அன்பெனும் தனி ஊசல்

 image1

அன்பெனும் தனி ஊசல்

கலாப்ரியா

நிறையத் தயக்கங்களுக்குப் பின் நினைவும் புனைவுமாக நான் எனது ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்த சமயம். என் வாழ்வின் வெவ்வேறு சம்பவங்கள் ஒரு மாயம் போல, தாமாகவே ஒன்றுக்கொன்று முடிச்சிட்டுக் கொண்டு துயர் பாதியும் கேலி பாதியுமாக ஒவ்வொரு வாரமும் கதைக் கட்டுரைகளாக நீண்டுகொண்டிருந்தன. தட்டச்சு செய்வது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் மதியத்தில் ஆரம்பித்து நடு இரவு வரை நீளும். திங்கட்கிழமை `அந்திமழை’ இணைய இதழில் வெளிவரும்.
விகடனில் நாவலாசிரியர் இதயன்,  ‘மனைவியின் நண்பன்’ என்று  ஒரு தொடர் எழுதியிருந்தார். அந்தக் கதை நினைவில்லை. எப்போதுமே அந்தத் தலைப்பு என்னைத் தொந்தரவு செய்கிற தலைப்பு. அன்றும்  எனக்கு அந்தத் தலைப்பு நினைவில் வந்து சுற்றிக்கொண்டிருந்தது. எதிர் வீட்டில் குடியிருந்த அப்பாவின்  சினேகிதர் ஒருவரும், அவர் மனைவியும்  அப்பாவிடம் நிறையப் பிரியத்துடன் இருப்பார்கள். அவர்கள் மூவரையும் வைத்து என் நினைவுகளை  எழுத நினைத்து எழுதிக்கொண்டிருந்தேன். உண்மையில் என் முடிச்சில் நானே கழுத்தை
மாட்டிக்கொண்டிருந்தேன். எழுத எழுத கத்தி மேல் நடப்பது போன்ற விஷயத்தை எழுதுகிறோம் என்று தோன்றியது. முதலில் எழுதியிருந்த ஒரு முடிவைச் சற்று மாற்றி இன்னொரு சம்பவத்தை இதற்குப் பொருத்தி முடித்திருந்தேன். ரொம்ப  இயல்பாக வந்த முடிவு. மெயில் அனுப்பிவிட்டுப் படுக்கும்போது  இரவு மணி ஒன்று.
அதிகாலையில் தொலைபேசி அழைத்தது. “வணக்கம் கோபால், நான் கல்யாணி அண்ணன் பேசறேன். நான் நாற்பது வருடமாக எழுதியதை, நீ ஒரே கதையில் காலிபண்ணிட்டே, எனக்கு வேற ஒண்ணும் சொல்லத் தெரியலைப்பா” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். தூக்கக் கலக்கத்தில் எது குறித்துச் சொல்கிறார் என்று முதலில் புரியவில்லை. நேத்து எழுதினதைப் படித்திருப்பாரோ என்று அவசர அவசரமாக இணையத்தைத் திறந்து பார்த்தேன். ஆம், கட்டுரையைப் பதிவேற்றி இருந்தார்கள். அவரின் வார்த்தைகளின் ரீங்காரம் அடங்கவில்லை. என்ன இது. அவரது கதைகள் எங்கே. இது எங்கே. மனம் சந்தோஷமடைந்தாலும், சமாதானம் ஆகவில்லை.  ஆனால், அவர் எப்போதும் அப்படித்தான். பாராட்டுவதென்றால் மனதாரப் பாராட்டிவிடுவார். சமயத்தில் வீடு தேடி வந்துகூடப் பாராட்டி இருக்கிறார். குறைகளை, ‘இப்படி இருந்தா, இன்னும் நல்லாருக்கும்’ என்கிற மாதிரி, சொல்லிவிடுவார்.  ஆனால் இப்படி உணர்வு மீதூற, ‘நான் அர்த்தப்படுத்திக்கொண்டதே, நான் சொன்னது’ என்ற பாணியில் சொன்னது இல்லை. காதில் அவரது வார்த்தைகள் ஒலிக்க, மனதில் முகம் நிழலாட, நினைவு பின்னோக்கிப் போனது. அவரது  ‘அன்பகம்’ வீட்டு மாடி, நினைவில் அதன் வளமையான வெளிச்சத்துடன் விரிந்தது. நான்கு ஐந்து சன்னல்கள், நடுவில் அகல ஊஞ்சல், அழகான பாவூர்ச் செங்கல் பாவிய  தரை என உயிர்ப்புடன் இருக்கும் விசாலமான மாடி.
அன்பகம் என்பது தி.க.சி தங்கள் வீட்டுக்கு வைத்த பெயர். உண்மையில் அது எவ்வளவு பொருத்தமான பெயர் என்பது அதனுடன் உறவுகொண்ட எல்லோருக்கும் தெரியும். நான் ஒரு முறை கி.ராஜநாரயணன் மாமாவைப் பார்க்கப் போயிருந்தபோது, புதிதாக வந்திருந்த அவரது புத்தகத்தைக் காண்பித்தார். ஒரு பிரதிதான் இருந்தது. மாமா சட்டென்று ஏதோ ‘ரோசனை’ வந்தவர் போல,  ‘அன்பகவாசிகளுக்கும் அதை நேசிக்கிறவர்களுக்கும்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து,  ‘கல்யாணியிடமும் வாசிக்கக் கொடுத்திரு’ என்றார். அந்த மனுஷரை அப்படி எழுதவைத்தது அவர் கைகளைக் ‘குளுர’ப் பற்றியிருக்கும் அன்பகத்தின் அன்புக் கரங்களாகத்தான் இருக்கும்.
அந்த அன்பகத்தின் மாடி அலமாரிகளில் எல்லாம் புத்தகங்கள் பிதுங்கி விழப் போவது போல நிறைந்திருக்கும். அவ்வளவு புத்தகங்கள். மாக் மில்லன் கம்பெனியின் வெளியீடுகளான தாகூரின் மொத்தப் புத்தகங்கள். நவயுகப் பிரசுராலயம், சக்தி காரியாலயம், பேர்ல் பதிப்பகம், வாசகர் வட்டம், கோபுலுவின் அட்டைப் படங்களுடன் காண்டம் காண்டமாக கம்பராமாயணம், சோவியத் லிட்டரேச்சர், சைனீஸ் லிட்டரேச்சர், விகடன், குமுதம் தொடர்கதைகளின், சினிமாப் பாட்டுப் புத்தகங்களின் பைண்ட் வால்யூம்கள் என்று பிதுங்கி வழியும் பீரோவும் அலமாரிப் பலகைகளும். அவற்றில் கொஞ்சத்தையாவது படித்ததை வைத்துத்தான், இப்போது ஏதாவது ஜல்லி அடிக்க முடிகிறது. அவருக்கு அண்ணனும் எங்கள் இருவருக்குமே குருநாதருமான கணபதியும், கல்யாணி அண்ணனும் பிரமாதமான ஓவியர்கள். வண்ணதாசனை ஓவியராக அறிந்திருப்பார்கள். ஆனால், அவரை அப்படி உணர்ந்தது நானாகத்தான் இருக்கும். சன்னலுக்கு மேல் உள்ள சுவரில் கல்யாணி அண்ணன் பெரிய படங்களாக வரைந்து வைத்திருப்பார். பிளாக் இங்க் கேக்கைத் தொட்டு வரைந்த நடராசர் படம் அதில் ஒன்று. மேசையிலும் சிறிய ஸ்டூல்களிலும் ‘ரீவ்ஸ்’ (Reeves) இந்தியன் இங்க்  பாட்டில்களும், வெவ்வேறு அளவிலான பிரஷ்களும், ‘கிட்டார்’ (Guitar) வாட்டர் கலர் பாக்ஸும் கிடக்கும். எத்தனையோ இண்டியன் இங்க் இருந்தாலும் ரீவ்ஸ்தான் இருவருக்குமே பிடித்தமானது.
அப்போது 1961 –இல், மோகன் ஆர்ட்ஸ், சபா ஆர்ட்ஸ் வரைந்த சிவாஜியின் சினிமா பேனர்கள் பிரபலம். அவர் முகபாவங்கள் எந்த ஓவியனுக்குத்தான் பிடிக்காது. `பாவ மன்னிப்பு’ `பாச மலர்’ பேனர்களை எல்லாம் ஈடுபாட்டுடன் பார்ப்பார். கணபதி அண்ணனிடம் பகிர்ந்துகொள்வார். நன்றாக நினைவிருக்கிறது, எனக்கு பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். பொருட்காட்சியில், திராவகம் வீசப்பட்ட சிவாஜிகணேசன் முகத்தில் கட்டுப் போட்ட `பாவ மன்னிப்பு’ கட் அவுட் வைத்திருந்தார்கள். பேண்டேஜ் துணியில் சொருகியிருக்கும் சேஃப்டி பின் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னாலிருந்து  ‘என்னப்பா ‘ஊக்கு’ அவ்வளவு அழகா வந்திருக்கேனு பாக்கியா?’ என்று ஒரு கரம் தோளைத் தொட்டது. கல்யாணி அண்ணன்.  ‘ஆமாண்ணே… ரொம்ப நேச்சரலா இருக்கு’ என்றேன். எங்களுக்கு விளையாட்டு மடமான, தெருவின் பிள்ளையன் கட்டளை ஆபீஸ் சுவரில், அவர் கரியால் வரைந்திருந்த  ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாவ மன்னிப்பு சிவாஜியும், ஸ்கூல் நோட்டுத் தாளில் பென்சில் ஸ்கெட்ச்சாக, துப்பாக்கியை வைத்து திரண்டு வரும் கண்ணீரைத் துடைக்கும் பாசமலர் சிவாஜியும், இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்கள்.
அவருக்கு விகடன் கோபுலுவின் கோடுகள் என்றால் உயிர். அவரது அண்ணணுக்கு குமுதம் ஓவியர் வர்ணத்தின் வாஷ் டிராயிங் என்றால் உயிர். பழைய விகடன், குமுதம் இதழ்களை விரித்து வைத்துக்கொண்டு, செங்கல் தரையெங்கும் சாக்பீஸால் படம் வரைவதில் இரண்டு பேருக்கும் அவ்வளவு ஈடுபாடு. இரண்டு பேரும் அப்போது ’தினத்தந்தி’யில் வரும் சிரிப்புப் படங்களுக்கு சிரிப்பும் படமும் வரைந்து அனுப்புவார்கள். என்னுடைய `வெள்ளம், தீர்த்தயாத்திரை, மற்றாங்கே’ எல்லா கவிதைத் தொகுப்புகளுக்கும் அவர்தான் அட்டை ஓவியம். `சுயம்வரம்’ குறுங்காவியம் படித்துவிட்டு அவர் வரைந்த ஓர் ஓவியத்தின் பாதிப்பினால், அதில் ஒரு கவிதை புதிதாக எழுதிச் சேர்த்தேன்.
“முயலகத் திமிறல்களுக்காக
முகஞ்சுளிக்காமல்
நர்த்தன லௌகீகமென
நான் ஆடித் தொலைக்கிறேன்”
நகுலனுக்குப் பிடித்த வரிகள் இவை. இப்படி  நான் எடுத்துக்கொண்டதெல்லாம் கல்யாணி அண்ணனிடமிருந்து எடுத்துக்கொண்டதுதான்.
அவரது வீட்டுக்கு இட்டுச் செல்கிற நடைக்கூடத்தின் தெருப்படியில் அமர்ந்துதான் எல்லோரும் பேசிக் கொண்டிருப்போம் அல்லது மாடியில் அமர்ந்து கேரம்போர்டிலோ, ‘88’ சீட்டு விளையாட்டிலோதான் எங்கள் கோடை காலம் கழியும். 1963 கோடை விடுமுறை. வாசல் நடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.அவரது கையில் ‘புதுமை’ என்ற மாத இதழ். கே.டி.கோசல்ராம் என்கிற காங்கிரஸ் எம்.பி நடத்தி வந்தது. அதில் வண்ணதாசனின் முதல் கதையான ‘ஏழையின் கண்ணீர்’, வெளிவந்திருந்தது. உடல்நிலை சரியில்லாத கணவனை வீட்டில் விட்டுவிட்டு, பகல் பூராவும் வெளியே போய் வரும் மனைவியை வளவுக்காரர்கள் ஜாடைமாடையாகப் பேசுவார்கள். தாங்க முடியாத ஒரு பொழுதில் அவளுடைய கணவன், “அவள் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் வேலைக்குப் போய் கௌரவமாகக் கஷ்டப்பட்டு சம்பாதித்து வருகிறாள்… விபரம் தெரியாமல் பேசாதீர்கள்” என்று ஆங்காரமாய் உண்மையைச் சொல்வான். அந்தக் கதை வந்தபோது அவருக்கு வயது 16 அல்லது 17 இருக்கும். தொடர்ந்து இன்னொரு கதையும் `புதுமை’ இதழில் வந்தது. இந்தக் கதைகள் எல்லாம் தொகுப்புகளில் வரவில்லை.
மாலைமுரசில் ‘கருகிய நோட்டுகள்’ என்று ஒர் கதை வந்தது. அப்போதைய ஃபிலிம் ஃபேர் சினிமா இதழில் நடிகர் ஜிதேந்திரா நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எரித்து சிகரெட் பற்றவைப்பது போல ஒரு படம் போட்டிருந்தார்கள். அதை பொது நூலகத்தில் பார்த்துவிட்டு நானும் அவரும் ஆதங்கம் பொங்க, `அவனவன் வங்கியில் கிழிந்த ஒரு ரூபாயையும், இரண்டு ரூபாயையும் மாற்ற நாயாய்ப் பேயாய் அலைகிறான், இவனுக்குத் திமிரைப் பாரேன்’ என்றுபேசிக் கொண்டோம். ஆதங்கத்தை அவர் ஓர் அருமையான கதையாக எழுதியிருந்தார். இதே கதை அவர் பணிபுரிந்த ஸ்டேட் பேங்க், அதன் ஊழியர்களுக்காக நடத்தும் மனை இதழில் (House magazine- ‘colleague’) மறுபடி வெளிவந்த நினைவு. அவற்றின் பிரதிகளும் வரைந்த ஓவியங்களும் ஒன்றுகூட இப்போது இல்லை என்று சமீபமாக வருத்தப்பட்டார். என்னிடம் சில ஓவியங்கள் இருக்கின்றன. அது கிருஷியால் சுடப்பட்டு, கோயில்பட்டி நண்பர்களால் கடத்தப்பட்டு, கடைசியாக மாரீஸ் வழியாக, செய்கூலி சேதாரத்துடன் என்னை அடைந்தது.
பின்னர் அவரது கதைகள் `தீபம்’, `கண்ணதாசன்’, `கணையாழி’, `கசடதபற’ இதழ்களில் வரத் துவங்கின. அவரது ஓவியப் பார்வைகளே வாழ்வின் நிகழ்வுகளை நுணுக்கமாக அவதானிக்க வைத்திருக்கின்றன என நினைக்கிறேன்.  அடிப்படையில் அவர் ஒரு கவிஞர் என்பது என் அபிப்ராயம். ஓவியப் பார்வையும், கவி வரிகளும்தான் அவரின் கதைகளைத் தனித்துவம் மிக்கதாக்கி இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் அவரிடம் விளையாட்டாகச் சொல்வேன், எனக்கு ஓவியத்தைக் கற்றுத்தராமல் விட்டு விட்டீர்களே என்று. ஏன் படித்துக்கொள்ள வயசா இல்லை என்பார். சோவியத் லிட்டரேச்சரில் வந்த சில ரஷ்யக் கவிதைகளை கல்யாணி அண்ணன் மொழிபெயர்த்து அவை ‘தாமரை’ பத்திரிகையில் வந்தன. ஒரு கவிதையில் போரின் மோசமான தாக்கங்கள் அடிநாதமாய் இயங்கும். குழந்தைகள் துப்பாக்கியால் சுடுவது போலவும் சாவது போலவும் நடித்து விளையாடுகிற குழந்தைகள் பற்றியது. போரையும் மரணத்தையும் அவைகளுக்கு விளையாட்டுக்கான பொருளாக, குழந்தைகளே ஆக்கிக்கொண்ட நகைமுரண் வெளிப்படும் கவிதை. அழகாக மொழி பெயர்த்திருந்தார். `கண்ணதாசன்’ இதழில் அவரது கதைகளுடன், கவிதைகளும் வெளி வந்தன. நா.காமராசனின் `கறுப்பு மலர்கள்’ புத்தகமும், கண்ணதாசனில் வந்த கவிதைகளும் அவருக்கு ஏகப் புகழ் தந்தவை. கண்ணதாசன் இதழில் கல்யாணி அண்ணன் பாதியில் நிற்கும் பாடல்களுக்காக பாடுகிறேன் ஒரு பாடல்… என்று சி.கல்யாணசுந்தரம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை எப்போதும் நா.காமராசன் வெகுவாகப் பாராட்டுவார்.
(முழுக்கட்டுரையையும் விகடன்  “தடம்” நவம்பர் 2016 இதழில் காணலாம்)

http://www.vikatan.com/thadam/article.php?aid=125132

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in ஆனந்த விகடன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s