கனியான பின்னும் நுனியில் பூ

p60b(1)

வண்ணதாசன்
ந்தக் கடையில் வாங்கி விடுவோமா?’ நான் தினகரியைக் கேட்கும்போது அவள் குனிந்து குனிந்து வாகைப் பூக்களைப் பொறுக்கி உள்ளங்கையில் வைத்துக்கொண்டுஇருந்தாள். திரிச்சூர் பூரத் திருவிழாவில் யானை மேல் இருந்து இரண்டு பக்கமும் வீசுகிற கவரி மாதிரி, ஒவ்வொரு பூவும் சிவப்புக்
குஞ்சமும் காம்புமாக இருந்தது. அவ்வளவு பெரிய வாகைமரத்தின் கீழ் நான் நிறுத்திய வண்டியின் மேல் சற்றுச் சாய்ந்தாற்போல நின்றுகொண்டு, ‘சரிப்பா’ என்றாள். அவள் இந்தப் பழக் கடையைப் பார்த்த மாதிரியே தெரியவில்லை.
ரயில் வருவதற்காக அடைத்துப்போட்டிருந்தார்கள். பத்து, முப்பது வண்டிகள், கார்கள், ஆட்டோக்கள் என்று ஒன்றுக்குள் ஒன்று கோத்துக்கொண்டு நிற்கிற இந்த ரோட்டில் இப்படிக் காத்துக்கிடப்பது பிடித்திருந்தது. ஒரு பல்ஸர் வாகனத்தின் பின் சக்கரத்துக்குக் காற்றுப் பிடித்துக்கொண்டே… கம்பங்கூழ், தர்பூசணிக்கீற்று விற்கிற தாடிக்காரருடன் சிரித்துக்கொண்டு இருப்பவரை இந்த உச்சி வெயில் ஒன்றும் செய்யவில்லை. சித்த வைத்தியசாலை அருகில் இருப்பதுபோல வாடைஅடிக்கிற இந்த இடத்தில் பூவரசமரம் தவிர, வேறு எதையும் காணோம்.
ஆட்டோக்கள் பழுதுபார்க்கிற வொர்க்‌ ஷாப்பில் இருந்து, ‘காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ என்ற பாட்டு வந்துகொண்டு இருந்தது. தினகரி வாகைப் பூவின் காம்பைப் பிடித்துத் திருகியபடி, ‘அப்பா, உங்க ஆளு பாட்டு வரிசையா போடுதான்’ என்றாள். அதற்கு முன்புதான் ‘வந்ததே… ஓ… ஓ… குங்குமம். கண்களே… ஓ… ஓ… சங்கமம்’ முடிந்திருந்தது. ‘அநேகமா அடுத்தது ‘ராசாவே ஒன்ன நம்பி’தான்’ என்று சொல்லியபடி என் பக்கம் வரும்போது திருச்செந்தூர் பாஸஞ்சரின் சத்தம்.
வந்துகொண்டே இருந்தவள் அதே இடத்தில் நின்று, ‘நல்லா இருக்குப்பா ரயில் கூப்பிடுகிறது’ என்றாள். அது எப்படி இந்த ரயில் சத்தம் மட்டும் எல்லோருக்கும் பிடிக்கிறது? தினகரி ‘நல்லாருக்குப்பா’ என்று என்னிடம் சொல்வதுபோல, நானும் ‘நல்லா இருக்குல்லம்மா?’ என்று என்னுடைய அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அப்படிக் கேட்ட நேரத்தில் அம்மா வைத்திருந்த சிவசைலம் தாழம்பூ கூட ஞாபகம் வருகிறது. ரயில் சத்தம் இத்தனை வருடம் கழித்து ஞாபகம் வரும்போது தாழம் பூ வாசம் வரக் கூடாதா என்ன?
சொல்லப்போனால் அது தாழம்பூ வாசனை இல்லை. பக்கத்தில் இருக்கிற இந்தப் பழக் கடையின் வாசனை. பழக் கடை என்று சொல்லக் கூடாது. பழமுதிர்சோலை. எங்கே பார்த்தாலும் பத்து அடிக்கு ஒன்று. அதற்கென்று ஒரு நீல நிற வெளிச்சம். எல்லாத் தோப்பிலும், எல்லாக் காலத்திலும், எல்லாப் பழங்களும் உதிரும்போல. காம்பில் இருந்து கழன்று நேராக இந்தக் கடை யின் கூடையில் விழுந்ததுபோல அத்தனை மினு மினுப்பான சதைப் பற்று.
தினகரி வீட்டை விட்டுப் புறப்படும்போதே, ‘ஆப்பிள் வேண்டாம்ப்பா’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். ‘ஏட்டீ… ஃப்ரெண்டு பிள்ளை உண்டாகியிருக்கான்னு பார்க்கப்போறே. மாதுளம் பழம் நல்லதா நாலு பார்த்து வாங்கிக்கிட்டுப் போ. சாக்லேட்டு, ரொட்டினு எதையாவது கண்டது கழியதை வாங்கிட்டுப் போயிராதே. உங்க அய்யாவும் நீ சொன்ன சொல்லைத் தட்ட மாட்டா. சரின்னு சொல்லிருவா!’ என்று சொல்கிற அம்மாவையும் மறுக்க வில்லை. ‘சரிம்மா’ என்று சொல்லிக்கொண்டாள். லேசான சிரிப்பு வேறு என்னைப் பார்த்து. அது எப்படி என்று தெரியவில்லை. இந்தப் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தட்டும் வாடாமல் முள்ளும் கோணாமல் சரியாகத் தராசைப் பிடிக் கத் தெரிந்துவிடுகிறது.
எனக்கும் மாதுளம் பழம் வாங்கத்தான் பிடித்திருந்தது. இப்போதெல்லாம் மாதுளம் பழத்துக்குச் சுளை இருப்பதுபோல் எட்டாக வகிர்ந்து, பூப் போல இதழ் இதழாக விரித்து நான்கு பழங்களை முன்னால் பார்வையாக வைத்துவிடுகிறார்கள். இந்த மாதுளம் பழ விதை, வெள்ளரிப் பிஞ்சு விதையை எல்லாம் இப்படி வரிசையாக அடுக்க வேண்டும் என்று யார் சொல்லிக்கொடுத்தார்கள். எனக்குத் தோன்றுவதுபோல தினகரிக்கும் தோன்றுமா? ‘யாருப்பா சொல்லிக்கொடுத்தாங்க?’ என்று அவள் என்னிடம் கேட்க வேண்டும்போல இருந்தது. என் கையில் பழக்கடைக்காரர் பிளந்துவைத்த மாதுளையை ஏந்தியிருந்தேன். ஏதோ ஒரு கேரளத்துக் கோயிலில் ஆயிரம் பெரும் திரி ஏற்றுவதற்கு விளக்கின் ஒவ்வொரு திரி முகமாகத் திருப்பிக்கொண்டு இருந்ததுபோல, அதைத் திருப்பினேன். ‘நல்லா இருக்கு இல்லே’ என்று பக்கத்தில் தினகரி நிற்கிற ஞாபகத்தில் கேட்டேன். அவள் இல்லை.
‘நல்லா இருக்கு சார்’ பக்கத்தில் நிற்கிறவர் சிரித்தார். நரை முடிக்குத் தேய்க்கிற தைலமோ என்னவோ, அபிஷேகத் திருநீறு வாசனை மாதிரி அடித்தது. தாடி வளர்ந்திருந்தது. அடர்த்தியுடன் அது கன்னத்தில் இரண்டு வரிகளாக மடிந்து ஒதுங்க, அவர் சிரிப்பது நன்றாக இருந்தது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும் சமயம் இவ்வளவு அழகாகத் தெரியும் மூக்கைச் சமீபத்தில் பார்த்ததில்லை. கல்லூரியில் தாவரவியல் சொல்லிக்கொடுத்த தாம்சன் சார் முகம் ஞாபகம் வருகிறது. தேர்வு எழுதுகிற அறையின் குறுக்கே பறந்து கத்திக்கொண்டு வலப்புற ஜன்னல் வழியாக வெளியேறிய ஒரு பயந்த மீன்கொத்தியின் சத்தம்கூடக் கேட்கிறது. ஒன்றில் இருந்து ஒன்றுக் குத் தாவுகிற இந்தப் பழக்கமே என் கையில் கீற்றுக் கீற்றாகப் பிளந்து சிவந்துகிடப்பதாகத் தோன்றியது.
நான் தினகரி எங்கிருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். தினகரி பழக் கடைகளில் ஒரு தானியம் கொத்துகிற சிறு பறவை ஆகிவிடுவாள். ஒரு கறுப்புத் திராட்சையைப் பிய்த்து வாயில் இடுவாள். அடுத்து பச்சையை. ஒரு நாவல் பழத்தை. ஒரு சிவந்த ப்ளம் பழத்தைக்கூட. கடைக்காரர்களுக்கும் அவளைப் பார்த்தால் ஒருபறவை யாகத்தான் தோன்றிவிடுமோ என்னவோ? ஒன்றும் சொல்வதில்லை. அப்படியே சொன்னா லும், ‘நல்லா இருக்கா பாப்பா?’ என்றுதான் கேட்கிறார்கள். அல்லது அப்படிக் கேட்பதுபோலச் சிரிக்கிறார்கள்.
தினகரி கையில் ஒரு ஸ்ட்ராபெர்ரி பழப் பாக்கெட்டை வைத்துக்கொண்டு அங்கிருந்து காட்டுகிறாள். இறக்குமதியானது என்றுகூடக் கடைக்காரர் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் மதிப்புக் குறைவு. ‘இம்போர்ட்டட் சார்’ என்கிறார். நான் தினகரியை இங்கே வரச் சொல்கிறேன்.
‘இதை எடுங்க சார்… நல்லா இருக்கும்’ பக்கத் தில் நின்ற தாடிக்காரர் மாதுளை இருக்கும் கூடையில் இருந்து ஒவ்வொன்றாகப் பார்த்துப் பொறுக்கிக் கொடுக்கிறார். உள்ளங்கை ஈரத்தால் அதன் தோலைத் தடவியபடி ‘அணில் நகம் பட்டிருக்கு’ என்கிறார். தேங்காயைச் சுண்டிப்பார்த்துத் தருவதுபோல ஒன்றைச் சுண்டிக்கூடப் பார்த்தார். ஒன்றைச் சரியில்லை எனத் தனியாக வைத்தார். அது சரிந்து கூடைக்குள் உருண்டபோது, ‘அட!’ என்று சிரித்தார். அந்தச் சிரிப்பு வித்தியாசமாக இருந்தது. என்னிடம் அவர் நீட்டிய மாதுளைகளை வாங்கிக்கொண்டேன்.
அவருடைய கையில் இருந்த பையில் கொய்யாப் பழங்கள் இருந்தன. கிருஷ்ணன்கோவில் பழங்கள்போல. மிகச் சீராகப் பொறுக்கியெடுத்த பழங்களின் தேர்வுதான். ஒன்றைச் சரியாகத் தேர்வுசெய்கிறவர் இன்னொன்றையும் அப்படியே செய்வார் என்று நம்பலாம். அது எப்படி… கொய்யாப் பழமும் மாதுளம் பழமும் ஒன்று ஆகுமா என்று திருப்பியும் கேட்கலாம். அவரை ஒட்டி, அவருடைய வேட்டியைப் பிடித்தபடி ஒரு பெண் குழந்தை இருந்தது. கையில் இருந்த குடையின் நிழல் அதனுடைய தோள் வரை விழ, அது அப்பாவையும் என்னை யும் பார்த்தது.
அகலமான கண்கள். அகலமான கண்களில் மட்டும் எப்போதும் சம பங்கு கண்ணீரும் சம பங்கு சிரிப்பும் நிரம்பியிருப்பதுபோலவே இருக்கிறது. எந்தப் பிரயாசையும் இன்றி, ஒரு பேரழகு வந்துவிடுகிறது அந்தக் கண்களால் பார்க்கிற யாருக்கும். அது தன் அகண்ட கண் களால் அப்பாவைப் பார்த்தது… என்னைப் பார்த்தது. சிறு வெட்கம் வந்து கீழே குனிந்து சிரித்தது. குடையின் பிளாஸ்டிக் கைப்பிடிக்குள் ஒளிந்திருக்கும் நீல நிற, ஆரஞ்சு நிறக் குமிழிகளை வெளியே உதறிச் சிந்துவதுபோல் குடையை லேசாகச் சுழற்றியது. மறுபடியும் அப்பாவைப் பார்த்தது.
தினகரி இவ்வளவு நேரமும் எங்கள் மூன்று பேரையும்தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்போல. என்னுடைய முதுகை லேசாகச்சுரண்டி னாள். அது போதாது என என் தோள்பட்டையை வலுவாக உலுக்கினாள்.
”என்ன, ஸ்ட்ராபெர்ரி வாங்கணுமா?” நான் தினகரியைக் கேட்டேன். என் கையில் அவர் பொறுக்கி எடுத்துக்கொடுத்த மாதுளைகள் இருந்தன. மாதுளைக்கு மட்டும் கனியான பின்னும் நுனியில் பூ.
தினகரி என்னை நகர்த்திக்கொண்டு போனாள். அவளுடைய குரல் மிகவும் தணிந்திருந்தது. ‘என்னுடைய பைக் சாவியை பைக்கிலேயே வைத்துவிட்டதுபோலவும், அது அங்கே இருக்கிறதா தினகரி’ என்று கேட்பதுபோலவும் நான் இன்னும் சற்று அவரைவிட்டு நகர்கிறேன்.
‘அந்த ஆளு யாரு தெரியுமாப்பா?’ என்று கேட்டாள்.
‘எந்த ஆளும்மா?’ என்று பழக் கடையைப் பார்த்தேன். பழக் கடைக்குள் மூன்று பேர் இருந்தார்கள். மூன்று பேரும் ஒரு பொட்டுக்கூடக் கசங்காத வெள்ளைச் சட்டைதான் போட்டுஇருந்தார்கள். இப்போது ரொம்பப் பேர் போடு கிற மாதிரி ‘மந்திரி வெள்ளை’. மந்திரிகள் பழ முதிர்சோலை வைக்கக் கூடாது என நிபந்தனைகள் உண்டா என்ன?
தினகரி எரிச்சல்படவே இல்லை. வாகைப் பூவைக் குனிந்து எடுத்த அதே நிதானத்துடன் இருந்தாள். ஒரு காட்டுப் பழத்தை முகர்ந்து பார்க்கும் அதே சமனுள்ள துறவுடன் என்னைப் பார்த்தாள். ‘உங்களிடம் மாதுளம் பழங்கள் பொறுக்கிக் கொடுத்தானே அந்த ஆள்’ என்றாள். நான் எப்படி உடனடியாக அவரைப் பார்க்காமல் இருக்க முடியும்? ‘ஐயோ… உடனே அங்கே பார்க்காதீங்க அப்பா’ என்று கடித்த பற்களுக்குள் முனங்கினாள்.
எனக்குப் புரியவில்லை. அவரைப் பார்க்காவிட்டால் நான் எங்கே பார்க்க வேண்டும் என்றும் தெரியவில்லை. தரையில் யாரோ சப்போட்டா விதையைத் துப்பியிருந்தார்கள். கறுப்புக் கறுப்பாக, பளபளவென்று கிடந்தன.
‘அந்த ஆளுதாம்பா. எங்க காலேஜ் போகிற டவுன் பஸ்ஸுல, ஒரு ஃபர்ஸ்ட் இயர் படிக்கிற பொண்ணு கழுத்துலகிடந்த சங்கிலியைக் கட் பண்ணப் பார்த்துட்டுப் பிடிபட்டவன். அந்த மூக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எல்லாரும் உதைச்ச உதையில அன்னைக்கு அவன் மூக்குல இருந்து ரத்தம் வடிஞ்சுக்கிட்டே இருந்துது. சட்டையை வெச்சு ஒத்தி ஒத்தி எடுத்துக்கிட்டே இருந்தான்’- தினகரி சொல்லிக்கொண்டே போனாள். நான் தினகரி சொல்வதைக் கேட்டுக்கொண்டும் அந்த ஆளைப் பார்த்துக்கொண்டும் இருந்தேன்.
‘இருக்கட்டும்மா’ என்றேன்.
கொஞ்சம்கூட அந்த ரத்தம் ஒழுகுகிற முகம் எனக்குள் பதியவே இல்லை. முற்றிலும் எனக்குப் பக்கத்தில் நின்று மாதுளைகளை அவராகவே தேர்ந்தெடுத்துக் கொடுத்த ஒருவராகவே இருந்தார்.
‘இருக்கட்டும்மா’ என்று மறுபடி தினகரியிடம் சொல்லிக்கொண்டே அவரும் அந்தச் சின்னப் பெண்ணும் நிற்கிற இடம் பக்கம் நகர்ந்தேன். எனக்கு என்னவோ அவருடைய முகத்தை மறுபடி நெருக்கத்தில் பார்க்க வேண்டும்போல இருந்தது. பக்கவாட்டில் அந்த மூக்கு நன்றாகத்தானே இருந்தது. அவரால் நல்ல கொய்யாப் பழங்களைப் பொறுக்க முடிகிறதுதானே. இவ்வளவு அகன்ற கண்களுடைய சிறுமிகூட அவருடைய பெண்தானே. நான் யோசித்துக்கொண்டே போகையில், என் கையில் வைத்திருந்த மாதுளைகளில் ஒன்று சற்றுப் பிசகி கீழே உருண்டு விழுந்தது. ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமாக உருளும்போல. அது தன் போக்கில் உருண்டு நிற்கிற வரை பார்த்துக்கொண்டே நின்றேன்.
குடையைக் கழுத்தோடு இடுக்கிக்கொண்டு அந்தச் சிறு பெண், உருண்டுபோயிருந்த பழத்தை எடுத்து நீட்டியது. சிரித்தது. இன்னொரு மாதுளைபோல இருக்கிற அந்த முகத்தின் கனிவு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்தப் பெண் குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்ததுபோல, நான் அதனுடைய அப்பாவைப் பார்த்துச் சிரித்தேன். என்னுடைய சிரிப்பை ஒரு பரிசு பெறுவதுபோல அவர் வாங்கிக்கொண்டார். தன்னுடைய இடது கையால் மகளின் தலையைத் தன்னுடைய உடம்போடு சேர்த்து இழுத்தார். தன் குழந்தையின் முகத்தை அதே இடது கை யால் அதனுடைய இரண்டு கன்னமும் இழுபட வருடினார். அப்படி இழுபடும்போது அவரு டைய மகளின் உதடுகள் ஒரு குருவிக் குஞ்சி னுடையதைப் போலக் குவிந்து பிளந்தன.
இன்னும் ஒருமுறை ஒரு பழம் உருள வேண்டும். அதை அது எடுத்துக்கொடுக்க வேண்டும். என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். அதனுடைய அப்பா இடது கையால் அணைத்துக்கொள்ள, வாய் இப்படி, குருவிக் குஞ்சைப் போலப் பிளக்க வேண்டும். நான் அந்தக் கணத்தை மீண்டும் மீண்டும் விரும்பினேன். ஒரு தகப்பனின் கை இதைவிட நெருக்கமாகத் தன்னுடைய சின்னஞ்சிறு மகளின் கன்னத்தை வருட முடியாது என்று தோன்றியது. நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்.
‘இதே மாதிரி இன்னும் ரெண்டு, மூணு பழம் உங்க கையால செலெக்ட் பண்ணிக் கொடுங்க’ என்று சிரித்தேன். பக்கத்தில் குடையோடு நிற்கிற அவருடைய பெண்ணை அவரைப் போலவே இழுத்து என்னோடு சேர்த்துக்கொண்டேன்.
தினகரி ஒன்றுமே சொல்லா மல் என் பக்கத்தில் வந்து நின்றாள். அவளுடைய கைகளைச் சமீபத்தில் என் கைகளில் வைத்துக்கொண்டது இல்லை. எடுத்து வைத்துக்கொண்டேன். லேசாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டே சொன்னேன், ‘அவரு கொய்யாப் பழம் வாங்க வந்திருக் காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவு தாம்மா’.
தினகரியின் கைவிரல்கள் என் கைகளுக்குள் லேசாக அதிர்ந்தன. கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு இறுக்கிப் பிடித்தது. அவள், ‘அவ்வளவுதான்ப்பா’ என்று சொல்லியபடி என்மீது பூப்போலச் சாய்ந்துகொண்டாள்.
குடையை முதுகுக்குப் பின்னால் நன்றாகச் சாய்த்து, எங்கள் இருவரையும் பார்க்கிற அந்தக் குழந்தையின் முகத்தில் திரும்பத் திரும்ப ஒரு முடிக் கற்றை பறந்து விழுந்துகொண்டிருந்தது.
தினகரி என்னைவிட்டு விலகி அந்தக் குழந்தையிடம் போனாள். முகத்தில் விழுகிற முடியை ஒதுக்கிவிட்டாள். பக்கத்தில் நிற்கிற அதனுடைய அப்பாவைப் பார்த்துக்கொண்டே,
‘கண்ணு ரெண்டும் நல்லா இருக்கு’ என்றாள்.
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=31439

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், ஆனந்த விகடன், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

14 Responses to கனியான பின்னும் நுனியில் பூ

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  இந்தப் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் தட்டும் வாடாமல் முள்ளும் கோணாமல் சரியாகத் தராசைப் பிடிக் கத் தெரிந்துவிடுகிறது.

  அருமை ஐயா. நன்றி.

 2. Murugaiya Kalidoss சொல்கிறார்:

  இன்னும் ஒருமுறை ஒரு பழம் உருள வேண்டும். அதை அது எடுத்துக்கொடுக்க வேண்டும். என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். அதனுடைய அப்பா இடது கையால் அணைத்துக்கொள்ள, வாய் இப்படி, குருவிக் குஞ்சைப் போலப் பிளக்க வேண்டும். நான் அந்தக் கணத்தை மீண்டும் மீண்டும் விரும்பினேன். ஒரு தகப்பனின் கை இதைவிட நெருக்கமாகத் தன்னுடைய சின்னஞ்சிறு மகளின் கன்னத்தை வருட முடியாது என்று தோன்றியது…மிக அருமைங்க ..

  • Lavanya சொல்கிறார்:

   My dear vannadasan, u r great soul and mainly u r a very good human being. More then you no one can express the feeling on humans. I am feeling very happy and my soul is satisfied by reading all your divine words. I m a human lover like you.

   God bless you always……Laya

 3. solomon jayaraj சொல்கிறார்:

  வண்ணதாசன் சார்; உங்க எழுத்தைப் படிக்கிறபோது உலகத்தில் வேறு எதுவுமே நிசம் இல்லை போல தோன்றுகிறது. எந்த கேள்வியும் கேட்காததால் உங்க உலகைப் படிக்கிறது ரொம்ப சுகமா இருக்குது. அப்படியே இருந்து விடுங்கள். கேள்விகள் கேட்டவர்கள் மட்டும் என்ன சாதித்து விடப்போகிறோம்.
  அசோகமித்திரன் பெண்கள், உங்கள் பெண்கள் எவ்வளவு வித்தியாசப் படுகிறார்கள். இரண்டுமே நிஜம் தான். பார்க்கிற கோணம் வித்தியாசம்.
  தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் வழியில். எங்களுக்காக.
  அன்புடன் ஜெயராஜ்

 4. nilaamaghal சொல்கிறார்:

  உங்க மனசும் கண்ணோட்டமும் உங்க எழுத்து வழியா எங்களுக்குள்ளும் !

  என் சின்ன வயசில் எங்க வீட்டு விவசாய வேலைகள் செய்யும் ஆட்களில் இரவில் தென்னை ஏறி திருட்டு தேங்காய்கள் பறிப்பவரும் பிற இனப் பெண்ணை காமம் செய்து மனைவி இருக்க இரண்டாம் திருமணம் செய்தவரும் கூட அடக்கம்.(அந்த காலத்தில் இவையெல்லாம் ஒழுக்கக் கேடான விஷயங்கள். ) அவர்கள் தங்கள் வேலையிலும் வீட்டுப் பெண்களாகிய எங்களிடமும் கண்ணியமாகவே நடந்து கொண்டதற்கு எங்க அப்பாவின் ‘அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் எப்படியுமிருக்கட்டும்; நம்மிடம் எப்படியிருக்கிறார்கள் என்பதுதான் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்ற கண்ணோட்டமும் முக்கியமாய் இருந்திருக்கலாம்.

  தங்கள் கதை அப்பா நினைவுகளை மீட்டெடுத்தது.

 5. Rajarajeswari jaghamani சொல்கிறார்:

  கனியான பின்னும் நுனியில் பூ
  தலைப்பும் கதையும் கனியும் பூவுமாக
  இசைந்து அருமையாக வசீகரிக்கிறது ..

 6. கதைகளின் வாயிலாக எங்களுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.

 7. சுந்தர் சொல்கிறார்:

  இறக்குமதியானது என்றுகூடக் கடைக்காரர் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் மதிப்புக் குறைவு. ‘இம்போர்ட்டட் சார்’ என்கிறார்/// ஒன்றில் இருந்து ஒன்றுக் குத் தாவுகிற இந்தப் பழக்கமே என் கையில் கீற்றுக் கீற்றாகப் பிளந்து சிவந்துகிடப்பதாகத் தோன்றியது.//// வாழ்தல் இனிது.. நன்றி 🙂

 8. சுந்தர் சொல்கிறார்:

  அடிக்கடி பழங்கள் வாங்க கடைகளுக்கு சென்று கொண்டுதானிருக்கிறோம். எல்லா செல்லல்களும் இப்படி ஒரு இனிமையானதாக இருந்திருக்கலாம். நாம்தான் கவனிக்க மறக்கிறோம். நன்றி 🙂

 9. Ravikumar சொல்கிறார்:

  idhe ulagathil thaan irukkirom, idhu pondra sambavangal ellorukkum vaaikka perugirathu. aanaal vannadhasan paarkum paarvai, ithanai naal idhai rasikkamal irundhirukkirom endra ekkathai kodukkiradhu. vannadhasan sir, ungal ezhuthodu indha ulagam meendum orumurai pidikkiradhu…

 10. வணக்கம்

  இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html?showComment=1376480761754#c8206585614008425317

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 11. harikarthikeyanramasamy சொல்கிறார்:

  அருமையான படைப்பு, என் மனம் நிறைந்த பாராட்டுகள், நன்றி., HarikarthikeyanRamasamy.

 12. நாகராஜ், சொல்கிறார்:

  மறுக்கவே முடியாத முடியாத ஒரு மனித மாண்பு உங்கள் கதைகளில், முன்பனிக்காலத்தெருக்களில் இலையைப்போல அன்றி, ஆளரவமற்ற வெளியின் ஆலமரத்தடி பறவையெச்சம் போல நிரந்தரமாக படிந்து கிடக்கிறது. நான் எப்போதுமே நினைத்துக்கொள்வேன், மனிதர்களை முழுவதுமாக நம்புவது என் பொறுப்பு, அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்வது அவர்கள் பொறுப்பு என. இது தவறாகவும் இருக்கலாம், ஆனால் அழுத்தமில்லா மன அமைதியை இந்த எண்ணம் தருகிறது. உங்கள் படைப்புகளை படிக்கும் போதும், உங்களைப்பற்றிய எழுத்துக்களை வாசிக்கும் போதும், எல்லாவற்றையும் தாண்டி சாந்தம் தவழும், சித்திரத்தில் அலர்ந்த மலர் போல நிரந்தர மலர்ச்சி தவழும் உங்கள் முகத்தை பார்க்கும் போதும் வாழ்வின் மீதான நம்பிக்கையை உரத்து ஆனால் மென்மையாக சொல்வதற்கு தமிழுக்கு அனுப்பப்பட்ட தேவ தூதர் நீங்கள் என எனக்கு தோன்றுகிறது. இன்னும் நிறைய வாசித்து விட்டு உங்களை ஒரு முறை சந்திக்க வேண்டும் போல இருக்கிறது. வாய்ப்பு கிட்டினால் மிகவும் மகிழ்வேன். நன்றி அப்பா!!! நாகராஜ், ஜெர்மனியிலிருந்து.

 13. Pingback: கனியான பின்னும் நுனியில் பூ – காலங்களின் அந்தப்புரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s