கிரஹப் பிரவேசம்

கிரஹப் பிரவேசம்
வண்ணதாசன்
இப்போது இருக்கிற வீடு பெரியதோ,சிறியதோ…எப்படி இருந்தாலும் நாம் பால்ய காலத்தில் வாழ்ந்த ஒரு வீட்டின் ஞாபகத்துக்குள் நடமாடிக்கொண்டேதான் இருக்கிறோம். இந்த வீட்டின் ஏதோ ஓர் அறை, அறைகூட அல்ல; அறையின் ஒரு மூலை, எங்களுடைய 21.இ சுடலைமாடன் கோயில் தெரு  வீட்டை ஞாபகப்படுத்திவிடாதா என்று தான் தோன்றுகிறது. இந்த வீட்டு அலமாரியைத் திறக்கும்போது, அந்த அலமாரியின் ஏதோ ஒரு தட்டில் ஆக்கர் வாங்கின பம்பரமும், பாங்கா கோலிக்காய்களும் இருக்காதா என மனம் தன் விநோதக் கதவுகளின் பின் எட்டிப்பார்கிறது. சிவசைலம் தாத்தா கொண்டுவருகிற தாழம்பூக்களின் வாசனையை, சிதம்பரம் நகர் 19-ம் நம்பர் வீட்டில் சுவாசித்துவிடுகிற தவிப்பு வரத்தான் செய்கிறது. ஓர் அடை மழை பெய்த தினத்தில் எங்களுடைய மகள் பிறந்த நேரத்தை, இங்கு ஒரு மழை நாளில் நினைக்காமல் இருக்க முடியாது.
இது எங்கள் மகளுடைய வீடா? ஆமாம். எங்களுடைய வீடா? ஆமாம். ஒரு வீடு, அதன் பத்திரப்பதிவுகளை மீறி, யார் வந்தாலும் அவர்களுடைய வீடு என்கிற உணர்வை உண்டாக்க வேண்டும். வீட்டுக்கு வருகிறவர்களை ‘வாங்க வாங்க’ என்று நாம் அழைப்பதைப்போல, வீடும் அதன் குரலில் வரவேற்கும். இந்த வீட்டுக்கு அந்தப் பிரியமான குரல் இருப்பதை எல்லோருமே கேட்பதால்தான் வந்து உட்காருவதற்கு முன்பே, ‘நல்லா இருக்கு’ என்கிறார்கள். அது நம்மிடம் சொல்வதல்ல; வீட்டிடம் சொல்வது.
இந்தப் படிகளை, முக்கியமாக அதன் நிறத்தை, யாருக்கும் பிடிக்காமல் போகாது. இந்த வீட்டில் வேறெங்கும் நீங்கள் அமர்ந்து எடுக்கிற புகைப்படத்தைவிட, இந்தப் படிகளின் மீது நீங்கள் அமர்ந்திருப்பதாக எடுக்கப்படுகிற புகைப்படம் நிச்சயம் ஒரு கூடுதல் அழகோடு இருக்கும். எங்கள் பேத்தி அர்ச்சனாவுக்கு இந்தப் படிகள் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படிகளை மட்டும் அவளுக்கு கொடுத்துவிட வேண்டுமாம். அவள் அதை அவர்களுடைய பெங்களூரு வீட்டுக்கு எடுத்து போய்விடுவாளாம். தென்காசி கோமா வீட்டுக்கு போயிருக்கையில், தற்செயலாக அதே வண்ணத்தில் இரண்டு சதுரத்தொட்டிகள் கிடைத்தன. அடர்த்தியான, தொட்டியை நிரப்பி அசைகிற அந்த ‘மணி ப்ளான்ட்’ சேர்க்கிற கச்சிதமான அழகு அந்தப் படிகளுக்கு.
என்னதான் அறைகள் இருந்தாலும், அவை நிரம்பி வழிவது சுவர்களால் அல்ல; மனிதர்களால்தான். நேற்றிரவு, நீங்களும் நானும் இருக்கிற முன்னறையில் ஜோடி டி.குரூஸூம் அவருடைய மனைவியும் இருந்தார்கள். அவர்கள் இருந்துவிட்டு போன அத்தனை நேரமும் ஒரு நெருக்கமான உறவின் அலையடிப்பு இருந்துகொண்டே இருந்தது. கீதா பிரபாகரனும், ஜோதியம்மாவும், சங்கரியம்மாவும் இருந்தால், மற்ற நேரங்களில் பாத்திரங்கள் உருளல் மட்டுமே கேட்கிற அடுக்களையில் அடுக்கடுக்காகச் சிரிப்புப் பொங்கி வழியும். இந்த அறையின் இரும்புக் கட்டிலில் அப்பா படுத்திருக்கிற தினங்களில், ஆறு வருடங்களே ஆன இந்த வீட்டுக்கு 86 வயதின் முதிர்ச்சி வந்துவிட்டிருக்கும். யு டியூப்பில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட சீனத்துப் புல்லாங்குழல் ஒலிக்கும் போது இந்த வீட்டின் தளங்களில் சகுரா மலர்கள் உதிர்ந்து கிடக்க, ஜன்னலுக்கு வெளியே மூங்கில் கணுக்கள் இலையுடன் அசையும்.
இந்த வீட்டின் மிக அழகான இடம், இந்தத் தாழ்வாரத்தின் கருங்கல் திண்ணைதான். அதிகம் போனால், இரண்டு பேர் உட்காரலாம். ஆனால், ஆயிரம் பேர் உட்கார்ந்தாலும் இடம் கொடுக்கும் என்று தான் தோன்றும். தெரு முனையில் வருகிற கோயில் யானை மாதிரி, மேலரத வீதி கடைசியில் லாலா சத்திர முக்கு திரும்பி, வடக்கு ரதவீதி ஆயத்த அணிகல அங்காடிப் பக்கம் வருகிற ஆனித் திருவிழாத் தேர் மாதிரி, வீட்டையும் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். தூரத்தில் இருந்து பார்க்க அழகாக இருக்கிற வீடு, பக்கத்தில் இருந்து பார்க்கவும் அழகாக இருக்கும். சில சமயம் கல்வெட்டாங் குழிப் பக்கம் வருகிற போது அல்லது சாமி இல்லம் பக்கம் வருகிற போது எங்கள் வீட்டை ஆசையாகப் பார்ப்பேன்.
வீட்டின் முன்னறையில், தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பின்புறம் ஒரு வண்ண ஓவியம் இடம் பெற வேண்டும் என்ற வகையில் தான் இந்த இடத்தை வடிவமைத்தோம். மருதுவின் ஓவியமோ, மல்லிகா அல்லது பொன்.வள்ளிநாயகத்தின் சித்திரமோ, அல்லது இனிமேல் எப்போதாவது நானே வரையப் போகிற ஒரு தைல வண்ண ஓவியமோ அந்த இடத்தில் இருக்க வேண்டும் என விரும்பிய அந்த இடம், இந்த ஆறு வருடங்களில் இன்னும் காலியாத்தான் இருக்கிறது. நீங்கள் வரைந்து தருகிறீர்களா அந்த வண்ண ஓவியத்தை?   
மொட்டை மாடியில் படுத்திருங்கள். உங்கள் மீது நட்சத்திரங்கள் உதிரும். நீங்கள் அதை வேப்பம் பூக்கள் என்று நினைத்துக் கொள்வீர்கள். வேப்ப மரமோ தன் கீழ் நட்சத்திரங்கள் உதிர்ந்து கிடப்பதாக நினைத்துக்கொள்ளும். வேப்பம் பூ வாசனை மாதிரி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வாசனை உண்டு தெரியுமா?  
 (இந்தக் கட்டுரை ஆனந்த விகடனில் கிரஹப்பிரவேசம் என்ற தொடர் போட்ட பொழுது 12.5.10 வார இதழில் வண்ணதாசனின் இக்கட்டுரை வந்தது).
 ((சித்திரவீதிக்காரன் தமிழுக்கு செய்து வரும் பெருந்தொண்டில் சிறுபணி கீழ் உள்ள வண்ணதாசனின் படைப்பை  தட்டச்சு செய்து உதவியது. நன்றி ))   
Advertisement

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கிரஹப் பிரவேசம்

 1. ramji_yahoo சொல்கிறார்:

  மற்ற நேரங்களில் பாத்திரங்கள் உருளல் மட்டுமே கேட்கிற அடுக்களையில் அடுக்கடுக்காகச் சிரிப்புப் பொங்கி வழியும்.

  மேலரத வீதி கடைசியில் லாலா சத்திர முக்கு திரும்பி, வடக்கு ரதவீதி ஆயத்த அணிகல அங்காடிப் பக்கம் வருகிற ஆனித் திருவிழாத் தேர் மாதிரி,

  அருமை

  நெல்லை, மதுரை, மடிப்பாக்கம் மண்டலங்கள் தவிர வேறு களத்தில் வண்ணதாசன் அவர்கள் எழுதிய படைப்புக்களை வெளியிட வேண்டுகிறேன்.

 2. “இந்த வீட்டின் மிக அழகான இடம், இந்தத் தாழ்வாரத்தின் கருங்கல் திண்ணைதான்” – வண்ணதாசன். அன்று கூரை வீடு முதல் காரை வீடு வரை எல்லா வீடுகளிலும் திண்ணையும் தாழ்வாரமும் இருந்தது. திண்ணையில் அன்பை மனிதர்கள் பரிமாற , தாழ்வாரங்களில் சிட்டுக்குருவிகள் குடியிருந்தன. ஆனால், இன்று? சதுரமும் செவ்வகமுமாய் வீடுகள் கட்டி இயந்திரமாய் குடியிருந்து கொண்டிருக்கிறோம்.

 3. பாலா,சிங்கப்பூர் சொல்கிறார்:

  ஓவியர்கள் மருது,மணியம் செல்வன் மற்றும் ஜீவா ஆகியோரின் ஓவியங்களை வாங்கி மாட்டவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நானும் ஓர் வீட்டை கட்டி முடித்திருக்கிறேன். வானம் தோண்டும் போது 3வயதான வேப்ப மரம் வெட்டப்படுவதை காண மன தைரியமின்றி வெளியேசென்றுவிட்டேன். வேப்ப மரம் நின்ற இடத்தை இப்போது பார்க்கும் போதெல்லாம் மனம் வெறுமையால் வேதனையில் துடிக்கிறது எனக்கு. மிக அழகான பதிவு. கண்கலங்க வைத்து விட்டீர்கள்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s