பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

வண்ணதாசன்
(அநேகமாக வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளுமே எனக்கு மனப்பாடம். அவரது கதைகளிலேயே என் மனதுக்கு நெருக்கமான சிறுகதையாக நான் கருதுவது, ‘பற்பசைக்குழாயும், நாவல்பழங்களும்’ என்ற கதையைத்தான். வண்ணதாசன் தனது சிறுகதைகளில் பெரும்பாலும் கதை சொல்ல முனையமாட்டார் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம். நினைவிலிருந்தே என்னால் சொல்ல முடிகிற ஒரு நல்ல கவிதை, இந்தக் கதையில் உள்ளது.
‘கோகுலமும் குழல் ஒலியும்
கோபியரும் கண்ணனுமாய்
ஆகும் ஒரு காதல்
அட்டவணை எனக்கில்லை’.
வண்ணதாசன் அண்ணாச்சியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது, ‘ஒங்க கதைகள்லயே எனக்குப் புடிச்ச கத, ‘பற்பசைக்குளாயும், நாவல்பளங்களும்’தான் அண்ணாச்சி’ என்றேன். நான் சற்றும் எதிர்பாராதவண்ணம், எழுந்து வந்து என்னைச் செல்லமாக அணைத்துக் கொண்டு சொன்னார். ‘எளுதுறவனோட மனசுக்கு நெருக்கமா ஒண்ணு ரெண்டு கத இருக்கும்லா? அப்பிடி ஒண்ண சொல்லிட்டெ. ரொம்ப சந்தோஷம்’.
மேற்சொன்ன சம்பவத்துக்குப் பிறகு ‘பற்பசைக்குழாயும், நாவல்பழங்களும்’ சிறுகதை என் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது.
வண்ணதாசன் தனது சிறுகதைகளில் கூடுமானவரை கதை சொல்ல முனைவதில்லை. மனிதர்களை, அவர்களின் மனங்களைச் சொல்ல வருகிறபோது கதைக்கு அங்கே என்ன வேலை? அதுபாட்டுக்கு அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றுவிட வேண்டியதுதானே! அப்படித்தான் வண்ணதாசன் ஒவ்வொரு மனுஷாளையும் பார்த்துக் கொண்டு நின்று விடுவார். அவரது எழுத்துகளைப் படிக்கும்போது நாமும் நம்மையறியாமலேயே அவருடன், அவர் பார்த்துக் கொண்டிருக்கிற மனிதர்களுடன் போயேவிடுவோம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் அவ்வளவு பெரிய தேரோட்டத்தை, வீட்டு வேலை செய்யும் ஒரு சிறுமியின் வாயிலாக நமக்கு படம் போட்டுக் காண்பிக்கும் இந்த ‘நிலை’ என்ற சிறுகதையை, தன்னை பாதித்த மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளில் ஒன்றாக அமரர் சுஜாதா ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வி, கதையைப் படித்து முடித்த பின் அடிபட்டுப் போய்விடும்……….சுகா)
புறப்பட வேண்டியதுதான்.
செருப்புப் போடவேண்டியதுதான் பாக்கி. அந்த நேரம் பார்த்து ‘நவ்வாப் பழம்’ என்று சத்தம் கேட்டது. நாவல் பழம் விற்கிறவர்களுக்கு உலகம் முழுவதும் ஒரே மாதிரிக் குரல்கள் போல. அந்தந்தப் பழம் அப்படியொரு குரலை எல்லோர்க்கும் கொடுத்து விடும் என்று தோன்றியது.
தலையில் இருக்கிற நார்ப் பெட்டி, நார்ப் பெட்டி உள்விலாவில் இருக்கிற நாவல் பழக் கறை, கருத்த பழைய காலத்து இரும்பு உழக்கு, பழத்தை அளந்து போடுகிற அந்த மனுஷியின் உறுதியான விரல்கள், “உங்ககிட்ட கூடுதலா விலை சொல்லி நாங்க என்ன மச்சுவீடாம்மா கட்டப் போகிறோம்!” என்ற பேச்சு எல்லாமே இருபது முப்பது வருஷத்துக்கு முன்னாலிருந்து பெயர்ந்து வந்து, இந்த தினத்துடன் அப்பிக் கொண்டது போல இருக்கிறது.
களக்காட்டுச் சாய்பு ஒருத்தர்தான் எங்கள் வாசலில் நாவல் பழம் கொண்டு வந்து விற்பார். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸீசன் இருப்பதுபோல நவ்வாப் பழத்துக்கும் ஒரு ஸீசன் உண்டல்லவா? சாய்புவை ஆவணி புரட்டாசியில் மட்டும்தான் பார்க்கலாம். நாவல் பழம் விற்றே ஒருவன் காலம் தள்ளிவிட முடியுமா? தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் நிறைய விஷயம் இருக்கிறது. வெறும் அரைஞாண் கயிறு விற்றுக் கொண்டே மேம்பாலத்துக்குக் கீழ், கண்ணம்மன் கோவில் தெரு முக்கில் அல்லது எஸ்.ஆர்.எஸ். கடையிலிருந்து சாலைக் குமாரசாமி கோயில் தூரத்துக்குள் நிற்கிற அந்த இளைஞனின் ஞாபகம், இரண்டு வருஷத்திற்கு முன் நசிருதீன் ஷா திரைப்படம் ஒன்றைப் பார்க்கும்போது வந்தது. ‘இருப்பத்தஞ்சு காசு’ என்பதை ‘இருபத் தஞ்ச்….காஸ்’ என்று உச்சரிக்கிற குரலும் கொடிகொடியாக இடதுகையில் தொங்குகிற பட்டுக் கயிறுகளுமாக வாழ்க்கையைக் கழித்துவிடுகிற அவனைவிட நான் என்ன பெரிதாகக் கிழித்திருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. கிழிப்பதற்கு அப்படியொன்றும்… சொல்லப்போனால் நிஜத்தில் ஒன்றுமில்லை என்பது வேறு இருக்கிறது.
“ஒருத்தி நவ்வாப் பழம் விற்றுவிடக் கூடாது. பனங்கிழங்கு விற்றுவிடக் கூடாது. உடனே ஒரே தவ்வாத் தவ்வி, எங்க ஊரு எங்க ஊருன்னு போய் உட்கார்ந்துக்கிட வேண்டியது. ரூபாயை எடுத்துக் கொடுங்க. அவளை அனுப்பட்டும். நாலு இடத்துக்கும் போயி அவ விற்கணும். நம்ம வீட்டு நடையிலேயே கால்படி நவ்வாப் பழத்துக்குக் காத்துக் கிடந்தால் போதுமா?”
“கூட ஒரு கால் படி வேணும்னா வாங்கேன். பிள்ளைகள் செழிப்பாகத் திங்கட்டும்.” எனக்கு அடுத்த வருடம் உலகத்தில் நாவல் பழங்கள் இருக்குமா என்று சந்தேகம் வந்துவிட்டது. இப்படி நிறையச் சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
பசலிக் கொடி இருக்குமா என்று சந்தேகம் வந்து ரொம்ப நாளாகிவிட்டது. அரசடிப் பாலத்தெரு வாய்க்காலே சாக்கடை மாதிரி ஆகிவிட்ட பிறகு, அதிலும் சிமெண்ட் தளம் வேறு போட்டுவிட்டார்கள் – தாமரைப் பூக்களும், மீன்களும் எப்படி மிஞ்சும்? வாய்க்காலே இல்லாவிட்டால் படையாச்சித் தாத்தா எப்படி மீன் பிடிப்பார்? எப்படி எனக்குத் தூண்டில் கட்டிக்கொடுப்பார்? இது ‘உபயோகி தூக்கி எறி’ காலமாகிவிட்டது. இன்னும் கொஞ்ச காலம் போனால் ஐம்பத்தி ஐந்து வயது ஆகிவிட்டது அல்லவா என்று அலுவலகம் தூக்கி எறியும். மெத்தென்று நாலைந்து உதிர்ந்த ரோஜா இதழ்கள், தேய்ந்து ஓடாகிப் போன சம்பிரதாயப் புகழ்ச்சிகள், “அண்ணாச்சி சுந்தரம் ஓய்வு பெற்றாலும், அவர் விட்டுச் சென்றிருக்கிற நிர்வாகச் சுவடுகள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கணிப்பொறிச் சந்ததியினருக்குக்கூட முன்னுதாரணங்களை அடக்கியது.” என்று பிசுபிசுப்புடன் வீட்டு வாசலில் கிடப்பேன்.
அப்புறம் ரேஷன் வாங்கவும், பால் கவர் வாங்கவும், மின்கட்டணம் கட்டவும் கொஞ்ச காலம். வழிவிடு முருகா அல்லது வரசித்தி விநாயகர் என்று ஏதேனும் ஒரு கோவில் பட்டர் மாத்திரம் எதிரே வந்தால் சிரிப்பார். மருந்துக் கடைப் பையன் போய் நிற்கிறதற்கு முன்னாலே மாத்திரையை எடுத்து வைத்துவிடுவான். இந்த ஊரில் உட்கார்த்தி வைத்து மேளம் அடித்துக் கொண்டு போவதையே பார்த்துப் பார்த்து நாற்காலியில் தனியாக உட்கார்வதைக்கூட வெறுக்கத் தோன்றும். வல்ல நாட்டுப் பொத்தை தாண்டினால் ஒரு மண்டபம் இடிந்து கிடக்கும். அதில் உட்கார்ந்திருக்கிற கிழட்டுக் கழுகின் ஞாபகம் வரும். அது ரொம்ப காலமாகவே அங்கே இருக்கிறது. முனிசிபல் தண்ணீர் டாங்கின் கீழ் சிமெண்ட் பெஞ்சில் ஒருத்தர் உட்கார்ந்திருப்பாரே, அவரையும் யாராவது உபயோகித்துவிட்டுத்தான் எறிந்திருக்கவேண்டும். ஒருத்தர் மாற்றி ஒருத்தரைப் பிதுக்கிப் பிதுக்கி உபயோகித்துக் கொண்டே இருக்கிறோம்.
“இதைத் திங்கறதுக்கே நாதி இருக்காது. இன்னொரு கால் படி என்னத்துக்கு?” என்று சொல்கிற இவளைப் பார்க்கும்போதும் நசுங்கின பற்பசைக் குழாய் மாதிரித்தான் இருக்கிறது. நான்தான் அதிகமாக நசுக்கியிருக்க வேண்டும். சட்டென்று அவள் மீது ஒரு அனுதாபம் வந்தது. அவளுக்கு ஆறுதலாக என்னவாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. “நீ சொல்கிறதும் சரிதான்.” என்று சொன்னேன். அவ்வளவுதான் முடிந்தது. ஆனால் எல்லாம் சொல்லிவிட்டது போலவும் இருந்தது.
“கிளம்பினதுதான் கிளம்பினோம். அப்படியே போய்விட்டு வந்துடுவோம். இந்த ஊருக்கு வந்து மூணு மாசத்துக்கு அப்புறம் இன்றைக்குத்தான் முகூர்த்தம் வாய்த்திருக்கிறது. நாலு வருஷம் அடுத்தடுத்த வீட்டில் இருந்துவிட்டு எட்டிக்கூடப் பார்க்காமல் இருந்தால் நல்லா இருக்காது. என்னை விட நீதான் ரொம்பக் கசிஞ்சுக்கிட்டு இருந்தே. உனக்கு வரணும்னு தோணலையா?”
அவளுக்குத் தோன்றவில்லை என்றுதான் படுகிறது. கொஞ்ச நாளாவே எங்கேயும் போக வேண்டும்; யாரையும் பார்க்க வேண்டும் அவள் சொல்லவே சொல்லாதது ஆச்சரியமாக இருந்தது. இது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்பதை விடத் துக்கப்பட வேண்டிய விஷயம் என்று பட்டது. ஒவ்வொரு கதவாக அவளாகவே சாத்திக் கொள்வது போல இருந்தது. அவளுக்கு எந்தக் கதவையும் நான் திறந்துவிடாதது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, எந்தக் கதவையும் நான் பூட்டவில்லை என்பதும்! இதுவெல்லாம் அடுத்தவர் திறந்து பூட்டுகிற காரியமா என்ன? நாற்பது நாற்பத்தைந்து எல்லாம் ஒரு வயது என்று எப்படிச் சொல்ல முடியும்? கொஞ்சம் நிறைய முடி கொட்டியிருக்கிறது. சதை போட்டதனால் வளர்த்தி கம்மியாகத் தெரிகிறது. குண்டெல்லாம் ஒன்றுமில்லை. சொல்லப்போனால் சிரிப்பு முன்னைவிட, கன்னச்சதை திரள நேர்த்தியாகத்தான் இருக்கிறது.
“வா, போவோம்.” என்று தோளில் கை வைத்துச் சொன்னேன். அவளை எங்கேயாவது சற்றுத் தொட்டுக் கொண்டு இதைச் சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது. சுண்டு விரலையாவது பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்தபடி இதைச் சொல்ல வேண்டும். பைத்தியக்காரத்தனம்தான். அதற்குப் பஞ்சமா என்ன உலகத்தில்!
பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது நான் இப்படித் தோளில் கை வைத்தது அவளுக்குக் கூச்சமாகவும், சந்தோஷமாகவும் இருந்திருக்க வேண்டும். “என்ன?” என்று செருப்பைப் போட்டுக் கொண்டே குனிந்தாள். “நல்ல கூத்து போங்க!” என்று நடை இறங்கும் போது சிரித்தாள். மூன்றாவது வீட்டுக் கோலத்தைப் பார்த்து, “எவ்வளவு நல்லா இருக்கு!” என்று பாராட்டினாள். “என்ன தாத்தா, சாப்பிட வரலாமா?” என்று ஒற்றை ஆளாகச் சமையல் பண்ணிக்கொண்டிருந்த வாட்ச்மேன் தாத்தாவைப் பற்றி விசாரித்தாள்.
ஈயப் பானையில் உலை வைத்துக் கொண்டு, அடுப்பை ஊதிக் கொண்டிருந்த அவருடைய முகம் திரும்பி இவளைப் பார்த்து உடனே ஒன்றும் சிரித்துவிடவில்லை. மறுபடியும் கடுகடுவென்று அடுப்பை ஊதுவதற்குக் குனிந்தது.
“அவர் அழகு அழகா விசிறி எல்லாம் செய்வார் தெரியுமா?” என்று கேட்டதற்கு, உதட்டைப் பிதுக்கினேன்.
“எல்லாத்துக்கும் தலையை அசைக்க வேண்டியது அல்லது உதட்டைப் பிசுக்க வேண்டியது. நாலு வார்த்தை கலகலன்னு உண்டு, இல்லைன்னு பேசினால் என்ன! அபராதம் யாரும் போட்டாங்க என்றால் நான் சொல்லிகிடதேன்.”
ஈஸ்வரி மீண்டும் ஈஸ்வரி ஆகிவிட்டது மாதிரி இருந்தது.
மாநகராட்சி குப்பை கொட்டுமிடம். எருக்கலஞ் செடி, நீர்க்கருவைப் புதர், ஒரு சத்துணவுக் கூடம் எல்லாம் தாண்டி ஒரு வழியாக அந்தக் காலனியும், காலனியில் அவர்கள் கட்டியிருந்த வீட்டையும் கண்டுபிடித்து விட்டோம்.
“ஈஸ்வரி அத்தை!” என்று சொல்லிக் கொண்டு, இரண்டு பையன்களும் மாடியில் இருந்து ஓடி வந்தார்கள். “என்ன ஸார், அபூர்வமாக இருக்கு!” என்று சிரித்துக்கொண்டே பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு வழியாக அவர் இறங்கி வந்தார். கையில் ஒரு பெரிய நூல்கண்டு இருந்தது.
“என்ன தினகரியம்மா. எப்படி இருக்கீங்க?” என்று நேராக ஈஸ்வரியிடம் போனார்.
‘குண்டாக இருக்கேன்!’ ஈஸ்வரி சிரித்தாள்.
அவர் பலமாகச் சிரித்தார். சிரிப்புத்தான் அவர் அழகு
முழுக்கதையையும் படிக்க:  சொல்வனம்: http://solvanam.com/?p=18316

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

  1. c.a.mariaraj சொல்கிறார்:

    வண்ண தாசன்.என்னை வசீகரிக்கும் ஒரு பெயர்.. இவரைப் படிக்க வேண்டும் என பல நாள் நினைத்திருக்கிறேன். இன்றுதான் அந்த வாய்ப்பு கிடைத்தது..பற்பசைக்குழாயும்,நாவற்பழங்களும்
    என் முதல் வாசிப்பு..என்ற போதிலும்..நெடு நாளாய் இவரைச் சினேகித்திருப்பது போல ஓர் உணர்வு..
    எழுத்தாளர்களின் உணர்வுகளும்,உறுத்தல்களும் ஒன்று போல்தான் இருக்கும் என்ற உண்மை எனக்கு மீண்டும்
    ஒரு முறை உறைக்கிறது..என்ன செய்வது?சிலருக்கு..வாய்ப்புகள்..மன்னிக்கவும்..திறமையாளர்கள் வாய்ப்புகளை பயன்படுத்துகிறார்கள்..பலர் வயசாகி மட்டுமே..மடிந்து போகிறார்கள்..

  2. Pingback: கனிவு | வண்ணதாசன் « கடைசி பெஞ்ச்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s