வண்ணதாசன் முன்னுரை- பெய்தலும் ஓய்தலும்

வண்ணதாசன்
 
இது கூட நன்றாகத்தான் இருக்கிறது.
ஒரு தொகுப்பை அச்சுக்குக் கொடுத்துவிட்டு அதில் சேர்க்கப்பட வேண்டிய கதையை எழுதுவதற்குப் பேனாவைத் திறப்பது.
புதுமைப்பித்தன் 99 சிறுகதைகள் எழுதியிருப்பதாக ஒரு கணக்குச் சொல்வார்கள். புதுமைப்பித்தனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம், அவன் எழுதாமல் போன அந்த நூறாவது கதையை எழுதிவிடத்தான் முயன்று கொண்டு இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது.
சந்ரு புதுமைப்பித்தன் சிலையைச் செய்து அதற்குப் பக்கத்தில் கொஞ்சம் களிமண்ணையும் பார்வையாளர்களுக்காக விட்டு வைத்திருந்தார். அவரவர் வரித்திருக்கிற புதுமைப்பித்தன் சாயலை, அவரவர் விரும்புகிற புதுமைப்பித்தனின் கலாரூபத்தை கொஞ்சம் முயன்றால் அவர்களே அந்தச் சிலையில் தருவித்துக் கொள்ளலாம். ஈரமாக இருக்கிறவரை ஒரு சிலையை வெவ்வேறு சிலைகளாக ஆக்கிக்கொண்டே போகிற சுதந்திரம் விரல்களுக்கும் களிமண்ணுக்கும் இடையில் எப்போதும் இருக்கிறது. அந்த நூறாவது கதையை வெவ்வேறு கதைகளாக ஆக்கிக்கொண்டு போவதற்கும் இந்த ஈரக்களிமண்ணின் தேவை இருக்கவே செய்கிறது.
ஏதோ ஒரு வகையில் வாழ்க்கை ஈரமாகத்தான் இருக்கிறது. இன்று ஈரம் அற்றது எனத் தெரிவது எல்லாம் எப்போதோ ஈரத்துடன் இருந்தவை, இடையில் ஈரம் உலர்ந்தவை, இனியொரு நாள் மீண்டும் ஈரமாக இருக்கச் சித்தமானவைதான் இல்லையா. இந்த ஈரம் மழையினுடையதா, நதியினுடையதா, வியர்வையினுடயதா, கண்ணீரினுடையதா, ரத்தத்தினுடையதா? வாழ்வின் எந்தத் திரவ நிலையைத்தொட்டுக் தொட்டு நாம் எழுதிக்கொண்டு போகிறோம்.
பாலைவன மணலில் புதுமைப்பித்தன் முகத்தைச் செய்ய முடிகிறவர்கள் இல்லாமலா போவார்கள்? மணலின் ஒரு பரலையும் அடுத்த பரலையும் ஒட்ட வைக்கிற பிசுபிசுப்பு ஒன்றை இயற்கை ஈச்சமர நிழலில் வைத்திருக்கும் என்றே நம்பலாம்.
கிருஷ்ணன் வைத்த வீடு இதற்கு முந்திய தொகுப்பு.
அது வெளிவந்து ஆறு வருடங்கள் ஆயிற்று. இந்த ஆறுவருடங்களில் எழுதிய கதைகளே இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. இவ்வளவு கதைகளை மட்டும் எழுதும் படியாகத்தான் வாழ்க்கை இருக்கிறது. இவ்வளவு கதைகளை மட்டுமே எழுதவே வாழ்க்கை அனுமதித்திருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.
‘நரைகூடிக் கிழப் பருவம் எய்துகையில்’ வாழ்க்கை சற்று ஓரமாகப் போகச் சொல்கிறது. இதுவரை சென்றும் செலுத்தியும் கொண்டிருந்த வேகவாகனங்களை விட்டுவிட்டு சற்று நடந்து போ எனப் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. பாதுகாப்பை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, பாதுகாப்பு விதிகளை அனுசரிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. போக்குவரத்து அப்படி. இலக்கியப் போக்குவரத்தும் சேர்த்துத்தான். வாகனங்களின் உந்து சக்தித்திறன் உலகத்தரத்துச் சாலைகள் கணக்கில் எடுக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படுகிறது.
இது நடைபாதை என்பதால், அல்லது இது நடைப்பயிற்சி நேரம் என்பதால், உடன் வருகிறவர்களும் எதிர்வருகிறவர்களும் கூடப் பெரும்பாலும் நம்மைப் போன்றே இருக்கிறார்கள்.
இதுவரையிலும் நம்மிடம் வந்து சேர்ந்து கொண்டிருந்த, நாம் சென்றடைந்து கொண்டிருந்த வித விதமான வாழ்க்கையின் குரல்கள் இப்போது விலகிவிட்டன. பறவைகள் அடைகிற நேரத்தின் கெச்சட்டம் அற்ற அரசமரங்கள் கோடரி விழக்காத்திருக்கின்றன. வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு பார்த்துக்கொண்டே போன பக்கத்து வீட்டுக் கூண்டுப்பறவையைத்தான் திரும்பிவரும்போதும் பார்க்க வேண்டியதிருக்கிறது. அவலும் வெல்லமும் தொலைந்துவிட்டன. அறுப்பு ரொட்டிகள் மட்டுமே பொட்டலமாகக் காத்திருக்கிறது மேஜையில். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாட்டுத்துவங்கும்போது அவசரமாக எழுந்து வருகிறோம். உட்கார்ந்து கேட்பதற்குள் சேனல் மாறி விடுகிறது. அந்தப்பாடலில் வருகிற ஜெமினி கணேசன், ஈ.வி.சரோஜா, சௌகார் ஜானகி மட்டுமல்ல, அந்தப் பாடலின் தூண்டுதலில் கிளறப்படுகிற ஞாபகத்தில் பிரம்மராஜனின் பர்ன்வ்யூ வீடும் ராஜலட்சுமியும் பாபுவும் சுகுமாரனும் கூடத்துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள்.
மரியாதையாகப் புன்னகைக்கிறார்கள்; மரியாதையாக வணக்கம் சொல்கிறார்கள்; மரியாதையாக விலகிப் போய்விடுகிறார்கள். மரியாதையின் நான்கு பக்க அலைகளுக்குள் நமக்குத் தீவாந்திரம். நீச்சல் கூடத் தெரியாது. அப்புறம் எதிர்நீச்சலுக்கு எங்கே போக?
எல்லோரையும் பிடுங்கி நட்டாயிற்று. கி.ரா, சா.கந்தசாமி, பிரபஞ்சன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், நாஞ்சில்நாடன் எல்லோருக்கும் பிறந்த ஊர் ஒன்று இருக்கிற ஊர் ஒன்று. பூமணி, நான் எல்லாம் கிட்டத்தட்ட அதே ஊரில் இருக்கிறோம். அதே வீட்டில் அல்ல. இது பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு ஊர் போவதையும் விடக்கொடுமை.
முப்பத்து நான்கு வருடங்கள் பிறந்து வளர்ந்த வீடு மத்தியானம் சாப்பிட்டுவிட்டுக் கழுவப் போட்டிருக்கிற எச்சில் தட்டு மாதிரிப் புறவாசலில் கிடக்கிறது. சுடலைமாடன் கோவில் தெருவைக்காலம் நிறுத்தி நிதானமாக, பசுமாடு பச்சைவாழைத் தடையைத் தின்பது போலத் தின்று அசைபோட, பூர்விக வீடு மழையில் குளித்து வெயிலில் தலைதுவட்டிக் கொண்டிருக்கிறது. என்றைக்காவது போய் ‘ராத்தங்கினால்’ முந்திய தலைமுறைகளின் குரல்கள் தளச்செங்கலின் வரிவாளங்களுக்கு இடையிலிருந்து கேட்கின்றன. தெருவில் அங்கங்கே எஞ்சியிருக்கிற தலைமுறையோ, பந்தல் சரிந்துவிடாம்ல பந்தல் காலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள். குறுக்கு மறுக்காக நிறுத்தப்பட்டிருக்கிற பலசக்கர வாகனங்களுக்கு இடையில் நுழைந்து பரமபதம் விளையாடி, பாம்பு கொத்தாமல் பஜாருக்கு வந்து பஸ் பிடிப்பதற்குள் சிரமப்பட்டு விடுகிறது.
கொள்ளி வைத்த வகைக்கு ஆச்சி தாலியை அழித்து மோதிரம் செய்து போட்டாயிற்று. சருவச்சட்டி, குத்துப்போணி, குடம், தண்ணீர்க் கொப்பரை, செப்பானை, செம்பு எல்லாம் ஆண்டிநாடார் கடையில் பழைய விலைக்குப் போய்விட்டது. இனிமேல் ‘அழிச்சுப்பண்ண’ எந்த நினைவுகளும் இல்லை. நினைவுகளில் சுரங்கம் தோண்டி எவ்வளவு எடுக்கமுடியும் இன்னும். மேற்கொண்டு எங்கே தோண்ட?
யாரும் வாய்விட்டுப் பேசுவதில்லை.
இத்தனைக்கும் இப்போது இருக்கிற அடுக்கக வீடுகளுக்கு நான்கு பக்கங்களும் பொதுச் சுவர்தான். பத்திரம் எழுதுகிறபோது தபசிலில் இருக்கிற எல்லைகளைப் பார்த்தால் வேதாந்தமாகச் சிரித்துக் கொள்ளலாம். எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. செங்கல் சுவர் சொந்தமில்லை என்பதால் தங்களை வைத்தே சுவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள். முறுக்குக் கம்பிகள் வைத்துக் கட்டப்பட்ட வீட்டின் மனிதர்கள் வேறு எப்படி இருக்க முடியும். முறுக்காகவே இருக்கிறார்கள். நல்லது கெட்டது, சண்டை சமாதானம் எதுவும் வெளியே தெரியாது.
விவாகரத்து ஆனாலும், கொலை பண்ணினாலும் சத்தம் இல்லாமல் ஆனால் கேட்கிற பாடல்கள் மட்டும் கூச்சலாக, கூப்பாடாக. கைமாற்று வாங்கக்கூட இப்போது பக்கத்து ஆட்கள் தேவையில்லை. கூப்பிட்டுக் கடன் கொடுக்கிற வங்கிகள் இருக்கின்றன. வீட்டுக்குள் முதலை நடமாடுகிற விளம்பரப்படங்களை மனம் ஒத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டதில் ஆச்சரியமில்லை.
ஜனனம் மருத்துவமனையில், தகனம் மின்மயானத்தில். உப்புப்புளி மிளகாய்க்குப் பேரங்காடிகள். முறுக்கு, தட்டை, சீடை வகைக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் கடை. நாகரீகச் சொல்லால் ‘ஹோம் நீட்ஸ்’. நமக்கு நாகரீகம்தானே வேண்டும். கருவேப்பிலை, கொத்துமல்லி, கீரைகூடக் குளிர்பதனக் கடைகளில் பேரமும் தொலைந்து, பேரம் பேசுகிற மனிதர்களும் காணாமல் போய்விட்டார்கள். செய்தித்தாள், பால் எல்லாவற்றையும் வீசிவிட்டுப் போய்விடுகிறார்கள். பதிலுக்கு இவர்களும் உபயோகித்துவிட்டுத் தூக்கி எறிந்து விடுகிறார்கள், மனிதர்களை உட்பட. நசுங்கிய காலியாக்கப்பட்ட பற்பசைக் குழாய்களைப் போலாகிவிட்டன வயதானவர்களின் முகங்கள்.
ஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்துப் பேசுவது குறைவு. பேச்சுக் குறையக் குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின், அழிகிற வாழ்வின் எச்சத்துடன் பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல வேண்டியதாகிறது.
ஒரு நசுக்கப்பட்ட புழு, ஒரு குதிரையின் புலம்பல், சாய்ந்த வனம், எரிக்கப்பட்ட நூலகம், புதைந்துபோன இசைக்கருவிகள், வன்புணரப்பட்ட யோனிகள், கலவரங்களில் வேட்டையாடப்பட்டவர், குளிர்பான பாட்டில்களுக்குள் அடைக்கப்படுகிற நதிகள், நம்முடைய தோள் அளவுகள் இடுப்பு அளவுகள் அற்றுத்தைக்கப்படுகிற உடைகள், கடவுச்சீட்டுகளுக்காகச் சுருக்கப்படுகிற பெயர்களில் தொலைந்து போகிற முன்னோர், காகிதத் தட்டுக்களில் பரிமாறப்படுகிற சக்கை உணவுகள், யாரோ முன்தீர்மானிக்கிற நமது அன்றாடத்தின் நிகழ்ச்சி நிரல்கள், சுவடற்று அழிக்கப்படுகிற பண்பாட்டு அடையாளங்கள், கழுகுகள் வட்டமிடத் துவங்கிவிட்ட கழுவேற்றப்பட்டு வெகுநாட்களான மொழி… இப்படியாகவே ஆன வழியில், தென்படுகிற கல்மண்டபங்களும் சில வற்றாத நதிகளும தற்காலிக ஆசுவாசம் அளிக்கின்றன.
நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டுவந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக்கழிவுகளில் மீன்கள் மூச்சுத்திணறுகின்றன. நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்த தினத்துக் கவிதை இருக்க முடியும்.
இன்னும் வாழ்வின் வரைபடத்தில் இருந்து அப்புறப்படுத்தப் படாத சில கிராமங்கள் இருக்கின்றன. அங்கிருக்கிற வாழ்வுடன் அல்லது இருந்த வாழ்வின் பால்யகால நினைவுகளுடன் ஒரு கடைசிச் சந்ததி ஓவியம் வரைகிறது, கதை கவிதை எழுதுகிறது, இசைக்கிறது, திரைப்படம் இயக்குகிறது. இந்தப்பத்தாண்டுகளில் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் உச்சமானவை அவர்களிடமிருந்து வந்தவையே. அவர்கள் நகர்மயமாகிறபோது அவர்களின் கலைகளும் நகர்மயமாவது தவிர்க்கமுடியாதது.
நகரம் ஈவிரக்கம் அற்றது. அது தனிப்பட்ட அடையாளங்களை முற்றிலும் அழிப்பது. நாமாவது கண்ணாடித் தொட்டிய்ல மீன் வளர்ப்போம். டிஸ்கவரி, அனிமல் கிங்டம் அல்லது நேஷனல் ஜியாக்ரஃபி என்று ஏதாவது அயல்தேச யானைகளை, வரிக்குதிரைகளை, சிங்கக் குடும்பத்தை, அயல்தேச ராஜநாகங்களைப்பார்த்துக்கொண்டு இருப்போம். எதிர்காலம் கேலிச்சித்திரங்களாக மட்டும் ஜெட்டிக்ஸ்களாக போகோக்களாக மட்டும் முன்பதிவு செய்யப்பட்ட சிரிப்பும் கைதட்டலும் பொருத்தமாக வீசப்படுகிற அபத்தமான நகைச்சுவைக்காட்சிகளாக மட்டும்.
இந்த அபத்தங்களின் முன்னறிவிப்புக்களை எல்லாம் தாண்டி மழைபெய்து கொண்டிருக்கிறது. ஐப்பசி கார்த்திகை அடைமழை தவிர, காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களின் நகர்வுகளால் உண்டாகிற மழை. மூன்று நாட்களின் தொடர் மழைக்குப் பிறகு இன்று தான் ஓயத் துவங்கிறது.
எனக்கு ஓய்ந்து போகச் சம்மதமில்லை.
இனிமேல் அரிதாரம் கிடையாது என்று படுதாக்களை நிரந்தமாகக் கீழே இறக்கிவிட மனமில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல, இதுவோ கலைக்க முடியாத ஒப்பனை. குலசேகரப்பட்டினம் தசராவுக்குப் போகிறது மாதிரிக் கடைசி வரை ஏதாவது ஒரு வேஷத்தைப் போட்டு நேர்த்திக்கடனைக் செலுத்திக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
புதிய புதிய நேர்த்திக் கடன்கள். ஆனால்  ஏற்கனவே போட்டுக் கொண்டிருக்கற வேஷங்கள். ஒரே வேடத்தைத் திரும்பத் திரும்பப் போட, வேடத்தின் அடர்த்தி கூடுமா குறையுமா தெரியவில்லை. அது, வேஷம் கட்டுகிறவன் அல்ல. வேஷம் பார்க்கிறவன் பதில் சொல்ல வேண்டிய விஷயம். அவன் பதில் சொல்ல மாட்டான். அவனுக்குப் பத்தாம் தசரா முடிகறவரை திரும்பிய இடமெல்லாம் ஒப்பனை முகங்கள். முடிந்த பிறகு அப்புறம் பார்க்க அவனுக்குக் கடல். இன்னும் சிலருக்கு மணல்.
ஆனால் அடுத்த வருடமும் தசரா வரும். அடுத்த தடவையும் மழை பெய்யும். ஓயும். மறுபடி பெய்யும். சில சமயம் மழைப் பிரதேசம். சில சமயம் மழைநிழல் பிரதேசம். அவ்வளவுதான்.
அவ்வளவுதானா?
                கல்யாணி.சி
20.12.2007
 
தட்டச்சு உதவி: சித்திரவீதிக்காரன்
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் முன்னுரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வண்ணதாசன் முன்னுரை- பெய்தலும் ஓய்தலும்

  1. பெய்தலும் ஓய்தலும் முதல்பதிப்பு 2007ல் வந்து உள்ளது. ஆயிரம்பிரதிகள் தான். நான் இந்த மாதம் தான் வாங்கினேன். வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்பே நான்கு ஆண்டுகளாக ஆயிரம் பிரதிகள் விற்கவில்லையென்று சொன்னால் தமிழர்களின் வாசிப்பை எண்ணி வருத்தமாக இருக்கிறது. தமிழர்கள் ஆறுகோடிப்பேர் என்றால் ஒரு புத்தகம் ஆறுலட்சம் பிரதிகளாவது விற்க வேண்டாமா? வாசிப்போம். புத்தகங்களை வாங்கி பரிசளிப்போம். நன்றி.”பெய்தலும் ஓய்தலும்” சிறுகதைத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கியதுமே மழை பெய்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s