வெண்கடல்

venkadel copy
வண்ணதாசன்

 

அன்புமிக்க ஜெயமோஹன்,
வணக்கம்.
கனவுகள் காண்கிற அதிர்ஷ்டம் இப்போது அனேகமாகக் குறைந்துவிட்டது.
இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நேற்று கனவு காணும் துரதிர்ஷ்டம்
எனக்கு.
எங்கள் மகள் சங்கரி தாங்க முடியாமல் அழுதுகொண்டு நிற்கிறாள். நானும்
அவளுடன் வாய்விட்டு அழுதபடி அவளை எங்கள் பூர்வீக வீட்டிற்கு, அதுவும்
எங்கள் அம்மாவைப் பெற்ற ஆச்சி வீட்டுக்குக் கூட்டிப் போகிற மாதிரி இருக்கிறது.
நீங்கள் அப்பாவை சமீபத்தில் பார்த்திருப்பீர்கள் என்றால், அதுதான் ஆச்சி வீடு.
அப்பா புழங்குவது பட்டாசல். இரண்டாம் கட்டுக்குப் போகிற கதவடியில் தென்
கிழக்கு மூலையில்தான் ஆச்சி ஒழுக்கறைப் பெட்டி இருக்கும். அம்மாச்சி நான்
சின்ன வயதாக இருக்கையில், அடகு பிடிப்பாள். நகையை எல்லாம் அதில்தான்
வைப்பாள். அந்த ஒழுக்கறைப்பெட்டி பக்கம் செத்துப் போன எங்கள் அம்மா
தலைவைத்துப் படுத்திருக்கிறாள். அவளும் நாள்முழுவதும் அழுதுகொண்டுதான்
கிடந்திருப்பாள் போல. சங்கரியை அவள் முன்னால் நிப்பாட்டின கையோடு, நான்
அம்மாவிடம் ‘ என்னத்தையாவது திண்ணு எல்லாரும் செத்துப் போயிரலாமா?’
என்று கேட்கிறேன். மூன்று பேரும் ஓ என்று அழுகிறோம்.
அம்மாவை சொப்பனத்தில் சமீபத்தில் பார்த்ததே இல்லை. இன்று பங்குனி உத்திரம்.
எங்களுக்கு சாஸ்தா எல்லாம் கிடையாது. நான் அப்படியெல்லாம் நாள், கிழமை
பார்த்து எல்லாம் சாமிகும்பிடுகிறவனும் இல்லை. சங்கரியை முன்வைத்து நீண்ட
காலமாக இருக்கும் மனவருத்தத்தை அம்மாவும் அறிந்திருப்பாள் போல என்று
காலையில் இருந்தே ஒரு பாரம்.
ஏற்கனவே நேற்று சாம்ராஜுடன் பேசும்போது உங்கள் ’வெண் கடல்’ பற்றிச் சொல்லி
வாசிக்கச் சொல்லியிருந்தார். சற்று முன்புதான் வாசித்தேன்.
நான் கண்ட சொப்பனம், சங்கரி, இந்த உங்கள் ‘வெண்கடல்’ எல்லாம் ஒரே கோட்டில்
வந்துவிட்டன இப்போது. மறுபடியும் வெடித்து அழுதால் கூட நல்லது என நினைக்கிறேன்.
அதை விட உங்களுக்கு எழுதுவது இதமானது எனப் பட்டது.
சங்கரிக்கும் முதல் குழந்தை தவறிப் போயிற்று. சற்று விளைச்சல் குறைவாய், சொன்ன
தேதிக்கு இருபது நாட்களுக்கு முன்பு வலிவந்து, பனிக்குடம் உடைந்து, நீர் வற்றி, சரியான
மருத்துவர் கவனிப்பு இன்றி, கவலைக்கு இடமாகி, எங்கள் உறவினர் மருத்துவமனையிலிருந்து
விஜயாவுக்கு எடுத்துக்கொண்டுபோய் குழந்தையை எடுத்தோம். ஆண் குழந்தை. அவ்வளவு
முடி. நல்ல நிறம். நிறைமாதத்தில் பிறந்த குழந்தை போலத்தான் இருந்தான். மாலை வரை
தங்க வில்லை, புறப்பட்டுவிட்டான். கமலா தியேட்டர் பின்னால் உள்ள இடத்தில்தான் எல்லாம்
நடந்தன.
சங்கரியும் பால் கட்டிப் பெரும் அவஸ்தைப் பட்டாள். அவளுக்கு எங்கள் அம்மா மாதிரி தாய்ப்
பால். செயற்கையாக உறிஞ்சி, பீச்சி எல்லாம் பார்த்தும் சுரந்து கொண்டே இருந்தது. துக்கம்
அவளிடம் தாய்ப்பாலாகப் பெருகியிருக்க வேண்டும். கடைசியில் ஒரு சித்த மருத்துவர்
உதவினார். அவளுடைய வலியும் கதறலும் ராஜு நாயக்கன் தெரு வீட்டில் எங்களால் இன்னும்
கேட்கும்படியாக இருக்கும்.
‘வெண்கடல்’ எனக்கு அந்தத் 98 அக்டோபரில் இருந்து நேற்றைய சொப்பனம் வரையிலான
சங்கரி குழந்தை, சங்கரி வாழ்வு சார்ந்த அத்தனை துயரத்தையும் கிளர்த்திவிட்டன.
அந்தக் கணேச மாமா, அப்பு அண்ணன், குமரேசன், பெரியப்பா, செல்லன், ஜெயன் எல்லோரும்
நீங்கள்தான் என்பது எப்படி உண்மையோ, அதே போல அந்த ஆறடி உயர, நீலச் சேலை கட்டிய
அந்தப் பெண் எங்கள் மகள் தான். ‘எனக்க பாலு குடிச்ச சீவனாக்கும் அதெல்லாம்’ என்றுதான்
சங்கரியும் சொல்லியிருப்பாள்.
நாஞ்சில் மகள் கல்யாணத்தன்றைக்கு உங்களைப் பார்த்தபோது சொன்ன அதே நெகிழ்வோடு,
அதையே மீண்டும் சொல்கிறேன் ஜெயமோஹன், “நல்லா இருங்க”.
வண்ணதாசன்
……………………………………………
அன்புள்ள வண்ணதாசன்
நலம்தானே?
நானும் நலம். பாதிநாள் மின்வெட்டைத் தவிர்க்கக் கேரளத்தில் இருக்கிறேன்
உங்கள் கடிதம் ஒரேசமயம் மனநெகிழ்வையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியது. உங்கள் வார்த்தைகள் பெரிய ஆசிகள் போல.
நீங்கள் சொல்லும் கனவை நினைத்துக்கொண்டிருந்தேன். என்னிடம் ஜேசுதாசன் சொன்னார். அவருக்கு எழுபது வயதானபிறகு துயரநினைவுகள் மேலும் முக்கியமானவை ஆகிவிட்டன என்று. ஏன் என்று கேட்டேன். ’அதிலேல்லா நம்ம கிட்ட கர்த்தர் பேசப்பட்ட என்னமோ ஒண்ணு இருக்கு’ என்றார்
இன்றுவரை நான் யோசிக்கும் விஷயம் இது
ஜெ

http://www.jeyamohan.in/?p=35805

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள், வண்ணதாசன் மதிப்புரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to வெண்கடல்

 1. nilaamaghal சொல்கிறார்:

  துக்கம்
  அவளிடம் தாய்ப்பாலாகப் பெருகியிருக்க வேண்டும்.//

  ஐயோ கடவுளே! பெண்ணாகப் பிறந்ததன் பிறிதொரு பாவச் சுமையை எப்படி ஒரு வாக்கியத்தில் இறக்க முடிந்தது?!!

  ’அதிலேல்லா நம்ம கிட்ட கர்த்தர் பேசப்பட்ட என்னமோ ஒண்ணு இருக்கு’ //
  என்னவாகயிருக்கும்?

 2. Balasubramanian E சொல்கிறார்:

  மனம் உருகினேன் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் வேறு வேறு வகையில் சோகம் துக்கம் சந்தோசம் நிம்மதி எல்லாம் கலந்தே தான் இருக்கின்றது என்று மீண்டும் எனக்கு ஒரு படிப்பினை


  http://www.vitrustu.blogspot.com
  VOICE OF INDIAN
  256 TVK Qts TVK Nagar,
  Sembiyam,
  Perambur,
  Chennai 600011
  9443489976
  9444305581

 3. Swaminathan. R சொல்கிறார்:

  This is how Vannadasan Iyya, very simply and just like that using the words. I won’t mean “Using” as an artificial. That is his nature. The words are so blessed when comes from him. When everyone looks for the right word or sentence to mean the right feel, he will simply say in such a way that who ever read will have the same feel.
  I’m very fortunate and blessed to be with him at his home.

  Anbudan
  Swaminathan. R

 4. v.malai.kumaran சொல்கிறார்:

  ennamum kaditham elutha theriyaatha manitharukaai kaditham eluthi katru thanthavar engal ayya vannadasan.

 5. sundar.maths சொல்கிறார்:

  This is the first time to read about this kalyanji.but i felt about this story telling

 6. அஜித்தா சொல்கிறார்:

  கல்யாண்ஜி உங்களின் எழுத்துக்களுடன் நெருக்கமும் பரிச்சயமும் கொள்ள விரும்பும் வாசகியின் வணக்கம்

 7. Kundhavai Kannan சொல்கிறார்:

  அவருக்கு எழுபது வயதானபிறகு துயரநினைவுகள் மேலும் முக்கியமானவை ஆகிவிட்டன என்று. ஏன் என்று கேட்டேன்.
  ’அதிலேல்லா நம்ம கிட்ட கர்த்தர் பேசப்பட்ட என்னமோ ஒண்ணு இருக்கு’ என்றார்.
  With his complete life fulfilled with experience he should find a solution to this human struggle and will let the world know how to handle this in future. If not him, who can? Thank you!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s