கூடுவிட்டு

வண்ணதாசன்
‘சுந்தரம், எப்போ வருவே’ என்று கேட்டுக்கொண்டே லீலாக்கா எழுந்து வந்தாள். கையில் கோலப்பொடிக்கிண்ணம் இருந்தது. பாதி மடங்கினது போல உட்கார்ந்து அவள் போட்டுக் கொண்டிருந்த கோலம், ஒரு பசளைக்கொடி மாதிரி தெருவில் படர்ந்து கொண்டிருந்தது. பனியில் நனைந்த தெரு ஏற்கனவே அழகாக இருக்க, என் டி.வி.எஸ்.50ன் முன்விளக்கு வெளிச்சத்தில் கோலப்பொடி மினுங்க, லீலாக்கா சிரித்துக்கொண்டே என்பக்கம் வந்து கொண்டிருந்தாள்.
‘தெருவையே குத்தகைக்கு எடுத்தாச்சா? கோலம் இந்த வீடு தாண்டி அடுத்த வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கு’ உறுமிக் கொண்டிருந்த வண்டியை நிறுத்தினால் முன்விளக்கு அணையும் தானே. லீலாக்கா பதில் சொல்லவில்லை. வண்டியை நிறுத்தியதை பிடித்துக் கொண்டாள். என்ன, பெட்ரோலை மிச்சம் பிடிக்கிறியா?’ என்று கேட்டாள். வண்டியை உதைத்து ஸ்டார்ட் பண்ணச் சொன்னாள்.
மறுபடியும் புருபுருவென்று வெளிச்சம் பாயும் போது பக்கத்தில் வந்து நின்றாள். ‘இதுதான் நல்லா இருக்கு. இந்த அஞ்சு அஞ்சரை மணி இருட்டு. சொஸைட்டிக்குக் கறவைக்குப் போயிட்டுத் திரும்பிக்கிட்டு இருக்கிற மாடு. உங்க வீட்டு முன்னால கிடக்கிற பீடி இலை. உன் டி.வி.எஸ். பிப்டி லைட்டு’ – லீலாலக்கா கதை எழுதுகிற மாதிரி சொல்லிக்கொண்டு போனாள். ‘உங்க கோலத்தையும் சேர்த்துக்கிடுங்க’
‘என் காரியத்தை நானா சேர்க்கிறது? அதை மற்றவங்க இல்லியா செய்யணும்’ – லீலாக்கா லேசாக மூக்கைச் சுளித்துக் கொண்டாள். யாரோ சுருட்டுப் புடிக்கிற வாசனை வந்தது. ‘சரி சொல்லு. எங்கே போற. எப்ப வருவ சுந்தரம்’ ‘சாம்ராஜ்கூடப் போறேன்க்கா. போகிறதுதான் தெரியும். எங்கே போறேன். எதுக்குப் போறேன். எப்ப வருவேன்கிறது எல்லாம் தெரியாது. வீட்டில வெட்டியா உட்கார்ந்து இருக்கிறதுக்கு இது பரவாயில்லை’
நான் புறப்பட ஆயத்தமாவது போல, ஆக்ஸிலேட்டரைத் திருக, முன்விளக்கு வெளிச்சம் அடர்ந்த மஞ்சளில் பாய்ந்து தளர்ந்தது. வண்டியின் உலோக அதிர்வு உடம்புக்குள் இறங்கி, இரண்டு கைகளின் மூலமாகவும் வெளியேற முயன்றது.
‘போன தடவை மக்காச்சோளக்கொண்டை. இந்தத் தடவை எனக்கு என்ன கொண்டுவரப் போற?’ – லீலாக்கா சற்று நகர்ந்து ஒதுங்கியபடி கேட்டாள். ‘சூரியகாந்திப் பூ’ வண்டியை நகர்த்திக் கொண்டே சொன்னேன். வண்டியைக் கிளப்பும்போது அனிச்சையாக உண்டாக்குகிற ஹார்ன் சத்தம் தெறித்து நாலாபுறமும் விழுந்தது.
‘கையில் கோலப்பொடிக் கிண்ணம் இருக்கு. இல்லாட்டா உன் ஹார்ன் சத்தத்தைப் பந்து பிடிக்கிற மாதிரி, ரெண்டு கையிலேயும் பிடிச்சுருப்பேன்’ – லீலாக்கா இடது கையை உயர்த்தி வழியனுப்ப அசைத்தபடியே சொன்னாள். இது தான் லீலாக்கா. சத்தத்தைப் பிடித்து விடுவாளாம். எதையோடாவது எதையோ சேர்ப்பாள்.
‘அதெப்படி மறக்கும் பெரியம்மை.நீங்க சொன்னதை அப்படியே ஒரு சொட்டு சிந்தாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்’ என்று யாரிடமோ சொல்வாள்.
‘கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு. சில்லுச்சில்லா தெறிச்ச பட்டாசு முழுதும் கிடக்கு. நீ அப்போ வந்திருந்தேன்னா உள்ளங்காலிலே பூந்திருக்கும்’ – தான் எதற்காவோ உடைந்து போனதை ஒரு தடவை அக்கா என்னிடம் அப்படித்தான் சொன்னாள்.
எல்லோரும் இதே தெருவில்தான் இருக்கிறோம். இந்த வீடும் எதிர்த்த வீடுமாய் – எத்தனையோ வருஷமாய் எங்கள் குடும்பமும் லீலாக்கா குடும்பமும் இங்கேயேதான் இருக்கிறது. அதிகபட்சம், மிஞ்சி மிஞ்சிப் போனால் என்னைவிட அவளுக்கு ஐந்தாறு வயது கூடுதல் இருக்கும். எனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அவளுக்குக் கல்யாணம் ஆகவில்லை. இதற்கெல்லாம் மத்தியில் அவள் எப்படி புதிது புதிதாகச் சொற்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறாள்?
எது மழைக்காலத்துச் சரல் கற்கள் மாதிரி அவளைப் புதிதாகவே வைத்திருக்கிறது. விழுந்த இடத்தில் முளைக்கிற வேப்பங்கொட்டை போல எப்படி அவளால் துளிர்ந்துவிட முடிகிறது. ஒரு எஸ்.டி.டி பூத்தில், ஒரு மருந்துக் கடையில், ஜவுளிக்கடையில் என்று மாறி மாறி அவ்வப்போது வேலை பார்த்தாலும் எப்படிக் கிள்ளினால் வலிக்கிற தோலைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது.
ஒருநாள் ராத்திரி பத்துமணி இருக்கும். லீலாக்கா தெருவின் குறுக்கே என்னைப் பார்த்ததும் பக்கத்தில் வந்தாள். வரும்போது பாதி தூரத்திலேயே பேச ஆரம்பித்து விட்டாள்.
‘இவங்களுக்கு எல்லாம் நெஞ்சுல ஈரமே இருக்காதாடா? பூவும், பிஞ்சுமா இப்படிப் பொலுபொலுண்ணு உதிரந்து கிடக்கே. அறுபது, எழுபதுண்ணு நியூஸ்ல சொன்னா, நிஜத்தில் நூறு இருநூறுக்குக் குறையாம இருக்குமே. குண்டு போட்டுக் கொன்றதும் இல்லாம, அதுக்கு ஒரு நியாயமும் சொல்லுதாங்களே படுபாவிங்க… அனுமான் தவ்வுன மாதிரி இங்கேர்ந்து தவ்வி, அப்படியே அத்தனை அம்மையும், புள்ளைகளையும் அணைச்சுக்கிடணும் போல இருக்கு… இப்பத்தான் பாடம் படிச்சுட்டு, ஹோம்ஒர்க் எழுதிவிட்டு தூங்குகிற மாதிரிக்கிடக்கிடா ஒவ்வொண்ணும். தேடிப்பார்த்தா ட்ரவுசர் பாக்கெட்ல கோலிக்காய், பம்பரம்ன்னு ஏதாவது இருக்கும்போல’-
லீலாக்கா சொல்லிவிட்டு உடம்பு முழுவதையும் இறுக்கிக் கொண்டாள். இரண்டு கைகளையும் தப்பிக்க விடாமல் கட்டிப் போடுவது போல், பத்துவிரல்களையும் கோர்த்து இரண்டு கால்களின் இடுக்கில் புதைத்துக் கொண்டு, ‘இதைத் பார்த்தப்புறம் இவங்களுக்கு எப்படிடா சாப்பிட முடியுது!’ –லீலாக்கா விம்மினாள். தெருவின் அத்தனை வீடுகளுக்குள்ளும் தொலைக்காட்சிகளுக்கு ஏற்பச் சுவர்களில் விழுகிற வெளிச்சம் மாறிக் கொண்டிருப்பது போல, அவளுடைய முகம் தத்தளித்துக்கொண்டிருந்தது. ‘வீட்டுக்கு வந்துட்டுப் போங்கக்கா’ என்று சொன்னபோது, ‘இப்படியே எங்கேயாவது போயிடலாம்போல இருக்கு சுந்தரம்’ என்று சொன்னவள், மடமடவென்று திரும்பி அவளுடைய வீட்டுக்குப் போனாள். போகும்போது திரும்பி என்னைப் பார்த்து, ‘அந்த பாலகிருஷ்ணன் பாடு தேவலை. அவனை மாதிரி இருந்திரலாம். அலுப்பில்லை’ என்று பின்பக்கமாகப் பேச்சை வீசிக்கொண்டே போனாள்.
••••
பாலகிருஷ்ணனைப் பற்றி நான் தான் லீலாக்காவிடம் சொல்லியிருந்தேன். அதைச் சொல்லி ஏழெட்டு மாதமிருக்கும். இப்படித்தான் உதிரியாக யாரோ சொன்ன வேலையை முடித்துவிட்டு, தெற்குக் குறிச்சியில் நின்றுகொண்டிருந்தேன். மினி பஸ் வருமா… வராதா தெரியவில்லை. அது தவிர இந்த வழியாகப் போகிற ஒரே ஒரு பஸ் வர இன்னும் அதிக நேரம் இருந்தது. பஸ் வருகிற நேரத்தை உத்தேசித்து அந்த இடம் அடைகிற சுறுசுறுப்பை உணர முடிந்தது. துண்டு துண்டாக மல்லிகைப்பூ மூடைகள் வந்து கொண்டிருந்தன. உரக்கடையில் குடையை மடக்கிக் கொண்டு ஒருத்தர் உட்கார, பிளாஸ்டிக் ஸ்டூலை வெளியில் போட்டார்கள். அதிகம் கேட்கிற சப்தமாக, ஒவ்வொன்றாக வந்து நின்று ஸ்டாண்ட் போடுகிற டி.வி.எஸ். பிப்டியின் சப்தம் இருந்தது. டீக்கடை முன்னால் செய்தித்தாள்கள் கை மாறின, பீடிப்புகையுடன்.
••••
கடுமையான வெயிலால் பாலகிருஷ்ணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. ‘என்ன மாப்ளே. பாரா முடியலையா. துப்பாக்கியை எங்கே வச்சே. எவனாவது முயல்பிடிக்கத் தூக்கிக்கிட்டுப் போயிறப் போறானுவ’ என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துக் கிண்டல் செய்தார்கள். குத்த வைத்துத் தரையில் உட்கார்ந்திருக்கிற ஒருத்தர், வலிக்காத மாதிரி சிறுசிறு பொடிக்கற்களைப் பொறுக்கி அவன் பக்கம் வீசிக்கொண்டிருந்தார்.
பாலகிருஷ்ணன் கைவிலங்கோடு நடந்து கொண்டிருந்தான். அய்யனார் கோயோல் உசிலை மர நிழலில் ஆரம்பித்து, டீக்கடை தாண்டி, சேவு கடை தாண்டி, நேர் கோடாகப் போய், பஞ்சாயத்து ஆபீஸ் பக்கம் பஸ் திரும்புகிற இடத்தில் மறுபடி திரும்பி, கண்ணுக்குத் தெரியாமல் கிடக்கிற நேர்கோட்டை மீண்டும் பொறுக்கிக் கொண்டிருந்தான்.
அடைத்துக்கிடந்த இன்னொரு கடை விளிம்பில் உட்கார்ந்திருந்த அஞ்சாந்துலா நாயக்கர், ‘ஏ சும்மா கிடங்கடே. அந்த அப்பிராணியைப் போட்டுப் பாடாய் படுத்திக்கிட்டு…’ என்று சத்தம் போட்டார். பாலகிருஷ்ணனைப் பற்றி அவரிடம்தான் பேச்சுக் கொடுத்துத் தெரிந்துகொண்டேன். அவன் வீட்டில் அண்ணன் – தம்பி மூன்று பேரும் இப்படித்தானாம். இவன் எல்லாத்துக்கும் கடைக்குட்டியாம். காட்டு வேலை அப்படிச் செய்வானாம். கொஞ்ச நாள் ஆட்டோ ஓட்டினதாகக் கூடச் சொன்னார்.
‘போஸ்ட் ஆபீஸில் வரவு- செலவெல்லாம்கூட இருந்தது. பாவம், அவங்க அப்பன்காரன் மட்டும் காட்டுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சுக்கிட்டு கிடக்கான். என்னோட அஞ்சு வயசு கூட இருக்கும். எழுதின எழுத்து அப்படி. நீங்க நெனச்சா மாத்த முடியுமா ! – அவர் பாலகிருஷ்ணனுடைய இடத்தில் அவனுடைய அப்பாவை வைத்துப் பேசி முடித்தார்.
என்னைப் பார்த்துச் சொல்ல ஆரம்பித்து, பார்வை நகர்ந்து, சுள்ளென்ற வெயிலுக்குப் போய், கண்கள் கூசி இடுங்கின. அவரைப் போலவே கண்ணை இடுக்கிக் கொண்டு, மறுநாளோ, இரண்டாவது நாளோ லீலாக்காவிடம் பாலகிருஷ்ணனைப் பற்றிச் சொன்னேன். ‘எனக்கு பாலகிருஷ்ணனைத் தெரியும்’ –லீலாக்கா சிரித்தாள். ‘எப்படித் தெரியும்?’ ‘அதுதான் நீ படமே போட்டுக் காட்டிட்டியே. பாலகிருஷ்ணனை மட்டுமில்லை. அந்த அஞ்சாந்துலா நாயக்கரையும் தெரியும்’ என்றாள் வெயிலுக்குக் கூசுவது போல முகத்தை வைத்தபடி.
‘பாலகிருஷ்ணன் மேலே இப்படித் தூக்கி, இப்படி வீசுனாங்களே பொடிசு பொடிசா… அந்தக் கல்லைக் கூடத் தெரியும்’ என்று அவள் சொன்னது அதைவிடவும் ஆச்சரியம். ‘எப்படி இப்படிக் கூடு விட்டுக் கூட பாசுறுதீங்க அக்கா?’- நான் கேட்டதற்கு லீலாக்கா உடனடியாகப் பதில் சொல்லிவிடவில்லை. ‘அதுதாண்டா கஷ்டமாப் போகுது’ – இதைச் சொல்லும் போது அவளுடைய முகம் வலியால் இறுகினதுபோலத் தோன்றியது.
••••
‘இந்தத் தடவை என்ன கொண்டுவரப் போகிறாய்’ என்று லீலாக்கா கேட்டதற்கு ‘சூரியகாந்திப்பூ என்று எந்தத் தீர்மானத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை. சாம்ராஜிடம் இதைச் சொன்னேன். ‘சூரியகாந்திப் பூக்கிட்டே என்ன… சூரியன் கிட்டேயே போயிருக்கோம்’ என்று சாம்ராஜ் சொன்னதற்கு அர்த்தம் அந்த இரண்டு நாட்களிலும் தெரிந்தது.
கடற்கரை ஓரம் இருந்த ஊர்களிலேயே அவனுக்கு வேலையிருந்தது. பேசுகிறவர்களுடையது தவிர மூன்றாவது குரலாகக் கடல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
கடலில் முடிந்து கடலில் துவங்கின ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு சர்ச் இருந்தது. அலையோசைக்கும், மணலுக்கும், தேவாலயங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைக் காற்று பாடிக்கொண்டிருந்தது.
ஏகப்பட்ட மின்சாரவிளக்குகளுடன் சொரூபமும் சப்பரமுமாக நகர்ந்து கொண்டு இருந்த ஊரைத் தாண்டும்போது சாம்ராஜ், ‘உனக்கு இப்போ பலூன் விற்கணும்னு தோணியிருக்குமே சுந்தரம்’ என்று கேட்டான்.‘அல்லது குச்சி ஜஸ் விற்கிறவனாக’ சாம் மறுபடியும் சொன்னான்.
அன்றைக்கு இரவு கடற்கரையில்தான் இருந்தோம். சாம்ராஜ் இந்த இரண்டு நாட்களிலும் சந்தித்த ஆண், பெண் மற்றும் குழந்தைகளின் பெயர்களை எல்லாம் சொல்லி அடுக்கிக் கொண்டே வந்தான்.
‘நைட்டியும் பான்பராக்கும் இந்த ஏழெட்டு வருஷத்துல எவ்வளவு தூரத்துக்கு உள்ளே வந்திருக்கு’ என்று நான் சொன்ன போது, ‘கடல் அரிப்பு மாதிரி’ என்று சாம்ராஜ் சொன்னான். ‘யாரைப் பார்த்தாலும் அழகா இருக்காங்க சாம்’
‘மனுசங்க எப்பவுமே அழகுதானே’ – இதைச் சொல்லும் போது சாம்ராஜ் ரொம்ப அழகாக இருந்தான். ஒரு புலியோ, பூனைக்குட்டியோ செய்வதைப் போல, தன் வலது கையின் மேல்புறச் சதையைக் குனிந்து நக்கிய பின் சொட்டையிட்டுக் கொண்டு ‘ஆ’ என்றான். மணலில் அப்படியே மல்லாந்து படுத்தான். அதற்குப் பிறகு நான் தூங்கியிருக்க வேண்டும். ‘சுந்தரம் எழுந்திரி’ என்று என்னை எழுப்பிய போது சாம்ராஜ் கடலைப்பார்த்து கை நீட்டிச் சொன்னான்.                                                                                  ‘உன் சூரியகாந்திப் பூ’
••••
திரும்புகிற வழியில் பைக் நின்று போயிற்று. எனக்கு ஓட்டத் தெரியும். பின்னால் உட்கார்ந்து வரத் தெரியும். சாம்ராஜ் அப்படியில்லை. அவன் ஒரு நல்ல மெக்கானிக். ‘ஒரு பட்டறை போட்டிரலாமே நீ’ என்று சாம்ராஜிடம் சொன்னால், ‘என் வண்டியை மட்டுமே ஒக்கிட எனக்குத் தெரியும்’ என்று சொல்வான். சொல்லிவிட்டு, அவரவர் வண்டியை அவரவர் ஒக்கிடுக’ என்று சிரிப்பான்.
ஒரு மாந்தோப்புக்கு வண்டியைத் தள்ளிக் கொண்டு போனோம். சரி செய்தோம். பம்ப் செட்டில் குளித்தோம். உலரும் வரை, சாம்ராஜ் இறக்கி வைத்த தோள் பையிலிருந்து எடுத்து சில தாள்களை ஒழுங்கு செய்தான். குறிப்புகள் எழுதிய தாள் நறுக்குகளை, பையில் வெளிப்பகுதிப் பையிலிருந்த ஒரு குட்டி ஸ்டேப்ளரை எடுத்து இணைத்தான். ஒருமுறை வாசித்தான். ‘போகலாமா’ என்றான்.
நான் லீலாக்காவிடம், சூரியன் பார்த்ததைச் சொல்வதற்குரிய ஒத்திகையில் இருந்தேன். சாம்ராஜ் சொன்னதுபோலச் சொல்ல வேண்டும். அவன் தனது வலக்கைப் புறத்தோலை நக்கிச் சொட்டையிட்டுக் கொண்டது உட்பட, லீலாக்கா ‘ஆ’ என்று அவனைப் போலத் திருப்பிச் சொல்வாள்.
••••
 
தெரு வேறு விதமாக இருந்தது. எங்கள் வீடு, எதிர் வீட்டுப் பக்கமெல்லாம் கிடைத்த இடத்தில் மோட்டார் சைக்கிள்கள் நின்றன. சாக்கடையோடு ஒரு சைக்கிள் விழுந்து கிடந்தது. தெளிவான மழைத்தண்ணீரால் கழுவிவிட்டது போலத் தெரு நனைந்து கிடந்தது. நடமாட்டமில்லை. சோம்பல் முறித்தபடி கிடக்கும் நாய்களையும் காணவில்லை.
தாண்டிப் போனபிறகு பெட்டிக் கடையிலிந்து என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். ‘வீட்டுச் சாவி இங்கே இருக்கு’ என்று கடைக்கு வெளியே கை அசைந்தது. அப்படியே வட்டமடித்து உறுமித் திரும்பிக் கடைப்பக்கம் போனேன். காலை ஊன்றி இறங்கக்கூட இல்லை.
‘மருந்தைக் குடிச்சிட்டுதுப்பா’ – பலவேசம் தணிவாகச் சொன்னார். நான் ‘யார்’ என்று கேட்கவில்லை.
லீலாக்கா வீட்டைத்தான் பார்த்தேன்.
தினகரன் தீபாவளிமலர் 2006
தட்டச்சு: சித்திரைவீதிக்காரன் (மதுரை வாசகன்)
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கூடுவிட்டு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s