திரும்பி வராத தினத்தில்….

வண்ணதாசன்

பல தினங்களுக்கு முன், என் நண்பருடைய வீட்டில் தங்கி இருந்தேன். வாரக்கணக்கில் எல்லாம் அல்ல; இரண்டு இரவுகள், ஒரு பகல் என்று வைத்துக்கொள்ளலாம். தினங்களின் எண்ணிக்கை அல்ல… அவற்றின் அடர்த்திதானே முக்கியம்!

வாதா மரத்தைப் போல் இலைகளையே பூவாக ஆயுள் முழுவதும் காட்டியபடி எத்தனையோ மரங்கள் நிற்க, இந்தச் செம்பருத்தி மட்டும் தினசரி நான்கு பூக்களாவது பூத்துவிடுகிறது இல்லையா..! அப்படி இரண்டு செடி கொடி இருந்தால் வாசல் நிரம்பிவிடும். இது போல ஒரு பகல், இரண்டு இரவுகள் வரும்போது வருஷமே நிரம்பிவிடுகிறது.

வருஷத்தின் கடைசி தினத்துக்கு முந்திய இரவில்தான், அந்த நண்பர் வீட்டுக்குப் போகிறோம். நண்பர் எங்களை எதிர்பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார். நண்பரின் மனைவி, பெண் குழந்தை, நான் மூவரும் அமர்ந்திருக்க, அவர்களின் குடும்ப நண்பர் காரை ஓட்டுகிறார்.

இரவு நகரம், ஹாலோஜன் மஞ்சளில் வேறொரு அழகை அடைந்துவிட்டிருந்தது. ஒரு நாடகத்தின் வெவ்வேறு காட்சிகளுக்காக ஆடைகளை மாற்றிக்கொண்டே வந்த ஒரு நடிகை, ஒப்பனை முழுவதையும் கலைத்து, வீட்டில் ஒரு குளியலுக்குப் பிந்திய, அவருக்குப் பிடித்த தளர்வான உடை ஒன்றை அணிந்துகொண்டு, தனிமை நிரம்பிய கட்டிலில் படுத்து, ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ கவிதைகளில் ஆழ்ந்திருப்பது போல, பகலின் அத்தனை பரபரப்பும் அடங்கி, சாலைகளும் பாலங்களும் மனிதர்கள் அற்ற தங்களின் முகங்களைப் புழுதி படிந்த நிசியின் நிலைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்கின்றன.

எந்த இடத்தை நாம் தாண்டுகிறோம், இது எந்தப் பாலம், குணாளம்மன் கோயில் எது, குபேர நகர் வந்துவிட்டதா என்று எந்தக் கேள்விகளும் என்னிடம் இல்லை. எந்தக் கேள்விக்கும் விடை தெரியாத ஒரு பையன், தேர்வுத் தாளில் பூக்களின் படத்தைக் கிறுக்கிக்கொண்டு இருப்பதைப் போல இருந்தது மனம். ஆனால், நண்பரின் பெண், ஒரு நேர்முக வர்ணனை போல… நாங்கள் கடந்து வரும் இடங்களை செல்போனில் அவ்வப்போது தன் அப்பாவுக்குத் தெரிவித்துக்கொண்டு இருந்தது.

வழக்கமாகக் குறிப்பிட்ட ஒரு நேரத்தில், விளக்குகள் அணைக்கப்படுகிற வீடு, இது போன்ற அகால விருந்தினரை எதிர்பார்த்து எல்லா விளக்குகளையும் எரியவிட்டுக் காத்திருக்குமே, அப்படியே இருந்தது. நண்பர் வாசலிலேயே இருந்தார். எங்களைக் காரில் அழைத்துக்கொண்டு வந்த நண்பர் புறப்படுகிறார். அவர் அடையாறு வரை போக வேண்டும். ஒரு மணி தாண்டிவிடும். அவர் புன்னகைத்து, என்னிடம் கைகுலுக்குகிறார். விடைபெறுவதாகவும், மீண்டும் சந்திப்பதாகவும் சொல்கிறார்.

நகரம் அப்படியன்றும் சபிக்கப்பட்டதல்ல என்று தோன்றுகிறது. இன்னும் இங்கே நடமாடுகிற கீரிப்பிள்ளைகள் போல, அதிக எண்ணிக்கையில் மாறி மாறிக் கேட்கிற குயில் சத்தத்தைப் போல, மனிதர்களும் இன்னும் இருக்கிறார்கள் என்று பட்டது. செருப்புகளைக் கழற்றும்போது, இந்த நகரத்தின் மீதான சில கோபங்களையும் கழற்றிவிடலாம், முடிந்தால்!

அவருடைய காரின் பின் விளக்குகளின் சிவப்பு தூரத்தில் மினுங்கியது. ரயில்களின் கடைசிப் பெட்டியினுடைய அழகு, எப்போதும் ரயிலை விடவும் அழகு! அது போலத்தான், இந்தச் சிவப்பு விளக்கும்.

வீட்டில் நுழைவதற்கு முன்பே, நண்பரின் பெண் குழந்தைக்கு ஒரு ஞாபகம் வந்துவிட்டிருந்தது. ‘பாட்டி மாத்திரை சாப்பிட்டாளோ என்னவோ?’ என்று மாடிக்கு ஓடுகிறது. வழக்கமாக அதுதான் தன் கையால் தூக்க மாத்திரை கொடுக்குமாம். என்னிடம் வந்து மாத்திரையின் பெயர், அளவு எல்லாவற்றையும் சொல்லியது. என்னுடன் அதற்கு உடனடியாக உண்டாகியிருந்த சிநேகிதம் எனக்கு முக்கியமானது. நான் அதன் கைகளைப் பற்றிக்கொண்டும் உச்சியை வருடிக்கொண்டும் இருக்க… அது பேசியது.

உணவு தயாராகிற வாசனைக்கு இடையில், கணினிக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நண்பரின் பையனுடன் இருந்தேன். தரமான உலகத் திரைப்படங்களில், மேற்கத்திய இசையில், வீடியோ விளையாட்டுக்களில் என்று பல திசைகளில் அவனுக்கு இருந்த ஆர்வம் சாதாரணமானது அல்ல. இந்த நகரத்தின் பெரும்பான்மை 20 வயதினர் இப்படித்தான் இருப்பார்கள் என்று நம்ப விரும்பினேன்.

”நான் பாடல்களை அல்ல, இசையைக் கேட்கிறேன்” என்று பேச்சுக்கு இடையில் அவன் சொன்னதைக் கேட்க, சந்தோஷமாக இருந்தது. ‘புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்று அவன் விசிலாக இசைத்த பொழுதில், சந்திரபாபு அந்த அறையில் ஆடி நகர்ந்துகொண்டு இருந்தார்.

சமையல் அறையில் வேலைக்கு நின்ற பெண்ணையும் அறிமுகம் செய்துவைத்தார்கள். 19, 20 வயதுப் பெண். முந்திரித் தோப்புகளுக்கும் மல்லாக்கொட்டைகளுக்கும் மத்தியிலிருந்து வந்தவள். கவிதைகள் எழுதுகிறாளாம். காதல் கவிதைகளாம். ”நாளை வாசித்துப் பாருங்கள்” என்று நண்பர் சொன்னதும், அதற்கு வெட்கம்!

முன் அறையில் படுத்துக்கொள்வதாகவே சொன்னேன். தரையில் விரித்துப் படுப்பதில் எனக்கு விருப்பம்தான். தரையின் பாடல்களைக் கேட்டபடியே தூங்குவதை, கட்டில்கள் அப்புறப்படுத்திவிட்டன. நண்பர் தனது படுக்கை அறையில் படுத்துக்கொள்ளச் சொன்னார். மேலாளர்கள் இல்லாதபோதும் நுழைவதற்குத் தயக்கம் தருகிற அலுவலக அறைகளைப் போலத்தான் அடுத்தவர்களின் படுக்கை அறையும்! எனினும், நண்பரின் வற்புறுத்தலை மறுக்க முடியவில்லை.

காலையில் எழுந்திருக்கும்போது, கட்டிலின் வலது ஓரத்தில் நண்பர் சுருண்டு படுத்திருந்தார். கட்டிலின் கால்மாட்டுக்கும் சுவருக்குமான இடைவெளியில் அவருடைய பெண் குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. ஒவ்வொருவிதமாக ஒவ்வொருவர் நடப்பது போல, ஒவ்வொருவிதமாக மனிதர்கள் தூங்கவும் செய்கிறார்கள்.

பல் துலக்கியாயிற்று. எல்லா நியமங்களும் முடிந்திருந்தன. வீட்டில் என்னைத் தவிர, யாரும் எழுந்திருக்கவில்லை. நகரத்தில் தினங்கள் தாமதமாகத்தான் துவங்கும் என்பதை வெயில் அறிந்திருந்தது. உலராத வெளிச்சம் பரவிய, பனியில் நனைந்த தெரு ரொம்ப அழகாக இருந்திருக்கும்.

வெளியே போக முடியவில்லை. எங்கே சாவி இருக்குமோ? ஊரில் எங்கள் வீட்டுச் சாவிகளை வைக்கிற இடம் ஞாபகம் வந்தது. இரும்புக் கதவைப் பூட்டுகிற சாவியின் எண்ணும், தலைவாசல் அழிக்கதவைப் பூட்டுகிற சாவியின் எண்ணும் மனப்பாடமாக நினைவுக்கு வந்தன. ஒரு பித்தளைச் சாவியின் எண்களுடன் ஒரு நாளைத் திறப்பது சுவாரஸ்யமாக இருந்தது. காபி வேண்டும். தினசரித் தாளை உடனே படிக்காவிட்டால், முந்தின தின உலகத்தின் மீது விழுந்திருந்த வெயிலையும் நிழலையும் இனி அறியவே முடியாது போகும் என்று ஒரு பழக்கத்தின் பதற்றம் உண்டாயிற்று.

இப்படியான ஒரு பொழுதில்தான், படியில் அந்தப் பாட்டி இறங்கி வந்தார். நண்பரின் மனைவிக்குப் பாட்டி. அம்மாவின் அம்மா. மிக இயல்பாக அந்தத் தொண்ணூறு வயது உருவம், எந்தப் பின்னணி இசையுமற்ற திரைப்படக் காட்சி போல, படிகளிலிருந்து இந்த அறையின் தளத்துக்கு வருவதைக் காண வித்தியாசமாக இருந்தது. சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’க் கிழவிதான் அவர் என்றும், நண்பரின் பெண்தான் துர்கா என்றும் தோன்றியது.

எனக்கு வலப்புறம் இருந்த இரண்டு நாற்காலிகளில், இரண்டாவது நாற்காலியில் வந்து அந்தப் பாட்டி உட்கார்ந்தது. அதுதான் அது வழக்கமாக உட்கார்கிற ஒன்றாக இருக்க வேண்டும். மழிக்கப்பட்டு வளர்ந்திருந்த சிகையில், அதன் மொத்தத் தொண்ணூறு வயதும் நரைத்திருந்தது. எதையோ பேசிக்கொண்டும் வாயை மெல்லுவது போல அசை போட்டுக்கொண்டும் இருந்தது இந்த வாழ்வைத்தானாக இருக்கும். பல்லற்று மக்குநாடி நீண்டும், மூக்கு நேர்த்தியாயும், கன்னத்தில் குறைந்த சுருக்கங்களுடனும் ஒரு பேரழகுடன் உள்ள முகம்.

பார்வையில் பழுதில்லை. ஆனால், நான் இங்கே உட்கார்ந்திருப்பதை அது அறியவில்லை. என்னை மட்டுமல்ல, தன்னையே அது பார்த்துக்கொள்ளாமல்தான் அமர்ந்திருந்தது, ஒரு பிக்கு அல்லது பிக்குணி போல! நமக்குத்தான் இந்த பால்பேதம் எல்லாம். பாட்டி எல்லா பேதங்களையும் தாண்டி, அப்பாலுக்கு அப்பால் போயிருந்தது.

வேலை பார்க்கிற பெண் மாடியில்தான் தூங்கும் போலும்! இறங்கி வந்துகொண்டே என்னைப் பார்த்தது. சிரிக்கக் கூடாது என்று தோன்றிவிட்டதை என்ன பண்ண முடியும்!

எனக்கும் எதிரே இருக்கிற பாட்டிக்கும் காபியைக் கொண்டுவைக்கும்போதும் சிரிப்பை விழுங்கின முகம்தான். டபராவிலிருந்தோ டம்ளரில் இருந்தோ துளியும் சிந்திவிடாமல் பாட்டி அதை அருந்தியது. இரண்டு பாத்திரங்களையும் அலம்புவதற்கு எடுத்துச் சென்றது. பறந்து கீழே கிடந்த தாளை எடுத்து, மேஜையில் வைத்தது. புத்தகங்களை மேஜையில் அடுக்கியது.

நான் ஒருமுறை ‘நூற்றாண்டுத் தனிமை’ என்று சொல்லிக்கொண்டேன். சட்டென்று வாழ்வில் இதுவரை நான் அறிந்த எல்லாத் துக்கமும் இந்த அதிகாலையில் குவிக்கப்பட்டு விட்டதாகத் தோன்றியது. இரண்டு தினங்களுக்கு முந்திய பெனாசிரின் மரணமும் செய்திக் குறிப்புடன்வெளி யாகியிருந்த மிகப் பெரிய புகைப் படமும் இந்த அறையின் சுவர் முழு தும் ஒட்டப்பட்டுஇருப்பது போல இருந்தது. கதவைத் திறப்பது மாதிரி, மாடியிலிருந்து ‘தனம் தரும் கல்வி தரும்’ என்று அபிராமி அந்தாதி பாடுகிற குரல் பிசிரற்ற உச்சரிப்புடன் கேட்டது. சூரியனின் முதல் கிரணங் களுக்கு முன் படைக்கப்படுவது போலத் தொடர்ந்து வரிகள் அறை யிலிருந்த மீன் தொட்டியில் தண்ணீராக நிரம்பின. அப்புறம், மீன்களாக நீந்தத் துவங்கின. சலனமற்று என்னால் அங் கேயே அமர்ந்திருக்க முடியவில்லை.

மீன் தொட்டிக்கு அருகில் இருந்த கழுத்தளவு புத்தர் சிலை, வெள்ளைக் களிமண் மீரா சிலை, கிருஷ்ணன் சிலை எல்லாவற்றிலும் அந்த பாட்டியின் சாயல் தெரிந்தது.

‘யார் பாடுகிறார்கள்?’ என்று வேலை பார்க்கிற பெண்ணிடம் கேட்டேன். ‘இந்த அம்மாவோட பொண்ணு’ என்று தூரத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியைக் காட்டியது. பாட்டி ஒரு புகைப்படம் எடுக்க அமர்ந்திருப்பது போல, நாற்காலியின் கைப்பிடிகள் இரண்டையும் பற்றிக்கொண்டு அசையாமல் இருந்தது.

நண்பரின் பெண், நண்பரின் மனைவி, அபிராமி அந்தாதி பாடுகிற அவருடைய அம்மா, அம்மாவின் அம்மா ஆகிய இந்தப் பாட்டி, காதல் கவிதைகள் எழுதுகிற, இந்த நிமிடம் வரை சிரிக்கத் துவங்காத இந்தக் கடலூர்ப் பக்கத்துப் பெண் எல்லோரையும் வரிசையாக நினைத்துப் பார்த்தேன்.

ஏவாள் அவளின் எல்லாப் பருவங்களுடனும் இந்த வீட்டுக்குள் நடமாடுவது போல இருந்தது. அபிராமி என்பது ஏவாளின் எத்தனாவது பெயர்?

நேராக எழுந்து போய், அந்தப் பாட்டியின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன்.

பாதங்கள் இரண்டும் வெதுவெதுப்பாக இருந்தன.

ஒரு வருடத்தின் கடைசி தினம் இவ்வளவு வெதுவெதுப்பாகத் துவங்கி இருந்ததில், எனக்கு மகிழ்ச்சிதான்!

 

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to திரும்பி வராத தினத்தில்….

  1. ramji_yahoo சொல்கிறார்:

    பகிர்விற்கு மிகுந்த நன்றிகள்

  2. Pingback: வண்ணதாசனின் தூரிகை – மனவெளிகளின் மாற்றுக் குரல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s