வண்ணதாசனின் இன்று ஒன்று நன்று- தேரோட்டம்

வண்ணதாசன்
தேரோட்டம்
நான் வண்ணதாசன் பேசுகிறேன். இதுவரை எழுத்துகள் மூலமாக உங்களை அடைந்த நான் குரலின் மூலமாக இன்று ஒன்று நன்று எனத் தொடுகிறேன். சமீபத்தில் தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது. ஒவ்வொரு வருசமும் ஆனி மாதம் தேரோடும். இந்த வருடம் ஆனித்திருவிழாவிற்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது. வேறென்றைக்கும் இல்லாவிட்டாலும் தேரோட்டத்தன்றைக்கு எப்படியாவது என்னுடைய ஊரில் அல்லது பிறந்த வளர்ந்த வீட்டில் இருக்கத்தான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. யாருக்கும் அது இயற்கைதானே. அந்தந்த ஊர்த்திருவிழாவை அந்தந்த ஊரில் அதே ஆட்களோடு பார்க்க வேண்டும் என்று தோன்றத்தானே செய்யும். அப்படித்தோன்றாவிட்டால் அப்புறம் நான் என்ன மனுசன் அது என்ன சொந்த ஊர்.
இந்தத்தடவை தற்செயலாகத் தேரோட்டத்தன்றைக்கு நான் பெங்களூரில் இருக்கிறேன். நண்பன் பரமனிடமிருந்து போன் வருகிறது கல்யாணி இன்னைக்கு நம்ம ஊர்ல தேரோட்டம். அதை கேட்ட உடனே எனக்குள் ஒரு சத்தம் கேட்கிறது. வடம் பிடிக்கிறவர்கள் சத்தம். நகரா அடிக்கிறவர்கள் சத்தம். வேட்டுப்போடுகிறவர்களின் சத்தம். இவையெல்லாம் மொத்தமாக சேர்ந்த ஆனித்திருவிழாவின் சத்தம். எனக்கு தேர் அசைந்து அசைந்து வாகையடிமுக்குத் திரும்பி தெற்குரத வீதியில் வருவது மாதிரித்தெரிக்கிறது. தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு. தேர் அசைந்த மாதிரி இருக்குமென்று சொல்வது எப்பேர்பட்ட வார்த்தை. தேர் அசைந்து வருவதுதான் அழகு. உச்சியிலே கொடி பறக்கும். ஏழுதேர்தட்டும் லேசாக அசையும். நிஜமாகவே நான்கு மரக்குதிரைகளும் நமக்கு மேல் பாய்கிற மாதிரியிருக்கும். தூரத்திலிருந்து பார்க்கிறபோது சாமியைக் கும்பிடத் தோன்றுகிறதோ இல்லையோ அசைந்து வருகிற தேரைக் கண்டிப்பாக கும்பிடத் தோன்றிவிடும்.
நான் பரமனிடம் பதிலுக்கு கேட்கிறேன். தேர் பார்க்கப் போயிருக்கியா? தேர் எங்கப்பா வருது? நான் எங்கே போக மயூரில, ஏஎம்என் டிவிலயெல்லாம் வைவ்வா காட்டுறான். சும்மா பாத்துட்டு உட்கார்ந்திருக்கேன் என்கிறான். இதைச் சொல்ல அவனுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். சிரிப்பு அப்படித்தான் நேரே நம் முகத்தைப் பார்க்காமல் சற்று குனிந்து கொண்டிரந்த மாதிரியிருந்தது. இது முடிந்த கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது. அதிகமாகப் போனால் காலை  பதினொரு மணிகூட இருக்காது மூங்கில்மூச்சு சுகா அவருடைய முகப்புத்தகத்தில் தேர் லாலாசத்திரம் முக்குத் திரும்பிட்டுதாம் என்று ஒரு தகவலைப் போடுகிறார். லாலாசத்திரம் முக்குத் திரும்பியாகிவிட்டதென்றால் இனிமேல் ராயல்டாக்கீஸ் முக்கு அதற்குப் பிறகு நேராகத் தேர் போய் நிற்க வேண்டியது நிலையில்தான். எதற்கு இப்படி அவசரப்படவேண்டும். நெல்லையப்பரை இப்படி வேகமாகக் கொண்டுபோய் நிலையில் நிறுத்துவதற்கு எதற்கு இந்த கொடியேற்று? எதற்கு இந்த ஒன்பது நாள் திருவிழா? சப்பரம், சாமி புறப்பாடு எல்லாம்?.
நான்கு ரத வீதிகளில் ஒவ்வொரு ரதவீதி முக்கிலேயும் தேர் ஒரு நாளாவது நின்று புறப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். எதற்கு இந்த அவசரம். இப்படி பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பேர் தேரோட்டமா? இப்படி வேகவேகமாக முடித்துவிட்டால் அடுத்து நாம் என்னதான் செய்யப் போகிறோம்? மிஞ்சிப்போனால் தொலைக்காட்சி அல்லது ஒரு திரைப்படம் அல்லது சற்றுத்தூக்கம் அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்கும் வேண்டுமா? திருவிழாக்களை ஏன் ஆறஅமர நிதானமாக சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது. பனி உருகுவது போல, பூ உதிர்வது போல அல்லது ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல ஒரு திருவிழாவை ஏன் அதன் போக்கில் நிகழ்த்தக் கூடாது? இவ்வளவு கனத்த வடம் பிடித்து இவ்வளவு பெரிய தேரை இத்தனை பேர் இழுக்கிற காட்சி எவ்வளவு அருமையானது.
தேர் என்றாலும் சரி வாழ்க்கை என்றாலும் சரி கூடி இழுக்கும்போது அசைந்து அசைந்து அது நகர்வது நன்றாகத்தானே இருக்கும். அது திருவிழாவாக இருக்கட்டும், நீங்கள் தொடுத்த பூவை உங்களுடைய சினேகிதியின் தலையில் சூடுவது போன்ற அல்லது தொலைபேசியில் கூப்பிட்டு உங்கள் நண்பனுக்கு திருமணநாள் வாழ்த்து சொல்வது போன்ற சில எளிய சந்தோஷங்களாக இருக்கட்டும். ஏன் நாம் நிதானமாகக் கொண்டாடக் கூடாது. நிதானமாகக் கொண்டாடுவோம். அறுவது நொடிகள் ஓடவேண்டிய தேரை ஏன் ஒரே ஒரு நிமிடத்தில் நாம் இழுத்து முடிக்க வேண்டும். கேட்பது நானல்ல அந்த நான்கு ரதவீதிகளும்.
வண்ணதாசன்
நன்றி: சித்திரவீதிக்காரன் 
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், ஆனந்த விகடன், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , . Bookmark the permalink.

9 Responses to வண்ணதாசனின் இன்று ஒன்று நன்று- தேரோட்டம்

  1. கார்த்திக் சொல்கிறார்:

    நான் தேரோட்டம் பார்ததில்லை,சென்னிமலையில் நடக்கும் இந்த தடவ கண்டிப்பா பாக்கனும் 🙂

  2. nilaamaghal சொல்கிறார்:

    ர‌த‌ வீதிக‌ளுக்கே அந்த‌ ஒருநிமிட‌ தேர் க‌ட‌த்த‌லால் தானே அப்பெய‌ர்?! ஒவ்வொரு க‌ண‌த்தையும் அனுப‌வித்து அனுப‌வித்து ர‌சித்து ர‌சித்து அடுத்த‌ தேரோட்ட‌ம் வ‌ரை ம‌ன‌சிலிருத்திக் கிட‌க்கும‌ல்ல‌வா அதுவும்!

  3. rathnavelnatarajan சொல்கிறார்:

    இப்போது இது அரசாங்கம் நடத்தும் ஒரு நிகழ்ச்சி; அவ்வளவு தான்.
    நல்ல பதிவு.
    நன்றி.

  4. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைமாதம் தேரோட்டம். நான்கு மாசிவீதிகளிலும் தேர் சுற்றி வரும். சித்திரைமாதம் மதுரையே கொண்டாட்டமாகயிருக்கும். மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டுத்திருவிழா போல மீனாட்சியம்மன் கோயிலுக்கும், அழகரைக்காணவும் மகிழ்வோடு அலைந்து திரிவார்கள்.
    \\தேர் என்றாலும் சரி வாழ்க்கை என்றாலும் சரி கூடி இழுக்கும்போது அசைந்து அசைந்து அது நகர்வது நன்றாகத்தானே இருக்கும்.
    -வண்ணதாசன்\\
    திருவிழாக்களின் நகரான மதுரையில் சித்திரைத்தேரோட்டம் அல்லது அழகர்கோயில் ஆடித்தேரோட்டம் அல்லது திருப்பரங்குன்றத்தில் பங்குனித்தேரோட்டம் வந்து பாருங்கள். மகிழ்ச்சியாய் இருக்கும். படத்தில் உள்ளது மதுரை அழகர்கோயில் ஆடித்தேரோட்டம்.

  5. jaghamani சொல்கிறார்:

    தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு. தேர் அசைந்த மாதிரி இருக்குமென்று சொல்வது எப்பேர்பட்ட வார்த்தை. தேர் அசைந்து வருவதுதான் அழகு.

    அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_21.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  6. Thirumalaisamy P சொல்கிறார்:

    http://www.sinthanaipookal.blogspot.in/2013/04/blog-post.html
    இங்கே இன்னொரு பகுதி!! வண்ணதாசன் அவர்களின் இன்று… ஒன்று… நன்று !

  7. Thirupathirajan சொல்கிறார்:

    மதுரையில் தேர் அசைந்து வரும் போது, தேரில் இருப்பவர்
    ” ஹர ஹர சங்கர மகாதேவா.. மீனாட்சி சுந்தர மகாதேவா..
    சோம சுந்தர மகாதேவா…
    பக்தர் எல்லாம் சொல்லணும் மகாதேவா.. சத்தமா சொல்லணும் மகாதேவா.. ” என்று கூறுவார்.. அது தான் எனக்கு மயிர் கூச்செரியும் நேரம்.. அதில் கடைசி இருவரி கூட மந்திரமாக தான் தெரியும் எங்களுக்கு.. நாங்களும் “மகாதேவா” என சத்தமாக சொல்லுவோம்… தேர் திருவிழாவை நியாபகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி..

  8. Pingback: வண்ணதாசன் அவர்களின் இன்று… ஒன்று… நன்று ! | வண்ணதாசன்

  9. தமிழன் சொல்கிறார்:

    ‘இன்னும் சேரிக்கு வராத தேர்… என்று எப்போதோ படித்த புதுகவிதை ஞாபகம் வருகிறது. சேரிக்கு தேர் வர வேண்டாம். சேரி மக்களையாவதை வடம் தொட விடுங்களேன். ஏன் அவர்கள் வடம் தொட்டால் தேருக்கு தீட்டா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s