நினைவு நதியில் வண்ணதாசன்

ஜீவி
 
வண்ணதாசனின் கதைகளைப் படிப்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். கதையை எங்கு ஆரம்பிப்பது என்பது தான் அவருக்கு யோசிக்க வேண்டிய விஷயமாய் இருக்கும் என்பதைச் சுலபத்தில் தெரிந்து கொண்டு விடலாம். சொல்ல வேண்டிய கதையின் அடிநாதத்தை கறாராகத் தீர்மானித்து விடுவார் போல. மற்ற விஷயங்கள் எல்லாம் அது அது அதுபாட்டுக்க வந்து போகும்.
ஒரு மையப்புள்ளியில் காம்பஸின் ஒரு ஊசி முனையை ஊன்றிக் கொண்டு, பென்ஸில் செருகிய இன்னொரு முனையை அகட்டி வட்டமடிப்பது போல, எழுதுகையில் அதுபாட்டுக்க வந்து விழும் ஒவ்வொரு விவரணையும் அது தொடர்பான நிறைய ஜோடனைகளைச் சுற்றிக் கொண்டு பம்மென்று திரட்சியாக இருக்கும். இது வேண்டாம் அல்லது இது இதற்கு சம்பந்தமில்லாதது என்று ஒன்றைக் கூடச் சொல்லி விடமுடியாது. சொல்ல எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு அந்த அளவுக்கு ஒவ்வொன்றும் பாந்தமாக இருக்கும். ஒவ்வொன்றும் நுணுகி நுணுகிப் பார்த்து தேர்ந்த பொற்கொல்லர் மாதிரி அவரே சேகரித்து சேர்த்த அழகு சமாச்சாரங்கள். அத்தனையிலும் அத்தனை நகாசு படிந்திருக்கும்.
வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தாம் அவரது கதைகள். அவரைத் தேடிவந்த முதல் வாசகர் நம்பிராஜனும், அவரது முதல் கதைத் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகளை’ வெளியிட்ட சேலம் ‘அஃக்’ பரந்தாமனும் இன்றும் அவரது ஞாபக அடுக்குகளில் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். சிறு வயதில் காது வைத்தியதிற்காக வைத்தியரின் கிளினிக்குப் போகும் வழியில் பார்த்த சிவப்பாக நின்ற ஆளுயர தபால் பெட்டி கூட பின்னும் நினைவில் நின்று எழுத்தில் ஏதோ ஒரு கணத்தில் பதிவாகியிருக்கிறது. இந்த நினைவாற்றல் தான் வண்ணதாசன் பெற்ற வரப்பிரசாதம். அவருள் படிந்துள்ள அவரது அபார நினைவாற்றல் கிளைபிரிந்து கிளைபிரிந்து வெவ்வேறு தரிசனங்களின் நினைவுகளை இழுத்து வந்து எடுத்துக் கொண்ட பொருளுடன் சேர்க்கும் ஆற்றல் கதைப் பின்னலாகின்றன. அதை இப்படிக் கூடச் சொல்லலாம்: அவரது ரசனை அலாதியானது. அந்த ரசனை அவரது வாழ்க்கை அனுபவங்களின் விளைவு. அந்த அலாதியான அவரது ரசனையுடன், காணும் காட்சிகள் கலந்து அவருள் வினைபுரிகையில் அவை கதைகளாகின்றன. இதனாலேயே அவரது ரசனைகளே ஸ்தூலமாக அவரது கதைகளை நடத்திச் செல்வதற்கும் பொறுப்பேற்கின்றன.
வண்ணதாசனின் தளம் சிறுகதைகள் தாம். சின்னச் சின்ன கதைகளின் எல்லை தாண்டிப் போவது அவருக்குப் பிடிப்பதில்லை. இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை என்று மனத்தில் கோடு போட்டு வைத்திருப்பதைப் போல முடிக்க வேண்டிய அந்த இடம் வந்ததும் அப்ரப்ட்டாக முடித்து விடுவார். அப்படி அவர் முடித்ததும் கனக்கச்சிதமாக இருக்கும். பலநேரங்களில் அந்த கடைசி வரி கூட மேற்கொண்டான கதையை வாசகனே தன் யோசனையில் நீட்டித்து முடித்துக் கொள்கிற மாதிரி வசதி வேறு பண்ணிக் கொடுத்திருப்பார்.
அன்பு தான் ஆரம்பம்; இருந்தாலும் எல்லோராலுமே அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க முடியாது என்பது தான் சூட்சுமம். அன்பு செலுத்துதல் கூட சிலருக்குத் தான் சாத்தியப்பட்டச் செயலாக இருப்பது தான் விநோதம். சிலபேருக்கு சிலரிடம் அது ஆழ்ந்து விகசிக்கும் பொழுது காதலாக மலர்கிறது. ஞானப்பனுக்கு சற்றே காலைச் சாய்த்து சாய்த்து நடக்கும் தனுவிடம் ஏற்பட்டதும் அதுதான். சொல்லப்போனால், டெஸ்சி டீச்சருக்கும் அதே மாதிரியான ஒன்று தான் ஞானப்பன் மேலும். ஆனால் தனலெட்சுமியின் பால் ஞானப்பன் கொள்வதற்கும், ஞானப்பனின் மீது டெஸ்சி கொள்வதற்கும் மென்மையான வித்தியாசத்தை படிப்பவருக்குப் புலப்படுத்துவார் வண்ணதாசன். இந்த நுண்மையைப் புரிந்து கொண்டோருக்கு அவரின் ‘தனுமை’ அற்புதமான சிறுகதை. மருத்துவமனையும் ஒரு உலகம் இல்லாவிட்டாலும், ஒரு சிற்றூர் தான். வகை வகையான நோய்களுக்கேற்றவாறு வகை வகையான மனிதர்கள். மனிதர்க்கு மனிதர் கொள்ளும் உறவுகளும், சில நாட்களுக்காயினும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் கொள்ளும் அக்கரையும், இயல்பாகப் படியும் அன்பு விசாரிப்புகளும், உதவிகளும் ‘கடைசியாய் தெரிந்தவர்’ கதையில் அழகாகப் பதியப்பட்டிருக்கும். காதலித்தவளைக் கரம் பிடிக்க முடியாமல் போகிறது அண்ணனுக்கு. வேறோர் இடத்தில் அவளுக்குத் திருமணமாகி, கைக்குழந்தையுடனான அவளை– தம்பி தன் நண்பனுடன் எதேச்சையாக வழியில் சந்திக்கும் கதை, ‘ரதவீதி’. அந்தக் குட்டியூண்டு கதைக்குள் கோடானுகோடி உணர்வுகளைப் பதித்துத் தருவார் வண்ணதாசன். ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ மனசைக் குடையும். அந்த மாதிரி கிருஷ்ண பொம்மை பதிக்கப்பட்ட ஒரு வீட்டைப் பார்த்த அனுபவம், வேறொரு நிகழ்ச்சியின் அதிர்ச்சியை இங்கு கொண்டு வந்து சேர்த்து கதையாகியிருப்பதாகத் தோன்றுகிறது.
 
முழு கட்டுரையும் படிக்க>>>>பூ வனம்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நினைவு நதியில் வண்ணதாசன்

 1. ramji_yahoo சொல்கிறார்:

  உண்மையில் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததே போன்ற சந்தோஷம் தான் அப்போது..

  WELL SAID

 2. EssexSiva சொல்கிறார்:

  வழக்கம் போல கல்யாண்ஜியும் எனக்கு சுஜாதா வழியாகத்தான் அறிமுகம் (“வாசல் சுத்தாமாச்சு, மனசு குப்பையாச்சு”!)
  நீங்கள் குறிப்பிட்டிருக்கிற “உப்புக்கரிக்கிற சிறகுகள்” மனதை அகலாத பல சிறுகதைகளில் ஒன்று.
  அதில் ஊஞ்சல் மாதிரியே நடைகள் பற்றியும் சொல்லியிருப்பார்.
  “நடைகள் சில சமயம் நம்மைத்தடுக்கிறது, தாண்டிப் போகச்சொல்கிறது, உட்காரச்சொல்கிறது”
  நாமும் செல்வியுடன் நடையில் உட்கார்ந்து கொள்கிறோம்…
  அரசுவின் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டு அழைப்புமணியை எதிர்பார்த்திருக்கிறோம்.
  அயரச்செய்யும் கடைசி வரி…

  அழைப்புமணி ஒலிப்பதற்குச் சற்று தாமதமாயிற்று.
  வாசலில் கிடக்கிற என் செருப்புகளை அரசு பார்த்திருக்க வேண்டும்

  எனக்கு என்னவோ அரசு அழைப்புமணி அழுத்த இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்திருப்பார் என தோன்றுகிறது…

  இன்னொரு சிறுகதையான “நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்”
  ஒரு பத்து, இருபது நிமிட உள்ளூர் பேருந்து பிரயாணம்தான், திருமணத்தில் நாதஸ்வரம் வாசித்தவரை பார்த்தவுடன் மனம் வருடங்கள் தாண்டிப்பறக்கிறது; இறங்கி மனைவியிடம் சொல்லலாம் என்பதிற்குள் அவர்களும் வேறு உறவினரை பார்த்து மனதால் வருடங்கள் தாண்டியிருக்கிறார்கள்!
  “நாம் நகராவிட்டாலும் நம்மையே நகர்த்திவிடுகிற மாதிரிதானே வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையே இப்படி இருக்கும்போது டவுண் பஸ் எம்மாத்திரம்! அவர், அவருடன் வந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

  நானும் அந்த பஸ்ஸில் அவர்களுடன் போய் வந்திருக்கிறேன் – பல தடவைகள்!

  இந்த மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

  கடிதங்களுக்கெல்லாம் பதில் பொறுப்பாய், அழகாய் பதில் சொல்வார் என்று உங்கள் பதிவிலும் அவரது ஒரு பழைய எழுத்திலும்தான் தெரிந்து கொண்டேன். ஏன் மனம் கவர்ந்த எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரியவில்லை, என்னையே கடிந்துகொள்வதைத்தவிர!

  Essex சிவா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s