நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா?

வண்ணதாசன்
நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா? நான் கண்டேன். சாதாரணமான கனவு அல்ல, புலிகள் நடமாடுகிற கனவு. மெத்து மெத்தென்ற மஞ்சள் முதுகும், வரிகளும், வால் சுழற்றலுமாக எங்கள் வீட்டு மாடி மீது அவை நடமாடுகின்றன. எங்கள் வீட்டில் அது வாடகைக்கு இருக்கிறதா, அல்லது அதிக வாடகை வரும் என்று கீழ்த் தளத்தை எங்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டு, அவை மாடியில் குடியிருக்கிறதா என்று தெரியவில்லை. மேலே உள்ளவர்கள் நாற்காலி நகர்த்துவது, இரும்பு பீரோ கதவைத் திறப்பது, மிக்ஸி போடுவது எல்லாம் கீழ் வீட்டுக்காரர்களுக்குக் கேட்குமே…
அதைப் போல அவற்றின் நடமாட்டம் பூராவும் எங்களுக்கும் தெரிகிறது. தொம்தொம் என்று சத்தம் கேட்கிறது. வீடு முழுவதும் மரப் பலகைகளால் கட்டப்பட்டு இருந்தால் சத்தம் கேட்கத்தானே செய்யும்!
இதில் எம்.ஜி.ஆர். படங்களில் வருகிற மாதிரி, மாடியிலிருந்து வளைவாக எக்கச்சக்கமான படிகள் வேறு எங்கள் வீட்டுக்குள் இறங்கி, பாதி இடத்தை அடைத்திருக்கின்றன. புலிகளுக்கு என்ன… அதன்போக்கில் வரும், போகும். நமக்கல்லவா பயமாக இருக்கிறது! ஆனால், வீட்டில் இருக்கிற நாய்கள் அப்படிப் பயப்பட்ட மாதிரி தெரியவில்லை. காய்கறி வாங்கிக்கொண்டு சந்துக்குள் வருகையில், எதிரே ஆட்டோ வந்தால் ஒரு மாதிரி ஒதுங்கி வழிவிடுவோமே, அப்படிப் போய்க்கொண்டு இருக்கிறோம். பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கையில், புலி வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ‘என்ன, குளிக்கப் போகிறீர்களா?’ என்று கேட்டால், பதில் சொல்லாமலா இருக்க முடியும்? வாயில் பல் துலக்குகிற பிரஷ்ஷைச் செருகியிருக்கிறோம்; கடைவாயில் நுரை வழிகிறது; தோளில் துண்டு; அப்படியே பதில் சொன்னால் புலிகள் மரியாதைக் குறைவாக நினைத்துக்கொள்ளுமெனில், என்ன செய்ய?
பொதுவாக, என்னுடைய கனவுகளில் யானைதான் வரும். அதற்குத்தான் எங்கள் வீட்டின் புறவாசல், முன்வாசல் எல்லாம் தெரியும்; ஜன்னல் வழியாகத் தும்பிக்கையை விடும். அதெல்லாம் ஏன்… கல் படிகளில் ஏறி மச்சுக்கு வந்து ‘கதவைத் திறக்கிறாயா, இல்லையா?’ என்று கேட்பது போல் நிற்கும். யானைகளுக்கும் புலிகளுக்கும் எவ்வளவு தூரத்துக்குச் சுமுகமான உறவு என்று தெரியவில்லை. அப்படியே நல்ல உறவு இருந்தாலும், அதைக் காட்டில் அல்லவா பேணிக்கொள்ள வேண்டும். இப்படி மாடி போர்ஷ னுக்கா அனுப்பிவைப் பது? சமீபத்தில் ஜிம் கார்பெட் புத்தகங்கள் எதுவும் படிக்கவில்லை. புத்தகக் காட்சியில் வாங்கி, சுடச்சுடப் படித்துக்கொண்டு இருக்கிற ‘சூடிய பூ சூடற்க’, ‘யாமம்’ எதிலும் புலிகளின் உறுமல் கேட்கவில்லை. ‘ஆதி ஆயுதம்’ தொகுப்பில் வேல் கம்பும் அரிவாளும், பெருநாழி மனிதனைத்தான் குத்தியும் வெட்டியும் சாய்க்கிறதே தவிர, இந்த மாதிரி வரிப் புலிகளை அல்ல! கொஞ்சம் பக்கத்தில் வருவது சந்திராவின் ‘பூனைகள் இல்லாத வீடு’தான். பூனையும் புலியும் வேறு வேறா? ‘புல்லும் மூங்கிலே, முதலையும் பல்லியே!’ என்று சொன்னது யார்? க.நா.சுதானே? புலியை பூனைக் குடும்பம் என்பதன் கீழ் அல்லவா வகைப்படுத்துகிறார்கள்!
குடும்பம் குடும்பமாகக் குட்டிகளுடன் படுத்திருக் கிற, நக்கிக் கொடுக்கிற, பாலூட்டுகிற புலிகளை தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், அவை எல்லாமுமே, ஒரு மானை அல்லது காட்டெருமைக் கன்றைக் கொல்கிற… வலியது, எளியதை அடித்துச் சாப்பிடுகிற சூரிய அஸ்தமனக் காட்சியுடன்தானே பெரும்பாலும் முடிகின்றன! அதைத்தான் தினசரி கண் முன்னால் தெரு விலும் ஊரிலும் பார்க்கி றோமே! என்ன, கோரைப் பல் வித்தியாசப்படும். நகத்தின் கூர்மை கூட குறைய இருக்கும். பிடரி இருக்கும்; இருக்காது. அதிகபட்சம் இரண்டு கால்கள். சில சமயங்களில் சக்கர உறுமல்களுடன்! ‘இதையே மறுபடியும் எதற்கு நடுக்கூடத்தில் பார்க்க வேண்டும்?’ என்று விலங்குகள் ராஜ்ஜியத்தை இப்போது எட்டிப் பார்க்கவே இல்லை. அப்படிப் பார்க்காததுதான் தப்போ என்னவோ! ‘என்னடே, உன்னை இந்தப் பக்கம் ஆளையே காணோம்?’ என்று நம்மைத் தேடிக்கொண்டு பார்க்க வருகிற, ‘நீ இருப்பேங்கிறது தெரியும். நான் ஒருத்தன் இருக்கேன்னு தெரிய வேண்டாமா! அயத்துப் போகக் கூடாது இல்லையா, உலகத்துக்கு?’ என்று சிரிக்கிற பிரியமான சித்தப்பா மாதிரி அவற்றுக்கும் தோன்றியிருக்குமோ என்னவோ… வீட்டுக்கு வந்து மாடியில் புழங்க ஆரம்பித்துவிட்டன.
தாராளமாகப் புழங்கிவிட்டுப் போகட்டும். அதிகபட்சமாகக் கூட்டாஞ்சோறு பொங்கிப் போடலாம். சொதி வைத்துச் சாப்பிடச் சொல்லலாம். அரிசிப் பாயசமோ, சிறு பருப்புப் பாயசமோ வைத்துக் கொடுக்கலாம். மருந்துக்குக்கூட மாமிசம் கிடையாது. அதற்கெல்லாம் பின் வீட்டுக்குதான் போக வேண்டும்.
பூனை ஆச்சி வீடு என்று எங்கள் பூர்விக வீட்டுக்குப் பின்னால் ஒரு வீடு உண்டு. ரொம்பப் பெரிய வீடு. ஒரே ஒரு ஆச்சிதான் வீட்டில் இருப்பார். அந்த ஆச்சிக்குத் துணையாக இன்னும் இரண்டு ஆச்சிகள். எல்லோரும் நெற்றி நிறையத் திருநீறு பூசியிருப்பார்கள். வீடு முழுவதும் இருபது, முப்பது பூனைகள் நடமாடும். பூனையின் பாதம் படாத, பூனை மீசை அசையாத, பூனை ரோமம் உதிர்ந்துகிடக்காத உள்ளங்கை அளவு இடம் அந்த வீட்டில் இராது. மியாவ் என்று கத்திக்கொண்டே வெயில் அந்த வீட்டின் மேல் விழும். இருட்டில் பூனைக் கண்களைப் பளபளப்பாய் பதித்துவைத்தபடி, மழைக்கால இரவு அந்த வீட்டின் ‘தார்சா’வில் மெதுவாக நுழையும். எங்கள் வீட்டு வைக்கோல் படப்பு மறைவில் போடுகிற குட்டிகளைக் கவ்விக்கொண்டு, வேப்ப மரத்து மூட்டு வழியாக ஏறி, மதில் சுவர் தாண்டித் தாய்ப் பூனை போவதை, தங்க அரளிப்பூ உதிர உதிர, கடுவன் பூனை கண் சுருக்கிப் பார்த்துக்கொண்டு இருக்கும்.
பூனை ஆச்சி இறந்த பிறகு, அந்தப் பூனைகள் எல்லாம் எங்கு சென்றிருக்குமோ! இந்தப் புலிக் கனவைப் போல, கொஞ்சம் ஞாபகமிருந்து, கொஞ்சம் ஞாபகமில்லாமல், அப்படியே கலைந்து போயிருக்கலாம்.
மனிதர்களின் வாழ்வுடனும் மரணத்துடனும் வளர்ப்பு மிருகங்களின் வாழ்வும் மரணமும் சம்பந்தப்பட்டு இருப்பது எவ்வளவு துயரமானது! ஆழ்வார்குறிச்சித் தாத்தா மறைவுக்குப் பிறகு, அவர் வளர்த்த புனுகுப் பூனையின் கதி என்ன ஆகியிருக்கும்? பெரும்பாலான மாநகர அடுக்கு வீடுகளின் சிட் அவுட் நெரிசல்களுக்குள் தொங்கிக்கொண்டு இருக்கும் கூண்டிலுள்ள காதல் பறவைகள், அதை வளர்த்து வந்த பையனோ, பெண்ணோ இடம்பெயர்ந்ததும் என்ன ஆகும்? திறந்துவிட்டால்கூட அவை பறக்குமா? இதுவரை உபயோகிக்காத சிறகுகளின் முதல் விரிப்பில் பறத்தல் நிகழ்ந்துவிடுமா? நீலச் சிலுவை அமைப்புகளின் பாதுகாப்பில் சதா உறங்குவது போலப் படுத்துக்கிடக்கிற முதுமையுற்ற நாய்களின் தொய்ந்த காதுகள், அவற்றை வளர்த்த வர்களின் காலடிச் சத்தத்துக்காக எப்போதும் திறந்தே இருக்கின்றன என்பது நாம் அறியாததா?
கனவுகள்கூட நாம் மூடி வைத்திருக்கிற பகுதிகளை, அப்படி அவ்வப்போது கிளிஞ்சல்களைப்போலத் திறந்துவைப்பதுதானோ என்னவோ! எல்லோர் பார்வையிலும் திறந்து பார்க்க முடியாததை, பார்க்க அனுமதியற்றதை, ஒரு கனவின் ரகசியப் பேழையில் வைத்துப் பார்த்துக்கொள்கிறோமோ? ஒளித்துவைத்துப் படிக்கிற புத்தகங்களை, கனவின் விரல்கள் புரட்டிக் காட்டுகின்றனவோ? எனக்கு வாசிக்கத் தெரியாத புல்லாங்குழலை, என் கனவுகள் வாசிக்குமோ?
பனிப் பாளங்களும் கூழாங் கற்களும் நிரம்பித் தளதளத்து ஓடுகிற நதி, ஒரு தடவை என் சொப்பனத்தில் பாய்ந்ததே எப்படி? கல்லூரியை விட்டு வெளியேறி முப்பது, நாற்பது ஆண்டுகள் ஆன பிறகும் திரும்பத் திரும்ப ஏன் தேர்வு எழுதுகிற ஒரு அறை இன்னும் கனவில் தென்பட்டுக்கொண்டே இருக்கிறது? ஊமத்தம்பூ நிற கருநீல ஓவியங்கள் நிரம்பிய கித்தான்கள், ஒரு கனவில் கண்காட்சி வைத்ததே எப்படி? திசைகளைத் தவற விட்டுவிடும்படி மீண்டும் மீண்டும் கனவின் கிழக்கு, மேற்குகள் அலைக்கழிக்கக் காரணம் என்ன? எப்போதோ பழைய சோவியத் சஞ்சிகை ஒன்றில் பார்த்த, தர்பூசணிப் பழம் சாப்பிடுகிற, பொன்னிறப் பின்னல்களிட்ட இளம் பெண், ரொம்ப காலத் துக்குப் பின் சதைப்பற்றுள்ள கனவின் கீற்றுக்களில் ஒன்றைக் கடித்தது எங்ஙனம்? துலாக் கிணற்றில் தண்ணீர் இறைத்து, என் அம்மாவைப் பெற்ற தாத்தா ஏன் தன்னுடம்பாகக் குளித் துக்கொண்டு நின்றார்? ஒருமுறைகூட என் விரல்களின் பரிச்சயமற்ற மிருதங்கம் ஒன்று, என் கனவில் அதுவும் பெரிய இடிபாடுகளுக்கு இடையில் கிடந்ததே… அதை வாசித்தது யார்… தேவன் மெடிக்கல்ஸ் சந்திரனா? குவியல் குவியலாக, பின்பக்கத்தின் ஆரஞ்சு ரசப்பூச்சு தெரிகிற, முகம் பார்க்கிற கண்ணாடியின் முக்கோண நொறுங்கல்கள் கிடந்த தெருவில் என்னுடன் நடந்து வந்தது யார்? நான் கல்லூரி விடுதியில் உபயோகித்த தகரப் பெட்டியில், மனித உறுப்புகள் அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்து, என்னை விசாரிப்பது போன்ற கனவைக் கண்டதற்குப் பின்இருந்த உளவியல் அடுக்கு எது? கைப்பந்து விளையாடுவது போல, நடுவில் கட்டப்பட்ட வலைக்கு இருபுறமும் நானும் சிலரும் குதித்துக்கொண்டு இருக்க… இறகு முளைத்த மிகச் சிறிய தேவதைக் குழந்தைகள் இங்குமங்கும் பறந்துகொண்டு இருந்ததற்கு என்ன அர்த்தம்? நதிகளுக்கு மேல் நான் பறந்து செல்கிற என்னுடைய விருப்பக் கனவு ஏன் சமீபத்தில் வரவேயில்லை?
வாழ்வையே விரும்பியபடி வாழ முடியாதபோது, கனவை எப்படி விரும்பிக் காண முடியும்? ‘கலையாத ஆசைக் கனவே, எந்தன் கருத்தை விட்டகலாதே’ என்றும், ‘கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே’ என்றும் பாடல்கள் இத்தனை காலத்துக்குப் பிறகும் நம் காதில் விழுவது, அவை கனவைப் பற்றிக் கனவு காண்பதால் இருக்குமோ?
நல்லவையோ, கெட்டவையோ… அற்பமோ, அற்புதமோ… அவ்வப்போது ஏதாவது கனவுகள் வந்துகொண்டு இருந்தால் நன்றாகத்தானே இருக்கின்றன! யாரோ பாடுகிற பாடல் மாதிரி, எங்கோ அசைகிற ஊஞ்சல் மாதிரி, வேப்ப மரங்கள் பூத்துக்கவிந்த வெளியூர் ஒன்றின் அடையாளமற்ற தெருவில் உள்ள வீட்டுக்குள்ளிருந்து மிகுந்த சந்தோஷத்துடன் இரண்டு, மூன்று பெண்கள் சிரிக்கிற மாதிரி, பழைய குற்றாலம் அருவித் தெறிப்பில் எட்டிப் பிடிக்கிற உயரத்தில் தெரிந்த வானவில் மாதிரி, கலைந்து கலைந்து வலசை போகிற பறவைகள் மாதிரி, பரண் மேல் கிடக்கிற கால் உடைந்த ஆடு குதிரை மாதிரி, எல்லாம் சட்சட்டென்று நம்மை நம்முடைய அன்றாடங்களில் இருந்து விலக்கிக்கொண்டு போகிற இந்தக் கனவுகளை நாம் எதற்கு ஒளித்துவைக்க வேண்டும்? ஏன் பரிமாறிக்கொள்ளக் கூடாது? வாகனப் புகை, கொசு மருந்து, கட்டணக் கழிப்பிடம், மக்கிய குப்பை, மக்காத குப்பை எல்லாமும் இருக்கிறபோது, கறுப்பும் வெளுப்புமாகக் கனவுகளும் இருந்தால் என்ன? தலைகீழ் விகிதங்களைக் கணிதமும், இடவல மாற்றங்களை நிலைக் கண்ணாடியும் ஏற்றுக்கொள்கிறபோது, முந்தின இரவின் கனவுகளை இந்த தினத்தின் காலை ஏற்றுக்கொள்ளாதா என்ன?
உங்கள் நனவின் தெருக்களில் நான் நடமாடுவது போல, என் கனவில் நீங்கள் நடமாடுகிற தாழ்வாரங்கள் எப்படி இல்லாது போகும்?
நிச்சயம் இருக்கின்றன என்பது போல எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது. அனுப்பியவரின் கனவில் நான் வந்திருக்கிறேனாம். சவுக்குத் தோப்புகளைப் பார்த்தால், அது கிழக்குக் கடற்கரைச் சாலை போல இருக்கிறதாம். கனத்த மழையும் மிகுந்த காற்றும் அடிக்கிற கடற்கரையில் நான் தனியாக நின்றுகொண்டு இருக்கிறேனாம். மழையின் மூடு திரைக்கு அப்பால் நான் நின்றுகொண்டு இருப்பது, அவருக்குப் பெருத்த துக்கம் உண்டாக்குகிறதாம்.
ஒரு துக்கத்துக்கும் அவசியம் இல்லை.
எனக்கு மழையில் நனையப் பிடிக்கும். இதுவரை எந்தக் கடற்கரையிலும் மழை பெய்யும்போது நான் நின்றதில்லை. கனவு அந்தச் சலுகையை எனக்கு அளித்திருக்கிறது. சலுகைகூட அல்ல, ஒருவித புரிதல். ஒருவித மரியாதை என்றுகூடச் சொல்லலாம்.
ஒரு சின்ன வருத்தம்… என்னைத் தனிமைப்படுத்தியிருக்க வேண்டாம். பத்துப் பேரோடு கடற்கரை மழையில் நிறுத்தியிருக்கலாம். குறைந்தபட்சம் கனவின் அனுமதி அவருக்குக் கிடைத்திருந்தால்கூடச் சரிதான்!

…………….

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா?

 1. ramji_yahoo சொல்கிறார்:

  அருமையான படைப்பை பகிர்ந்தமைக்கு நன்றிகள் சாமி

 2. த‌மிழ் சொல்கிறார்:

  மிக‌ அருமையான‌ ப‌டைப்பு…
  ம‌ன‌தை ஏதோ செய்கிற‌து…

 3. ganesakumaran சொல்கிறார்:

  oru kaditham yezhudha vendum viraivil

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s