வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது


vannadasanஜெயமோகன்
http://www.jeyamohan.in/91287#.WAJK7-B96Uk
2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.
எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார்.
அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை மென்மையாகச் சொல்பவர் என அவர் வண்ணதாசனைப்பற்றிச் சொன்னார். மேலோட்டமான வாசகர்கள் — இவர்களில் வண்ணதாசன் ரசிகர்களும் அடங்குவர் — பலர் அவ்வகையிலேயே அவரை மதிப்பிடுகிறார்கள்.
இன்னொன்று, வண்ணதாசனின் தனியாளுமை பற்றிய சித்திரத்தை அவர் புனைவுகள் மேல் ஏற்றிக்கொள்வது. வண்ணதாசன் நெகிழ்ச்சியான, மென்மையான மனிதராக இருக்கலாம். அது அவரது சமூகமுகம் மட்டுமே. எழுத்தாளர்களின் தனிப்பட்ட பேச்சு, கடிதங்கள், பேட்டிகள் போன்றவற்றினூடாக வரும் அவரது தனியாளுமையை புனைவுகள் மேல் பரப்பிக்கொள்வது வாசிப்பின் முதிர்ச்சியின்மை .
ஏனென்றால் எழுத்து அவ்வெழுத்தாளனில் அறிந்தும் அறியாமலும் வெளிப்படும் பல்வேறு உள்ளோட்டங்களால் நெய்யப்பட்ட பரப்பு. அதை அப்படைப்புகளைக்கொண்டு மட்டுமே நாம் மதிப்பிடவேண்டும். அதன் சொல்லப்பட்ட தளங்களுக்கு அப்பால் அப்பால் என செல்லும் பார்வை வாசகனுக்கு வேண்டும். படைப்பாளியின் தனியாளுமை என்பது அவன் முகங்களில் ஒன்று மட்டுமே.பலசமயம் தனக்கு எதிரான உளநிலைகளையே எழுத்தாளன் வெளிப்படுத்தக்கூடும்.
நாம் அறியும் வண்ணதாசனின் ஆளுமை கல்யாணசுந்தரம் என்னும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்குரியது. தி.க.சிவசங்கரனின் மகன். இடதுசாரி அரசியல் கொண்டவர். திராவிட அரசியல் சார்பும் உண்டு. அன்பானவர். நெகிழ்ச்சியானவர். தனித்தவர். மாறா அலைக்கழிப்புகள் கொண்டவர். ஆகவே பெரும்பாலும் துயரமானவர்
ஆனால் கதைகளில் வெளிப்படும் வண்ணதாசன் மேலும் பலமடங்கு வயதானவர். தொன்மையான நெல்லை ஆலயத்தையும் தாமிரவருணியையும் போல அவர் அவரைவிட பெரிய பலவற்றின் பிரதிநிதி. அவரது எழுத்து பெருமைகொண்ட பண்பாடு ஒன்றின் எஞ்சிய பகுதியின் பதற்றங்களும் கனவுகளும் உட்சுருங்கல்களும் கொண்டது. வன்முறையும் வன்மங்களும் உளச்சிக்கல்களும் வெளிப்படுவது.
வண்ணதாசனை முழுமையாக வாசிக்க, அனைத்துக்கோணங்களையும் நோக்க இந்தத்தருணம் வழியமைக்கவேண்டும்.
வண்ணதாசனுக்கு அவரது முதன்மை வாசகன், இளையோன் என்னும் நிலையில் வணக்கம்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

 1. Senthil சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் அப்பா 🙂

 2. allimurugan சொல்கிறார்:

  வண்ணத்தாசனுக்கு

  விஷ்ணுபுரம் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். விருது உங்களுக்கு மேலும்
  ஊக்கத்தை தரட்டும்

  உங்கள் எழுத்தை வாசித்ததினால் கனிந்தவன் பல கடினமான சூழ்நிலைகளில் தாண்டியும்
  விலகியும் கசிந்தும் ஊருகியும் வாழ்க்கை அதன் போக்கில் வாழ பழகியவன்.
  தலைப்பை எங்கிருந்து தான் எடுக்கிறீர்கள்

  கனியான பின்னும் நுனியில் பூ

  இந்த தலைப்பை படித்ததும் முதலில் ஞாபகம் வந்தது கோவைப்பழம் தான், பிறகு கொய்யா
  இப்படி பல பழங்களில் சென்று ஒடி நின்று விட்டு உதிறி பூ வை நினைத்து மனம்
  விக்கித்து விட்டு வாழ்வீன் பேருண்மையை உணர்ந்து கொண்டது.

  நீங்கள் வணங்கும்
  நெல்லையப்பரை உங்களுக்கு நீண்ட ஆயுள்
  தர வேண்டிக்கொண்டு படித்துறையில் இறங்கி தாமரப்பரணியில் குளித்து கரையேறி
  தேரையும் ஊரையும் உங்களையும் பார்த்து வர வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

  இதெல்லாம் கனவில் தான் நடக்கும் என்னைப் போல் பாலையில் நின்று சிமெண்ட்டும்
  கம்பியும், காங்கீரிட்டையும் பார்த்து கொண்டு நிற்பவனக்கு உங்கள் எழுத்துக்களே
  பூவாக வந்து வாசமூட்டியும்
  புழுக்கத்தில் இறகாக வந்து சாமரம் வீசியும்
  கொடும் வெய்யிலில் பின் வரும் மழையாகவும், சாரலாகவும்
  காற்றில் ஆடும் இலையாகவும் மனதை வருடுகிறது.

  தண்டவாளத்தை தாண்டும் போதும்
  பிரம்பு நாற்காலியை, யானையை அரிதாக காணும் போதும் உங்களின் கதைகள் வந்து
  பேசுகின்றன.

  கடிதம், கட்டுரை, கவிதை, கதை

  என்ற நாலு “க’ வையும் ஒன்றுக்கு ஒன்று தாழாமல் எழுதும் கலையில் சிறந்த உங்கள்
  எழுத்து போல் யாருக்கு வரும்.

  இறுதியாக எனக்கு பிடித்த உங்கள் கவிதை
  ஒன்றின் வரியை கொண்டு
  யார் மீதும் மோதிவிடாமல் வாழும் காலம் வரை தொடர்ந்து உங்கள் எழுத்தை தேடி
  வாசிக்க நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் என்பதே என் அன்பு வேண்டுகோள்

  உங்கள் வாசகன்
  தி.வேல்முருகன்

 3. harikarthikeyanramasamy சொல்கிறார்:

  மிகவும் சந்தோசமான செய்தி, தங்களுடைய பெரும்பாலான கதை தொகுப்புகள் என்னிடம் உள்ளது, உங்களுடைய “நிலை” கதை மிகவும் பிடிக்கும் ,தொடர்ந்து நிறைய எழுத வேண்டும், சந்தர்ப்பம் அமைந்தால் “விஷ்ணுபுரம்’ விருது விழாவில் உங்களை சந்திக்கிறேன், நன்றி , திரு.ஜெயமோகன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s