான் முயன்றுகொண்டே இருப்பேன்.

தினம் தினம் வெள்ளை ரவிக்கையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் போட்டுக்கொண்டு வருகிற ஒரு கணவன் மனைவியிடம், அவர்கள் ஏன் அப்படி வெள்ளை நிற உடைகளை மட்டுமே அணிகிறார்கள் என்று கேட்டது. இன்னொரு நண்பரின் உயர் அலுவலகத்துக்குப் போயிருந்த சமயம், அங்குள்ள அதிகாரியின் அறையில் சந்திப்புக்காகக் காத்திருந்தபோது, குறிப்பாக தங்கராஜ் வார்த்தையில் சொன்னால், ‘‘ஒவ்வொருத்தரும் அடிக்கிற ஜால்ரா’’. ஒரு ரயில் பயணத்தை ரத்துசெய்யப் போகும்போது, வரிசைக்கிரமமாக நாற்காலியில் உட்கார்ந்து எழுந்து, உட்கார்ந்து நகர்ந்த க்யூ அனுபவம். நாகமலைப் புதுக்கோட்டையில் ஒரு நண்பர் வீட்டு மாடியில் தங்கியிருந்த இரவு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்த கீழ் வீட்டுக் குழந்தையின் அழுகையும் அதை விடாமல் சமாதானப்படுத்திக்-கொண்டே இருந்த முகம் தெரியாத அம்மாவின் குரலும் என தங்கராஜ் சொல்லிக்கொண்டே போவார். எல்லாம் சொல்லச் சொல்ல அப்படியே நமக்கு முன் நிகழ்ந்துகொண்டு இருக்கும். ஒரு பொம்மலாட்டக்காரனின் கைகள் போல அவரிடம் சூத்திரக் கயிறுகள் வந்து சேர்ந்துவிடும். எந்த வயதிலிருந்து எந்த வயதுக்கும் தங்கராஜ் கூடவே நாமும் மாறிமாறிப் போய்க்கொண்டு இருப்போம்.

தாண்டிப் போகும்போது ஒரு வீட்டு அடையாளம் சொல்லி, அந்த வீட்டின் தண்ணீர்த் தொட்டியின் மீது நின்று அகவிக்கொண்டு இருந்த மயிலைப்பற்றி சொல்வார். நம் தோகைகள் அந்த வீட்டு ஜன்னலின் வெளிப்-பக்க குளிர்சாதனச் சட்டம் வரை தொங்கும். ஒரு நாகதாளி பூத்திருப்பதை பொன்னாக்குடி தாண்டினபோது பார்த்ததாக விவரிப்பார். மஞ்சள் பூவாகியிருக்கிற நம்மை, உடைமரத்துப் பச்சோந்தி எக்கி எக்கிப் பார்க்க ஆரம்பிக்கும்.

தங்கராஜ் வந்த சமயம்தான், கூரியரில் பரிசாக வந்து சேர்ந்திருந்த குழந்தை உடையைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். அதைத் தங்கராஜ் முகர்ந்து பார்த்தார். தன்னுடைய மடியில் போட்டுக்கொண்டார்.

இதற்கிடையில் இப்போதைய உடைகள் அழகாக இருந்தாலும், அதன் உத்தேச காரியத்தை நிறைவேற்றுவதில்லை என்ற திசையில் பேச்சு போயிற்று. உள்ளாடைகள் தெரிகிறபடியாகவே நிறையக் குழந்தைகள் இப்போது உட்கார்கின்றன என்பதும் எல்லோரின் கவலையாக இருந்தது.

மடியில் இருந்த அந்த உடையை நீவிவிட்டுக்கொண்டே தங்கராஜ் தன்னுடைய மகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார். அது சின்ன வயதில் இருந்தே எவ்வளவு கூச்சப்படும் என்பதையும் குட்டைப் பாவாடைகள், குட்டை கவுன்களை அணிகையில் அது எப்படி முன்னால் இழுத்து இழுத்துவிட்டுக்கொள்ளும் என்பதையும் சொல்லும்போது, அவர் முகத்தை எங்களால் சேர்ந்தாற்போல பார்க்க முடியவில்லை.

‘‘இப்படி இழுத்து இழுத்து-விட்டு எத்தனை கவுன் முன் பக்கத்தில கிழிஞ்சு போயி-ருக்கும் தெரியுமா? ஒண்ணு கிழிஞ்சிருக்கும் அல்லது தையல் விட்டிருக்கும்’’  இதை தங்கராஜ் சொல்லும்போது, அவர் கைகளுக்குள் நுனி கிழிந்த கத்தரிப்பூ கலர் கவுன் ஒன்று இருப்பது தெரிந்தது. ஒற்றையாகப் பிரிந்து தொங்கின நூல், மோதிரத்துக்குள் சிக்கி, தங்கராஜ் விரலை உதறிக்கொள்-கிறார். நான் அப்படியெல்லாம் நினைத்துக்-கொள்கிறேன்.

என்னுடைய இருக்கையை மாற்றி அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.

தங்கராஜ் பல வருடங்களுக்கு முன்னால் உட்கார்ந்து பேசத் தொடங்கி-னார். ‘‘அதுக்கு எட்டு, ஒன்பது வயசு இருக்கும். முட்டுக்கு மேலே வேனல்கட்டி மாதிரி ஒண்ணு வந்தது. சலம் வெச்சுப் பழுத்துப்போய் பிள்ளை ரொம்பச் சங்கடப்பட்டுச்சு. ‘அப்பாதானே காட்டுடி, பார்க்கட்டும்’னேன். மாட்டவே மாட்டேனுட்டா. கடைசி வரைக்கும் காட்டவே இல்லையே.’’

கடைசி வரைக்கும் என்றபோது எங்களால் தாங்க முடியவில்லை. தங்கராஜ் தன் பெண்ணை இழந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன!

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s