“வண்ணதாசனின் புனைகதை உலகம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளால், அவற்றினூடே ஓடும் மென்மையும் நொய்மையுமான மன உணர்வுகளால், சுற்றம் மற்றும் நட்புக்களோடு கொண்டிருக்கும் அளப்பரிய நேசத்தால் ஆனது.”-என்று பேராசியரும் நல்ல மொழிபெயர்ப்பாளரும் கவிஞருமான எம்.ஏ.சுசீலா குறிப்பிடுவார். திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் குடும்பப்பின்னணியில் வைத்து அன்பையும் நேசத்தையும் அள்ளித்தரும் கதைகள் இவை எனச் சொல்பவர் பலருண்டு.
ஆங்கிலத்தில் Folklore என்று சொல்வதைத் தமிழில் நாட்டார் வழக்காறுகள் என்கிறோம். அதை ஏதோ கிராமப்புறம் சார்ந்தது என்றே பலரும் புரிந்து வைத்திருக்கிறோம். அப்படி அல்ல அது. ஏதேனும் ஒரு மக்கள் குழுவுக்கேயான பிரத்தியேகமான வழக்காறுகளை –அது நகர்ப்புறம் சார்ந்தும் இருக்கலாம்-ஒரு தொழில் சார்ந்தும் இருக்கலாம்-அவற்றையெல்லாம் Folklore என்றே குறிப்பிடுகிறார்கள்.வண்ணதாசனின் சிறுகதைகளை திருநெல்வேலி டவுண் சார்ந்து வாழும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் பண்பாட்டின் மீது காலூன்றி நின்று மனிதப்பொதுமையான உணர்வுகளைப் பேசும் Folklore என்று குறிப்பிடத் தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் தன் மண் சார்ந்து எழுதுகிற ஒவ்வொரு எழுத்தாளனுமே ஏதோ ஒரு வகையில் ஒரு Folklorist தான்.
நாட்டார் வழக்காறுகள் குறித்து தோழர் அந்தோனியோ கிராம்ஷி சொன்ன வாக்கியமும் கூடவே நினைவுக்கு வருகிறது.’அது வெகுமக்களின் உலகக் கண்ணோட்டம்.முற்போக்கு மற்றும் பிற்போக்கான கருத்துகளின் அருங்காட்சியகம்.காமன் சென்ஸ் எனப்படுவதே தத்துவத்தின் நாட்டார் வழக்காறுதான் .’கதைக்குள் வரும் மாந்தர்களின் கருத்துநிலை விமர்சிக்கப்படாமல் அப்படியே கதைகளுக்குள் வருவதால் இக்கதைகள் கிராம்ஷி சொன்னதுபோன்ற அருங்காட்சியகமாகவும் சில சமயம் தோற்றம் கொள்கின்றன.
வண்ணதாசனின் சிறுகதைகள் ஒரு பகுதி மக்களின் அக வரலாற்றில் பயணப்படுகிறவையாக இருக்கின்றன.புற உலகோடு அவை கட்டாயமாக இணைப்பைக் கொண்டிருக்கின்றன-ஒருசில கதைகள் தவிர்த்து.ஒரு மகத்தான அகக்காட்சிகளின் கலைஞர் என்று சௌந்தர் குறிப்பிடுவதும் ஒருவகையில் சரிதான்.
“வண்ணதாசன் வாழ்க்கையைப் பார்க்கிறாரா? வாழ்க்கைச் சித்திரங்களைப் பார்க்கிறாரா? புற உலகத் தோற்றங்கள் இவரை வெகுவாக ஆகர்ஷிக்கின்றன. இவற்றை க் கிரகித்துக் கொள்ளும் பொறிகள் அவருடையவை. வெகு நுட்பமாக இந்த நுட்பங்களை வெகு நேர்த்தியாகச் சொல்லத் தெரிந்தவர் அவர். இவை திறமைகள். இது ஒரு சம்பத்து; இது ஒரு வில்லங்கம். வாழ்வு பற்றிய தன் அபிப்ராயத்தை ரேகைப் படுத்தும் பணியில் இத் திறமைகள் பின்னொதுங்கி உதவும் போது, இது சம்பத்து. பொறிகள் விரிக்கும் கோலங்களின் அளைதல் வாழ்வின் மையத்துக்கே நகர முட்டுக்கட்டையாகும் போது இது ஒரு வில்லங்கம்.
இக்கதைகளில் வாழ்வு பற்றி ஒரு மயக்க நிலை ஊடாடி நிற்கிறது. விழிப்புடன் வாழ்வை க்கவனித்து, அதன் முழு வீச்சை கிரகித்துக் கொள்ளும் உன்னிப்பைத் தூண்டுவதற்கு பதிலாக, மயக்கத்தின் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன.”- என்பது சுந்தரராமசாமி அவர்களின் கணிப்பு.வண்ணதாசனின் இரண்டாவது தொகுப்பான ‘தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்’ தொகுப்புக்கான முன்னுரையில் 1978இல் இப்படி அவர் எழுதியபோதிருந்தே இக்கணிப்போடு எனக்கு உடன்பாடில்லை.’சிதம்பரம் சில ரகசியங்கள்’ கதையில் வரும் விவாதம் போல ’மனுசங்களையெல்லாம் பார்த்தால் மட்டும் போதாது இன்னும் உத்துப் பாக்கணுமல்லவா?’ சுந்தரராமசாமி போன்ற மாபெரும் ஆளுமை வண்ணதாசனை உற்றுப்பார்க்கவில்லையோ என ஐயுற்றேன்.உற்றுப்பார்க்கையில்தான் புறத்தோற்றங்களின் சித்திரங்கள் அகவாழ்வுடன் கொண்டிருக்கும் ஜீவனுள்ள பிணைப்பைக் காண முடியும்.
எல்லோரும் சொல்லி, அப்புறம் வண்ணதாசனே சொன்னது “நான் ’சின்ன விஷயங்களின் மனித’னாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். அப்படியே இருக்கிறேன். மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்க்கிறேன். ’சின்ன விஷயங்களின் மனிதன்’ . நன்றாகத்தான் இருக்கிறது.”
வண்ணதாசனின் நாட்டார் வழக்காறுகளாக மேற்சொன்ன கணிப்புகளை எல்லாம் கொண்டு வந்துவிட முடியும்.இவ்வழக்காறுகளின் மூலமாக அவர் மென்மையான ,மயக்கமான,அன்பை மட்டுமே முன்னிறுத்துகிறவராகத்தான் இருக்கிறாரா?பூப்பூவாய் விரியும் சினேகங்களை மட்டும்தான் பேசினாரா? வாழ்வின் வெக்கையையும் அனலையும் பேசவில்லையா?பொருளியல் வாழ்வின் அழுத்தங்களை அவர் பேச வில்லையா? அவருடைய சிறுகதைகள் முன்னெடுக்கும் அரசியல்தான் என்ன?
-
கலைக்க முடியாத ஒப்பனைகள்-1978- 15 கதைகள்
-
தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்-1978 -11 கதைகள்
-
சமவெளி-1983-12 கதைகள்
-
பெயர் தெரியாமல் ஒரு பறவை-1985-12 கதைகள்
-
மனுஷா மனுஷா-1990- 10 கதைகள்
-
கனிவு-1992-16 கதைகள்
-
நடுகை -1996-22 கதைகள்
-
உயரப்பறத்தல்-1998-17 கதைகள்
-
பெய்தலும் ஓய்தலும் -2007 12 கதைகள்
-
ஒரு சிறு இசை-2013 -15 கதைகள்
-
ஒளியிலே தெரிவது -2010-12 கதைகள்
-
கிருஷ்ணன் வைத்த வீடு -2015-12 கதைகள்
-
நாபிக்கமலம் -2016-13 கதைகள்
-
கமழ்ச்சி-2017 -14 கதைகள்
-
மதுரம் -2018 -11 கதைகள்
அனுபவிக்கத் தெரிகிறது.ஆராயத் தெரியவில்லை.முழுத்தொகுப்பையும் பரிபூர்ணமாகப் படித்த உணர்வு சந்தோஷம்.இன்னும் இன்னும் எழுத இறைவன் அருளட்டும்.