நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும்

வண்ணதாசன்
 
பிச்சு கூரையில் அந்த முகத்தையே தேடிக்கொண்டிருந்தான். ரொம்பவும் தனித்துப் போகிறபோது அவனுக்கு அந்த முகம் தேவைப்படும். கூரையில் குறுக்கு வாட்டாகக் குத்தியிருந்த நீளமான உத்தரக்கட்டைகளில், இவன் கீழே படுத்துக் கொண்டு பார்த்தால் நேர் எதிரே, முறுகித் தொங்கிக் கொண்டிருக்கிற பல்பிற்கு ரெண்டு ஜான் தள்ளின தூரத்தில் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தால் கோமாளி முகம் மாதிரி ஒன்று தெரியும். விழுந்து விழுந்து சிரிக்கும். வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கும். வயிற்றுக்குக் கீழே திபுதிபுவென்று அடித்துக்கொண்டு சிரிக்கும், ஒரு பழந்துணியை மேலே வீசினது போல் நெஞ்சில் மடிந்து விழுந்து புரண்டு அந்த முகம் சிரிக்கும்.
எவ்வளவோ முயற்சி செய்தும் அங்குலம் அங்குலமாய்ப் பார்வையை நகர்த்திக் கொண்டுபோயும் இன்று முகம் தெரியவில்லை. கூரை கூரையாக, உத்தரம் உத்தரமாக, பல்பு ஒயர் ஓட்டடைப் பின்னலாக மாத்திரம் இருந்தது. மாடியில் இருக்கிற சாய பாக்டரியின் நெடி கூடுதலாக வந்தது. நாளைக்குக் காலையில் இவன் அறைக்குப் பின்னால் சாக்கடை சிவப்பாகவோ பச்சையாகவோ பெருகியிருக்கும். அவனுக்கு அதெல்லாம் பழகிப் போயிருந்தது. ஆனால் புட்டாவுக்கு அப்படியில்லை.
புட்டா ஒருநாள் காலையில் இவனுக்கு முன்னால் எழுந்து போய் அதையே பார்த்துக்கொண்டு இருந்தான். பிச்சு கிணற்றில் வாளி உள்ளே உரைகளில் மோதி தும்தும் என்று இறைத்துக் குளிக்கும்போது பேசவில்லை. குளிக்கிற தண்ணீர் பப்பாளிக் குரும்பைகளைச் சுழற்றிக் கொண்டு ஒரு தாரையாக அதனோடுதான் கலக்க வேண்டும். அப்படிச் சோப்பு நுரை கொப்புளம் கட்டி நீளமாக அதோடு பாய்ந்த சமயம் புட்டா திடுக்கென்று திரும்பிப் பார்த்தான். ரெண்டு கை விரலாலும் முகத்தையே வழித்து எடுக்கிறது மாதிரி நான்கு தடவை இழுத்துவிட்டான். இதை அவன் ஏதாவது படம் எழுதி முடிக்கிறபோது, புஸ்தகம் படித்துக் கொண்டிருக்கிறபோது அப்படி செய்வான். முகத்தில் அரைப்பங்கை நெற்றி முழுங்கி, முழுங்கலின் வாய்க்குள் இருந்து கொஞ்சம் மூக்கும் வாயும் பாக்கியிருப்பதுபோல இருக்கும். ஆனாலும் முகம் அசிங்கமாக இருக்காது. சிரிப்பு அழகாக இருக்கும், கேரா சுருட்டை சுருட்டையாக இறங்கி, சிரிப்பை இரண்டு கடைவாய்ப் பக்கமும் ஏந்தி அள்ளிக்கொள்ளும். சிரிக்கிறதுக்குப் புட்டாகிட்ட படிக்கணும். அந்த சிரிப்பை எல்லாம் படித்து விடவும் முடியாது. அப்படிச் சிரிப்பான்.
புட்டா ஏதாவது ஒரு கார்ட்டூன் போடும். தலையைச் சாய்த்துச் சாய்த்துப் போடும். போட்டு முடித்தவுடன் ஓஹோஹோவென்று சிரிக்கும். முகத்தை வழித்து எடுத்துக்கொண்டு அதைப் பற்றிச் சொல்லும். பாவனையோடு சொல்லும். கோவணத்தோட ஒருத்தரைப் போட்டிருக்கும். அதைப் போலவே எழுந்திருந்து நின்று காட்டிப் பேசும்;சிரிக்கும். பிச்சுவுக்கு அதில் என்ன இருக்கிறதென்று தோன்றும். ஆனால் புட்டா முகத்தில் இருக்கிற சிரிப்பைப் பாத்துத் தானாக சந்தோஷம் வரும். புட்டா இவனோடு வந்து இருக்கு ஆரம்பித்த கொஞ்ச நாட்களில்தான் பிச்சுவுக்கு இப்படியொரு முகம் கூரையில் தெரிய ஆரம்பித்தது. புட்டாகிட்டே அதைச் சொன்னபோது, ‘அப்படியா, அப்படியா’ என்று அதிசயம் மாதிரிக் கேட்டது. உத்தரத்தைப் பார்க்கவில்லை. பிச்சு முகத்தையே பார்த்தது.
ரெண்டு வருஷத்துக்கு முன்பு, ஒரு டிராமா ரிகர்சலுக்காகப் போயிருந்த இடத்தில் புட்டா வந்து இப்படித்தான் முதன் முதலாக அப்போது பார்த்தது. அந்த இடமே ஒரு புது அமைப்பாக இருந்தது. தனியாக ஹால் மாதிரி இல்லை. லாட்ஜ் ரூமும் இல்லை. ஒரு பெரிய பழைய வீடு. முன்னால் நாலைந்து பசுமாட்டைக் கட்டிப் போட்டிருந்தார்கள். போர்ஷன் போர்ஷனாக மறிப்பு. ஒரு பழைய மோட்டார்பைக் வாசலில் நின்றது. பெரிய பிரிண்டிங் பிரஸ் ஒன்று பின்னால் தெரிந்தது. முதலில் ஒரு சின்ன அறையில் புஸ்தகங்களும் காகிதமுமாய்ப் பரப்பிப் போட்டுக்கொண்டு ஐந்தாறு சிறு வயதுக்காரர்கள் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சின்னப் பத்திரிகையுடைய அறை என்று பின்னால் தெரிந்தது புட்டாவால்தான். அப்புறம் இவனது நாடகங்களைப் பற்றி அபிப்பிராயம் ஒன்றுகூட அதில் கட்டுரையாக வந்தது. அடுத்தடுத்து கொஞ்சம் பெரிய ஹால், வெளிசசம் கம்மி. லைட் போட்டுக் கொண்டு டேபிள் டேபிளாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். மரபெஞ்சில் கிழவர் ஒருத்தர் தனியாகச் சீட்டைப் பரப்பி விளையாடிக் கொண்டிருந்தார். மடித்துத் தொங்கின காலில் பாண்டேஜ். அதையும் பிதுங்கி மினுமினுவென்று ஒரு வீக்கம்.
எல்லாத்துக்கும் கடைசியில் ரிகர்சல் நடக்கிற இவனுடைய இடம். இவன்தான் பிச்சு என்றும் இவனைக் கதாநாயகனாக வைத்து அந்த எழுத்தாளர் எடுத்த படம்தான் ஜனாதிபதியிடம் பிரத்தியேகப் பரிசு வாங்கியதென்றும் யாரும் புட்டாவுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சன்னல் விளிம்பில் உட்கார்ந்து தன்னுடைய காட்சி வர ஓய்ந்திருந்த பிச்சுவை, ‘நீங்கள்தான் அந்தப் பிச்சுவா’ என்று படத்தின் பெயரைச் சொல்லியபடி கையை இறுகிக் குலுக்கிக்கொண்ட போது பிச்சுவுக்குச் சலிப்பாக இருந்தது. ஜனாதிபதி, உலகப் படவிழா சர்டிபிகேட்டுகள் எல்லாம் இங்குள்ள படங்களில் இவனுக்கு எதையும் சம்பாதிக்கத் தந்திருக்கவில்லை. ஒரு காமெடியன் வேஷமும், குடையும் கையுமாய் வருகிற ஒரு பள்ளிக் கூட வாத்தியார் வேஷமும்தான் கிடைத்தன. அப்புறம் அவனை யாரும் கவனிக்கவில்லை. அவனை வைத்துப் படம் எடுத்த எழுத்தாளரே இரண்டாவது படத்தில் அவனுக்கு ஒரு சந்தர்ப்பம் தராமல் இருந்துவிட்டார். ஒரே பத்திரிகை மட்டும் அவனது நடிப்பை ஒரு வங்காளக் கலைஞனது நடிப்புக்கு நிகரப்படுத்தி எழுதியிருந்தது. டில்லிக்குப் போனது, சில ஆங்கிலப் பத்திரிகைகளில் இவன் படம் வந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது.
“ஆமாம் ” என்று கையை விடுவித்துக் கொள்ள முயன்றபடி அவன் அறிமுகத்தை ஏற்றபோது, சன்னலோரம் பாதிகுடித்து விட்டு வைத்த டீயை மேலும் குடிக்க முடியாத, இவனுக்கும் தர முடியாத தன்னிலைமை சங்கடமளித்தது,
‘நான் புட்டார்த்தி. புட்டா. கார்ட்டூன் எழுதிக்கிட்டிருக்கேன்’ என்று மறுபடியும் கையை அழுத்தித் தோளையும் பற்றிக்கொண்டு பிச்சுவின் முகத்தைப் பார்த்தான். அப்படிப் பாத்துக்கொண்டிருந்தவன்தான் முகத்தை நெற்றியிலிருந்து வழித்துவிட்டுக்கொண்டு, அந்தப் படத்தில் ஒரு காட்சியை ரசித்துப் பாராட்டினான். சொல்லிக்கொண்டே, சொல்லுகிற சொல் ஒன்றுக்கும் பாவனையும் சேர்த்து, மற்றவர்கள் கவனம் திரும்பி இங்கே வந்தார்கள்.
“கிக்கீ …கிக்கீ ” என்று செல்லமாய்ச் சிவப்பி கூப்பிட்டது. பிச்சு மெதுவாக ஒரு ராகம் மாதிரி விசில் அடித்துக் கொண்டே எழுந்திருந்து அதன் பக்கம் போனான். சோப்புப் பெட்டியில் இருந்த இரை தீர்ந்து போயிருந்தது. விரலில் தாவி, பக்கவாட்டாய்க் கையில் நகர்ந்து சத்தமிட்டது. பிச்சு மறுபடியும் இடதுகைச் சுட்டுவிரலுக்கு மாற்றி, ‘டுட்டுட்டுட்டு-டுட்டுட்டிட்டு’ என்று கொஞ்சியவாறு வாங்கி வைத்திருந்த பொட்டுக்கடலை மிச்சமிருக்கிறதா எனத் தேடக் குனிந்தான். ரூம் முழுவதும் புஸ்தகமும் குப்பையுமாய்க் கிடந்தது. சுவரோரத்தில் ஒரு சின்னப்பல்லி, எப்படி இறந்தது என்று தெரியாமல், எறும்பு மொய்க்க வெளிறிக் கிடந்தது.
புட்டா இந்த ரூமுக்கு வர ஆரம்பித்த பிறகுதான் அந்தப் புஸ்தகமும் பேப்பரும். பெயர்தான் படம் எழுதிகிறவனே தவிர அவனுக்குப் புஸ்தகம் நிறைய வேண்டியிருந்தது. அவன் எங்கெங்கேயோ பழைய புஸ்தகக்கடைகளிலிருந்து அள்ளிக் கொண்டு வருவான். அநேகமாய் அவை எல்லாம் மலையாளப் புத்தகமாக இருக்கும். அல்லது வங்காளி ஆட்கள் எழுதினதாக இருக்கும் ரொம்பப் பழைய சீனத்து ஓவியர்கள் எழுதிய கலர்-பிளேட்டுகள் அடங்கின புஸ்தகத்தை ஒரு பழைய பேப்பர்க் கடையில் கண்டெடுத்து வந்தான்.
இந்தக் கிளி கூட அவன் கொண்டுவந்தது தான். வருகிற வழியில் புதிதாக வீடு கட்டுகிற யாரோ அந்த இடத்தில் நின்ற மரத்தை வெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார்களாம். அந்த மரம் சாய்ந்ததைப் புட்டா உணர்ச்சிகரமாக விவரித்தான். எலெக்ட்ரிசிட்டி போர்டுக்காரன் கம்பிகளைத் தளர்த்திவிட்டிருந்ததையும், கோடாரி வீச்சில் செதில் செதிலாகத் துள்ளி விழுந்ததையும்,, கோடாரியைத் தலைபின்னும்போது சீப்பைக் கொண்டையில் சொருகிக் கொள்வது மாதிரி மரத்தில் கொத்திச் செருகிவிட்டுக் கீழே வந்து கயிறுகட்டி இழுத்ததையும், இழுக்கும்போது பாடினதையும், பசங்கள் எல்லாம் ராட்சசன் சாய்கிற மாதிரி மரம் கப்பும் கிளையுமாக மொரமொரவென்று முறியும்போது ‘ஒ’ண்ணு கூச்சல் போட்டதையும், சலார்ணு புழுதியில் இலை விசிறினபடி முந்தானையைத் தட்டிக் கீழே விரித்துப் படுத்துக்கிடக்கிற கிழவி மாதிரி ரொம்ப அசதியோடும் பதனத்தொடும் அது கிடந்ததையும், கிளை கிளையா ஏறி மேலே உட்கார்ந்து, அமுக்கி அசைந்து ஊஞ்சல் ஆடினதையும், நாலஞ்சு குட்டி கவட்டைக்கிடையிலே முட்ட முட்ட ஓடி வந்து குழையைத் தின்ற வெள்ளாட்டையும், சாக்கடைக் குள்ளே ஒரு பக்கத்து மரம் முழுக்க, அதில் எச்சில் இலையெல்லாம் மோதிக்கொண்டு இருந்ததையும், மரம் வெட்டுகிறவன் விரட்டி விரட்டி ஏசியதையும் நாடகம் நடிக்கிற மாதிரிச் சொன்னான். ‘ஆலமரம் சாயுது, அத்தி மரம் சாயுது. அக்கா வீட்டுப் புளிய மரம் வேரோட சாயுது’ என்று சிறு பிள்ளைகள் போல ராகம் போட்டுச் சொன்னான். ‘புட்டா நீ எல்லாம் நடிச்சா என்ன?’ என்று பிச்சு கேட்டான், அவன் கையில் இருக்கிற கிளியைக் கூட லட்சியம் பண்ணாமல்.
இதும் பாத்தியா. இதுவும் அங்க எங்கயோ போனதுல தான் இருந்திருக்கு. நவுந்து நவுந்து எப்படியோ சுவருப் பக்கம் போயி, அடுத்த காம்பவுண்ட்ல மரத்தொட்டி வெச்சிருக்கிற மொதலியார் கடை ரோடுகுள்ள போயிப் பம்மிகிட்டுது. பசங்கள்ல எவனோ பார்த்துட்டுக் கல்லைத் தூக்கி அடிக்க, போங்கடான்னு எல்லாத்தியும் விரட்டின கையோட கட்டையெல்லாம் கொஞ்சம் பொறட்டிப் போட்டு நான் எடுத்தாந்தேன், பாரு. ‘பயத்தில போட்டு வாங்கிட்டுது விரல்ல’ என்று ஈரத்துணி சுற்றின விரலைக் காட்டினான்.
முழுக் கதையும் படிக்க:  அழியாச் சுடர்கள் :http://azhiyasudargal.blogspot.com/2011/08/blog-post_30.html
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s