வாழ்வை நேசித்தவனுக்கு… (1)

22921f4f-c752-43df-92b4-2d3af3d22385-4903-00000a068116a981_tmp

வாழ்வை நேசித்தவனுக்கு…

இனிய ஜெயன்,

வாழ்த்துக்கள்.

வண்ணதாசனுக்கு ’ஒரு சிறு இசை”க்காக சாகித்யஅகாதமி விருது. அத்தொகுதியின் முதல் பக்கத்தில் நீங்கள் “காதலியின் முத்தம் போலவோ,நூற்றுக் கிழவியின் ஆசி போலவோ எங்கோ சென்று தைக்கும் சிறுகதைகள்” என நெகிழ்ந்திருப்பீர்கள். அதை அகாதமியும் ஆமோதித்திருக்கிறது.

கடந்த மூன்று வருடங்களாக விளக்குத் திரியை நீங்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆ.மாதவன், பூமணி இப்போது வண்ணதாசன்.

பின்னெழுபதுகளின் ஒரு விடுமுறை நாள். எங்கள் பகுதியின் சிறிய நூலகம் அது. புத்தகங்களைத் தேடிக் களைத்துப் போனபோது தடிமனான அட்டைப் போட்ட புத்தகமொன்று தட்டுப் பட்டது. அது இலக்கிய சிந்தனை வெளியீடு. அந்த வருடம் வந்திருந்த சிறுகதைகளின் தொகுப்பு. அதில் தனுமையும் ஒன்று. சுஜாதா தேர்வு செய்து சிலாகித்து எழுதியிருந்தார். படிக்க ஆரம்பித்தேன். தஞ்சாவூர்காரனாயிருந்ததால் அது வரை தி.ஜானகிராமன் மட்டுமே சகலமும் என்றிருந்தேன். அத்தனை அபிப்ராயத்தையும் அச்சின்னஞ்சிறுகதை புரட்டிப் போட்டது.
அதற்கடுத்து சில வருடங்களுக்குப் பிறகு பிறிதொரு கதை. அது கணையாழியில் வந்த தங்களின் கிளிக்காலம். அன்றிலிருந்து இன்று வரை கிட்டதட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஒரு ரகசியத்தை மனதுக்குள் பூட்டி வைத்திருந்தேன். அது தங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் என்பதே.

பவா தன் 19 டி.எம்.சாரோனிலிருந்து புத்தகத்தின் தன்னுரையில் எழுதியிருப்பார். ஸ்டான்ஸ்ட்லாவாஸ்கியின் நாடக ஒத்த்திகை நடக்கும் இடத்திற்கு டால்ஸ்டாய் வந்திருக்கிறார். ஸ்டான்ஸ்ட்லாவாஸ்கியால் அந்த கணத்தை எதிர்கொள்ள முடியாமல் அவரைச் சந்திப்பதை இயன்ற அளவு தவிர்க்கிறார் என்று.

மனதுக்குள் எழும் அத்தகைய பெரும் பாறையை உடைக்க எல்லோருக்கும் ஓர் உளியேனும் தேவைப்படும். எனக்கோ பெரும் நெம்புகோலே கிடைத்திருக்கிறது. உங்கள் இருவரையும் சந்திக்கும் அற்புத தருணம் அது.

அவரே சொல்வது போல் குழந்தைகளால் மட்டுமே காட்டமுடிகிற எட்டாவது வண்ணத்தை அவராலும் காட்ட முடிந்திருப்பதால் அவர் வல்லிக்கண்ணன்தாசன் என்பதைவிட வண்ணதாசனாய் மேலெழும்புகிறார்.

எதையும் எழுதாததால் ஒருபோதும் தேயாத பென்சில் என்று ஒரு கதை எழுதியிருப்பார். ஆனால் வாழ்வின் அனைத்துத் தருணங்களையும் எழுதிக் கொண்டிருப்பதாலே இவரது பென்சில் என்றும் தேயாத பென்சில்.
வண்ணதாசனையும், கல்யாண்ஜியையும்ப் பிரித்துப் படிக்க ஏதேனும் சூத்திரம் இருக்கிறதா? என்ற கேள்வியுடன் முடித்துக் கொள்கிறேன்.

தங்களிருவரையும் சந்திக்கும் ஆவலில் மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும்,

சந்தானகிருஷ்னன்.

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக