நிலா பார்த்தல்

வண்ணதாசன்

 

இப்போது எத்தனை பேர் நிலா பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

அல்லது ஏற்கனவே இன்று நிலா பார்த்தீர்கள்?
நான் எப்போதெல்லாம் இப்படி ஒரு பௌர்ணமி நிலவைப் பார்க்க
நேர்கிறதோ அப்போதெல்லாம் யாரையாவது அதைப் பார்க்கச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். மதுரை பிச்சைப்பிள்ளைச் சாவடியில் பார்த்த நிலாவை ரவிசுப்ரமணியனைப் பார்க்கச் சொன்னேன். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்த்த நாட்கள் ஒன்றில் மிகத் தாமதமாக வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது நிலா என்னுடன் நிஜமாகவே நில்லாமல் ஓடிவந்துகொண்டு இருந்தது, பஸ் ஜன்னலோடு. அது மலை மேல் ஏறியிருக்கும். மல்லிகைப் பூ கொண்டு வந்திருக்கும்
 பத்தமடை தாண்டி அந்தபிராஞ்சேரிக் குளமும் கரையடிமாடசாமி கோவிலும் வருவதற்குமுன். இடது பக்கம் முழுவதும் நெல்லும் வாழையும் நிரம்பிய இருட்டில் தங்கரளிப் பூக்களின் வாசனை. எனக்குப் பிடித்த அந்த இடத்தின் இன்னொரு வாசனை, பாம்பு கிடக்கும் என்று
சின்ன வயதிலிருந்தே பழகிப் போன, ‘உளுந்தம் பருப்பு வறுக்கிற’
வாசனை. இவ்வளவையும் என்னோடு நுகர்ந்தபடியே நிலா ஓடி
வந்துகொண்டிருந்தது.
 கண்டக்டர் ராமகிருஷ்ணன் என்னுடைய இதுபோன்ற வழக்கமான கிறுக்குத்தனங்களை எல்லாம் அறிந்தவர்.. அவரிடம் நிலா பாருங்கள் என்று நான் சொல்லவே வேண்டாம். அவரே, ‘என்ன விசிலடிச்சிரவா? இங்கன இறங்கி செத்த நேரம் உக்காந்து நிலாப் பாத்துட்டு சவுரியமா இருங்க. அடுத்த ட்ரிப்பு வரும்போது ஏத்திக்கிடுதேன்’  என்று சிரிப்பார். அவருடைய சிரிப்புக்கு அந்த நீல நிற சீருடைச் சட்டை மிகப் பொருந்தும். அல்லது அந்த மேலப் பாளையம் மீசைக்கார பாய் இருந்தால் கூட நன்றாக இருக்கும். ‘ஸார்வாள். எனக்கு ஒண்ணும் இல்ல. நிறுத்தி வேணும்னாலும் அம்பிலியை ஏத்திக்கிடுதேன். ஒரே ஒரு கண்டிஷன். பாஸஞ்சர் டிக்கெட், லக்கேஜ் டிக்கெட் ரெண்டுல  ஏதாவது ஒண்ணு எடுத்துரணும். கட்டின பொண்டாட்டி மாதிரி பக்கத்தில உக்காத்தினாலும் சரி. கொழுந்தியாவ மாதிரி மடியில வச்சுக்கிட்டாலும் சரி’ என்று கிண்டல் பண்ணுவார்.  அவர் கிண்டலுக்காகவே, ஒன்று இரண்டு பஸ்ஸை விட்டுவிட்டு இந்த பஸ்ஸில் ஏறுகிற டீச்சர்மார் உண்டு. போட்டிருக்கிற கொண்டையை, குத்தியிருக்கிற ரோஜாப் பூவை, உடுத்தியிருக்கிற டிசைனர் சேலையை, மாருதி 800 ல்கொண்டுவந்து பஸ் ஏற்றிவிட்டுப் போகிற டீச்சரின் கணவரைஎல்லாம் கவனித்து இரண்டு வார்த்தை சொல்ல இப்படி ஒரு மனுஷன் இருப்பது  எவ்வளவு தேவையாக இருக்கிறது.  தினசரி நாற்பது ஐம்பது கிலோமீட்டர் அலைந்து வேலைக்கு வருகிற பிழைப்பில் அது கிண்டலாகத்தான் இருந்தால் என்ன?
அந்த இரண்டு பேருமே டூட்டியில் இல்லை.
 நான் எதிர்பார்க்கவே இல்லாத நேரத்தில், சேர்மாதேவியில் தச்சு
வேலைக்கு வந்துவிட்டு, செவலில் இறங்கிய இரண்டு மூன்று
இளவட்டப் பிள்ளைகளில் ஒருத்தன், “மாப்பிளே. நிலாவப்
பாத்தியா, கிச்சுண்ணு இருக்கு” என்று அடுத்தவனிடம் சொல்வது
கேட்டது. நான் இதைவிட அழகாகவா சொல்லியிருக்கப் போகிறேன். அப்புறம் சமீபத்தில் கொஞ்ச காலத்திற்கு ‘சொல்வனம்’ கவின் எனக்கும், அவருக்கு நானும் இப்படிப் பௌர்ணமியை ஞாபகப் படுத்திக்கொள்ளும் குறுஞ்செய்திப் பரிமாற்றம் இருந்தது. நாங்கள் முழுநிலாக் கால வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வது எப்படியோ இப்போது நின்று போயிற்று. தானாகத் துவங்குகிற பழக்கம் தானாக நின்றுபோகவும் செய்யும் தானே.
இன்றைக்கு மறுபடியும் யாரையாவது நிலா பார்க்கச் சொல்லத் தோன்றுகிறது. இன்றைக்கும் நிலாவைத் தற்செயலாகத்தான்
பார்த்தேன். ஒரு விருந்தினரை வாசல் வரைக்கும்  சென்று
வழியனுப்புகையில், அவர்தான் நிலாவைப் பார்த்து, ‘பவுர்ணமி
இண்ணைக்கா, நேத்தா?’ என்றார்.  நான் நிலாவைப் பார்க்கவே
இல்லை. ‘இன்றைக்குத்தான்’ என்று நிச்சய்மாகச் சொன்னேன்.
அப்படிச் சொல்லும்படி இருந்தது இந்த வெண்ணிற இரவு . எதிரே
அசையாதிருந்த எருக்கலஞ்செடியின் மெத்தெனும் இலையின்
மேல் நிலவு வெளிச்சம். மழை நின்றபிறகு போகலாம் எனக் காத்திருக்கும் ஒரு நனைந்த கிழவரைப் போல இருட்டுக்குள் நின்ற, தூரத்துக் கட்டுமானம் ஒன்றின் மேல்  வரிவரியாக எழுதப் பட்டிருந்த நிலவு வெளிச்சம். . கல்வெட்டாங்குழிப் பக்கத்து சோடியம் வேப்பர் விளக்கு மஞ்சள், சீக்கிரம் இந்த எட்டுமணிக்கே உதயமாகிவிட்ட நிலவின் ஒளிப்படர்வில் அவமானப்பட்டு, ஒரு கருப்பு நாயின் மேல் பாய்ந்துவிடும் ஆயத்தத்தில் இருந்தது.
ஆள் நடமாட்டமே அற்ற இந்த சிதம்பர  நகர்களின்,  ‘புரங்களின்
வெறுமையை இது போன்ற நிலவுக் காலங்கள் துயரத்தோடு
பாடிக்கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தவனாக நான் மட்டும்
தெருவில் நின்றுகொண்டிருந்தேன்.  இப்போது மழை பெயதால்
நன்றாக இருக்கும் எனத் தோன்றிற்று. ஏதேனும் ஒரு தப்பித்த
மிருகம் இந்த வழியாக வந்தால் எப்படி இருக்கும். கூடலூருக்குள்
புகுந்துகொண்டிருந்த சென்ற வார யானைகளின் குடும்பம் ஒன்று
முதுகில் தும்பிக்கையால் வீசிக்கொண்ட மண்ணுடன், இந்த
நிலவைப் பார்த்து பிளிறலிட்டபடி வரும் எனில்?
கடிகாரம் கட்டியது போல சரியான மணிக்கணக்கில் தினந்தோறும்
ஊர்ந்து சென்றுகொண்டிருந்த அந்த காலை நேர நெடும்பாம்பு
நிலவின் புடைகளிலிருந்து தன்னை உருவிப் புறப்பட்டு நெளிந்து
மினுங்கி இந்த முன்னிரவைத் தன் வசமாக்கும் எனில், அதன்
சொல்லொணா வளைவுகள் உண்டாக்கக் கூடிய முடிவற்ற ஒரு
நீலத் தடம் எத்தனை மாயம் நிறைந்த வசீகரம் தரும் இந்த இரவுக்கு? இரண்டு நாட்களுக்கு முந்தி,    அடுத்தடுத்த       வீடுகளில்
திருமணத்திற்காகவும் மரணத்திற்காகவும் போட நேர்ந்திருந்த ஷாமியானாக்களில் ஒன்றை இப்போது இங்கே போட நேர்ந்தால்,
அந்த ஷாமியானா விளிம்புகளில் அரசமர இலைகள் போல இந்த
நிலா வெளிச்சம் எப்படியெல்லாம் நடுங்கும்?
நான் மிகவும் கனிந்தும் கலைந்தும் தவித்தும் தனித்தும் அவிழ்ந்தும் இறுகியும் நிலாவைப் பார்த்துக் கொண்டு, என்னை வீட்டிலிருந்து பிடுங்கி ஒரு வனத்தில் உடனடியாக நட்டுவிடும் அடைபடாத ஒரு உணர்வில் நிலாபார்க்கச் சொல்ல யாரையாவது தேடிக் கொண்டிருந்தேன்.
சாம்ராஜ் திருப்பத்தூரில் இருக்கிறார்,பத்து நாள் நாடகப் பயிற்சிப் பட்டறையில். கலாப்ரியா சென்னையில் இருக்கிறான் மகளை
வேலையில் சேர்க்க. பாலுவைக் கூப்பிட்டால் அவன் ஆட்டோ
பயணத்தில், அதுவும் கிண்டி – போரூர் ஷேர் ஆட்டோவில்.
கடைசியில், நான் என்னிடமே சொல்லிக்கொள்ள மட்டுமே முடிகிறவனாகப் பெரும்பாலும் இருக்கிறேன்.
எனக்கு என்னுடைய , ‘நிலா பார்த்தல்’ தொகுப்பு ஞாபகம் வந்தது.
அதில் என்னுடைய ‘நிலா பார்த்தல்’ கவிதையும், அது விகடனில்
பிர்சுரமானதைப் படித்த ஒரு பின்னிரவில், மேற்கு மாம்பலம்,
2.ராஜு நாயக்கன் தெருவீட்டில் இருந்த என்னைக் கூப்பிட்டுப் பேசிய ஸ்ரீராம் எல்லாம். . அவனுடைய அந்த இரவுக் குரல்
இன்று இந்த நிலா வெளிச்சத்தில் கேட்டால் எப்படி இருக்கும். ஏன், கேட்க நினைக்கிற நேரத்தில், கேட்க நினைக்கிற குரல்களை நாம் கேட்கவே முடிவதில்லை?
வேறு யார் குரலையாவது நம் குரலில் போலி செய்தால் இது
போன்ற நேரங்களில் தவறா, என்ன? நான் ஸ்ரீராம் குரலில் அந்தக்
கவிதையை வாசிக்க விரும்பினேன், வாசித்தேன்.
வரப்போகும் விருந்தினர்க்காக
அதிகப்படி காய்கறி
வாங்கிவரப் போகையில்
தற்செயலாக நிலா
தலைக்கு மேல் விழுந்தது.
*
ரயில்வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வழி
கலங்கித் தெரிந்தது
நீரற்ற ஆற்றுமணல் மேல்
நிலா.
*
மரணத்திலிருந்து
தப்பித்த கண்கள்
மருத்துவ மனைக் கட்டிலில்
உறங்க,
கனக்கும் மனத்துடன்
நிசியில் வெளிவந்து
நின்றபோது
வேப்பமரக் கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
*
நண்பனின் அறையிலிருந்து
திரும்பும்போது ஏற்பட்ட
திடீர் வெறுமையில்,
நிச்சயமற்ற தெருக்களில்
நீண்ட நேரம் நடந்து
வீட்டைத் தொடுகையில்
பூட்டிய கதவை
நிலவும் தட்டியது.
*
மின்வெட்டில் விசிறி
சுழற்சியை நிறுத்த
காற்றைத் தேடி
இருட்டுக்குள் துளாவி
கைப்பிடிச் சுவரில்
முகம் பதித்த போது
நிலா வீசியது
சில நட்சத்திரங்களை
*
தானாக இப்படித்
தட்டுப் பட்டது தவிர
நிலாப் பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.
ஸ்ரீராம் குரலில் இதை வாசித்துக் கொண்டு வரும்போது, ஒரு சொல்லில் அது வினோதமாக மென்மையடைவதை உணரமுடிந்தது. இப்போது என் குரல் முனைவர் ஜயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் குரலாகியிருந்தது. அவர் நிலாபார்த்துக் கொண்டிருந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, கோவை கண்ணதாசன் கழக விருது எனக்கு வழங்கப்பட்ட அரங்கில் ஜயந்தஸ்ரீயின் அந்த நிலா உதித்திருந்தது.  என்னைப் பற்றிய  நல்ல வார்த்தைகளை அவருக்கே உரிய வழக்கமான நேர்த்தியுடன் சொல்கையில்,அவருக்குச் செய்யப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சையின் மருத்துவமனை நாட்களில் அவருடைய வாசிப்புக்கு உரியதாக இருந்த புத்தகமாக, ‘நிலா பார்த்தல்’ தொகுப்பைக் குறிப்பிட்டார்.
நானும் கூட,  என் சித்திரைத் திருநாள் மருத்துவ மனை ஜன்னல் வழி
நிலா பார்த்திருக்கிறேன். இதுவரை பார்க்கப்பட்ட எல்லா முழு
நிலவுகளின் வெளி விளிம்பிலேனும் சிறு அளவு துயரத்தின்
நிழல் வரையப்பட்டே இருக்கிறது.
எனக்கு கலாப்ரியா ஞாபகம் வருகிறது.
இந்த வருடத்திற்கான கண்ணதாசன் விருதை கலாப்ரியாவுக்கு
வழங்குகிறார்கள். எனக்குக் கலாப்ரியா ஞாபகம் வரும் இந்த நேரம். அவனுக்கு ஞாபகம் வருகிற பாடலாக , ‘அன்று வந்ததும்
அதே நிலா’ இருக்கும்.
அன்று வந்ததோ, இன்று வந்திருக்கிறதோ, எதுவாகவும் இருக்கட்டும். நிலா பாருங்கள்.

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நிலா பார்த்தல்

 1. nilaamaghal சொல்கிறார்:

  ஏன், கேட்க நினைக்கிற நேரத்தில், கேட்க நினைக்கிற குரல்களை நாம் கேட்கவே முடிவதில்லை?//

  ஆனால், பார்க்க‌ முடியாத‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலும் தெரிந்த‌ நில‌வின் முழு அழ‌கையும் ப‌திவின் ஒவ்வொரு அசையும் இசைக்கிற‌து.

  முற்ற‌ம் வைத்த‌ கிராம‌த்து வீட்டின் ஒவ்வொரு இர‌வின் தூக்க‌மும் இதே நில‌வையும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளையும் மிச்ச‌மீதி வானின் அட‌ர்க‌ருநீல‌த்தையும் க‌ண்க‌ளால் துழாவி ம‌ன‌ப்பையை நிறைத்த‌ பின் தானே… இன்றைய‌ வாழ்வு செய‌ற்கை நிர‌ம்பி செல்ல‌ரித்து…

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  நன்றி.

 3. சமீபத்தில் திருச்செந்தூர் கடலில் நீராடிக்கொண்டே நிலவைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். மிகவும் அருமையாகயிருந்தது.

  அலைகளுக்கு மேலே நிலா மிதந்துகொண்டிருந்தது.

 4. R.MANIKKAVEL சொல்கிறார்:

  ஓம் ஸ்ரீ முருகன் துணை

  ஓர் நிலா இரவில், வெள்ளாற்றை நீந்தி கடக்கையில், இரு நிலவுகளுக்கு இடையில் பறந்து மிதந்து கொண்டு இருந்தேன்.
  நிலா இரவில் நதியில் ஓடுவது தண்ணீர் அல்ல, மஞ்சள் பூசிய குளிர்ந்த வெள்ளி குழம்பு.

  வாழ்க வளமுடன்.

 5. R SUNDARARAMAN சொல்கிறார்:

  Are you an Ex-employee of STATE BANK OF INDIA – WORKED IN ANY OF THE MADURAI BRANCHES=

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s