கணபதியண்ணன்—முகவரி–கலாப்ரியா

கலாப்ரியா
http://koodu.thamizhstudio.com/thodargal_7_24.php
கல்யாணி அண்ணன் வீட்டில் உட்கார்ந்து எல்லோரும் 88 சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று யாருக்கோ அது போரடிக்க, கேரம் விளையாட முடிவெடுத்தார்கள்.எனக்கு கேரமும், கோலிக்காயும் சுத்தமாக வராது.மற்றதெல்லாமும் நன்றாக வரும் என்று அரத்தமில்லை. கேரம் விளையாடுவதைச் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களார்களில் ஒருவனாக இருந்தேன். திடீரென்று வண்ணதாசனின் அண்ணன் கணபதியண்ணன் சட்டை போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். அவர் எங்கள் விளையாட்டுக்களில் எல்லாம் கலந்து கொள்வதில்லை. அப்போது அவர் பி.ஏ படித்துக் கொண்டிருந்தார். “என்னாப்பா, ஒன்னைய ஆட்டைக்கி சேக்கலையா..” என்றார். நான் எழுந்து நின்று “எனக்கு கேரம் தெரியாது” என்று அசடு வழிந்தேன்..” எங்கூட வாரியா என்றார்கள்.சரி என்று கிளம்பினேன், “ வீட்டுக்குப் போய் சட்டை போட்டுட்டு வா” என்றார்கள். “யாரை, சின்னப்பயலையா கூட்டீட்டுப் போறீங்க…..” என்று யாரோ கிணடலடித்தார்கள்.நான் டிராயர் மட்டுமே போட்டிருந்ததேன். ஆறாம் வகுப்பு முழுப்பரீட்சை லீவு. என் வீடு ஏழு வீ டு தள்ளி யிருந்தது. அவரது வீடான அன்பகம். 21. E. என்றால் எங்கள் வீடு, குமரன் அகம் 28.வீட்டுக்குப் போகிற இடைவெளியில் அண்ணன் சொன்னார்கள்,” கீழ ரத வீதியில் தி.மு.க அலுவலகம் என்றிருக்கிறதாமே, அதன் கீழ்த்தான் ஒருவரைப் பார்க்கப் போகிறோம், அவர் ’தினமலர்’ நாளிதழ் ஓவியர் அருணா என்றார்.
” ஆமா, வீரன் வேலுத்தம்பி சித்திரக்கதைக்கெல்லாம் படம் எல்லாம் போடுறாரே அவரா என்றேன். ஆமா அவரேதான். என்றார். அவர் கார்ட்டுனும் போடுவார். தினமலர் அப்போது தென் மாவட்டங்களில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கை. தினத்தந்தி மதுரையிலிருந்து வந்து கொண்டிருந்தது, அதில் கன்னித்தீவு கிடத்தட்ட எண்ணூறு “அத்தியாயம்” வந்திருந்தது. தினமலரில் தளவாய் வேலுத்தம்பி கதையான வீரன் வேலுத்தம்பி வந்து கொண்டிருந்தது.அதற்கு ஓவியர் அருணா.”ஏதோ இன்று பெரிய மனுஷ தரிசனம் போலிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குப்போய் சட்டையை மாட்டியபடியே வெளியே வந்தேன். அக்காவோ யாரோ “தொரை எங்க இன்னேரத்தில சட்டையை மாட்டீட்டிக் கிளம்புதாரு… என்றார்கள். “நான் கழக அலுவலகம் வரைக்கும் போய்விட்டு வாரேன்..” என்று நகர்ந்தேன்.அப்பா “ ஏல…” என்று சத்தமிடுவது தெருவில் இறங்கி விட்ட பின் கேட்டது.
கீழரதவீதியில் அப்பர் கிளாப்டன் ஸ்கூலுக்கு அடுத்து வடபுறம் ”திராவிட முன்ன்ற்றக்கழக அலுவலகம்” என்று மாடியில் ஒரு போர்டு தொங்கும். உண்மையில் அங்கு எதுவும் அலுவலகம் இயங்கியதா என்றெல்லாம் தெரியாது.அதற்குக் கீழே ஒரு பழைய இரும்புக் கடை. உண்டு. ஒரு வேளை அவர் கட்சிக்காரராக இருந்திருக்கலாம். அங்கே போனதும் கணபதியண்ணன், ”போ, போய்க் கேளு, ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா என்று” என்றார். நான் ஒருவரிடம் போய் “ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா…” என்று கேட்டேன்.” நாந்தான் அருணா.. நீ யாருய்யா.. ”என்று அவர் கேட்கவும்.,அதே நேரத்தில் “ அவர்தான் அருணா..”என்று அண்ணான் சொல்லவும் சரியாய் இருந்தது.அதில் “ஏய் என்னத்தையும் அதிகப் பிரசிங்கித்தனமா சொல்லிராதப்பா..” என்ற ஜாக்கிரதை தொனித்தது. நான் அப்போதெல்லாம் (இப்பவும்தான்) அப்படி “அ.பி’’ தான்.அண்ணன் தன்னிடமுள்ள அவர் வரைந்த ஓவியங்களைக் கண்பித்துக் கொண்டிருந்தார். அவர்,சேவியர் கல்லூரி மேகசீனில் வரைந்திருந்த சரஸ்வதி கோட்டோவியமும் ஒன்று.அருணாஅதை வெகுவாகப் பாராட்டினார்.அதைத் தான் வைத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார்.கணபதியண்ணன் மகிழ்ச்சியோடு சம்மத்தித்தார்.
அதில் ஒரு பாரதிதாசன் ஓவியமும் இருந்த நினைவு. அதையே நான் கோணல் மாணலாக வரைந்து ஸ்கூல் மேக்சீனுக்கு, பிற்காலத்தில்க் கொடுத்தேன்.ஸ்கூல் மேகசீனில் பாரதிதாசன் படத்தையெல்லாம் போடாத காலம் அது. இல்லையென்றாலும் போடக்கூடிய அளவு கொஞ்சங்கூட நன்றாகவும் இல்லை.அவர்கள் இருவரும் படத்தை ‘ப்ளாக்” எடுப்பது எப்படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.” நீங்க இண்டியன் இங்கில் எதை வரைந்து எப்படிக் கசக்கிக் கொடுத்தாலும் அதை என்ன சைசில் வேண்டுமானாலும் ப்லாக் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார்.
நீங்கள் எந்த அளவிலிம் வரையலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.மறுநாள் நான் முதல் வேலையாக எட்டணாவுக்கு இண்டியன் இங்க் என்கிற ப்ளாக் இங்க் பாட்டில் ஒன்றும் தொட்டு எழுதுகிற ’நிப்’ பேனாக்கட்டையொன்றும் வாங்கினேன். அன்பகத்தில் ப்ளாக் இங்க் கேக்கும் உண்டு. கணபதியண்ணனும். கல்யாணியண்ணனும் ப்ரஷ்ஷை தண்ணீரில் முக்கி அதில்த் தோய்த்து அருமையாக வரைவார்கள். எனக்கு ஒரு நாளும் ப்ரஷ்ஷால் வரையவோ எழுதவோ வந்ததே இல்லை.அந்த வருட சரஸ்வதி பூஜையன்று வந்த தினமலரில் அருணா ஒரு ‘கருத்துப்படம்’ போட்டிருந்தார். ஒரு சரஸ்வதி படம் போட்டு. கிழே “இன்று நாடெங்கும் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்”, என்ற “கருத்தையும்” போட்டிருந்தார்கள்.அது அப்படியே கணபதியண்ணன் வரைந்த படம்.
அவர்கள் வீட்டில் நான் கற்றுக் கொண்டவை எவ்வளவோ உண்டு. கணபதியண்ணன் மேஜைக்குள்ளும் சரி, கண்ணாடி ஸ்டாண்டிலும் சரி சாக்பீஸ் துண்டுகளுக்குப் பஞ்சமே இருக்காது. மாடியின் செங்கல் தரையிலும், முன் வெராந்தாவின் சிமெண்டுத்தரையிலும் கணப்தியண்ணன், விகடன், குமுதம் இதழ்களில் வருகிற படங்கள் வரைந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். அங்கே வாராத பத்திரிக்கைகளே கிடையாது.கண்ணன் என்றொரு பத்திரிக்கை, அதில் சுப்பு, ரமணி என்று ஒருவரே வரையும் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் வாண்டுமாமா, ’ஆர்.வி’ ஆகியோரின் சித்திரக்கதைகள், எல்லோருக்குமே, ரொம்பப் பிடிக்கும். விகடனில் அப்போது இதயனின் நடைபாதை என்றொரு தொடர் வந்து கொண்டிருந்தது.அதில் வருகிற கோபுலுவின் படங்களை அவர் அப்படியே எந்தச் சிரமுமில்லாமல் வரைவார். அவருக்கு குமுதத்தில் வருகிற ‘வர்ணம்’ என்பவரின் வாஷ் டிராயிங் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவருக்கு பாராட்டுக் கடிதங்கள் எழுதி பதிலெல்லாம் வரும். ஒரு போஸ்ட் கார்டில் வர்ணம் ஒரு பெண்ணின் தோள்ப்பட்டை வரையிலான படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். கணபதி என்கிற தன் பெயரைக்கூட அவர், ‘ ’வர்ணம்’, என்ன ஸ்டைலில் கையெழுத்துப் போடுவாரோ அதே போல், தன் படங்களின் கீழ்ப் போடுவார்.அவருக்கு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று பெரிய கனவு.ஏனோ அதை அவர்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை. லயோலாவில் எம்.ஏ சேர்ந்து படித்தார். அவருக்கு பி.பி ஸ்ரீனிவாஸ் குரலின் மீது அப்படியொரு காதல். “அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா….” பாட்டு, எதிர் வீட்டு வானொலியில் ஒலி பரப்பினால் மாடியின் வெளிப்புறத்திற்கு வந்து நின்று கேட்பார்.பாட்டு முடியும் வரை பேசவும் மாட்டார். பேச அனுமதிக்கவும் மாட்டார்.பாசமலர் படத்தில் வருகிற “யார் யார் அவள் யாரோ.. “ பாட்டுக்காக என்னிடம் ஒரு அணா (ஆறு நயாபைசா) தந்து பாசமலர் பாட்டுப்புத்தகம் வாங்கி வரச் சொன்னார்.அப்போது பாடல்களில் ஹம்மிங் பிரபலமாகியிருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொற்காலம்.ஓவியம் என்றில்லை அருமையான மரபுக் கவிஞர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜிப்ரானை மொழி பெயர்த்திருக்கிறார்.சமீபத்தில் குறுந்தொகைப் பாடல்களை எளிமையான கவி வடிவத்தில் தந்திருக்கிறார்
அவருடன் லயோலாவில் படித்த நாக வேணுகோபாலன் என்றொரு நண்பரை சமீபத்தில் டில்லி தமிழ்ச்சங்க கருத்தரங்கு ஒன்றில் சந்தித்தேன். இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஒருவர் அவராகவே வந்து, ”உங்களின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை அந்திமழை ப்லாக்கில் படிக்கிறேன், ரொம்ப நன்றாக இருக்கிறது”, என்றார். ஒரு ரசிகரைச் சந்திக்கிற வழக்கமான கூச்சம் கலந்த சந்தோஷ ஆர்வத்துடன் மட்டுமே அவரை எதிர்கொண்டேன்.மிக ஒல்லியான உருவம். என்னை விட எட்டு வயது அதிகமிருக்கும்.ஃபுல் ஸூட்டிலிருந்தார்.”ரொம்ப நன்றி….” என்று கொஞ்சம் மட்டுமே பேசினேன். அவர் என்னை விடுவதாயில்லை.”அது சரி, கலாப்ரியா,என்னை யார் என்று கேட்கமாட்டீர்களா….” என்று பதிலுக்குக் கூட காத்திராமல்,” நான் உங்க கணபதியண்ணனோட கிளாஸ்மேட், லயோலாவில் நாங்க இரண்டு ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சோம், இந்தாங்க, நேற்று உங்களைப் பார்த்ததுமே ஒரு வேலை செஞ்சேன், அண்ணன், காலேஜ் மேகசீனில் எழுதிய ஒரு கட்டுரையின் நகலை ஜெராக்ஸ் பண்ணிக் கொண்டாந்திருக்கேன்”, என்று ஒரு ஜெராக்ஸ் பிரதியையும் ஒரு ஃபோட்டோவின் ஜெராக்ஸையும் தந்தார். “ நீங்க எப்ப கணப்தியண்ணனைப் பார்ப்பீங்களோ, அப்ப கொடுங்க” என்றார்.அதைக் கொடுத்து விட்டு என்னைத்தன் சின்ன உருவத்தால் கட்டிப் பிடித்துக் கொண்டார். புகைப்படத்தில் அவர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் போல உயரமான கணபதியண்ணனின் அருகே நின்று கொண்டிருந்தார். ’ஆளுக்கொரு வீடு’ படத்தின் அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா…..’பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு, ஓவியம், கவிதை என்று நிறையப் பேசிக் கொண்டிருந்தார்.அவர் மீதான மரியாதையை அதிகப் படுத்திக் கொண்டே இருந்தார். ஊருக்குப் போன பின் முதல் வேலையாக இதைக் கணபதியண்ணனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.டில்லிக் குளிர் விட்டவுடன் அந்த யோசனையும் மறைந்து போயிற்று.
சென்ற வாரம் இன்னொரு பயணத்திற்காக, டில்லிக்கு கொண்டு சென்ற பெரிய சூட் கேஸை எடுத்த போது அதிலேயே தங்கி விட்ட அந்த ஜெராக்ஸ்`நகல் கண்ணில் பட்டது. பயணம் கிளம்புகிற அவசரம். இரண்டு வரி நலம் விசாரித்து, ஒரு கடிதம் எழுதி,ஜெராக்ஸை இணைத்து, நினைவில் இருந்த அவரது ஆதம்பாக்க முகவரியையும் வீட்டு ஃபோன் நம்பரையும் எழுதி, ஒரு நண்பரிடம் கொடுத்து “ எப்பா இதை ஒட்டி கூரியரில் சேர்த்து விடு..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.முந்தா நாள் கணபதியண்ணனிடமிருந்து கடிதம் வந்தது. ”வேணு தந்தவைகளை அனுப்பி வைத்தற்கு ரொம்ப சந்தோஷம். அந்தக் கட்டுரை என்னிடம் கூட இல்லை. நீ முகவரி சரியாக எழுதவில்லை, ஃபோனில் விசாரித்து, கொண்டு வந்து தந்தார்கள் அவர்களுக்குப் புண்ணியம் சேரட்டும்…”. என்று வழக்கம் போல இன்லண்ட் லெட்டரின் ஒரு இடத்தைக் கூட மிச்சம் வைக்காமல், எழுதி, ஒரு ஓரத்தில் வீட்டின் தெளிவான முழு முகவரியையும், செல் பேசி எண்ணையும், ஈ மெயில் முகவரியும் எழுதி இருந்தார்கள். தமிழ் பேசும் எந்த மூலையிலும் என் முகவரியைத் தெரிந்த ஒன்றிரண்டு பேராவது இருக்கிறார்கள்…என்றால் அதற்கு கணபதியண்ணன்தான் காரணம்.. அவருக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஒத்தி வைப்பதில் நாம்தான் கில்லாடிகளாயிற்றே… ஆனால் காலக்கணக்கன் எதையும் ஒத்தி வைப்பதேயில்லை.
நேற்று மதியம் ஒரு ஃபோன்,. ”கணபதியண்ணன் மாரடைப்பில் திடீரென காலமானான், கோபால்..முக்கால் மணி நேரமாச்சாம்…. ” என்று கட்டுப்படுத்த முடியாத அழுகையுடனான குரலில் வண்ணதாசனிடமிருந்து.
…………………………………………………
கூடு மறுமொழிகள்..நன்றி:
கணபதி அவர்களின் ஓவியம் என்று தெரியாமலேயே இவற்றையெல்லாம் நான் ரசித்திருக்கிறேன். இப்போது தான் தெரிகிறது. கடைசியில் மனம் முழுக்க ஒரே கனத்துடன் திருப்புகிறேன். யாருக்கும் நாம் இங்கே ஆறுதல் சொல்லிவிட முடியாது. வண்ணதாசன் போன்ற ஆளுமைக்கு இது ஒரு பெய்ய இழப்பு. கணபதி அவர்களின் குடும்பத்துக்கு சொல்லவே தேவை இல்லை.இந்த இழப்பு ஈடுகட்ட முடியாதது. இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்………….. மருது
காலையில் படித்ததும் மனதுக்குள் ஒருவித இறுக்கம் உண்டாகிறது. உங்களுக்கு நிச்சயம் மனம் அமைதியில் இருக்க வாய்ப்பில்லை. எப்போதும் கலைஞனுக்கு அழிவில்லை…………………..பாலகுமார்
கணபதியண்ணன் மேஜைக்குள்ளும் சரி, கண்ணாடி ஸ்டாண்டிலும் சரி சாக்பீஸ் துண்டுகளுக்குப் பஞ்சமே இருக்காது. மாடியின் செங்கல் தரையிலும், முன் வெராந்தாவின் சிமெண்டுத்தரையிலும் கணப்தியண்ணன், விகடன், குமுதம் இதழ்களில் வருகிற படங்கள் வரைந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். /// கலைஞன் தன்னை எப்போதும் இப்படித்தான் புதுப்பித்துக் கொண்டே இருப்பான். அவர் நிச்சயம் இப்பூவுலகில் கலைகள் மூலம் நிச்சயம் உயிர்த்திருப்பார்……………………நாகராஜ்
கனபதியன்னனுடன் உங்கள் நெருக்கம் இப்போது நிச்சயம் உங்களை பாதிக்கும். பாசம்தான் நமது வாழ்வின் பிடிப்பு. அது இப்போது உங்களுக்கு நிறைய தேவை. அவரது குடும்பம் நிச்சயம் அவரது நினைவில் இருந்து மீண்டு இறைவனின் எல்லா அருளும் பெற வேண்டும்………………….. சிவஷங்கர்
மிக நெகிழ்வான பதிவு. வார்த்தைகள் ஒன்றும் இல்லை…………… கலையரசன்
என்று கட்டுப்படுத்த முடியாத அழுகையுடனான குரலில் வண்ணதாசனிடமிருந்து.//// வண்ணதாசன் இயல்பாகவே உறவுகளின் வழியை உணர்ந்தவர். அவருக்கு ஆறுதல் சொல்ல ஒரு வார்த்தை கூட இல்லை. இப்போதும் அவரது நூல்கள்தான் பல உறவுகளை எனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது….தவசெல்வன்
மிகவும் போற்றப்பட வேண்டிய மனிதர். இங்கே கலைஞனாகப் பிறப்பதே பெருமை என்று நினைக்கும் எல்லோரும் அவருக்கு அஞ்சலி செய்ய வேண்டும்……………………வினோத் குமார்
நண்பர்களை பற்றிய உங்கள் நெருக்கமான பதிவுகள் பலவற்றை படித்திருக்கிறேன். ஆனால் இந்த பதிவு முழுவதும், மனம் ரணமானதுதான் மிச்சம். உங்களுக்கும், வன்னடாசனுக்கும் எப்படி ஆறுதல் சொல்ல முடியும்?……………பிரசன்னா கென்னெடி
உங்கள் நினைவுகளின் வழியே மிக நேர்த்தியான இரங்கற்பா என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இறுதி வரி கண்களை கலங்க வைக்கிறது……………………….. பாண்டியன், மலேசியா
கட்டுரையில் எப்போதும் போல் உங்கள் கேலி கிண்டல் இருக்கும் என்று மிக உற்சாகமாக உள்ளே வந்தேன். ஆனால் உங்கள் நண்பர் போன்ற ஒரு உறவின் இழப்பை இப்படி ஒரு பதிவாக செய்துள்ளீர்கள். கடைசியில் படித்ததும், உங்களுக்காகவும், கனபதிக்காகவும் வேண்டிக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்……………………. நாராயணன்
நமக்கான ஒரு உறவு பிரிந்தால் அதன் வலியோ, சோகமோ ஆற்றாமையை கொடுக்கும். அவரது குடும்பமும், நீங்களும் நானும் அவரது ஆத்மா சாந்தியடைய மட்டுமே வேண்டிக் கொள்ள முடியும்……………லக்ஷ்மன்
முகத்தில் அறைந்தது போன்ற கட்டுரை. கணபதி அண்ணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்னிடம் உள்ளன. வண்ணதாசன் அவர்கள் எப்போதும் மிக மென்மையானவர். அவர்தான் என்ன செய்வாரோ பாவம். அவருக்காகவே என் மனம் பதைக்கிறது……………………. தீனதயாள் பாண்டியன்
நீ முகவரி சரியாக எழுதவில்லை, ஃபோனில் விசாரித்து, கொண்டு வந்து தந்தார்கள் அவர்களுக்குப் புண்ணியம் சேரட்டும்…”. //// எத்துனை தீர்க்கமான வார்த்தைகள். கனபதியண்ணன் பற்றிய உங்கள் பதிவு அருமை. நேற்று என்பது இந்த வருடமா? 22 ஜூன் அன்றா?……………………… நடராஜன்
கனபதியண்ணன் யார் என்று திஎர்யாமலேயே அவர் மீதான பாசம் அதிகரிக்கிறது. என்ன காரணமோ?………….. வாசு விக்ரம்
கணபதி வித்தியாசமான மனிதர் போலும்.. கலைஞர்கள் எப்போதும் தங்கள் கலைகளின் வழியே பேசிக் கொண்டிருப்பார்கள். பார்த்துக் கொண்டிருப்பார்கள்………… செல்வராஜ்
மிக சிற‌ப்பான பதிவு.மறைந்த நண்பருக்கு இதை விட வேறு என்ன வேண்டும்……………….சாருஷ்ரி
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s