நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்

வண்ணதாசன்
இருபத்திரெண்டு வருஷம் என்ன, இருநூறு வருஷம் ஆனால் கூடச் சில பேரை மறந்துவிட முடியாது. சில விஷயங்களை மறந்து விடமுடியாது. ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு இருக்கு, இதிலே இது வேறு இடைஞ்சல்என்று கிளம்பின எரிச்சலையும் முனகல்களையும் பிளந்து வகிர்ந்து கொண்டு காவித்துணி போர்த்திய தவில், காவித்துணி உறை போட்ட நாயனம் எல்லாம் ஒவ்வொன்றாக நகர, இந்த மாதிரி நெரிசலையும் எரிச்சலையும் எவ்வளவு பார்த்தாயிற்று என்கிற மாதிரி ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் மேலே கம்பியைப்பிடித்துக்கொண்டு வரும்போதே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.
   முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்குக்காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை கேட்டுக்கேட்டு வாசிப்பில் ரொம்ப குளிர்ந்து போயிருந்த நேரம். வரவேற்பு முடிந்து, புகைப்படக்காரர் க்ரூப் போட்டோக்களுக்குக் குடும்பத்தினரைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவ்வளவு நன்றாக வாசிக்கிறவரை எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. பக்கத்தில் இருந்த பாலுவைக் கேட்டேன். ‘மாப்பிள்ளை உங்ககூடப்பேசணும்கிறாருஎன்று அவன் கையோடு கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டான். அவர் வருவதைப்பார்த்து நான் எழுந்திருந்தேன்.
   இளம் பச்சையில் ஒரு சால்வையைச் சரிபண்ணிக்கொண்டு கும்பிட்டபடி வருகிறார். வரும்போது, இப்போது பஸ்ஸில் சிரிக்கிறாரே அதே சிரிப்புதான். வெற்றிலைச்சாற்றில் கறுத்த உதடு பூத்துப்போய், ஓரத்தில் மட்டும் சிரிப்பின் மொட்டு அசைகிறது. தன்னுடைய பெயரைச் சொல்லவில்லை. அப்பா பெயரைச்சொன்னார். “நடேசக்கம்பர் பையன். பாம்பாட்டி நடேசன்னு சொன்னா பொதுவா அய்யாவைத்தெரியும்“. நான் கைப்பிடித்துக்கொண்டு “வாசிப்பு நன்றாக இருந்ததுஎன்று சொன்னேன். “செந்திலாண்டவன் கிருபைஎன்று கூப்பின கையைப்பிரித்து மேலே உயர்த்திக் காட்டினதுடன் நிறுத்திக்கொண்டார். “நல்லதுஎன்று கும்பிட்டு விடை பெற்றுக்கொண்டார். சந்தோஷப்படவில்லை. “நம்ம வீட்டில விசேஷம் வந்தால் தாக்கல் சொல்லுங்கஎன்று அச்சாரம் கேட்கவில்லை. கூடுதல் குறைவில்லாமல் பேசினதும் வந்ததும் போனதும் நன்றாக இருந்தது.
   ஒரு கை உயர்ந்து பஸ் கம்பியைப் பிடித்திருக்கிறதில் பக்கவாட்டு முகம்தான் தெரிகிறது. நெற்றி நிறைய மேலே ஏறியிருக்கிறது. முடி உதிராமலா இருக்கும் இத்தனை வருஷத்துக்கு இடையில்? பின் வழுக்கையுடன் அடர்த்தி குறைந்த சிகை தெரிகிறது. கழுத்துச்சங்கிலியும் ஜிப்பாவும் தெரிகிறது. புருவ மத்தியில் அதே குங்குமம். பார்வை பஸ்ஸிற்குள் இல்லை. ஜன்னல் வழியாக வெளியில் போயிருந்தது.
   அதென்னவோ எத்தனையோ காலமாக, நாதஸ்வரக்காரர்கள் என்றால் இங்கேதான் ஏறுகிறார்கள். வில்லுப்பாட்டு, கும்பக்குடம் என்றால் பாப்புலர் டாக்கீஸ் பக்கத்திலிருந்து நடந்துவந்து சந்திப்பிள்ளையார்முக்கு ஸ்டாப்பில்தான் ஏறுகிறார்கள். மார்க்கெட், சமாதானபுரம் என்றால் பேண்ட் வாசிக்கிறவர்கள் ஏறுகிறார்கள். முதல் முதல் யாரோ வாசிக்க ஆரம்பித்த அந்தந்த வாத்தியங்களின் சத்தம் ஓர் ஆவியைப் போல அந்த இடங்களில் அலைந்து கொண்டிருக்குமோ என்னவோ. இடிபாடுகளுக்கு இடையே கந்தல் துணிகளுடன் அலைகிற பைத்தியக்காரியைப்போல இவர்கள் எல்லோரும் ஏன் இப்படித் தம்முடைய பூர்வீகத் தெருக்களில், இடுக்குப் பிடித்த, செங்கல் மக்கு உதிர்கிற அதே திண்ணையில் இருந்து புறப்பட்டு, இப்படி அதே பஸ்ஸிற்கு வந்து ஏறுகிறார்கள். இப்படி மறுபடியும் இங்கிருந்தே, தம்முடைய தெருவில் கொளுத்துகிற வெயில் தாங்கமாட்டாமல், யார் யாருடைய வாசிப்பு எல்லாமோ மூதாதையரின் நுரையீரல் புற்றுக்களிலிருந்து ஒரு நாகம் போல ஊர்ந்து வெளிவருகிறதா என்று உற்றுப் பார்ப்பதுபோல எதையோ தேடியபடி நிற்கிறார்கள்.
 பஸ்ஸில் இருக்கிற நெரிசலில் அவள் உட்கார்ந்திருக்கிற முன்பக்கத்து சீட் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கொத்தாக வைத்திருக்கிற பூ அடையாளம், தோளில் போட்டிருக்கிற புடவை அடையாளம், காதோரம் அலைகிற முடி எதுவும் தெரியவில்லை. பக்கத்தில் இருந்திருந்தால் ‘பார்த்தாயா நம்ம கல்யாணத்துக்கு வாசித்தவர்என்று சொல்லலாம். அப்படிச் சொல்வதற்கு முன் ‘ஞாபகமிருக்கிறதாஎன்று அவரைக் கையைக் காட்டிக் கேட்கலாம். எந்தப்பெண்ணுக்கு நாதஸ்வரக்காரரின் முகம் ஞாபகம் இருக்கப்போகிறது? அதுவும் இப்படி இருபது வருடங்களுக்கு அப்பறம் கேட்டால் நிச்சயமாக இராது. முகூர்த்தப்புடவை மாதிரி, முகங்களின் ஞாபகத்தை எல்லாம் வாசனைப் பொடியும் அந்துருண்டையும் போட்டு என்னை மாதிரி அவளும் பெட்டியில் வைத்திருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்?
   இவர் ‘சிங்காரவேலனே தேவாவாசிக்கவில்லை. ‘நலந்தானாவாசிக்கவில்லை. அதெல்லாம் வாசித்திருந்தால் கொஞ்சம் ஏறிட்டாவது பார்த்திருப்பார்கள். ‘அலை பாயுதேவாசித்தார். கேட்டுக்கேட்டு எல்லோருக்கும் தெரிந்த பாட்டு, அல்லது தெரிந்தது போல தலையசைக்கிற பாட்டு. இவள் தலையை அசைத்தாளா தெரியவில்லை. இப்போதாவது கல்யாணப்பெண் தலையசைக்கலாம். பேசலாம், வரவேற்பு நேரத்தில் முகம் பார்த்து நிறையச் சிரிப்பைப் பரிமாறிக்கொள்ளலாம். தன்னுடன் படித்த சிநேகிதியை அறிமுகம் பண்ணி வைக்கலாம். வீடியோ வெளிச்சத்தில், மூக்குத்தி மினுங்க அண்ணாந்து சிரிக்கலாம். அப்போது அப்படியா? அலை பாய்ந்தாலும் பாயாவிட்டாலும் குனிந்த தலை நிமிரக்கூடாது. வியர்வையைக் கூட வேறு யாராவது ஒற்றி எடுக்க வேண்டும். தாகமாக இருந்தாலும் தண்ணீர் கேட்கக்கூடாது. அரைமடக்குப் பால் குடிக்க வேண்டும். அதைக்குடிக்கும் போது பார்த்து, யாராவது திருநீறு பூசவந்தால், அதையும் குடிக்காமல் வைத்துவிட வேண்டும். இதற்கு மத்தியில் நாதஸ்வரக்காரர் முகம் எப்படி ஞாபகம் இருக்கும்?
   நாம் நகராவிட்டாலும் நம்மையே நகர்த்திவிடுகிற மாதிரிதானே வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையே இப்படி இருக்கும்போது டவுண் பஸ் எம்மாத்திரம்! அவர், அவருடன் வந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். இனிமேல் அவர்கள் என்பக்கம் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.
   முகத்தைப் பார்த்தாலாவது ஒருதடவை சிரிக்கலாம். ‘நல்லா இருக்கீங்களா?’ என்று விசாரிக்கலாம். ‘உட்காருகிறீர்களா?’ என்று எழுந்து கொண்டே நம்முடைய இருக்கைக்கு அழைக்கலாம். ஒன்றுக்கும் இப்போது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.
   மேலே உயர்த்திக் கம்பியைப் பிடித்த கையோடு, சால்வை தொங்குகிறது. தோளில் கிடக்கிற சால்வையில் இருந்து ஓர் ஓடைபோல அவருடைய வாசிப்பு வழிந்து இறங்கி, இந்த பஸ்ஸின் இரண்டு வரிசை இருக்கைகளுக்கும் இடையில் நகர்வது போல் இருக்கிறது. நான் பார்க்காத எந்தெந்தச் சிகரங்களில் இருந்தோ பனி உருகி ஓடுகிற பரிசுத்த ஆறும் கூழாங்கல் உருட்டலுமாக அது நிற்கிற அத்தனைபேரின் கால்களையும் நனைத்து, மாசு மருவற்ற பளிங்கு உருக்கலாகப் பாய்ந்து கொண்டிருப்பதுபோல இருக்கிறது. பாதம் நனைத்த சிலிர்ப்பு உச்சிக்கு ஏறி, ஒவ்வொருத்தர் முகமும் துப்புரவு ஆனது போல இருக்கிறது. ”மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். இதிலே இது வேறு இடைஞ்சல்என்று எரிச்சல்பட்டவர் முகம் கூட நிறைந்து தளும்பிக்கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.
சற்றுக் கண்ணை மூடிவிட்டேன் போல. அசதி இல்லை. தூக்கம் இல்லை. தன் மறப்பு, நினைப்பின் கிறக்கத்தில் அவர்கள் எப்போது இறங்கினார்கள் என்று தெரியவில்லை. ரத்னா டாக்கீஸ் வரை அவர்களைப் பார்த்தேன். தாலூக்கா ஆபிஸ் ஸ்டாப்பில்கூட பஸ்ஸில் இருந்த நியாபகம். செண்ட்ரல் டாக்கீஸில் இறங்கியிருக்க முடியாது. ஸ்ரீபுரத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஒரு பெரிய கல்யாண மண்டபம் அங்கேதான் கட்டியிருப்பதாகச் சொன்னார்கள்.
   நாங்களும் இறங்க வேண்டியதுதான். அவள் முன்பக்கத்தில் இறங்க, நான் பின்பக்கத்தில் இறங்க வேண்டும். இறங்க வேண்டிய இடம் வருவதற்கு முன்பே எழுந்துவிடுகிற பழக்கம் அவளுக்கு. ஆனால் நின்றதும் கடைசியில் இறங்குவதும் அவளாகத்தான் இருக்கும். கடைசி ஆளாக இறங்குவதற்கு முதல் ஆளாக எழுந்திருக்க வேண்டியது இல்லைதான்.
ஆனாலும் அது எனக்குப் பிடித்திருந்தது. அவளின் ஏதோ ஒரு மென்மையான பகுதியின் அடையாளம் அது. ஏறுவதற்கு மோதுகிற பத்து இருபது பேரின் தலைகளுக்கு இடையில், அவள் இறங்குவதைப் பார்ப்பது காரணமற்ற ஒரு சந்தோஷத்தை எனக்கு எப்போதும் தந்திருக்கிறது. எல்லோரையும் செல்ல அனுமதித்துவிட்டுத் தான் செல்வது என்பது நல்ல விஷயம்தானே!
 கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்று கொண்டிருந்தேன். அவள் இறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணுஞ்சல் வாசிப்புக் கேட்கிற மாதிரி இருக்கிறது. கெட்டிமேளம் கேட்கிற மாதிரி இருக்கிறது. ‘கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்என்று சிவகங்கைச் சீமைப்பாட்டுப்போல ஒரு வாசிப்புக் கேட்கிறது. இவ்வளவையும் இந்த பஸ் ஸ்டாண்ட் நெரிசலுக்குள் கற்பனை செய்யும் போது சிரிப்பு வருகிறது. நான் சிரிப்பதைப் பார்த்தோ என்னவோ, அவள் என்னைவிடச்சிரித்துக் கொண்டே வருகிறாள். ரொம்ப நேரமாகச் சிரித்துச்சிரித்துக்கண்கலங்கின மாதிரி, பளபளவென்று நீரில் புரண்டு கொண்டிருந்தது பார்வை. சிலசமயம் வெறும் பார்வைகள் எவ்வளவு ஆழம் நிரம்பியதாகிவிடுகின்றன! புடவை விசிறலும், பூவின் வதங்கல் வாடையும் எட்டுகிற தூரத்தில் வந்ததும் அவள் சொன்னாள்.
   “அகிலாண்டம் அத்தானைப்பஸ்ஸில் வச்சுப் பார்த்தேன். பத்துப்பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால் சிவசைலம் கோவிலில் வைத்துப்பார்த்தது, ராஜம்மான்னு அவங்கதான் என்னைப் பார்த்துக் கூப்பிட்டாங்க…” அவள் சொல்லிக்கொண்டே போனாள். முழுப்பரீட்சை லீவுக்குப் போகும்போது ஆற்றுக்கு வண்டியடித்துக்கொண்டு போகிற அகிலாண்டத்து அத்தான்மாங்காய், நுங்கு எல்லாம் பறித்துக் கொண்டு வந்து வெட்டிக் கொடுக்கிற அகிலாண்டத்து அத்தான்தினசரி ரயிலில் பேட்டை காலேஜிற்கு வந்து படித்துவிட்டு போன அகிலாண்டத்து அத்தான்திடீரென்று யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு வடக்கே ஓடிப்போய் சிம்ஸன் பெரிய அய்யரிடம் ஆழ்வார்க்குறிச்சி பேரைச்சொல்லி வேலை வாங்கி முன்னுக்கு வந்துவிட்ட அகிலாண்டத்து அத்தான்… 
   ஏற்கெனவே முன்பு என்னிடம் சொன்னதும் சொல்லாததுமாக அவள் தொடர்ந்து கொண்டே போகும்போது சட்சட்டென்று விளக்குப் பொருத்தினது மாதிரி மாறுகிற அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன். சந்தோஷமாக இருந்தது.
   “அவசரமா இறங்கிப் போயிட்டாங்க. நீங்க அவங்களைப்பார்க்கலையேஎன்றாள்.
  எனக்குப் பார்த்துவிட்ட மாதிரி இருந்தது.
  நடேசக் கம்பர் மகன், அகிலாண்டத்து அத்தான் இப்படி யாரையாவது ஒருத்தவரைப் பார்த்தாலே, மற்றவரையும் பார்த்தது போலத்தானே!
(நன்றி: தட்டச்சு உதவி: Essex சிவா essexsiva@gmail.com )

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும் க்கு 2 பதில்கள்

  1. Pingback: மேளம்-கடிதங்கள் » ஜெயமோகன்

  2. jeyakumar72 சொல்கிறார்:

    இந்த வலைப்ப்பக்கம் குரோமில் சரியாகத் தெரிவதில்லை. எக்ஸ்புளோரரில் காப்பி செய்து படித்தேன். இந்தக் குறைய நீக்க முடிந்தால் நல்லது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s