வண்ணதாசன் பாமரனுக்கு எழுதிய கடிதம்

.
.
http://www.natpu.in/?p=4359
அன்புமிக்க பாமரன்,
வணக்கம்.
.
உலகத்தில் பாமரன் என்று சொல்லப்படுபவர்களும் அழைக்கப்படுகிறவர்களும் எல்லாம் உங்களைப் போல இவ்வளவு கூர்மையும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
பாரதிய வித்யாபவன் வாசலில் நெஞ்சில் இருக்க உங்களையும்,. உங்கள் மகன் சேகுவேராவையும் இன்னும் பெயர் மறந்துபோன, முகம் தங்கியிருக்கிற மேலும் சில மனிதர்களையும் அறிந்துகொள்ள வாய்த்தது.
இந்த எழுத்தும் இலக்கியமும் எனக்குச் செய்ததில், எனக்குத் தந்ததில் அருமையானதெல்லாம் இந்தப் புதியபுதிய முகங்களும், அவர்களின் கைகளும், சிலசமயம் அவர்களின் தோள்களும்தான். மிகச்சிறிய தொகையும் ஜனத்தொகையும் உடைய என் வாழ்விலும் உலகத்திலும் நான் அடைந்தெல்லாம் வரிகளின் தெருக்களில், வரிகளின் வெயிலில்தான். அது என் வரியும் யார் யாரின் வரிகளுமாக இணைந்து இடையறாதும் முற்றும்பெறாதும் நீள்கிற ஒரு மகாவாக்கியத்தின் நீட்சியில் என்றுகூடச் சொல்லலாம்.
ஒரு வங்கிப் பணியாளனாக நான் அடைந்த மனிதர்களை விட எழுதி எழுதி மேற்சென்று நானடைந்த மனிதர்களே அதிகம். என் சைக்கிளும் தக்காளிப் பழக்கூடையும் சரிந்து தெருவில் உருளும்போது எல்லாம், ஒரு பூக்காரியின் கை குனிந்து ஒன்றிரண்டையாவது பொறுக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. சங்கர் மெஸ்ஸில் பரோட்டா தட்டிக் கொண்டிருப்பவர் ஓடிவந்து கைக்கிளைத் தூக்கி நிமிர்த்துகிறார். வத்தலகுண்டு பஸ்ஸில் ஏறின ஒருவர், இறங்கி வரட்டுமா என்று சைகையில் கேட்கிறார்.
கழற்றி வீசிக் காய்ந்துபோன இடத்தில்/இடத்திலும் முளைக்கிற வாடாமல்லிப் பூக்கள் போல, நானும்  முளைத்துக்கொண்டேயிருக்கச் சம்மதம். சம்மதம் அ-சம்மதங்களுக்கு அப்பால். ராஜவல்லிபுரம் நடுத்தெருவில் வல்லிக்கண்ணனைப் பார்க்கப்போன முப்பது வருடங்களுக்கு முந்திய பிற்பகலில் ஓடிக்கொண்டிருந்த, தளதளவென்று மடி கனத்து ஆடின தாய் நாயைப்போல, வாழ்க்கை சுரந்து விம்மியும் அருந்தித் தொய்ந்தும் ஓடிக் கொண்டுதானிருக்கிறது.
போன வாரம் பஸ் பிரயாணங்களில் இரண்டு வெவ்வேறு லாரிகளைப் பார்த்தது ஞாபகம் வருகிறது.
ஒரு லாரி முழுவதும் வழிய வழிய வாழைத்தோட்டத்துக் கிழங்குகளும் அடித்தூர்களும் அம்பாரக் குவியலிலிருந்து சரிவதும், சரிந்து இடத்தில் நிற்பதுமாக, முளைவிட்ட அந்தக் கன்றுகள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தன.
இன்னொரு லாரியில் எதுவுமே இல்லை.லொடலொடவென்று மர ‘பாடி’ அதிர்ந்துகொண்டே போகிறது. அவ்வளவு பெரிய வெற்று லாரியில் ஒரு தாம்புக் கயிற்றுக் கருணை தருவையில் ஏறுகிற கிழவியின் எண்ணெய் காணாத கொண்டை மாதிரி உருண்டு கொண்டே கிடக்கிறது.
நான் கயிற்றுச் சுருணை மாதிரித் தனியாகக்  கிடக்கிறேனோ என்று சோர்வு வரும்போதெல்லாம், என்னைக் கிழங்கு அம்பாரங்களில் முனைகளோடு கொண்டு சேர்ப்பது, உங்களைப் போன்றவர்கள்தான். உங்களுடைய கடிதம் வந்த பிறகு நான் குருத்து விட்டிருக்கிறேன்.
அந்த அறையில் நானும் கலாப்ரியாவும் மட்டும் தானிருந்தோம். ஜெயமோகன், அரங்கநாதன், வசந்தகுமார், சூத்ரதாரி எல்லாம் வேறு வேறு அறைகளிலிருந்தார்கள். நான் சற்றுத் தூங்கினேன்.
அப்புறம் பரீட்சை எழுதப் போகிறதுபோல, இரண்டு மூன்று தடவை முழுவதுமாக வாசித்திருந்தும், நாஞ்சில் நாடன் கதைகளைப் பற்றி என்ன பேசுவது என்று பிடிபடாத பதற்றத்திலுமிருந்தேன். நீங்கள் வந்திருந்தால் என் பதற்றத்தைத் தணித்திருப்பீர்கள்.
எல்லாம் சரியாகத்தான் நடந்திருக்கிறது.
பார்த்தலையும் சந்தித்தலின் முதற்கணத்தையும் மீறி என்னிடம் பேசிக் கொண்டிருக்க எதுவுமில்லை. ஒருவேளை உங்களிடமிருந்து தெரிந்து கொண்டிருப்பேன். புத்தகத்தையும் இணைத்து அனுப்பியதற்கு மகிழ்ச்சியும் நன்றியும் மீண்டும் சந்திக்காமலா இருக்கப் போகிறோம்.
எல்லோருக்கும் அன்புடன்
…………………………………………………..கல்யாண்ஜி.
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வண்ணதாசன் பாமரனுக்கு எழுதிய கடிதம்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  நல்ல கடிதம்.
  எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

 2. விமலன் சொல்கிறார்:

  மனம் தொட்ட நல்ல் கவிதை.வண்ணதாசன் அவர்களின் எழுத்துக்களை படிக்கிற பொழுது மனதுக்குள் பூமலர்கிறது.

 3. ramji_yahoo சொல்கிறார்:

  இன்று காலைதான் லின்க்க்டு இன் தளத்தில் ஒரு நண்பர் ( தேசிய வங்கி குவைத்தில் பணி புரிபவராம்).
  என்னிடம் வினவினார் , என்ன சார், பேங்க் கிளார்க் (கலாப்ரியா, மாதவராஜ்) எல்லாம் நண்பர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளீர்கள் என்று.
  நான் சொன்னேன் ஒரு வங்கியின் முது நிலை மேலாளர் / வருமான வரி கூடுதல் கமீசனர்களை விட
  நான் பெரிதும் மதிப்பு அளிக்கக் கூடியது இம்மாதிரி படைப்பாளிகளுக்குத் தான்.

 4. நட்பூ தளத்தில் முன்பே வாசித்து விட்டேன். மீண்டும் ஒருமுறை வாசிக்கும் போது இன்னும் அழகாகத்தானிருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s