கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்

 MY Book review of Vannadasan’s Book ” கிருஷ்ணன் வைத்த வீடு “  for http://www.justbooksclc.com 
கவிதை எழுதும் கவிஞர்களும், சிறுகதைகள்  எழுதும் எழுத்தாளர்களும் தனித்தனியே இயங்குகிற இலக்கியச் சூழலில்   கவிதை போலவே கதை எழுதும் எழுத்தாளர்கள் அபூர்வமாகத்தான் தோன்றுகிறார்கள். வண்ணதாசன் என்கிற சிறுகதையாளர் அதில் முதன்மையானவர். கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும் வண்ணதாசனின் சிறுகதைகளில் கவித்துவம் ததும்புவதில் ஆச்சரியமொன்றுமில்லை. வண்ணதாசனின் தனித்துவமும் அதுதான்.
அவர் கதைகளின் மிகப்பிரதானமான அம்சங்களில் முதன்மையானது Detailing. மிக நுணுக்கமான, அசாதரணமான விவரணைகள். இந்த அளவு detailing உள்ள கதைகளை தமிழில் மிக அரிதாகத்தான் பார்க்க முடியும். இந்த நுட்பமான விவரணைகள் மூலம் கதைச் சூழலை ஒரு காட்சியாக உங்கள் மனதில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறார் வண்ணதாசன். . “ தனுமை”, மிச்சம், வேர், ஞாபகம், கருப்புப்பசு (என்கிற) பாத்திமா, உயர்ப்பறத்தல் போன்ற அவரது பிரபலமான கதைகளில் இருக்கும் விவரணைகளை ஒப்பிட்டால் இந்தச் சிறுகதைத் தொகுதிகளில் இருக்கிற கதைகளில் விவரணைகள் மிகக் குறைவு தான்.  இருந்தாலும் கீழ்கண்ட வரிகள் பரவசப்படுத்துகின்றன.
”ஒரு துண்டு வாழையிலை பளபளப்பான கரும்பச்சையாக மினுங்கிக்கொண்டு, காற்றுக்கு நுனி சுருட்டி நகர்ந்துகொண்டிருந்தது “
“கசங்கின மாவிலையிலிருந்து வாசனை அடித்தது. இந்த மரமும் மரம் நின்ற வருடங்களும் கைவிரல்களுக்குள் நசுங்கித் திணறுவது போல தோன்றிற்று”
“கோடாரியின் பளபளத்த விளிம்பில் கண்ணாடிச் சிறகுகளுடன் ஒரு தட்டான் அசையாமல் இருந்தது”
“வேட்டியை பிழியும் போது கரண்கரணாக இறுகிய தசைகள் மறுபடி நிமிரும்போது தெரியாமல் ஆகிவிட்டன”
“காளை மாடுகளின் சூடும் வேர்வையும், சாணமுமாக எழுந்து, வேப்பம் பூவுடன் திரண்டு வந்தது. ஏதோ ஒரு மாடு புஸ்ஸென்று மூச்சுவிட்டுக் கால் மாறுவது கேட்டது”
இந்த வரிகளைப் படிக்கும்போது கதைச் சூழலுக்குள் வாசகன் எளிதாக ஈர்க்கப்பட்டுவிடுகிறான்.
வண்ணதாசனின் கதைகள் அத்தனையும் அவரது கவிதைகளின் நீட்சியாகத்தான் தோன்றுகிறது.  அவர் கவிதைகள் போலவே அவர் கதைகளும் மென்மையான, நுட்பமான, அழகியலில் தோய்ந்த கணங்களை நமக்கு கதைகளாக அளிக்கிறது.  தொடர்சியான பல கவிதைகளில் தொகுப்பே ஒரு சிறுகதையாய் வடிவெடுக்கிறது.  அவர் கதையின் ஒவ்வொரு இழையும் கவிதைகளாலேயே பின்னப்பட்டிருக்கின்றன.
இது வண்ணதாசன் என்கிற சிறுகதையாளர் மேல் வைக்கப்படும் விமர்சனம் அல்ல. அந்தச் சிறுகதையாளரை தன் ஆளுமையினால் ஆக்கிரமித்திருக்கும் அவருக்குள் இருக்கும் கவிஞருக்கு கரம் கூப்பும் ஒரு பாராட்டு. கீழ்க்கண்ட வரிகள் அதற்கு உதாரணம்.
” வாசல் தூண்கள் கார்த்திகை தினத்து இருட்டுக்கென்று வருடம் பூராவும் ஒரு அழகை ஒளித்து வைத்திருக்குமோ என்னவோ”
“எதைப் பார்க்க நினைக்கிறோமோ அதை மட்டுமா கண்னாடி காட்டும் ? அல்லது பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறதையா ?” ( ஒரு விதவை கண்ணாடி பார்ப்பதைச் சொல்லும்போது)
“யோசித்துப்பார்க்கும்போது ருசி மட்டும் அல்ல, தேனின் நிறமும் அழகாக இருப்பது மாதிரித்தான் பட்டது”
“நிறைய பேர் பதில் சொல்வதைத்தான் கேள்வியாகக் கேட்பார்கள் போலிருக்கிறது “
 “அடுத்தடுத்து சொல்வதைவிட, இடைவெளிகளுக்கு அப்புறம் சொல்லப்படுபவை நன்றாகத்தான் இருக்கின்றன. சொல்லை இடைவெளியும், இடைவெளியை சொல்லும் கூழாங்கல்லாய் உருட்டி ஈரமணலில் ஒதுக்கும்போது ஆறும் அழகு. கரையும் அழகு”
“புல்வெளியையா , பூவையா , வண்னத்துப்பூச்சியையா, எதைப் பார்க்கிறேன் என்று கேட்டால் எதையும் இல்லை என்றுதான் சொல்லமுடியும். எதையும் பார்க்காதபோது எல்லாவற்றையும் பார்த்துவிட்டிருக்கிறோம்”
“தெரிந்த  ஆட்களைவிடத் தெரியாத ஆட்களுடன் ரயில் விடைபெறும்போது மனம் ஒரு விதமாகக் கனக்கும்.
ஒரு சிறுகதையாளருக்கு வாய்க்கிற வரிகளா இவை ?.  இது போன்ற அழகியல் சார்ந்த பார்வையும், நுணுக்கமான வாழ்வியல் உண்மைகளும், தத்துவார்த்த பேரழகும் வரிக்கு வரி ஒளிரும் ஒரு படைப்புகளை வெறும் கதையென்று எப்படிச் சொல்வது ?
ஆர்பாட்டம் இல்லாமல் அதிராமல் கதைக்குள் வாசகனை கைபிடித்து அழைத்துப் போகும் வண்ணதாசன் வாசகருக்கு இனம் காட்டுவது கவனத்தைக் கவரும் ஆரம்பம், சுறுசுறுப்பான உரையாடல், அதிரடியான பாத்திரப்படைப்பு, முத்தாய்ப்பான முடிவு என்கிற சம்பிரதாய கதை அமைப்பை அல்ல. தான் கண்டு, கேட்டு  ரசித்ததையும் , முகர்ந்து பார்த்ததையும், உடலாலும் மனதாலும் அனுபவித்ததையும் உங்ளோடு ஆத்மார்த்தமாய் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.
தன்னை எந்தப் படைப்பிலும் முன்னிறுத்துவதே இல்லை வண்ணதாசன். தன் கருத்துக்களையோ, விருப்பு வெறுப்புகளையோ எள்ளவும் திணிப்பதில்லை. எழுத்தாளர்கள் எல்லோரும் உரத்தக் கருத்துச் சொல்லிகளாய், activist களாய் உருமாறியிருக்கும் இந்த காலத்தில் வண்ணதாசன் தன் பாத்திரங்கள் மூலமாகக் கூட உரத்த குரலில் எந்த கருத்தையும் சொல்வதில்லை. வெய்யிலின் உக்கிரத்தை கூட அவர் கதைகள் அலுத்துக்கொள்ளாமல் மென்மையாகவே விவரிக்கின்றன.   அதுவும் நேரடியாய் சொல்லாமல் வெய்யிலில் அலைந்து திரிந்து வரும் ஒரு கதாபாத்திரத்திரம் குளிர்ந்த தண்ணீரை பருகி ஆசுவாசம் பெறும் அனுபவத்தின் மூலமாக.
வண்ணதாசனின் விவரிப்பில் அவர் பாத்திரங்கள் எல்லோரும் மிக அழகானவர்களாய், அதிர்ந்து பேசாதவர்களாய், மனித நேயத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர்களாய், சின்னச் சின்ன மன அதிர்வுகளுக்கும் கண் கலங்குபவர்களாய், நுண் பார்வை மிக்கவர்களாய்,  சாலை ஓரத்து செடிப்பூக்களை ரசிப்பவர்களாய், மின்சாரம் போனாலும் மின்மினிப்பூச்சிகளின் மினுமினுப்பில் சந்தோஷம் அடைகிறவர்களாய் இருக்கிறார்கள்.  இது போன்ற மென்மையான கதாபாத்திரங்களின் தாக்கம் கதையைப் படித்து முடித்தபிறகு நம்மையும் கொஞ்சம் ஆட்கொண்டு விடுகிறது.
“ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிட முடியும்”
“ ஒரு அறைக்குள்ளிருந்து வெளியேறி, இன்னொரு அறைக்குள் நுழைகிறபோது எல்லாம், பகவதி மேலும் சற்று அழகாகவும் தீர்க்கமாகவும் ஆகிவிடுவது போல இருக்கும்.”
“கனகாம்பர கலரில் ஒரு தாவணியும் கையில் புத்தகமுமாய் அந்தப் பெண் வந்து நின்றாள். “ யாரு சசி ? என்று உள்ளிருந்து குரல் வர  உள்ளே நகர்ந்த பிறகும் அந்த இடத்தில் கனகாம்பர கலர் இருந்தது. சசி என்ற பெயரின் உச்சரிப்புக் காற்றில் அலைந்தது”
“ அன்று தைப்பூசம். வீடு எல்லாம் கழுவிவிட்டிருந்தோம். அக்கா பாடப் பாட இன்னும் கொஞ்சம் பளிச்சுனு கழுவிவிட்டது மாதிரி ஆகிவிட்டது”
“ சிரிக்கிற முகங்களே அழகு, புகைப்படங்களில் சிரிக்கிற முகங்கள் அதைவிட அழகுதானே”
என்றெல்லாம் அவர் ஒற்றை வரியில் விவரிக்கும் போது அந்தப் பாத்திரங்களில் முழு குணாதிசத்தையும் நம் வாழ்க்கையில் நாம் பழகிய  அம்மாக்களும், அக்காக்களும், சசிகளுடனும், பகவதிகளும் சுவாதீனமாய் வந்து மிச்சத்தை சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் கதையிலும் நம் இதயங்களிலும்  நிரம்பிவிடுகிறார்கள்.
உவமைகள் கூட நேரடி வார்த்தைகள் அல்ல  ஒரு அனுபவப் பங்கீடே…:
“ சாந்தியின் முழங்கை பட்டு, பிரம்பு ஊஞ்சல் ஒற்றை லோலாக்குப் போல அசையத் துவங்கியது”  என்று விவரிக்கையில் உங்கள் மனக்கண்ணில் விரிவது இரண்டு அனுபவங்கள். ஒன்றுகொண்று தொடர்பில்லாத இரண்டு அனுபவங்கள்.
”வெற்றிலைக் காவியேறிய அந்தச் சிரிப்பு தகரக்கதவில் ஆணி அடித்திருந்த இடத்திலிருந்து கசிகிற வெளிச்சம் மாதிரி ஒரு ஊகத்தைத் துவங்கி வைத்தது”
“காலிச் சொம்பை நிரம்பின சொம்பு என்று நினைத்துக்கொண்டு எடுக்கும்போது கை ஒரு நொடி ஏமாறுமே, அது போல அந்தச் சிரிப்பு ஏமாற்றியது”
”பஸ் ஓடுகிற வேகத்தில் செய்தித்தாள் பரபரவென்று காற்றில் அசைகிற சப்தம் எனக்குப் பிடித்திருந்தது. அந்தச் செய்திகளே குரலெடுத்துப் பேசுவது போலவும், பத்தி பத்தியான அச்செழுத்துக்கள் தண்ணீருக்குள் விழுகிற தென்னைமர நிழல்கள் போலவும்…….”
போன்ற வரிகள் சான்று.
வண்ணதாசனின் கதைக்களம் சிறியது ஆனால் நெருக்கமானது. அவர் கதைக்களங்கள் அபூர்வமாகத்தான் வீட்டை விட்டு வெளியே போகின்றன. அவர் பழக்கப்பட்ட ஊர், அதன் மனிதர்கள், அந்த மண் வாசனை இவற்றைச் சுற்றித்தான் அவர் கதைகள் புனையப்பட்டுள்ளன. இந்தக் கதைகளை சென்னையில் இருந்த போது எழுதியதாகக் குறிப்பிடுகிறார் வண்ணதாசன். ஆனால் சென்னையின் தாக்கம் இந்தக் கதைகளில் மிக சொற்பமாகத்தான் வெளிப்படுகிறது.  “இருந்த இடம் வாழ்ந்த இடம் ஆகாது” என்று அவரின் முன்னுரை குறிப்பே அவர் எழுத்தின் இயல்பை எடுத்துக்காட்டிவிடுகிறது.
பெரும்பாலும் தன்னைச் சுற்றி நடக்கும் உண்மை நிகழ்வுகளையே தன் கதையாக வடித்திருப்பதாய் சொல்லும் வண்ணதாசனின்  கதைகள் குடும்பம், உறவு, நட்பு, வாழ்ந்த ஊர் என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் சுழன்றாலும் வண்ணதாசன் தன் பாத்திரங்கள் மூலமாகவும் அவரின் பார்வை மூலமாகவும் காட்டும் வாழ்வியல் கூறுகள் நுட்பமானவை ஆழமானவை.  அதை வெளிப்படுத்த அவருக்கு ஊர் விட்டு ஊர் , நாடு விட்டு நாடு தாண்டும் பலவிதமான கதைக்களங்கள் கூட தேவைப்படவில்லை.
மனித நேயமே அவர் கதைக் களன். அன்பே அவர்கதைகளின் ஆதார சுருதி. கவித்துவமான பார்வையும் நடையுமே அவர் கதைகளின் இழைகள்.  இவை அத்தனையும் தமிழின் மிக விரும்பத்தகுந்த சிறுகதை எழுத்தாளராய் அவரை முன்னிறுத்துகிறது.
கல்யாணசுந்தரம் என்கிற வண்ணதாசன் மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் புதல்வன் 1946 இல் திருநெல்வேலியில் பிறந்த வண்ணதாசன் எழுதத்துவங்கியது 60 களில். இதுவரை பத்து சிறுகதைத் தொகுதிகள், ஏழு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இலக்கியச் சிந்தனை பரிசு, லில்லி தேவசிகாமணி பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசுகள், சிற்பி விருது, பாவலர் விருது, கலைமாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர்.
ஆனந்த் ராகவ்
http://www.justbooksclc.com/BookReview?keyword=Krishnan+vaitha+veedu&page=1&view=details&displaySet=1&title_id=122792&profileId=5766&titleId=122792&reviewer=Anand+Raghav
Ganesh Srinivasan Good one… கவிதை போல கதை அல்ல ஒவ்வொரு கதையும் கவிதை….. ஒவ்வொரு வரியும் பளிச்சென்று மனம் பற்றும்.. அவரது விவரணைகள் அந்தக் கதை களத்தை அப்படியே திரைப் படமாக நம் கண் முன் வைக்கும் …. ரொம்ப நெருக்கமானவர் போல தோள் தொட்டு வாசகனை கதைக்குள் இட்டுச் செல்லும் வண்ணதாசனின் எழுத்து….. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அதீத எள்ளல், நக்கல் இல்லாமல் / தெரியாமல் எப்படி எழுதுவது என்பதற்கு வண்ணதாசன் ஒரு நல் ஆசான்….. அதெப்படி அவரது கதை மாந்தர்கள் நமக்கு ரொம்பத் தெரிந்தவர்களாகவோ, கேள்விப்பட்டவர்களாகவோ இருப்பது ?

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to கிருஷ்ணன் வைத்த வீடு – ஆனந்த் ராகவ்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

 2. \\யோசித்துப்பார்க்கும்போது ருசி மட்டும் அல்ல, தேனின் நிறமும் அழகாக இருப்பது மாதிரித்தான் பட்டது\\
  வண்ணதாசனும் தேன் போலத்தான் தன் எழுத்துக்களால் நம்மை ஈர்த்துக் கொண்டே இருக்கிறார். மிகவும் ரசித்து ஒவ்வொரு வரியாக தேர்ந்தெடுத்து பகிர்ந்துகொண்ட ஆனந்த்ராகவிற்கும் நன்றி.

 3. nilaamaghal சொல்கிறார்:

  எடுத்தாள‌ப்ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் எல்லாம் ப‌த்திர‌ப்ப‌டுத்த‌ வேண்டிய‌வை.

 4. ramji_yahoo சொல்கிறார்:

  “ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிட முடியும்”

 5. தமிழ்மாறன் சொல்கிறார்:

  “ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிட முடியும்” இது போன்ற மனத்தை வருடிச் செல்லும் வார்த்தைகளால் வாழ்வைச் செதுக்கும் வித்தகர். தமிழுலகம் காக்க வேண்டிய கருவூலம் வண்ணதாசன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s