மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது

மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.
                ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும் ஆயிரம் வேலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மாசியின் குழந்தையைப்பார்த்துவிடுவது என்பது ஏற்கனவே தீர்மானித்த ஒன்றுதான். மாசி அவ்வளவு தூரத்துக்குச் சொல்லி இருந்தார்.
                மாசி தனியாக வீட்டுக்குவருவதே அபூர்வம். வந்ததே இல்லை என்றுகூடச் சொல்லலாம். கூச்சமா என்ன காரணம் என்று தெரியவில்லை. அநேகமாக வெளியூரில் இருந்து வருகிற ஜனார்த்தன் துணைக்கு வரவேண்டும். ‘ஓசூரிலேருந்து நேற்றுதான் ஜனா வந்தான். உங்களை பார்க்கலாம்னு தோணுச்சு’ என்று மாசிலாமணி சொல்லும் போது ஜனார்த்தன் சிரித்துக்கொண்டு இருப்பார். ‘ஜனா வந்தாதான் உள்ளூர்லே கூட உங்களுக்கு வழி தெரியும் போல’ என்று சொல்லிக்கூட பார்த்தாயிற்று.
ஆனால், குழந்தை பிறந்திருக்கிறது என்று மாசி தனியாகத்தான் சொல்ல வந்தார். சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, தோளில் போட்டிருந்த பையிலிருந்து மிட்டாய்ப் பொட்டலத்தை எடுத்துக்கொடுத்துக் கொண்டே,
                ‘பொம்பளைப் பிள்ளை பிறந்திருக்கு’ என்று சொன்னார். எனக்குக்கூட ஆச்சரியம். என்னிடம் இதை வந்து சொல்லி, மிட்டாய் பகிர்ந்து, ‘வீட்டில மதினி, பிள்ளைகளுக்கு எல்லாம் கொடுங்க’ என்று சொல்கிற அளவுக்கு நான் என்ன அப்படி நெருக்கமாகி விட்டேன்.
                ‘பிள்ளையை பார்த்தாச்சா?’
                ‘இல்லை அண்ணாச்சி. சனிக்கிழமை ஆஃப். ஞாயிற்றுக்கிழமை நைட்ட ஷிப்டுக்குத்தான் வரனும். இவ்வளவு தூரம் துட்டுச் செலவழிச்சுப் போகிறதுக்கு, வெள்ளிக்கிழமை ராத்திரி புறப்பட்டால், முழுசா ரெண்டு நாள் பிள்ளை கூட இருந்தமாதிரி இருக்கும். போக வர டிக்கெட்டுக்கு மட்டுமே அம்பது ரூபா ஆயிரும்’ – மாசி இதுவரை என்னிடம் பணம் கேட்டது இல்லை. பணம் கேட்காவிட்டாலும் அதற்குள்ள சிரமத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன.
                ‘திங்கட்கிழமையே உங்கள் ஆபிசுக்குப் போன் பண்ணினேன். மணி அடிச்சுக்கிட்டே இருந்தது. யாரும் எடுக்கவே இல்லை’ – மாசி மறுபடி வரும்போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
                ‘இரண்டு இட்லி சாப்பிடுதீங்களா, மாசி? மில்லிருந்து நேரே இங்கதானே வாரீங்க’ – மாசிலாமணி சாப்பிட ஒப்புக்கொள்ளவில்லை.
                ‘பிள்ளை எப்படியிருக்கு!’ நான் கேட்டபோது மெதுவாக உட்கார்ந்தார்.
                ‘டெலிவரி ரொம்ப கஷ்டப்பட்டுப் போச்சு போல. ரெண்டு மூணு நாள் வலி வந்தும் பிள்ளை பிறக்காமல் சிஸேரியன் பண்ணி எடுத்திருக்காங்க. ஏகப்பட்ட செலவு அவுங்களுக்கு. இதிலே பொம்பிளைப் பிள்ளையாப் போச்சுண்ணு அவளுக்கு வருத்தம் போல. தாய்ப்பாலு கூடச் சரியாகக் கொடுக்கமாட்டேன்ணுருக்கா’ – மாசி கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு இந்த இடத்தில் சற்றுச் சிரித்தார் – என்றாலும் அது சிரிப்பில்லை.
                ‘நான் போயி எடுத்துச் சொன்னேன். சொல்லச் சொல்ல அழ ஆரம்பிச்சா. என்னத்துக்கு இப்ப அழணும்னு கேட்டால், பிள்ளை கருப்பாய் போச்சாம். நாம் ரெண்டு பேரும் என்ன சிகப்பு ரெட்டு போலேயா இருக்கோம்ணு கேட்டாச்சு. அழுகை நிக்கலை அவளுக்கு’. – இப்போதும் மாசி சிரித்தார்.
இப்போதும் அது சிரிப்பு மாதிரி இல்லை.
                ‘குப்புறக் கவிழ்ந்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மாறிமாறிப் புரட்டிக்கொண்டும், ஒரு விசிறியைப் போலப் பரபரவென்று பக்கங்களை நெகிழவிட்டு முகர்ந்த படியும், நான் கைகழுவிவிட்டு எதிரே உட்கார்கிற வரை காத்திருந்து, மெல்லிய குரலில் மாசி சொல்ல ஆரம்பித்தார். ‘ அவளுக்குக் கொஞ்சம் உடம்புக்குச் சரியில்லாத மாதிரி இருக்கு. பிள்ளை பெத்து வீட்டுக்கு வந்து நாலைந்து நாளாகச் சரியாத் தூங்கவே இல்லை போல இருக்கு. எப்போ பார்த்தாலும் பொட்டப்புள்ளையாப் போச்சு, கருப்பா வேற இருக்கு. தலையில இடி விழுந்துட்டது. பயந்தது மாதிரியே ஆயிப் போச்சுண்ணு புலம்பிக்கிட்டே இருந்திருக்கா. இப்படியே விட்டால் கோட்டி கீட்டி புடிச்சுரும்னு டாக்டர்கிட்டே மறுபடி கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. அவங்க தூக்கமாத்திரை குடுத்திருப்பாங்களோ என்னமோ, எப்ப பார்த்தாலும் சதா தூங்கிக்கிட்டே கிடக்கா. ஒண்ணு மாத்தி ஒண்ணு பேசுதா. நான் காலையில போய்ப் பார்க்கும்போது நல்லாப் பேசிக்கிட்டு இருந்தா. மத்தியானம் தூங்கி எழுந்திருச்சு, ‘நீங்க எப்பம் வந்தீங்கன்ணு கேட்கிறா. எனக்குச் சரியாகத் தெரியலை’ இதைச் சொல்லிவிட்டுக் கையில் இருந்த புத்தகத்தைச் சன்னலில் வைத்த மாசி ‘கொஞ்சம் தண்ணி இருக்குமா’ என்றார், தண்ணீர் கேட்டாரே தவிர அரை டம்ளர் கூடக் குடித்த மாதிரி தெரியவில்லை.
                ‘புள்ளையை நினைச்சுத்தான் கஷ்டமா இருக்கு. பாதியா வத்திப்போச்சு’ – மாசி குபுக்கென்று அழ ஆரம்பித்திருந்தார். நான் ஏற்கனவே பக்கத்தில்தான் இருந்தேன் என்றாலும், ஸ்டூலை இன்னும் அவர் பக்கம் நகர்த்திக்கொண்டு, அவரைத் தட்டிக்கொடுத்தேன்.
                ‘ஏய் இந்த டீவியை ஆஃப் பண்ணு’ – என்று உள்ளே பார்த்துச் சத்தம் கொடுத்தேன். நானே எழுந்திருத்து அணைத்துவிடலாம். அதை அணைத்து விடுவதால் மட்டும் மாசியின் துக்கம் அடங்கிவிடுமா என்ன. என்றாலும் இதுபோன்ற சமயங்களில் இப்படி என்னென்னவோ செய்து பார்க்கிறோம். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று சரி செய்துவிடாதா என்ற பிரயாசைதான்.
                ‘ஏதாவது புஸ்தகம் இருந்தால் குடுங்க படிக்கிறதுக்கு. ராத்திரி எனக்கும் சரியாத் தூக்கம் வரமாட்டேங்கு. என்ன தூங்கலையான்னு திருப்பித் திருப்பி அம்மாவும், தங்கச்சியும் கேட்கிறதுக்கு பதில் சொல்லி முடியலை. இருட்டுக்குள்ளே எவ்வளவு நேரம்தான் முழிச்சுக்கிட்டே படுத்துக்கிடக்க முடியும். மறுநாள் ஷிப்ட்லே நிக்கும்போது கண்ணு காந்துது அப்பிடியே’.
                ‘புஸ்தகம்லாம் இருக்கட்டும் மாசி. எங்கேயும் ஓடிப்போயிராது அது. நீங்க பேசாமல் சேர்ந்தாற்போல நாலு நாள் லீவு போட்டுட்டுப்போயி, அவுங்க கூட இருந்துட்டு வாங்க. பக்கத்தில் இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கும்ல’.
                ‘எங்க அண்ணாச்சி லீவு போட. ஏற்கனவே இந்த ஒரு மாசத்திலே மூணு நாள் லீவு போட்டாச்சு. திடீர் திடீர்ணு அம்பது நூறுண்ணு சூப்பர்வைஸரை எல்லாம் ஒரே நாளில சீட்டைக் கிழிச்சு அனுப்பிச்சுக்கிட்டு இருக்கான். என்ன நடக்கும்னே தெரியலை’.
                ‘அதெல்லாம் ஒண்ணும் நடக்காது’.
                ‘நல்ல வார்த்தையாச் சொல்றீங்க’ – மாசி சைக்கிளை எடுக்கும்போது அவர் அறியாமல் கை மணியை அடித்தது. ‘ரோட்டு நெரிசலிலெ போயிப் போயி, சைக்கிளைத் தொட்டாலே பெல் அடிக்கத் தோணுது’ – மாசி இப்போது சிரித்த சிரிப்பு பரவாயில்லை.
                அடுத்த தடவை மாசி வரவில்லை. கூடவேலை பார்க்கிறவரிடம் எழுதிக் கொடுத்து அனுப்பியிருந்தார். நான் படிப்பதற்கு முன்பே அதிலிருக்கிற விஷயத்தைக் கடிதம் கொண்டுவந்தவரே சொல்லிவிட்டார்.
                ‘மாசியோட தங்கச்சி டீச்சரா இருக்குல்லே, அது திடீர்ணு மருந்தைக் குடிச்சுட்டுது. ஹெட் மாஸ்டருக்க்கும் இதுக்கும் ஒத்துப்போகலை போல. அவர் ஒண்ணு சொல்ல, இது ஒண்ணு எதிர்த்துப் பேச..!’ – இந்த இடத்தில் ஏதோ ஒர் ஜோலியாய் அந்தப்பக்கம் என் மனைவி வர, சொல்வதைச் சற்று நிறுத்திவிட்டு, அவள் போன பிறகு – ‘அந்த ஆள் கொஞ்சம் மோசம் போல. என்னமோ வர்ரயா போறயாண்ணு அசிங்கமாக் கேட்டிருக்கான். சம்மதிக்கலைண்ணா உனக்கும், டிராயிங் மாஸ்டருக்கும் இது இருக்குண்ணு எழுதிப் போடுவேன்’ணு பயங்காட்டி இருக்கான். அப்படியெல்லாம் வாஸ்தவத்தில் ஒண்ணும் கிடையாது. இது கொஞ்சம் பயந்த பிள்ளை. என்ன செய்கிறது என்று தெரியாமல் நேற்று ராத்திரி மருந்தைக் குடிச்சிட்டுது. பிழைக்க வைக்கிறதுக்குள்ளே பெரும்பாடாய் போச்சு. அம்புட்டது ஆதாயம்ணு இதிலே போலீஸ்காரங்க வேறே இடையில…கண்ராவியா இருக்கு மாசியைப்பார்க்க…’
                அவர் சொன்ன இந்த விஷயத்தை தவிர மாசி எழுதியிருந்த கடிதத்தில், ‘… இந்த நிலைமையில் அம்மாவையும், சந்திராவையும் தனியாக விட்டுவிட்டு ஊருக்குப் போக முடியாது. சந்திராவுக்கு இன்னும் குளூகோஸ் ஏற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் இந்தவாரம் ஊருக்குப் போனால் சிரமம் பாராமல் ராஜலட்சுமியையும், குழந்தையையும் பார்த்துவிட்டு வாருங்கள். இந்த வாரம் குழந்தைக்கு பேர் விடுகிறதா இருந்தது. போகமுடியவில்லை. நீங்கள் தங்கச்சி விஷயம் ஒன்றும் சொல்லவேண்டாம். வருத்தப்படுவார்கள். ஏற்கனவே அங்கே உள்ள நிலமையை உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். உங்களை மீண்டும் கேட்குக்கொள்வது எல்லாம், என் மகளையும், அவளையும் நேரில் பார்த்துவிட்டு வர வேண்டும் என்பதே. முடிந்தால் ஆறுதலாக ஏதாவது சொல்லிவிட்டு வாருங்கள். சில பேர் சொன்னால் சில பேருக்குச் சரியாக இருக்கும். ஒரு வைத்தியத்தில் இல்லாவிட்டால் இன்னொரு வைத்தியத்தில் குணமானால் சரிதான். வீட்டு விலாசம் தனியே எழுதியிருக்கிறேன். மற்றபடி குருக்களையா கம்பவுண்ட் என்று கேட்டால் யாரும் சொல்வார்கள். சிரமத்திற்கு மன்னிக்கவும்’ – மாசிலாமணியின் கையெழுத்து அழகாக இருந்தது. இவ்வளவு பதற்றத்திற்கு இடையில் ஒருவித சீரான ஒழுங்குடன் அவை இருப்பது மேலும் ஒருவித துக்கத்தைத்தான் கொடுத்தது. பஸ்ஸில் வைத்துக்கூட ஒரு தடவை எடுத்துப் படித்துக்கொண்டேன்.
                குருக்களையா காம்பவுண்ட்டைக் கண்டுபிடிப்பதில் நிஜமாகவே சிரமம் ஒன்றுமில்லை. நான் எங்கே இருக்கிறது என்று கேட்டதுமே பீடி சுற்றிகொண்டிருந்த பெண், மடியில் இருந்த சுளகைக் கீழே வைத்துவிட்டு, ட்ரான்சிஸ்டர் சத்தத்தைக் குறைத்தது. வெளியே வந்து வீட்டைக் காட்டியது. பக்கவாட்டு ஜன்னல் வழியாக எட்டி, ‘சொர்ணத்தக்கா உங்க வீட்டுக்கு யாரோ விருந்தாள் வந்திருக்கு’ என்று சத்தம் கொடுத்தது.
                மாசியைப் பற்றியும், நான் மாசியின் நண்பன் என்றும், அவனுக்குக் குழந்தை பிறந்திருப்பது இங்கேதானே என்றும் என் பேச்சு இருக்கையில் ‘மச்சிலே இருக்காங்க அவங்க’ என்று கையைக்காட்டினார்கள். சுவர் ஓரத்தில் படிகள் இருந்தன. சிமெண்ட்டில் மரக்கட்டை பதித்த வினோதமான படிகள். தொம்தொம் என்று அதிர்ந்து கொண்டு ஏறும்போதே மாசியின் மனைவி எப்படியிருப்பார்கள் என்று தோன்றியது. கல்யாணம் ஆன புதிதில் எங்கள் வீட்டுக்கு வந்தபோது பார்த்த என் முகம் ஞாபகம் இருக்குமா என்று சந்தேகம் வந்தது. எவ்வளவோ காலத்திற்குப் பிறகு நான் மடியில் எடுத்து வைத்துக் கொள்ளப் போகிற கைக்குழந்தை இது என்று சந்தோஷம் உண்டாயிற்று. பிரசவம் ஆகியிருக்கிற வீடுகளுக்கே உண்டான வாடை நெருங்கிக்கொண்டே வரவர, இரண்டு படிகளுக்குக் கீழே நான் இருக்கும்போதே தொட்டில் தொங்குவது தெரிந்தது. நான் முழுவதுமாக ஏறியதும் சட்டென்று வீட்டின் தளத்திற்கு வந்துவிட்டிருந்தேன்.
சாணியிட்டு மெழுகிய தரை. உச்சி வெயிலில் எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். மாசியின் மனைவிக்கு நல்ல உறக்கம். பிள்ளை ஒரு தடுக்கில் கிடந்தது. தொட்டில் கயிறைப் பிடித்த கையோடு, பிள்ளையின் பாட்டியாக இருக்கலாம், அவர்களும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். டேபிள் ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. எதிர் ஜன்னல் வழியாக வெளிச்சம் வந்து விளக்கு மாடத்துக்கு முன்னால் கழுவித் தனியாகச் சார்த்தி வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்குத் தண்டில் பட்டு மினுங்கியது. கொடி முழுவதும் துவைத்துக் காயப்போட்ட சின்னச்சின்ன மல் சட்டைகள், தொய்ந்து திரிபோல தொங்குற அதன் நாடா, கிழிந்த வேஷ்டி, துண்டுகள்… ஊதாவும் சிவப்புமாகச் சுருண்டு கிடக்கிற ரப்பர் ஷீட், ஜன்னல் விளிம்பில் இரண்டு டப்பாக்களில் வளர்ந்து பூத்திருக்கிற டேபிள் ரோஜாச் செடிகள்.
கையில் வாங்கிக்கொண்டு வந்திருந்த பவுடரையும், சோப்பையும் அப்படியே பிள்ளையின் காலடியில் வைத்துவிட்டுப் போய்விடலாமா என்று தோன்றியது. அப்பிடிச் செய்வதுதான் சரி என்பதுபோல, ஜன்னல் அடித்திருந்த வலையின் பிய்ந்துபோன பொந்து வழியாக வந்த அணில் சொல்லிக் கொண்டிருந்தது. பால்மாவு டப்பா, பீடிங் பாட்டில், சாந்துச் சிரட்டை, சாம்பிராணிக்கரண்டி, பவுடர் டப்பா, பப் எல்லாம் மர பெஞ்ச்சில் இருந்தன.
நான் சத்தம் கொடுக்கவில்லை. குழந்தை சற்றுச் சிணுங்கியது. சொல்லி வைத்ததுபோல, மாசியின் மனைவியும், அத்தையும் திடுக்கென்று எழுந்தார்கள். நான் நிற்பதைப் பார்த்து, ‘யாரு’ என்று அத்தை பதறினார்கள். மாசியின் மனைவிக்கு அடையாளம் தெரிந்து விட்டது. என் பெயரைச் சொல்லி, மாசியின் நண்பர் என்றும் சுடலைமாடன் கோவில் தெரு என்றும், யாருக்கும் அடையாளம் தெரியக்கூடிய என் தாத்தா பெயர் இன்னது என்றும் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மாசியின் குழந்தையைக் குனிந்து நான் எடுத்துக் கொண்டேன்.
துணி ஈரமாகியிருந்தது. குழந்தையின் முதுகும் இடுப்பும் குளிர்ந்து கிடந்தது. கழுத்தும் தலையும் வெதுவெதுப்புடன் இருக்க, மடியில் உதைத்துக்கொண்டு அது சிணுங்க ஆரம்பித்தது. கைகளைத் தூக்கியும், கால்களை நீட்டியும், முகம் பக்கவாட்டில் திருப்பியும், மூடின கண்களும் கருநீல உதடுகளுமாக மாசியின் குழந்தை அழ ஆரம்பிக்கும்போது அது என்னுடன் பேச் ஆரம்பித்துவிட்டது போலச் சந்தோஷமாக இருந்தது. நான் ஒரு பல்லி சத்தமிடுவது போல ஒலி எழுப்பிக் கொண்டு லேசாக அதை மார்போடு சேர்த்துக்கொள்ள, சிவந்த உள்ளங்கைகளுடன் துளாவிக்கொண்டு மேலும் அழுதது. இந்தச் சிறு அழுகையைக் கூடத் தாங்கமுடியாதது போல, மாசியின் மனைவியும், அத்தையும் வாங்குவதற்குக் கைகளை நீட்டிக்கொண்டிருந்தார்கள்.
                ‘யாரு வந்திருக்கா? மாமா கண்ணு. மாமா….ப்பா’ – மாசியின் அத்தை வேறு உலகத்துப் பாஷை பேசினார்கள். சற்றுத் தூக்கலாக இருந்த அவர்கள் பல்வரிசை ஒரு பொருட்டில்லை. சோர்ந்தும் கனத்தும் இருந்த இமைகளும் கண்ணுமாக வெற்றிலைச் சாறுபடிந்த உதடுகளில் மாசியின் மனைவிக்குப் படர்கிற உலர்ந்த சிரிப்பு ஒரு விஷயமில்லை. கருப்பு, சிவப்பு, ஆண், பெண் எல்லாம் தாண்டி எங்கோ ஓர் இடத்தில் உயரமாக இருந்துகொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
                ‘ஒரு உசிர், இன்னொரு உசிரு, அவ்வளவு தானே’ – இரண்டு பேரையும் காட்டி நான் சொன்னபோது மாசியின் மனைவி சிரித்தார்கள். ‘அவுங்களைப் பார்த்தீங்களா’ என்று கேட்டார்கள். மிட்டாய் வாங்கிக் கொண்டு மாசி என்னைப் பார்க்க வந்ததில் இருந்து எல்லாவற்றையும் சொல்லலாம் என்று நான் ஆரம்பிக்கையில் –
                ‘அவுங்க மில்லுக்கு வேலைக்குப் போனாங்களா அய்யா ?’ என்று துவங்கி, ‘தெருவுல நிறுத்திவிடுவான் போல இருக்கே எல்லாத்தையும்’ என்று சொல்லிக்கொண்டே மாசியின் அத்தை அழுதபோது, குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள்.
                குழந்தை அபூர்வமான களையுடன் சிரிக்க ஆரம்பித்ததும் அந்தச் சமயத்தில்தான்.
  ……………………………………………………………….
இலக்கிய மலர்
ஏப்ரல் `95
தமுஎச – திருப்பரங்குன்றம்.
தட்டச்சு: Essex Siva

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது

  1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    உணர்வுகளை எழுத்தில் தெளிவாகக் கொண்டு வருபவர் வண்ணதாசன், என்பதை மீண்டும் ஒரு முறை நம் முன் காட்டி உள்ளார்.

    மனித உணர்வுகளை, இன்ப துன்ப எண்ணங்களை , எந்த வித சேதாரமும் இல்லாமல் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் வண்ணதாசன் அவர்களுக்கு
    நன்றிகள் பல.

    பகிர்ந்த உங்களுக்கும் (சுல்தான்), உதவிய எஸ்செக்ஸ் சிவா அவர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s