சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்

666
சரவணன்
(http://www.jeyamohan.in/93662#.WFs-jPl96Ul)
ஒரு முகத்தில் இன்னொரு முகத்தை பொருத்தி பார்ப்பது என்பதே வண்ணதாசனின் படைப்பு ரகசியம். அதை ஒரு அந்தரங்கமான உள்ளுணர்வாய் தன் எல்லா சிறுகதைகளிலும் உருவாக்கி விடுகிறார். அவரது கதை மாந்தர்கள் காலத்தின் குரலாய் ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னும் பின்னும் ஒலித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு அடிப்படைகளை அவரின் இரண்டு கதைகளில் நான் பொருத்தி பார்க்கிறேன்
கலைக்க முடியாத ஒப்பனைகள் தொகுப்பின் முதல் கதையில் ஒரு வேசியின் அலுவல் முடிந்த பின்னிரவையும், அதிகாலையையும் விரித்து சென்று, காலை தேநீருக்காக காத்திருக்கும் பொழுது உள்ளே வரும் தூப்புக்காரியின் துடைப்பத்தால் கதை கூட்டப்படுகிறது. கதையின் இறுதியில் குளிர்பானங்களின் மிச்சத்தை குடித்து கொண்டிருக்கும் போது விரட்டியதும், வலிப்பு காட்டி ஓடும் குட்டியப்பனை பார்த்து கொண்டிருக்கும் இருவரும் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் கூடி தீர்த்த இரவுகளின் சாட்சியாய் நிற்கிறார்கள் எதிர்காலத்தை பார்த்து கொண்டு. நிகழ்பவைகளின் வழியாக நடந்தவைகளையும், நடக்க இருப்பவைகளையும் சொல்லி கொண்டே இருக்கிறார்.
தனுமை கதை டெய்சி வாத்திச்சியின் பதின்பருவ வாழ்வை ஒரு நாடகம் போல் ஞானப்பனும், தனலட்சுமியும் நடித்து காட்டுவதே. ஆர்பனேஜை மையமாக வைத்து நிகழும் இந்த காதல் யாரும் பரிவு காட்டாமல் அனாதையாய் நிற்கிறது. எழுபதுகளில் கல்லூரியில் எல்லார் மனதிலும் இப்படி ஒரு அன்பு இருந்திருக்கலாம் கவனிக்கப்படாமல். தனக்காக வாசிக்கப்பட்டிருக்கும் சங்கீதத்தை அலட்சியம் செய்துவிட்டு அன்புக்கு ஏங்கி நிற்கும் டெய்சி , யாருக்காகவோ வாசிக்கப்பட்ட ” எல்லாம் யேசுவே எனக்கு எல்லாம் யேசுவே” பாடலில் கரைந்து, தேக்கி வைத்திருக்கும் மொத்த அன்பையும் ஒரு மழை நாளின் தனித்த அணைப்பின் மூலம் ஞானப்பனுக்கு கடத்தி விடுகிறாள். தனுமை பரிசுத்தமாக்கபடுகிறாள். மிக அழகாக ஒரு முகத்திற்குள் இருந்து இன்னொரு முகத்தை அகழ்ந்து எடுக்கிறார் வண்ணதாசன்.
கதை சொல்லி எப்போதும் ஒரு தளத்தை, மொழிநடையை தேர்ந்துதெடுப்பர்கள், மாறாக வண்ணதாசன் மக்களை, மரங்களை, உயிர்களை தேர்ந்தெடுத்தார். சிந்தித்து கொண்டிருப்பவனை கடந்து செல்லும் அணிலை அதன் சரசரப்பை, நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலையும் மனித மனத்தோடு உருவகிக்கிறார் மீண்டும் மீண்டும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மண் பரப்பை பார்த்து கொண்டே இருக்கிறார், அவை பன்னீர் பூக்களோ, வேப்பம் பூக்களோ, முருங்கை பூக்களோ எதுவாயினும் மனித மனம் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் பூக்கள் உதிர்த்த மொட்டை மரமாகி போவதை அவதானித்து கொண்டே இருக்கிறார். விட்டு சென்ற காலடி தடத்தின் பின்னால் நடந்து வருவதை போல் அவரின் எல்லா கதைகளிலும் பெரும்பாலும் ஒரு மனிதனிலிருந்து இன்னொருவரை எடுத்து வந்து கொண்டே இருக்கிறார், அவரின் கதை மாந்தர்கள் சாதனையாளர்கள் அல்ல சாதாரணர்கள் அவரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருப்பவர்களே.
மொத்த வரலாற்றிலும நிறைந்து இருப்பது இந்த சாமான்யர்களே. இவர்கள் அனைவரும் அறம் கொண்ட மனிதர்களாக இருக்கிறார்கள் இந்த மனங்களே வரலாற்றின் மனசாட்சிகள். “பூரணத்தில்” லிங்கத்துக்கு கிடைக்கிற செங்குளம் பெரியம்மை போல, “எண்கள் தேவையற்ற உரையாடலில்” ஜான்சிக்கு அலுவலக நண்பராக வரும் சோமுவை போல், நிர்கதியாய் நிற்கிற தருணங்களில் வாழ்க்கை யாரோ ஒருவர் மூலம் நம்மை தாங்கி கொள்கிறது. இந்த ரகசியத்தின் அணுக்கத்தில் கொண்டு விடுவது தான் அவர் வரிகள்.
வண்ணதாசன் கதைகளில் காலி செய்து விட்டு போன அண்டை வீட்டுக்காரர்களை குடும்பத்துடன் மீண்டும் பார்க்க செல்லும் சித்திரம் வந்து கொண்டே இருக்கிறது. வளவுகளும், காம்பௌண்ட்களும், லைன் வீடுகளும் கொண்ட நெல்லை நகரின் ஆன்மாவே இந்த வாடகை குடித்தனகாரர்கள் தான். மதினியாக, அண்ணாச்சியாக, மாமாவாக, அத்தையாக, அக்காவாக, பெரியம்மாவாக ஒரு உறவாகத்தான் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். புறணி பேசுபவர்களாக, அறிவுரை சொல்பவர்களாக, பொறாமை கொள்பவர்களாக இவர்களே சுற்றி இருக்கிறார்கள். கசப்பும், இனிப்புமாய் இந்த உறவு தான் சக போட்டியாய், ஆதர்ச குடும்பாய் ஒருவருக்கொருவரின் சந்தோஷங்களிலும், சங்கடங்களிலும் பங்கு பெறுகிறார்கள். அதனால் தான் இவர்கள் தங்கள் முன்னேற்றத்தையும், சறுக்கல்களையும் அவர்களிடம் சென்று ஒப்புவிகிறார்கள். எந்த உறவையும் அலட்சியம் செய்துவிட்டு போகும் இன்றைய சூழ்நிலையில், அண்டை வீட்டாரின் நட்பை வலிந்து பேசுவதனாலே வண்ணதாசன் மேல் சட்டை போடாமல், கழுத்தை சுற்றி துண்டு அணிந்து வாதாம் மரத்தடியில் நின்று வீட்டின் சுற்று சுவரை பிடித்து பேசும் பக்கத்துக்கு வீடு மாமாவை போல் தெரிகிறார்
டவுனின் குறுகலான தெருக்களும், தெருக்களின் பேச்சொலிகளும், தெரிந்த மனிதர்களின் ஓங்கலான விசாரிப்பும், ரதவீதி தரும் உயிர்ப்பும் என பெரும் சத்தத்திற்குள் நுண்ணிய ஒலியென கிசுகிசுப்பாய், ரகசியமாய் உரையாடிக்கொள்ளும் மனித மனங்களை பேசும் ஆசிரியர், புறநகரின் அமைதியும், நிழற்சாலையின் மௌனமும், யாரென தெரியாத மனிதர்களும் உள்ள காலனிகளில் தனித்து சப்தமிட்டு பேசிக்கொள்ளும் உலகத்தை காட்டுகிறார். இந்த முரண்களின் வழியாகத்தான் சொல்லாதவைகளையும், சொல்ல கூடாதவைகளையும் பூடகமாக எல்லா கதைகளிலும் சொல்லி கொண்டே இருக்கிறார்.
வண்ணதாசனின் நுண் விவரணைகள் ஒரு வித ஏகாந்தம் அளிக்க கூடியவை, முற்பகலின் ஏறுவெயிலில் வாசல் நடையில் கை கட்டி நின்று கொண்டு வேப்பமரத்தின் மூட்டிலிருந்து இரண்டு அணில்கள் வளைந்து வளைந்து மரத்தில் ஏறுவதை பார்க்கும் கிளர்ச்சியை தருகிறது. சப்தங்கள் சாத்தப்பட்டு கதவுகள் மூடியிருக்கும் பிற்பகல் தெருவை நிராதரவாய் பார்க்கும் சோகத்தை ஒத்தது. நீர் உறிஞ்சிவிட்டு வெள்ளை வெள்ளையாய் தெருவில் பூ பூத்திருக்கும் மாலையின் மயக்கத்தை தருகிறது. குளிராய் காற்று தொட்டு செல்ல, திட்டு திட்டடாய் மஞ்சள் ஒளி விழும் தெருவில், சோடியம் விளக்கின் இருளுக்குள் நடந்து செல்லும் மௌனத்தை விளக்குவது.இந்த சித்திரங்கள் ஒரு நாடக மேடையின் திரைசீலை போல் அவரின் பெரும்பாலான கதைகளில் புறமாக பின்னால் இருக்கிறது. இந்த நேரத்திலும், இடத்திலும் நடக்கும் எல்லா சம்பவங்களையும் அவர் சிறுகதை மூலம் இலக்கியம் ஆக்கி விடுகிறார்.
வண்ணதாசன் வழங்கும் சிறுகதைகளின் தரிசனத்தை இரண்டு படிமங்கள் வழியாக புரிந்து கொள்ளலாம். பெரும் சப்தத்துடன் ஓங்கி விழும் குற்றால அருவி, சலனமில்லாமல் கிடையாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி நதி. மனிதர்கள் தங்கள் வாழ்வை தலை உயர்த்தி அண்ணாந்து, வானத்திலிருந்து கீழே விழும் ஒரு அருவியின் பிரம்மாண்டமாய் வேண்டுமென கற்பனை செய்து கொள்கிறார்கள், ஆனால் வாழ்க்கை என்னவோ தலை கவிழ்ந்து பார்க்கும்படி, பாறைகளில் முட்டி மோதி, வளைந்து நெளிந்து செல்லும் ஒரு நதியை போல் காலுக்கடியில் யதார்த்தமாய் ஓடி கொண்டிருக்கிறது.

 

Advertisement

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், சாகித்ய அக்காதமி, வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s