தெரிந்து செயல் வகை

தெரியும்.
கொஞ்சம் உரைநடைத்தன்மை அதிகம். தெரிந்துதான் இப்படி எழுதினேன்.
அல்லது எழுதின உடனேயே தெரிந்துகொண்டேன், இவை இப்படி இருக்கின்றன என்று.
எப்படி எப்படியெல்லாமோ இருக்கிற, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என உரிமம் பெற்றது போல எழுதப்படுகிற இன்றைய நவீன கவிதைகளின் போக்கில், இப்படி இருப்பதற்கும் இடமும் பொருளும் ஏவலும் உண்டு நிறையவே.
கதைக்காரர்கள் அனுபவச் சாற்றின் கடைசிச் சொட்டு வரை பிழியப்பட்டுச் சக்கையாக உலர்ந்த நிலையில், அ-கதைகள் எழுதமுற்படுவதும், கவிதை எழுதிவந்தவர்கள் உரைநடையின் தாழ்வாரங்களுக்கு நகர்வதும், என்னைப் போல கவிதையும் கதையும் ஆரம்பத்தில் இருந்தே எழுதுகிறவர்கள் கவிதைகளைப் போன்று கதைகளையும், கதைகளைப் போன்று கவிதைகளையும் எழுதுவதும் கட்டற்ற இந்த தின மொழியின் உச்சரிப்புக்கு ஒத்துப் போவதுதான். ஒத்துப் போவதற்குச் சம்மதமில்லையெனில், ஏற்புடையது என வைத்துக்கொள்ளலாம்.
இந்த ’மணலுள்ள ஆறு’  நிச்சயம் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘புலரி’ அல்ல.  புலரியாக இருக்கவும் முடியாது என நானும், என்னைப் போலவே நீங்களும் அறியமுடிகிறவர்களாகவே இருக்கிறோம். அப்படி இல்லை என்பதுவே என் நிச்சயமான மகிழ்ச்சியும்.
”நாணல் முளைத்த/தண்ணீர்க் கரை நனைத்து/நதியெல்லாம் மணல் பாய/ குளித்துக் கரையேறும்/ கல்மலர்கள்” எனக் கோடையை முன்பு எழுதியவன் தான் மணலற்ற நீர்க்கருவை முட்படுகைக்குள்ளிருந்து துளாவி எடுத்த வரிகளால் ‘மணலுள்ள ஆறு’ என ஒரு கவிதை எழுதுகிறான். முன்பு, ‘ஊரின் எல்லையில் ஓயாத பேராறு’.  இப்போது அது அவனுக்கு அது ‘நீண்டு ஒடுங்கி நகரும் ஒரு ஏமாற்றம்’.  ஆச்சியின் மர அலமாரியில் கண்டெடுக்கப்படும் லைபாய் சோப்புத் துண்டில் இத்தனை காலமும் மணல்மணலாக ஒட்டி ஓடிக் கொண்டிருக்கிறது அவனுடைய ஆறு. இந்தத் தொகுப்பிலாவது ஆச்சியின் ஊதாச் சோப்புடப்பாவில் அது அகப்படுகிறது. அடுத்து ஒரு தொகுப்பு வரும் எனில், தனக்குள் உள்ளடக்கும்படியாக, ‘ஆறு’ என்ற ஒரு சொல் தாமிர பரணியாக அதில் ஓடிக்கொண்டிருக்குமா என்று தெரியவில்லை.
நெடுஞ்சாலைக் கல் மண்டபங்களில் சிலவற்றில் சுவர் வளர்த்துவிட்டார்கள். ஒரு ஊரில் வாகனப் பட்டறை ஒன்றைக் கூட அப்படியொரு மண்டபத்தில் பார்த்த ஞாபகம்.  சாராய விற்பனைக்கும் ஆற்றோரக் கல் மண்டபங்களுக்கும் உள்ள ஆதி உறவில் எந்த விரிசலும் உண்டாகாத வரையில், இந்தப் புதிய பட்டறைகளைக் குறித்துக் கவலைப்பட அவசியமும் இல்லை. அங்கு ஒரு அறுவடைக்கால வைக்கோல் பிரித் தொட்டில் அசைந்து அதை ஈடுகட்டிவிடும்.
ஆனாலும் கல்மண்டபங்கள் சரிந்துகொண்டிருக்கின்றன. திருநெல்வேலி வெளித் தெப்பக்குளத்தின் வடக்குச் சுவர்கள் பொக்கையாகி நாளாயிற்று. தைப் பூச மண்டபம் இன்னும் தாக்குப் பிடித்துக்கொண்டிருப்பது ஆச்சரியம். குறுக்குத்துறைப் படித்துறைக் கற்களின் காலகாலக் குளிர்ச்சி எந்த வேனில் கால வெயிலிலும் உலர்ந்துவிடவில்லை. கம்பா நதிப் பக்கத்துக் காட்சி மண்டபம் காந்திமதி நெல்லையப்பர் திருக் கல்யாணத்திற்காக இன்னும் காத்திருக்கிறது, வருடா வருடம்.
சரிகிற கோபுரங்களைக் கூடப் புதுப்பித்துவிடுகிறார்கள். கல்மண்டபங்களின் சிதிலங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. கல்லின் மீது மரியாதை அற்றவர்கள் மணலின் மீது எப்படிப் பரிவு கொள்வார்கள். தீயின் தகவறியாதவர்கள் நீரின் நகர்வறியாதவராகவே இருப்பார்கள்.  இப்படி நீரையும் நெருப்பையும் வானையும் மண்ணையும் காற்றையும் இழந்துகொண்டு இருக்கிறவர்களான நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தக் கவிதைகளை இழக்காது இருப்போம்?
நாளை நாம் இழக்கப்போவது இருக்கட்டும்.
இன்று நான் இழக்காதவைகளிலிருந்தும்,  ஏற்கனவே இழந்திருப்பவையில் இருந்தும், இழக்கவே போவதில்லை ஒரு போதும் என உணர்கிற சில சார்ந்தும், இந்தக் கவிதைகளை எழுதிவந்திருந்தேன்.  நான் என் கதைகளை அதிகம்  எழுதாத ஒரு நீண்ட விதையுறக்க காலத்தில் தொடர்ந்து எழுதப்பட்டவை இவை என்பதால், அங்கங்கே உட்கிடையாகவும் வெளிப்படையாகவும் என் முழுக் கதைகள் அல்லது கதையின் கூறுகள் இவற்றுள் நிறையவே இருக்கின்றன.
இலக்கியாவும், அர்ச்சனாவும், மாரியும், புஷ்பலீலாவும், புனித பீற்றர் தெருப் பெண்களும், உலர்ந்த கண்கள் உள்ள சினேகிதியும், சிரிக்கும் டிக்கட் பரிசோதகரும், சிதை மண் குழைப்பவரிடம் மயான மரத்தின் வயது கேட்கிறவனும், செம்போத்தும், பசித்துச் செத்த கிழப் பாம்பும், எச்சச் சொட்டுகளும், எறியப்பட்ட சொர்ணாக்காவின் இசை நாடாக்களும் அதனதன்/ அவரவர் அளவில் ஒரு ஒளித்துவைத்த கதையுடன் உலவிவருவதாகவே நினைக்கிறேன்.
’எண்கள் தேவையற்ற உரையாடல்’  என்ற சமீபத்திய கதையின் மூலவடிவமாக ஒரு கவிதை-’ என்னுடைய துணுக்குகள்’- இதில் உண்டு. ‘கூடவே’ என்கிற மற்றொரு கவிதையை, இப்போது கூட இன்னொரு நல்ல சிறுகதையாக என்னால் எழுதிவிடமுடியும்.
எதைத்தான் எழுதமுடியாது?
எனக்கும், எனக்கு உள்ளும் எனக்கு வெளியிலும், உங்களுக்கும், உங்களுக்கும் எனக்கிடையிலும், நமக்கும்   நமக்கு மத்தியிலும் நிகழ்ந்துகொண்டு இருந்தவைகளை நான் எழுத முற்படுகையில், கவிதையாகவோ கதையாகவோ அவை எப்படித்தான் இருந்தால் என்ன?
எப்படி இருப்பினும், அது என்னையும், என் மரத்தையும், என் பறவையையும், என் தெருவையும், என் மனிதரையும் சொல்வதே. என் மனிதர் எதில் முங்கிக் குளித்தார்களோ, எதை அள்ளிப் பருகினார்களோ அந்த நதியைப் பற்றிச் சொல்வதே. என் நதியைச் சொல்லும்போது என் மணலையும் சேர்த்தே சொல்கிறேன். ‘மணல் உள்ள ஆறு’ என்று நான் எழுதும்போது,  மணலற்றுப் போன ஆறை வாசிக்க உங்களால் முடியும் என நம்புகிறேன்.
இந்தத் தொகுப்புக்கு உத்தேசமாக, ‘மணலுள்ள ஆறு’ என ஒன்றும், ‘ஓடிப்போகும் புத்தர்’  என மற்றொன்றும் தலைப்பாக இடுவதற்குத் தேர்வு செய்திருந்தேன். புத்தருக்கென்ன? அவர் ஓடிப்போவார். திரும்பி வருவார். ஆனால், காணாமல் போன மணல் ஒருபோதும் ஆற்றுக்குத் திரும்பிவரப் போவதில்லை. அந்த திரும்பிவராமை நம்மீது கவியச் செய்யும் பாரத்தை, சற்றே இங்குள்ள வரிகளில் இறக்கிவைக்கிறேன். அல்லது உங்களுக்குத் தோள் மாற்றுகிறேன்.
எங்கேனும், ஏதேனும் ஒரு மணலற்ற ஆற்றை அறிந்தவர் நீங்கள் எனில், இந்தக் கவிதைகளையும் அவற்றின் மணலோடும் நீர்மையோடும் அறியமுடியும்.
நான் அறிந்ததற்கும் நீங்கள் அறியமுடிவதற்கும் இடையில் ஓடுகிறது இந்த மணலுள்ள ஆறு.
கல்யாணி.சி                                     19.சிதம்பரம் நகர்,
09.11.2011.                                       பெருமாள்புரம்,
9994431085                                          திருநெல்வேலி 627007
(சந்தியா பதிப்பகம் வெளியிட இருக்கும் வண்ணதாசனின் “மணல்   உள்ள ஆறு”  என்ற கவிதைத் தொகுப்புக்கு  “தெரிந்து செயல் வகை”  என வண்ணதாசன் எழுதி அனுப்பியுள்ள முன்னுரை.)
Advertisement

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசனின் முன்னுரைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தெரிந்து செயல் வகை

 1. rathnavel சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நமது இயற்கை வளத்தை சிதைத்துக் கொண்டேயிருக்கிறோம்.
  நன்றி ஐயா.

 2. vaanambadigal சொல்கிறார்:

  எப்பொழுது வெளிவருகிறது?

 3. R.Raveendran சொல்கிறார்:

  இன்றைய மணல் அற்ற ஆறுகள், பேராசையின் குழந்தைகள்..

  மனிதம் அற்றுவிட்டதின் அடையாளங்கள்..

  மனிதம் தோற்றபின்

  மானுடம் எப்படி வெல்லும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s