கிணற்றுத்தண்ணீரும் ஆற்று மீனும்

வண்ணதாசன்
  “ராத்திரிப் போய்ச் சேர எப்படியும் பத்துப் பதினோரு மணி ஆகியிருக்காது?” கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டு ராமையாத் தாத்தா கேட்கும் போது வேலம்மா ஆச்சி வாசல் தெளித்துக் கொண்டு இருந்தாள். விடியக் கருக்கலில் ஒவ்வொரு கையாகத் தண்ணீரைத் தெளிக்க தெளிக்க புழுதியடங்கி பசுஞ்சாணமும் மண்ணும் வாசனை அடித்தது.
         “உங்கிட்டேதானே கேட்டேன்,காதுல விழுந்ததா விழலையா?”  மீசையை இரண்டு பக்கமும் ஒதுக்கிக் கொண்டே கட்டிலைப் பார்த்தார். நேற்று வரைக்கும் ஒருவாரமாகப் பேரப்பிள்ளையுடன் பக்கத்தில் படுத்துக்கிடந்த கட்டில்.ராத்திரி இவரிடம் கதை கேட்டபடி ரொம்ப நேரம் முழித்துக்கொண்டே இருப்பான்.
            “என்ன ரெண்டு பேரும் தூங்கலையா? தாத்தாவும் பேரனும் தினசரி நடுராத்திரி பன்னெண்டு மணிக்கும் வில்லடிச்சுக்கிட்டு இருக்கியோ.நாளைக்கு பேசதுக்கு கொஞ்சம் பாக்கியிருக்கட்டும்”- வேலம்மாச்சி சொல்வாளே தவிர அவளுக்கும் தாத்தாவையும் பேரனையும் பார்க்கச் சந்தோஷமாகத்தான் இருந்தது.
                        பேரன் வந்த நான்கு நாட்களில் தாத்தா முகம் பசலிக்கொடி மாதிரிக் குளிர்ச்சியாக ஆகியிருக்கிறது. இரண்டு வாய் அதிகமாகக் கூடச் சாப்பிடுகிறார். வீட்டிலேயே துலாக் கிணற்றில் இறைத்துக் குளிக்கிறவர் பேரன் கூட ஆற்றுக்குப் போய்விட்டு வருகிறார். கோவிலுக்குப் போய் திட்டிவாசலைத் திறந்து கோபுரத்துக்கு மேலே எல்லாம் ஏறிக்காட்டிவிட்டு வந்திருக்கிறார். கணக்குப் பிள்ளை வீட்டு இரட்டை மாட்டு வண்டியை இரவல் வாங்கிப் பேரனும் அவருமாகச் சிவனூத்து வரைக்கும் போய்விட்டு வந்தார்கள். வரும் போது தாழம்பூப் பறித்துப் பேரனிடம் கொடுத்திருந்தார்.
                     “அவன் என்ன பொம்பிளைப் பிள்ளையா,தாழம்பூ வச்சுக்கிடுறதுக்கு” என்று ஆச்சி சொன்ன போது ,’உனக்கு வேணும்னாச் சொல்லு ,இன்னும் ரெண்டு பறிச்சுக்கிட்டு வாரேன்” என்று ஆச்சியின் மேல்கையில் கிள்ளினார். ஒவ்வொரு கைத்தெளிப்பிற்கும் ஒவ்வொன்றாக வேலம்மாச்சிக்கு ஞாபகம் வந்தது.
                   ராமையாத் தாத்தா கொடியிலிருந்த துண்டை உதறி மேலே போட்டுக் கொண்டு, வாசல் தெளிக்கிற ஆச்சியைப் பார்த்தார். கேட்க கேட்க ஆச்சி இப்படி பதிலே சொல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. முகத்தைக் கழுவிவிட்டு வரலாம் என்று நடையைவிட்டு இறங்கிச் சிமெண்டு தொட்டியைப் பார்க்க நடந்தார். கிழக்கே பப்பாளி மரம் வரை போய் வாசல் தெளித்துவிட்டு, மறுபடி மேற்கே ஒவ்வொரு எட்டாக வேலம்மாச்சி நடந்து வரும் போது தாத்தா எதிரே போய் நின்றார்.
                    “ஏளா, இந்த உலகத்துலதான் இருக்கியா? இல்லை பேரப் பிள்ளை கூடவே ரயில் ஏறிப் போயிட்டியா? விளங்கலையே எனக்கு” என்று கேட்டார்.
                    “ஈரேழு லோகத்துக்குப் போனாலும் ,கடைசீல இந்த வீட்டுக்குத் தானே நாம ரெண்டு பேரும் திரும்பி வரணும்” என்று சொல்லிக்கொண்டே செம்பை எடுத்து தாத்தா கையில் கொடுத்தாள். வேலம்மாச்சி சட்டென்று இப்படிக் கண்கலங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை.
        “நீயும் என்னை மாதிரி எந்திரிக்கும்போதே அவனை நினைச்சிக்கிட்டே தான் எந்திருச்சிருக்கிற போல. ராத்திரி தூங்குனயா தூங்கலையா?” என்று ஆச்சியைப் பார்த்துக் கேட்டார்.
                   “என் தூக்கத்துக்கு என்ன .நீங்கதான் புரண்டு புரண்டு படுத்துக்கிட்டு கிடந்த மாதிரி இருந்தது” ஆச்சி சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்றாள்.
              செம்பை முக்கிக் கோதுவதற்குத் தண்ணீர்த் தொட்டிக்குள் ராமையாத் தாத்தா குனிந்தார். மூன்று செம்பருத்திப் பூக்கள் தண்ணீரில் மிதந்தபடி இருந்தன. இதுவும் பேரனுடைய வேலைதான். போகிறதுக்கு முன் கடைசி இரண்டு நாட்களாகத் தபால் ஆபீஸ் காம்பவுண்டுக்குள் நிற்கிற செம்பருத்திச் செடியில் இருந்து மொட்டாகப் பறித்து வந்து தொட்டியில் போடுவான். காலையில் அவை இப்படி பூத்துக் கிடக்கும்.அதை வைத்து ஆச்சி பூஜை பண்ண வேண்டுமாம்.
                “இங்க பாரு” ராமையாத் தாத்தா இரண்டு உள்ளங்கைகளிலும் அந்தச் செம்பருத்திப் பூக்களை  ஏந்திக் கொண்டு ஆச்சியைக்க் கூப்பிட்டார். வேலம்மாச்சி பக்கத்தில் வந்து அதை வாங்கிக் கொண்டாள். செடியில் இருக்கிற மாதிரியே ஆச்சியின் கைகளிலும் அவை பூத்திருந்தன.
                 இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படி அவன் இருந்துவிட்டுப் போனதற்கு அடையாளமாக ஏதாவது கண்ணில்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
                  அந்திமந்தாரை விதை,பசலிப்பழம் எல்லாம் போட்டு சேகரித்து வைத்த பழைய ரெமி பவுடர் டப்பா, ராமையாத் தாத்தா அந்தக் காலத்தில் உபயோகித்த மைக்கூடு, வேலம்மாச்சியின் பூஜைத் தட்டில் இருந்து எடுத்த ஒரு ஈயப்பிள்ளையார்,  ரயில் படம் போட்ட மஞ்சள் பெருங்காய டப்பாவில் எருக்க இலை சாப்பிட்டு வளர்கிற வண்ணத்திப்புழு, ஆட்டுரல் கல்லின் பக்கம் உட்கார்ந்திருந்த ஆச்சியிடம் கதை  கேட்டுக் கொண்டே சுவரில் வரைந்த வர்ணக்கொடி….
             அடுத்த தடவை அவன் வருகிற வரைக்கும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் காலத்தைத் தள்ள வேண்டும்.
             கோலப்பொடியை எடுப்பதற்கு மாடக்குழியை வேலம்மாச்சி பார்த்தாள்.  மாடக் குழியில் அந்த பெரிய கண்ணாடி பாட்டில் இருந்தது. பாட்டில் தண்ணீரில் தாத்தாவுடன் ஆற்றுக்குப் போய்ப் பிடித்துப் போட்ட மீன்  குஞ்சுகள் நீந்திக் கொண்டு இருந்தன.  ஆச்சி அந்த மீன் குஞ்சுகளையே பார்த்தாள். வளைய வளைய அவை திரும்பிச் சுழன்றன.
       “உங்களைத்தானே” என்று ராமையாத் தாத்தாவை கூப்பிட்டாள். தாத்தா தூண் பக்கம் வந்து நின்றார்.
       “இதைக் கொண்டு போய் மறுபடி ஆற்றில் விட்டுட்டு வந்திருங்க” என்றாள். தாத்தா பாட்டிலை வாங்கிக் கொண்டார்.
      “அவ்வளது தூரம் என்னத்துக்குப் போகணும்,நம்ம வீட்டுக் கிணத்துல விட்டிருவோம். அவ்வளவுதானே”-தாத்தாவின் உள்ளங்கை ரேகைகள் பாட்டில் தண்ணீரின் வழியாகப் பளீரிட்டன.
              “அதெல்லாம் இல்லை.ஆற்றில் பிடிச்சதை ஆற்றிலேயே விட்டிருவோம். அது அது இடத்தில அது அது சந்தோஷமா இருக்கட்டும்” வேலம்மாச்சி சொன்னாள்.
ராமையாத் தாத்தாவுக்கு ஊருக்குப் போய்விட்ட பேரன் ஞாபகம் வந்தது,  “நீ சொல்லுகிறதும் சரிதான்” என்றார்.
(நன்றி: தட்டச்சு செய்து உதவியது ”பாலா,சிங்கப்பூர்”)

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கிணற்றுத்தண்ணீரும் ஆற்று மீனும்

 1. ramji_yahoo சொல்கிறார்:

  . “என் தூக்கத்துக்கு என்ன .நீங்கதான் புரண்டு புரண்டு படுத்துக்கிட்டு கிடந்த மாதிரி இருந்தது” ஆச்சி சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நின்றாள்.

  இருநூறு தமிழ் காதல் சினிமாக்களால் சொல்ல முடியாத உணர்வை இரு வரிகளில் கொண்டு வந்து விடுகிறாரே.

  அது அது இடத்தில அது அது சந்தோஷமா இருக்கட்டும்
  விடுமுறை பருவக் கதை விடுமுறைப் பருவத்தில் சந்தோசமாக பகிரப் பட்டு இருக்கிறது. நன்றிகள்

 2. அது அது இடத்தில அது அது சந்தோஷமா இருக்கட்டும் – வண்ணதாசன். மிக அருமையான வரிகள். அது அது அதன் இடத்தில் இருக்கும் போது எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆச்சி தாத்தாவை எல்லாம் ஞாபகம் ஊட்டியது இக்கதை. இதன் மூலம் பால்யத்திற்கு சென்று திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. பகிர்விற்கு நன்றி!

 3. munu.sivasankaran சொல்கிறார்:

  கிணற்று நீராய் இருந்த மகனின் பாசம் இன்று ஆற்று நீராய்…
  அது சிமன்ட்டு தொட்டியில் செம்பருத்தி பூவில் பேரனின் கைரேகையோடு….

  முகத்தை துடைக்கும் வேல்லம்மா ஆச்சியின் முகம் நெஞ்சில் பசையாய் ஒட்டிக்கொண்டது..!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s