வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி

http://azhiyasudargal.blogspot.com/2012/01/blog-post_2895.html
இந்தக் கட்டுரையில் வண்ணதாசன், வண்ண நிலவன், பூமணி ஆகியோரின் கதைகளைப் பார்க்க எண்ணி இருந்தேன். இவ்விதத்தில், ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களைத் தெளிவுபடுத்த மற்ற இருவரும் உதவக்கூடுமென்ன்ற எண்ணத்தில். ஆனால் இப்போது வசதிப்படாமல் போய்விட்டது; வண்ணதாசன் போதிய அவகாசம் தந்திருந்தும் மற்றொரு சந்தர்பத்தில் நான் இதைச் செய்ய வேண்டும். இப்போது வண்ணதாசனைப் பற்றி மட்டும்.
வண்ணதாசனின் உலகம் புறப் பார்வையில் எப்போதும் நம் முன் சதா விழுந்து கொண்டிருக்கும்சாதாரண உலகம். டவுன் பஸ், டாக்சி ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்ட், பார்பர் ஷாப்பு, பசுக்கள், மிட்டாய் வண்டி, குறுகிய தெருக்கள், தெரு வீடுகள், பள்ளிக்கூடம், குறுக்குப் பாதைகள். இதன்பின், வீட்டுப் பெண்கள், வீட்டு ஆண்கள், வெள்ளையடிப்பவன், கறவைக்காரன், பிச்சைக்காரி, நண்பர்கள். கணவன் மனைவியும் வருகிறார்கள் – எப்போதும் சின்ன வயதுக்காரர்களாக. கல்யாணத்திற்குக் காத்து புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்கள். அல்லது தாம்பத்தியம் சரிப்படாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் பெண்கள். இவர்கள் எல்லோரும் பிரந்தியம் சார்ந்து, பழக்க வழக்கங்கள் சார்ந்து, நம்பிக்கைகள் சார்ந்து வருகிறார்கள். இந்த நிஜ உலகத்தின் மீதும், இந்த நிஜ உலகத்தை சார்ந்த இவர்கள் மீதும் நாம் அக்கறை கொள்கிறோம். இவர்களின் பொதுத்தன்மை நளினமானது, பதவிசானது, இங்கிதமானது, நாசூக்கானது. கதையில் வரும் எல்லோரையும் அவர்களுக்குறிய பின்னணியையும் சேர்த்து, மன நிலையின் ஒரு சிறு வட்டத்திற்குள் தள்ளிவிடலாம்.
வாழ்க்கை இந்த ஆசிரியருக்கு எப்படிக் காட்சி தருகிறது? ஏன் இப்படி காட்சி தருகிறது? தன்னை வெளிப்படுத்துவதில் ஏன் இந்த மட்டோடு அது நிறுத்திக் கொண்டு விடுகிறது. இதை எளிமையாகக் காண, ஒரு குறுக்கு வழியாக இந்த ஆசிரியருக்கும், அவருடைய பெண் கதா பாத்திரங்களுக்குமுள்ள உறவு நிலையை யோசிக்கலாம். அந்தப் பெண்கள், அந்த சிறு வயதுக்க்காரர்கள், சின்ன மனைவிகள், டிபன் பாக்சைத் தேடிக்கொண்டு போகும் அந்தப் பெண், வெள்ளையடிப்பவனின் உச்சரிப்பை கேலி செய்யும் அந்தப் பெண், போட்டோ ஸ்டுடியோவில் பெரிதாக அழும் அந்தப் பெண், கல்யாணத்திற்கு காத்து வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் அந்த அக்கா, கணவனோடு அன்றி வெளியே செல்ல சுதந்திரமற்ற செல்லமக்கா, மெலிந்த பாப்பா, கணவனுடனும் குழந்தைகளுடனும் கைவீசி வெளியே நடமாட ஒரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்ட அந்தப் பெண், எழுத்தாளன் போன்றவனிடம் மயங்கி தன்னை அவனுக்குத் தவறுதலாகத் தந்துவிட்ட புஜ்ஜி, தனு எல்லோரும் எப்படிப்பட்டவர்கள்? இவர்கள் ஒரேமாதிரியானவர்கள் என்று தோன்றுகிறதல்லவா? இவர்கள் வித்தியாசமானவர்கள் தான். வெவ்வேறு பின்னணியும், வெவ்வேறு மனநிலையும், வெவ்வேறு பிரச்சனையும் கொண்டவர்கள் தான். ஆனால் எல்லோரும் வண்ணதாசனால் காதலிக்கப்படத் தகுதியானவர்கள். நளினமானவர்கள். முரட்டுத்தனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். பிரியத்தை ஏகமாக வாங்கிக் கொள்ளவும் திருப்பித்தரவும் காத்திருப்பவர்கள். மனதில் ரகசியத் தந்திகளை மீட்டிக்கொண்டு உலகின் முன் சாதாரணமாக நடமாடுகிறவர்கள். தங்கள் பிறப்பு, சூழ்நிலை, பின்னணி இவற்றை மீறி நளினத்தைத் திருப்திப்படுத்த உன்னுகிறவர்கள். புஜ்ஜி, அவளுடைய கணவனுடனான உறவை முறித்துக் கொள்ளும் போது கூட உயர்ந்த வசனம் பேசி முறித்துக் கொள்கிறாள்.
பெண் கதா பாத்திரங்கள் மீது இவர் கொண்டுள்ள உறவே முழு வாழ்வின் மீது இவர் கொண்டுள்ளஉறவாகச் சொல்லலாம். இவருக்குப் பிரியமாக இருக்கிறது இந்த வாழ்க்கை. இது வாழ்வின் பிரச்சனைகள் தெரியாத மொண்ணைத்தனத்தின் விளைவு என்பதற்கில்லை. பிரச்சனை என்ற வார்த்தை கூட வண்னதாசன் உலகில் ஒரு கடுமையான வார்த்தை. அவருக்குத் தென்படுபவை கிரீச்சிடல்கள், உராய்வுகள், இடறல்கள், நெரடல்கள். ஒரு சிறு வெடிப்பு எப்படியோ ஏற்பட்டு விட்டது. முக்கியமாக மனித உறவுகளின் புரிதல்களில். ஒரு சிறு முயற்சி; மேலும் சற்று உன்னிப் புரிந்து கொ ள்ளும் தன்மை; அதற்கு அவசியமான பிரியம்; வெடிப்பு அணைந்து கொள்ளும். நெரடல் மறைந்துவிடும். இப்போது கூட அவருக்கு பெரிய புகார் எதுவும் இல்லை. இந்த நெரடலற்ற வாழ்க்கை எவ்வளவு சோபையாக இருக்கும் என்று கேட்கக் கூட அவருக்கு அவசியம் இல்லை. இந்த நெரடலும் சேர்ந்து அவருக்குப் பிரியமாகவே இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எப்படி அனைத்தின் மீதும் ஒரு பிரியம், ஒரு ஒட்டுதல், ஒரு கனவு வழிவது சாத்தியம்? ஜானகிராமனின் விசித்திரமான கதாநாயகி எல்லோரையும் – முக்கியமாக ஆண்களை – தொட்டுத் தொட்டுப் பார்க்க ஆசைப்படுவது போல், வண்ணதாசனும் இந்த வாழ்க்கையைத் தொட்டுப் பார்த்து அதன் சதோஷங்களை அடைய ஆசைப்படுகிறாரா? பெண் ஸ்பரிசத்திற்கு ஆண்கள் இளிக்கலாம். இளிக்கிறார்கள். ஆனால் எந்த மகோன்னத எழுத்தாளனின் ஸ்பரிசத்திற்கும் வாழ்க்கை இளிக்காது.
வாழ்க்கை நளினமானதா? அல்ல. நளினம் அற்றதா? அல்ல. இங்கிதமானதோ இங்கிதம் அற்றதோ அல்ல. கனவோ, கனவுகள் அற்றதோ அல்ல. எப்படி இருப்பினும் அது நிச்சயமாக எளிமையானது அல்ல. லகுவானது அல்ல. ஒரு இயந்திரமாக பாவிக்கும் போது கூட அது மிகப் பெரிய இயந்திரம். குனிந்து பார்க்க தலை சுற்றும் இணைப்புகளும், உறுப்புகளும், இடுக்குகளும் கொண்டது. காடு எனக் கொண்டால், அதன் விஸ்தீரணம், விட்ட இடம் தொட்ட இடம் தெரியாதது. இதை முந்தியில் முடிந்து காட்டுகிறவந்தான் கலைஞன் என்பது இல்லை. தன் முன் விரியும் அனுபவங்களில், இந்த வாழ்வின் உக்கிரத்தை உணர முற்பட்டவன் கலைஞந்தான். இந்த உக்கிரம் பிரதிபலிக்காத எழுத்து உன்னதப் பொருட்படுத்தலை எப்போதும் பெற்றதில்லை.
வண்ணதாசன் வாழ்க்கையப் பார்க்கிறாரா? வாழ்க்கை சித்திரங்களைப் பார்க்கிறாரா? புற உலகத் தோற்றங்கள் இவரை வெகுவாக ஆகர்ஷிக்கின்றன. இவற்றை கிரகித்துக் கொள்ளும் பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து; இது ஒரு வில்லங்கம். வாழ்வு பற்றிய தன் அபிப்ராயத்தை ரேகைப் படுத்தும் பணியில் இத் திறமைகள் பின்னொதுங்கி உதவும் போது, இது சம்பத்து. பொறிகள் விரிக்கும் கோலங்களின் அளைதல் வாழ்வின் மையத்துக்கே நகர முட்டுக்கட்டையாகும் போது இது ஒரு வில்லங்கம்.
சித்திரங்களில் ஊடாடி கதையின் மையத்திற்குப் பிந்திப் போய் சேருகிறார் இவர். பகைப்புலங்களின் படைப்பில் மையம் அமுங்கிப் போகிறது. செய்திகள் வெளிறிப் போகின்றன. டிபன் பாக்சை மறந்து ஆபீசில் விட்டுவிட்ட சின்ன அம்மாள், மீண்டும் ஆபீசை அடைய ரொம்பக் கால தாமதம் ஆகிறது. ஆசிரியருக்குக் காட்சிப் புலங்களில் எவ்வளவு மயக்கமோ அவ்வளவு மயக்கம் இந்த அம்மாளுக்கும். அவளும் அப்படி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். அவள் பராக்கு பார்க்கிறாள். அது அவளுடைய சுதந்திரம், ஆனால் அன்று அலுவலகத்தின் அழகு முதன்முதலாக அனுபவமாகி விட்டது. அதன் அழகை மறைத்துக் கொண்டிருந்த மனிதர்களின் களேபரம் அப்பொழுது அங்கு இல்லை. மனிதர்கள் முற்றாக அங்கு இல்லாமலும் இல்லை. எப்படி மனித களேபரத்தில் அலுவலகத்தின் அழகு மறந்து போய் விட்டதோ, அதே போல், அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கதையில், கதை செய்தி நம்மை வந்து ஸ்பரிசிக்க, பின்னணியின் களேபரமும் தடையாகி விட்டது. செய்தியே ஒரு ஆசிரியரை ஊக்குவிக்க வேண்டிய உந்து சக்தி. அச் செய்தியைத் துலங்க கிரணங்களைக் குவிப்பது உண்மையில் வாழ்வு பற்றி ஆசிரியர் தன் பார்வையைப் பரப்பிக் கொள்வதாகும். தன்னையே துலங்க வைத்துக் கொள்வதாகும்.
இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மயக்க நிலையை சப்பு கொட்டுகிறவர்களே இன்று இக்கதாசிரியரை அரவணைக்கும் இலக்கிய உலகின் புகழ்பெற்ற இரண்டுங் கெட்டான்கள்.
இந்த மயக்க நிலைக்குத் தமிழில் ஒரு முன் சரடு உண்டு. இடு கால்களற்ற மயக்க நிலை எனில், வெறும் மேகக் கூட்டம் எனில், இங்கு பொருட்படுத்த வேண்டியதில்லை. இம்மயக்கம் யதார்த்த தளத்தில் இணைக்கப்படுகிறது. யதார்த்த தளத்திற்குறிய விவரணைகள் சூட்சுமமாகவும், அப்பட்டமாகவும் பயன்படுத்தப்படும் நிலையில் கனவுகளின் கலப்பு செல்லுபடியாகின்றன. யதார்த்தத்தின் மேல் கனவின் பனிப்படலத்தை விரித்த மிக வெற்றிகரமான கலைஞன் என ஜானகிராமனைச் சொல்லலாம். அவருடைய ’மோகமுள்’ ஒரு சிறந்த உதாரணம். இத்தன்மையின் வாரிசுகள் ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் ஆகியோர். வண்ணதாசனின் மயக்கத்தைத் தெரிந்து கொள்ளக் கூட, ஜானகிராமனிலிருந்து பகுக்கும் ஒரு பொதுத் தன்மை அதிக பலனைத் தரக்கூடும்.
மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களைச் சுற்றி இலக்கிய ஈடுபாடற்ற ‘ரசிக’ சிகாமணிகளும் கூடியிருப்பதன் காரனம் இதுதான். வாழ்வின் உக்கிரத்தைப் புரிந்து கொள்ள அல்ல, கனவுகளின் ஒரு மிடக்கைப் போட்டுக் கொள்ள வந்தவர்கள் அவர்கள். வாழ்க்கையை அதன் தளத்தில் பார்க்க நேர்ந்து, தனது அனுபவங்களின் மெய்ப்பொருளை வண்ணதாசன் தேட முற்படும் பொழுது, அவருடைய இயற்கை சம்பத்துகளான அழகியலும், பொறிகளின் சூட்சுமங்களும் அவரை வெகு தூரத்திற்கு இட்டுச் செல்லக் கூடும். அவ்வாறு ஒரு பயணத்தை மேற்கொள்ளும்போது, அவருடைய இன்றைய ரசிகர்கள் சுவாரஸ்யக் கனவுகளின் போதைக்கு அலைகிறவர்கள் – இவரைக் கைகழுவி விடுவார்கள். இந்த பாக்கியம் இந்த இளைஞருக்கு வாய்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.
புஜ்ஜி, எவ்வளவு அருமையான பெண். அவள் ஏன் அந்த ‘எழுத்தாளனை’த் தேர்ந்தெடுத்தாள்? பருவத்தில் பிழப்புக்கு அச்சுகோர்க்கும் நிர்பந்தத்தில் தள்ளப்பட்டவளுக்குக் கூட அந்த ‘எழுத்தாளனை’ச் சுற்றி எப்படிக் கனவுகள் படர்ந்தன? யார் அந்தக் கனவைப் பரப்பினார்கள்? நம் கலை உலகில் கனவை விற்றுப் பிழைப்பவர்களுக்கு இதில் பங்கு இல்லையா? இப்படிப் பார்க்கும் போதுதான் இது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது தெரிகிறது.
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்     20.07.1978
******
தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்கிற புத்தகத்திற்கான முன்னுரை.
நன்றி : எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தளம் 20.10.2010.

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வண்ணதாசன் கதைகள் – சுந்தர ராமசாமி

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    மிக்க நன்றி.

  2. nilaamaghal சொல்கிறார்:

    ப‌டைப்புக‌ளைப் ப‌ற்றிய‌ ப‌குப்பாய்வு, ப‌டைப்பாளி ப‌ற்றிய‌ த‌னிம‌னித‌ சிந்த‌னை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s