இன்று ஒன்று நன்று-சந்தோஷப்படுங்கள்

வண்ணதாசன்
சந்தோஷப்படுங்கள்
நடைபயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும் மஞ்சளுமான நிறத்தில் ஒரு மாம்பழம் தடுக்கியதா?
இன்று உங்கள் வீட்டில் வாசல் தெளிக்கையில் நேற்றுப்போட்ட கோலத்தின் மேல் செக்கச்சிவப்பாக ஒரு வாதாம்பழம் கிடந்ததா?
பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற உங்கள் பிள்ளையின் கையில் ஒரு காக்கைச்சிறகு இருக்கிறதா?
சந்தோஷப்படுங்கள்!
உங்களுடைய இந்த நாள் நன்றாகத் துவங்கியிருக்கிறது.
சந்தோஷப்படுங்கள் இந்த நாள் நன்றாக நிறைந்துகொண்டிருக்கிறது.
..
ஒரு கடிபட்ட மாம்பழத்திற்காக, ஒரு வாதாம்பழத்திற்க்காக, ஒரே ஒரு காக்கைச்சிறகுக்காக எல்லாம் ஒருவன் சந்தோஷப்படமுடியுமா என்று கேட்கீறிர்களா?
நிச்சயம் சந்தோஷப்படலாம்.
நீங்கள் மாமரங்களுக்கருகில் வாதாம்மரத்திற்கருகில் மட்டுமல்ல,
பழந்திண்ணி வவ்வால்களோடும், அணில்பிள்ளைகளோடும், காகங்களோடும் இருக்கிறீர்கள்.
உங்கள் உலகம் பத்திரமாக இருக்கிறது.
..
அலுவலகத்திலிருந்து திரும்பிவரும் போது உப்புபோட்டுக் குலுக்கிய நாவல்பழங்களுள்ள ஒரு வெங்கலக்கிண்ணம் உங்களை வரவேற்கிறதா?
சந்தோஷப்படுங்கள்.
..
உங்களுக்கு பிடித்த பெரியம்மாவைப் பார்க்க வேண்டுமென்று திடீரென உங்களுக்குத் தோன்றுகிறது. பஸ் ஏறிப்போகிறீர்கள். அழிக்கதவைத் திறந்து வீட்டுக்குள் கால்வைக்கும் போது மஞ்சள்பொடி வாசனையுடன் பழங்கிழங்கு வேகிற வாசனை வருகிறது.
சந்தோஷப்படுங்கள்.
..
இலந்தப்பழம் கொண்டுவருகிற உறங்கான்பட்டி ஆச்சிக்காக,
மருதாணி அரைத்து எல்லோருக்கும் வைத்துவிடுகிற மீனா அக்காக்காக,
திருவாசகம் படித்துக்கொண்டே பழைய செய்தித்தாள்களில் விதம்விதமாக பொம்மை செய்து தருகிற பூசைமடம் தாத்தாவுக்காக
சந்தோஷப்படுங்கள்.
..
கடவுளின் துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட மின்அணுமயமாகிவிட்ட வேகவேகமான பதிவிறக்க நாட்களில் இதற்கெல்லாம் ஒருத்தன் சந்தோஷப்படுவானா என்று யாரும் உங்களைக் கேலி செய்தால் அந்த மெட்ரோக்கேலிகளை மாநகரக்கிண்டல்களை சற்றே ஒதுக்கித்தள்ளுங்கள்.
அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறவர்கள்.
அவர்களை நீங்கள் அதிகம் பொருட்படுத்தாதீர்கள்.
..
ஓடுகிற ஆற்றில் கல்மண்டபத்து படித்துறையிலிருந்து உங்களுடைய வட்டப்பாறைகளுக்கு நீங்கள் உங்கள் போக்கிலே நீந்திக்கொண்டு சென்றிருங்கள்.
உங்களுடைய நாணல்திட்டுகளுக்கு,
தாழம்புதர்களுக்கு,
புளியமரச்சாலைகளுக்காக நீங்கள் சந்தோஷப்படுங்கள்.
உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில் உதிர்ந்து கிடக்கும் வேப்பம்பூக்களுக்காக,
பூ கொறித்து பூ உதிர்த்து தாவும் அணில் குஞ்சுகளுக்காக  சந்தோஷப்படுங்கள்.
அரிநெல்லிக்காய்களுக்காக, செம்பருத்திப்பூக்களுக்காக, விதையுள்ள கொய்யாப்பழங்களுக்காக சந்தோஷப்படுங்கள்.
..
இயற்கை உங்களுக்கு மிக அருகில் இருக்கிறது.
நீங்கள் இன்னும் இயற்கையின் நடுவிலே இருக்கிறீர்கள்.
உங்கள் வீட்டுச் செம்மண் முற்றத்தில்தான் மழைக்குப்பிந்திய மண்புழுக்கள் நெளியும்.
உங்கள் வீட்டுச்சுவரோரம்தான் மார்கழிமாதம் வளையல்பூச்சிகள் ஊர்ந்துசெல்லும்.
சரியாகச்சுடப்பட்ட ஒரு பேக்கரிரொட்டியின் நிறத்தில்தான் ஒரு குடைக்காளான் நீங்கள் புகைப்படமெடுப்பதற்கு தயாரானதுபோல முளைத்திருக்கும்.
உங்களுடைய தினங்களில் அணில் கடித்த பழமாக,
வவ்வால் போட்ட வாதம் கொட்டையாக,
காக்கைச்சிறகாக கிடைப்பதையெல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிற சந்தோஷங்கள்.
..
கொஞ்சம் குனியுங்கள்.
உங்களுக்கு கிடைத்திருக்கிற சந்தோஷங்களை நீங்களே பொறுக்கிக் கொள்ளுங்கள்.
வண்ணதாசன் (இன்று ஒன்று, நன்று – விகடன்)

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், ஆனந்த விகடன், இன்று ஒன்று நன்று, வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to இன்று ஒன்று நன்று-சந்தோஷப்படுங்கள்

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  நன்றி.

 2. சந்தோஷமாகயிருக்கிறது. நாம் மறந்துகொண்டே வரும் நாவல்பழங்களை, வாதாம்பழங்களை, அணில்கடித்துப்போட்ட மாம்பழங்களை, மருதாணியை, பனங்கிழங்குகளை, அணில்பிள்ளைகளை, கல்மண்டபங்களை, மழைக்கு வரும் வளையல்பூச்சிகளை, பார்த்தே கொள்ள நாளான மண்புழுக்களை நினைவூட்டி நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய வண்ணதாசனின் இந்த பதிவு மிகவும் அருமை.
  வாழ்க்கையை கொண்டாட நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்களை எளிமையாக சொன்ன வண்ணதாசனுக்கு நன்றிகள் பல.

 3. Asin sir சொல்கிறார்:

  இப்படி அடுக்கிய சந்தோசங்கள், எத்தனை எத்தனையோ பேருக்குத் தன் பழைய நினைவுகளைத் தந்து சந்தோசப்படுத்தும் என்பது உறுதி.

 4. Chinnusamy Chandrasekaran சொல்கிறார்:

  ரசிப்பதற்கும், நினைந்து மகிழ்வதற்கும் அடையாளச்சின்னங்கள் இந்த இயந்திர‌
  உலகத்தில் இன்னும் இருக்கின்றன. ஒரு முறை என் மாமாவுடன் நடந்து
  போய்க்கொண்டிருக்கும்போது (மாமாவுக்கு 75 வயது) கீழே கிடந்த யாரோ துப்பிப்போட்ட புகையிலை உருண்டையை பார்த்துக்கொண்டே சொன்னார்,
  ‘இதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வந்துவிடும்’ என்று. சில பொருட்கள் தலைமுறைகளின் ஞாபகச்சின்னங்களாக‌
  விளங்குகின்றன.

 5. jaghamani சொல்கிறார்:

  இயற்கையின் அருகில் இருப்பை உறுதிப்படுத்திய [அகிர்வுகள் ஆனந்தம அளிக்கின்றன.

 6. nilaamaghal சொல்கிறார்:

  இவ‌ற்றைப் ப‌டிக்கும் போதே காக்கை இற‌காய் ம‌ன‌ம் லேசாகி அணில் க‌டித்த‌ மாம்ப‌ழ‌ச் சுவையாய் ச‌ந்தோஷ‌ம்… நிம்ம‌தி ம‌ன‌க்கிட‌ங்கில் அல்ல‌வா இருப்பு வைக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து!

 7. Veemarajan சொல்கிறார்:

  Ethir neechal adithu vattapaaraiya piditha santhosathai marakkamudiyumaa

 8. bharathi சொல்கிறார்:

  ayyo eththanai santhosangal ! maranthe pona en siru vayathu ninaivugal

 9. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  நாம் “இன்னும் இயற்கையின் நடுவிலே இரு”க்கிறோம்்.
  அதைவிட மகிழ்ச்சியான விடயம் என்ன.
  சில கணங்கள் மகிழ்சியான வானில் பறக்கவிட்டீர்கள்.
  நன்றி

 10. T.sengadir சொல்கிறார்:

  SUDDENLY ONE DAY, I FOUND A HEAP OF SAND IN FRONT OF MY HOUSE. SOME CONSTURCTION WAS GOING ON SOMEWHERE NEAR BY. THE HEAP OF SAND WAS UNDER A PUVARASAN TREE. WHILE I WAS DIGGING , I FOUND A BALL OF CLAY. THEN A FLOWER FROM THE PUVARSAN TREE FELL. IT WAS PROBABLY THE HAPPIEST DAY IN MY LIFE .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s