வண்ணதாசனின் ஓவியக் கைகள்

{சிறுகதைகளில் ‘வண்ணதாசன்’ ஆகவும், கவிதைகளில் ‘கல்யாண்ஜி’ ஆகவும் அறியப்பட்டவர் கல்யாணசுந்தரம். தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர்.
 ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் நானில்லை’’ என்று சொல்லிக் கொள்ளும் இவர், கவிதை, சிறுகதைகளைத் தாண்டி உயிர்ப்புள்ள கோட்டோவியங்களுக்கும் சொந்தக்காரர்.}
 ‘’இந்த எல்லாக் கோடுகளையும் சற்று முன் அடுத்தடுத்து வரைந்தேன். என்னுடைய 66 வயது விரல்கள் ஒரு பின்னிரவு உத்வேகத்தில், என்னைச் சுற்றிக் கிடக்கிற சமீபத்திய தமிழ், ஆங்கில இதழ்களைப் பார்த்துக் கொண்டே இழுத்தவை. இந்த சமீபத்திய கோடுகளுக்கும், இதற்கு முன் கடைசியாக வரைந்த கோடுகளுக்கும் இடையே பல பத்தாண்டு இடைவெளி கூட இருக்கும். நான் சமீபத்தில் வரையவே இல்லை. 50 ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். எழுத்தும் ஒரு வித வரைதல்தான். அதிலும் இதே வேகவேகமான, தன்னிச்சையான, பீறிடும் கோடுகள் உண்டு. அந்தக்கோடுகளில் நான் வெவ்வேறு மனிதர்களின் சாயல்களை வரைகிறேன். உங்களுக்கு பரிச்சயமான மனிதர்களையும் அந்தக் கோடுகளில் அடையாளம் காண்கிறீர்கள். அப்படி ஒரு மனிதரின் சாயல் பிடிபடும்போது, அந்த மொத்தக் கதையுமே உங்களுக்குப் பிடித்துப் போகிறது. ஒரு குரூப் போட்டோவின் பின் வரிசையில் நீங்களும் நிற்கிறது போல, அந்த எழுத்தைச் சட்டமிட்டு உங்களுக்குள் தொங்கவிட்டுக் கொள்கிறீர்கள். நீங்கள் அடுத்த தலைமுறையெனில் ஆல்பத்தில் செருகுகிறீர்கள். அதிலும் நவீனமான கணிப்பொறிச் சந்ததியெனில் குறுந்தகடு, குறுவட்டுகளில் அந்த முகங்களைப் பதிவு செய்து ஓட விடுகிறீர்கள்.
 எல்லாம் கோடுகள்தான். நேர்க்கோடுகள் அல்ல… வளைவு கோடுகள். எங்கள் அம்மாவைப் பெற்ற தாத்தா – அம்மாத்தாத்தா எங்களுக்கு வளைவு கோடுகளையே முதலில் கற்றுக்கொடுத்தார். அவர் ஆசிரியர் அல்ல… ஆனால், ஒரு பள்ளிக்கூட ஆசிரியரை விட அதிகமான சாக்பீஸ்கள் அவரிடம் எப்போதும் இருக்கும். மஞ்சள், ரோஸ், கருநீலம், இளம்பச்சை, காவி என சற்றே மாறுதல் வண்ணங்கள் உடைய வினோத வானவில்லை அவர் வைத்திருந்தார். சாக்பீஸால் தரையில் வரைவார். 80-100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீட்டுப்பட்டாசாலில் சதுரம் சதுரமான தளச்செங்க்கற்கள் சிவந்து கிடக்கும். அதன்மேல் அவர் வரைவார். அழிக்காமல், திருத்தாமல், கையைத் தரையை விட்டு எடுக்காமல் சாக்பீஸ் நகர நகர… ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு யானை – இந்த மூன்றில் ஏதாவது ஒன்று எங்கள் வீட்டுக்குள் வந்திருக்கும்!
 அப்போதெல்லாம் சின்னப் பிள்ளைகளுக்கு சட்டையாவது ஒன்றாவது? வார் போட்ட டிராயர். முன்பக்கம் அநேகமாகத் திறந்துதான் கிடக்கும். அந்த வெற்று வயிற்றோடு, அந்த சாக்பீஸ் யானை மேல், குதிரை மேல், மாடுமேல், புரளச் சொல்வார். குனிந்து பார்த்தால் என் வயிற்றில் யானை, கணபதி அண்ணன் வயிற்றில் குதிரை, நீங்கள் பக்கத்தில் இருந்தால் உங்கள் வயிற்றில் கொம்பும் வாலுமாக மாடு.
 இன்றைக்கு ஏதோ இப்படி எழுத்துக் கூட்டி ‘ஓவியம்’ என்று உச்சரிக்கத் தெரிகிறது. அப்போது அந்தச் சொல்லே ஆடம்பரம். ‘அண்ணனும் தம்பியும் எப்பப் பார்த்தாலும் எதையாவது கிறுக்கிட்டு இருக்காங்க’ என்று சொல்வார்கள். கிறுக்குவது என்றால் வரைவது. வரைவது ஒருவகைக் கிறுக்கு என்பதால், அதை ஆட்சேபிக்கவும் எங்களுக்கு அவசியமில்லாது போயிற்று.
நான் கோபுலு படங்களால் ஈர்க்கப்பட்டேன். விகடனில் அப்போது வந்திருந்த கோபுலு படங்களை எல்லாம் யாராவது மொத்தமாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. அந்தக் கும்பகோண விரல்களுக்கு, பூசலார் மாதிரி நான் இப்போதும் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கட்டுமானம் முடிந்த பாடில்லை. கோயில் அவ்வளவு பெரியது.
ஒரு பக்கம் கோபுலுவின் அழகழகான பிராமணக் குடும்பத்து முகங்கள். இன்னொரு பக்கம் முத்தாரம், குமுதம் இதழ்களில் எல்லாம் ‘விமலா’ என்றும் ‘செ’ என்றும் வரைந்து கொண்டு வந்த செல்லப்பனின் பக்கத்து வீட்டு, அடுத்த மனிதர் ஜாடையுள்ள முகங்கள். செல்லப்பன் எந்த ஊர்க்காரர் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் கோட்டோவியங்களில் கோமதி அக்காவோ, ஆவுடைப் பெரியம்மையோ, திருநாவுக்கரசு மாமாவோ, சபாபதி சித்தப்பாவோ தென்பட்டுக் கொண்டே இருப்பார்கள். நான் கோபுலுவைப் போலவும், செல்லப்பனைப் போலவும் வரைந்துகொண்டே இருந்தேன். நடுநிசிநாய்கள் குரைக்கத் தொடங்கிவிட்ட இந்தப் புழுக்கம் நிறைந்த இருளுக்குள்ளிருந்து, ஒரு செல்லப்பன் ஓவியம் புறப்பட்டு என் அருகில் வந்து, ‘என்னடே பண்ணிக்கிட்டு இருக்கே அர்த்தராத்திரியிலே’ என்று கேட்கும் எனில் சந்தோஷமாகத்தான் இருக்கும்.
கணபதி அண்ணனும் சரி, நானும் சரி… ‘கண்டமானைக்கு’ எது எது கையில் கிடைக்கிறதோ அதில் எல்லாம் வரைந்து கொண்டே இருந்தோம். பென்சில், பேனா, இந்தியன் இங்க நிப், பிரஷ் எதுவும் தள்ளுபடியே இல்லை. எந்தப் புத்தகத்தில் என்ன படம் வருகிறதோ, அதை அப்படியே வரைந்து பார்க்க வேண்டியது. நிஜமாகவே சித்திரமும் கைப்பழக்கம்தான். எங்களுக்கு அந்தக் கைப்பழக்கம் வாய்த்து, சொடக்குப் போடுகிற நேரத்தில் எதையும் வரைய முடிந்தது. எனக்கு நிதானமான கோடுகளை விட வேகமான கோடுகளே பிடிக்கும். நின்று நிறுத்தி அச்சடித்தது மாதிரி பிசிறில்லாமல் வரைவதை விட, ஓடுகிற மிருகத்தை அல்லது சுழன்றாடுகிற பொழுதின் உடைவிசிறலை, தட்டான் பறப்பதைப் போல கோடுகள் அந்தரத்தில் நிற்கிற மாதிரி வரையப் பிடிக்கும்.
அதனால்தான் எனக்கு ஆதிமூலம், மருது கோடுகள் பிடிக்கின்றன. தமிழில் கோபுலுவும், ஆந்திரப் ப்ரபாவில் பாபுவும், கேரளத்தில் நம்பூதிரியும் பிடித்திருந்த மனநிலை, சட்டென ஆதிமூலம், மருது பக்கம் உடனடியாக நகர்ந்து விட்டன. அதற்கு காரணம் அவர்களுடைய கோடுகளின் பாசாங்கற்ற இயல்பான வீச்சுகள். அதிலும் மருதுவை நான் மிகவும் விரும்பினேன். நான் மருதுவின் வாழ்வை வாழ முடியாது போனதில் இன்றும் எனக்கு வருத்தமுண்டு. அம்பாசமுத்திர வங்கிக் கிளையில் களப்பணி அதிகாரியாக இருக்கையில், கடன்தாரர்களின் புகைப்படங்களைப் பேரேடுகளில் இருந்து நகல் செய்து வரைந்துகொண்டே இருப்பேன். அந்தக் கோட்டோவியங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் என்னை ஓவியனாக நிலை நிறுத்தும் உயிர்ப்பு மிக்கவையாக இருந்திருக்கும்.
 வேலை கிடைக்காமல், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பக்கம் வெள்ளாளத் தெருவில் அண்ணன் வீட்டில் இருந்த சமயத்தில், அந்த வீட்டின் பின்பக்கக் கிணற்றடியில் படுத்திருக்கும் மாடுகளை, கன்றுகளை எல்லாம் கருப்புமைப் பேனாவில், சோவியத்லாண்ட் செய்தித் துறையின் ஒரு பக்கக் காகிதங்களில் வரைந்து கொண்டே இருந்தேன். ஒரு ஆயனுக்கும் அவனுடைய ஆநிரைக்கும் இடையே உள்ள அத்தனை நெருக்கமும் பதிவாகியிருந்த அந்தச் சித்திரங்களும் கைவசமில்லாமல் போய்விட்டன. எதையுமே நான் கையகப்படுத்துவதில்லை. தேரோட்ட நோட்டீஸ்களைப்போல, பெரும் அரசமரத்தின் உதிரும் பழுப்பிலைகளைப் போல, நெடுஞ்சாலையில் நசுங்கிக் கிடக்கும் தெருநாய்போல, கலைந்து குலைந்து காற்றோடு அவை போய் விடுகின்றன.
பீறிடும் கோடுகள். அதில் உங்களுடைய, என்னுடைய அல்லது அடுத்த முன்றாவது நபர் ஒருவரின் சாயல். ஒருவரைக் கோட்டில் இழுத்தால் போதும். அது உலகத்தையே தேராக ரத வீதி நேர்க்கோடு மாதிரி. ஆனால், வளைகோடுகள் எல்லாம் வளைகோடுகள்தானே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-நன்றி . குங்குமம் 24.10.2011
நன்றி: தட்டச்சு: சித்திரவீதிக்காரன்
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் நேர்காணல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to வண்ணதாசனின் ஓவியக் கைகள்

  1. வண்ணதாசனைப் போலவே நானும் கோட்டோவியங்களின் காதலன். எந்நேரமும் எதாவது கிறுக்கிக் கொண்டேயிருப்பேன். வண்ணதாசன் எனும் பெயரே அவர் ஓவியங்களின் மீது கொண்டுள்ள விருப்பத்தை தானே கொண்டுள்ளது. அற்புதமான பகிர்வு. நன்றி.

  2. s.raajakumaran சொல்கிறார்:

    வேகமாக சுழல்கிற ஓவியமாக உலகம் இருக்கிறது.அதில் பறக்கும் கோடுகளாக,
    ஊர்ந்து செல்லும் புள்ளிகளாக,வழியும் வளைவுகளாக நாம்…அம்பா சமுத்திர வங்கிச் சுவர்களுக்குள் நீங்கள் வரைந்த கோட்டோவியங்களை பத்திரப் படுத்தியிருக்கலாம்…பரவாயில்லை.வரைந்த ஓவியங்களை விட இழந்த ஓவியங்களே என்றும் உயிர்ப்புடன் இருக்கும்.செலவழித்த சொற்களைப்போல் அவை நினைவுச் சுவரில் எதிரொலி[ளி]த்துக் கொண்டே இருக்கும்….
    நேசமிகு எஸ்.ராஜகுமாரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s