வண்ணதாசனின் அகமும் புறமும்

வண்ணதாசன்
லகத்திலேயே அழகானவர்கள் யார் என்று கேட்டால், நரிக்குறவர்கள்தான் என்று சொல்வேன்.
பிறந்ததில் இருந்து அவர்கள் வளர வளர அழகாகிக்கொண்டே போகிறார்கள். சமீபத்தில், ஆனித் திருவிழாக் கூட்டத்தில் ஒருத்தரைப் பார்த்தேன். பழுத்த பழம் மாதிரி! ஒரு குச்சி ஐஸை வாங்கி தான் ஒரு வாய் உறிஞ்சி, தன் கையிலுள்ள பேரனுக்கு ஒரு வாய் கொடுக்கிறார். அவரின் மொத்த வாழ்வையும் தோலின் சுருக்கங்களுக்குள் புதைத்திருந்த முகம், சந்தோஷத்தில் அப்படி மிதக்கிறது.
பழைய பஸ் ஸ்டாண்டில் அந்தப் பையனைப் பார்த்திருக்கலாம். அவர்களுக்குத்தான் இந்த உச்சிக் கொண்டை வாய்க்கிறது. இரண்டு விரற்கடைக்கு துணியை முறுக்கிச் சுற்றினது போல ஒரு தலைப்பாகை. இப்போதுதான் பூனை முடியாக மீசை முளைக்கிறது. பதினாறு, பதினேழு வயது முகம். கழுத்தில் பித்தளைச் சங்கிலிகள், பாசி, பூனைக் கண்… உதட்டைவிடவும் சிரிக்கிறது. பார்க்க ஒரு சிலை மாதிரி இருக்கிறான்.
இதெல்லாவற்றையும்விட, அவன் தோளில் ஒரு தேவாங்குக் குட்டி எப்போதும்! அதை முகத்தோடு சேர்த்து அவன் கொஞ்சுவதைப் பார்க்க வேண்டுமே! தேவாங்கு எவ்வளவு தூரத்துக்கு அழகு என்று நமக்குத் தெரியும். அந்தப் பையனுடைய தோளில் இருக்கும் போது, அது அவ்வளவு அழகாக இருக்கும். ஆண்டாள் தோளில், மீனாட்சி தோளில் இருக்கிற கிளிகளைவிட அழகு.
பெரியார் நிலையத்திலிருந்து காளவாசல் போவதற்கு, இதைவிட்டால் வேறு பாதை இல்லை. ரயில்வே பாலம் ஏறி இறங்கி னால், மாப்பாளையம். அப்புறம் அரசரடி.
இந்தப் பக்க நடைபாதையில் எத்தனை காலமாகக் குடிசை போட்டு இருந்தார்களோ! கையில்லாமல் அரைக்கைச் சட்டை மட்டும் ஒரு பக்கம் தொய்ந்துகொண்டு இருக்குமே, அது மாதிரி ஒரு பூவரச மரம் கிளை வெட்டப்பட்டு நிற்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றப் போகிறார்களாம். அரசாங்க இயந்திரம் திடீரென்றுதானே முழிக்கும்!
நான் சாலையில் பார்க்கும்போது ராட்சச இரும்புப் பற்களைக் காட்டி உறுமியபடி, பொக்லைன் அலைந்தது. புதைத்துவைத்திருந்த கள்ளச்சாராய ஊறலுக்குள் தும்பிக்கையை விட்ட யானை மாதிரி, அது எல்லாவற்றையும் இழுத்துப் போட்டது.
போர்டு எழுதுகிற யாரும் இருந்தார்களோ என்னவோ… பிரஷ்களும் அடிக்குச்சிகளும், பெயின்ட் டப்பாக்களும் ஒரு வீட்டு முன் னால் இருந்தன. ஒரு பெண் இன்னும் ஐந்து நிமிடங்களில் பிரசவமாகிவிடுவது போன்ற நிறைமாதக் கர்ப்பத்துடன் குனிந்து பிளாஸ் டிக் குடங்களை நகர்த்திவைத்துக்கொண்டு இருந்தது. பாதித் தண்ணீருடன் வெயில் அந்தச் சிவப்புக் குடத்தை ஊடுருவி அலம்பி வெளியே போனது. கெட்ட வார்த்தை சொல்லி, அந்தப் பகுதிக்குரிய வார்டு கவுன்சிலரை ஏசிக் கொண்டு இருந்தவரை பள்ளிக் கூடப் பிள்ளைகள் பார்த்துக்கொண்டு நகர்ந்தன. விழாத லாட்டரிச் சீட்டுக்கள் கிழிந்து கிழிந்து தரையில் ரொம்பத் தூரத்துக்கு…!
பொக்லைன் ஓட்டுகிறவரிடம், ”ஒண்ணும் பிரச்னை இல்லையே?” என்று ஏட்டையா மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே கேட்டுக்கொண்டு இருந்தார். ”இன்னும் டூ அவர்ஸ்ல முடிஞ்சிருமா?” ஓடுகிற வண்டியை அணைக்கவில்லை அவர்.
முடிந்திருக்கும் போல!
அன்றைக்கு இரவு பஸ்ஸில் திரும்பிக்கொண்டு இருந்தபோது, கலவரம் நடந்த பகுதி மாதிரி இருந்தது அந்த இடம். பதினோரு மணி இரவு வேறொரு நிறத்தைத் தரும் இல்லையா… பொக்லைன் தோண்டிய இடங்களில் மண் வாசனை அடித்தது.
ஒரு பெட்டிக் கடை சாய்ந்தவாக்கில். சைக்கிள் ரிக்ஷாவில் ஒருத்தர் தட்டுமுட்டு எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு இருந்தார். ஒரு சேலையையோ, கைலியையோ சுருட்டி, நெஞ்சோடு வைத்து நாடியை அழுத்தி ஒரு பெண் குழந்தை. கீழே பைக்கட்டும் புத்தகங்களும்.
நான் பஸ் நகர்வில், வலது பக்கத்திலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. பார்த்துக்கொண்டே வந்தேன்.
ஒரு வாலிபப் பையன். பக்கத்திலிருந்த தந்திக் கம்பத்தோடு ஒரு சணலைக் கட்டிச் சுருக்குப் போட்டு இழுத்தான். அதன் இன்னொரு நுனியை நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஒரு செடியுடன் கட்டிக்கொண்டு இருந்தான். செடி அவனுடைய முகத்திலும் தோளிலும் உரசி உரசி விலகியது.
அது பூக்கிற செடியா, காய்க்கிற செடியா என்றெல்லாம் அந்த இருட்டில் தெரியவில்லை. ஆனால் அது அவனோ, அவன் தங்கையோ, அம்மாவோ வளர்த்த செடி! இன்று காலை வரை உண்மையாக இருந்த அவர்களுடைய வீட்டுக்கு முன் வளர்ந்த செடி. பெயர்த்து எடுத்துப்போக முடியாத அளவுக்குப் பெரிதாக வளர்ந்துவிட்ட ஒன்று. அது ஒடிந்து விடக் கூடாது. கருகிவிடவே கூடாது.
அவனை ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே ஒரு குட்டி நாய் நின்றது. தரையை முகர்ந்துகொண்டே போனது. மறுபடியும் அவனிடமே வந்தது.
அந்தச் செடியையே அவன் பார்த்துக்கொண்டு நின்றான்.
ஓவியக் கண்காட்சி அன்றைக்குத்தான் கடைசி நாள்.
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கும் போட்டி நடத்தியிருந்தார்கள். எத்தனை மணிக்கு வந்தார்களோ, மாவட்ட ஆட்சியாளர் கையால் பரிசு வாங்குவது என்றால், காத்துக் கிடக் கத்தானே வேண்டும்! நாம் அப்படி எல்லாம் உடனே சின்னப் பிள்ளை களைக் கவனித்து அனுப்பிவிடு வோமா?
ஒவ்வொருத்தராகப் பேசி முடித்து, மரியாதை பண்ணி, இயல்பாக ஒரு தடவை, புகைப்படத்துக்கு இன்னொரு தடவையென சால்வை போர்த்தின பிறகுதானே, அந்த சோப்பு டப்பாவையோ, கலர் பென்சில்களையோ கொடுப்போம். நிஜமாகவே பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் பசி எடுத்திருக்கும். பசியையாவது அடக்கிக்கொள்ளலாம். ஒன்றுக்கு வந்தால் என்ன செய்ய? ரொம்ப நேரம் சிரமப்பட முடியாதல்லவா?
இடம் வேறு புதிது. இருட்டுக் கசமாக இருக்கிறது. அவசரத்துக்கு ஏதாவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்துவிடலாம் என அந்தப் பையன் போகும்போதே, பொத்தானை அவிழ்த்துக்கொண்டு ஓடுகிறான். பெயர் சொல்லி மேடைக்குக் கூப்பிட்டுவிடக் கூடாது. விழா நடக்கிற இடத்தைவிட்டு அதிக தூரம் போகாமல், இருட்டுக்குள் உட்கார்கிறான்.
உட்கார்ந்த இடத்தில் தரையை மெழுகின மாதிரி விரல் விரலாகப் பன்னீர்ப் பூக்கள் உதிர்ந்துகிடக்கின்றன. நாள் முழுதும் உதிர்ந்திருக்கும் போல! அவ்வளவு பூ. வாசம் அந்த இடத்தையே தூக்குகிறது.
உடனே எழுந்திருக்கிறான். கால் சட்டையில் ஈரம்பட்டாலும் பட்டிருக்குமே தவிர, ஒரு சொட்டுக்கூட தரையில் விழாமல், அந்தப் பூவில் தெறிக்காமல், எங்கேயோ தள்ளி இருட்டுக்குள் அந்தப் பையன் ஓடுகிறான்.
அவன் ஓடுகிறதைப் பார்த்துக்கொண்டே மேலும் நாலைந்து பன்னீர்ப் பூக்கள் உதிர்கின்றன. வாசனை அந்தப் பையனைப் பிடித்துக் கட்டிக்கொள்ளத் தேடிப் போய்க்கொண்டு இருக்கிறது.
பஸ் பிதுங்கிக்கொண்டு போகிறது.
இந்த நெரிசலுக்குள் பைக்குள் கையைவிட்டு சில்லறையை எடுத்து நமக்கு ஒரு ஆளுக்கு டிக்கெட் எடுக்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்த கண்டக்டர், டிக்கெட் கொடுக்கிறார்; சில்லறைப் பாக்கி தருகிறார்; விசில் கொடுக்கிறார்; ‘சௌக்கியமா அண்ணாச்சி!’ என்று விசாரித்துக்கொண்டே வியர்வையைப் பெருவிரலால் வழித்துக் கொள்கிறார்.
வாழ்க்கை முழுவதுமே தோள்களை இடித்தபடியேதான் இவர் போய்க்கொண்டு இருப்பார் போல! பெற்ற பிள்ளைகள் பெயர்களையெல்லாம்கூட இத்தனை தடவை உச்சரித்திருக்க மாட்டார். அவ்வளவு தடவை, ‘டிக்கெட்… டிக்கெட்.’
பஸ், ராஜா பில்டிங் சுற்றி… தேவர் சிலைப் பக்கம் திரும்பி… அண்ணா சிலைப் பக்கம் வேகம் எடுத்து மேம்பாலம் ஏறும்போது, பஸ்ஸில் இடம்பிடிப்பது மாதிரி காற்று ஓடி வந்தது. முன்னால் நின்றிருந்த கண்டக்டர், ‘வழி… வழி… வழி’ என்று வேகமாகப் பின்னால் வந்தார். சட்டைப் பொத்தான்களை அவர் கை அவிழ்த்துக்கொண்டே வந்தது. மறுபடியும் ‘வழி… வழி!’
பஸ் பாலத்தில் வேகம் எடுக்கிறது… ரயில் சத்தம். நாகர்கோவில் வண்டியா, செங்கோட்டை வண்டியா… தெரியவில்லை.
பாலத்தில் காற்று முன்பைவிடத் திபுதிபு என்று உள்ளே வருகிறது.
கண்டக்டர் படியில் இறங்குகிறார். சட்டைக் காலரை கழுத்துக்குப் பின்னால் தள்ளுகிறார். முடி காற்றில் பறக்கிறது. சட்டைக் காலர் படபடவென்று காற்றில் அடிக்கிறது. பஸ் வளைந்து உச்சிக்கு வருகையில், கீழே தண்டவாளம் தெரிகிறது. அரச மரம் தெரிகிறது.
அவ்வளவு உயரத்தையும், அவ்வளவு காற்றையும் வாங்கிக்கொண்டு படியில் அப்படியே நிற்கிறார், கண் மூடியிருக்கிறது.
வாய் திறந்து, ‘ஹா’ என்று கிறங்கினாற்போல் ஒரு சத்தம் வருகிறது. இன்னும் மூடின கண்களின் ரப்பை முடியைக் காற்று மேல் நோக்கித் தள்ளுகிறது.
பக்கத்துக் கட்டடத்தில் வேலை நடக்கிறது. இன்றைக்கு வேலை முடிந்தது. சாந்துச் சட்டி, கரண்டி, மட்டைக் கம்பு எல்லாவற்றையும் ஓரமாக வைத்து மேல்கால் கழுவியாயிற்று. புறப்பட வேண்டியதுதான்.
அதற்குள் மழை வந்துவிட்டது, சொருசொருவென்று ஊற்ற ஆரம்பித்துவிட்டது. ஐப்பசி, கார்த்திகை அடைமழை. இன்னும் எத்தனை பாட்டம் பெய்யுமோ? லேசில் நிற்கிற வழியாகத் தெரியவில்லை.
இவ்வளவு நேரம் எட்டுப் பேர், பத்துப் பேர் போட்டுக்கொண்டு இருந்த சத்தம் எங்கே போயிற்று? எல்லாப் பேச்சும் தொலைந்துவிட்டுஇருந்தது. மழை, தெற்கே இறங்கியதில், நீரின் படுதாவுக்குப் பின்னால் தூரத்துத் தென்னைகள். வெவ்வேறு நீலங்களுக்குள் கிடந்த மேற்குப் பக்கத்து மலைகள் காணாமல் போய்க்கொண்டு இருந்தன. உத்தரவு போட்டது போல், எல்லோரும் மழையையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மழையையும், மழைக்கு அப்பாலும்!
பீடிப் புகை மட்டும் வந்தது. சைக்கிள் நனைந்தது. சைக்கிள் குறுக்கு பாரில் கழற்றிப்போட்டிருந்த சட்டை நனைவதைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. மழைத் தண்ணீர், சரளைக் கற்களை உருட்டிக்கொண்டு பள்ளத்தில் ஓடியது. செப்புக் கம்பிகளைப் போன்ற மண்புழுக்கள், சல்லி வேர்களாகக் கிளம்பித் தண்ணீரை எதிர்த்துத் தரையோடு ஊர்ந்துகொண்டு இருந்தன.
மழைத் தண்ணீரை ஏந்திக் குடித்த பித்தளைத் தூக்குச் சட்டியில் ஊறுகாய் வாடை அடித்தது.
மூன்று நாட்களுக்கு முன்னால், பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.
இன்றைக்கு புரட்டாசி சனிக்கிழமை. அதனால் வெங்கடாசலபதி. திருப்பதியில்கூட இவ்வளவு பெரிய விசுவரூப தரிசனம் கிடைக்காது.
மிஷன் ஆஸ்பத்திரிக்குப் போகிற, வருகிற ஆட்களுக்குக் குறைச்சல் இல்லை. ஆஸ்பத்திரி வாசலில் சுடச் சுடத் தயாராகும் இடியாப்ப வாசனை இங்கே வரை வருகிறது. அதுவும் பசியில் ஒருத்தன் இருக்கும்போது, அது பாடாய்ப்படுத்தும்.
மேலே இருந்து கீழே வரைக்கும் கரியை வைத்து ஸ்கெட்ச் போட்டாயிற்று. துணிப் பையில் என்ன கலர் சாக்பீஸ் கிடக்கிறதோ, தெரியவில்லை. வெள்ளை, ரோஸ், மஞ்சள், ஊதா இவை இருந்தால் போதும்.
மழை வராமல் இருக்க வேண்டும். அதிகமாக வெயிலும் வரக் கூடாது. வந்தால், நின்று பார்க்க மாட்டார்கள். மகாலுக்கு வெள்ளைக்காரர்களை ஏற்றிப் போகிற சைக்கிள் ரிக்ஷா இந்தப் பக்கம் உள்ள பேங்க்குக்கு டாலர் மாற்ற வந்தால் நல்லது.
இப்போது முட்டை போண்டா வாசனை அடிக்கிறது.
இவ்வளவு யோசனைக்கு மத்தியிலும், வெங்கடாசலபதி கறுப்பு வெளிக் கோடுகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வண்ணம் பெற்றுக்கொண்டே வருகிறார். சில சமயம் வரைகிற தரை வாகு; சில சமயம் கரி வாகு; சில சமயம் விரல் வாகு. எல்லாவற்றோடும் இன்றைக்கு மனதும் சேர்ந்துகொண்டது போல. அப்படியே பெருமாள் தத்ரூபமாக!
‘மலையப்பா!’ என்று ஒரு சத்தம். ‘கோயிந்தா!’ என்று இன்னொரு சத்தம். ‘அப்படியே எங்க அப்பனை அச்சடிச்ச காலண்டர் மாதிரி வரைஞ்சு தரையில பதிச்சுவெச்சுட்டியே அப்பு!’ பண்டில் பண்டிலாக விசைத்தறித் துண்டுகளைத் தலைப் பாகையை அவிழ்த்து உடம்பைத் துடைத்துக்கொண்டார்.
பக்கத்திலேயே கொஞ்ச நேரம் நின்று, வரைவதையே பார்த்தார். அபயகரம் வரைந்துகொண்டு இருந்த சமயம், என்ன தோன்றிற்றோ… டயர் வண்டிக்காரர் சற்றுச் சுற்றி வந்து, பாலாஜியின் பாதம் இருந்த பக்கத்தில் உட்கார்ந்தார். வரைகிறவரைப் பார்த்தார். புழுக்கைகளாகக் கிடந்த சாக்பீஸ் துண்டுகளை எடுத்துக் கைகளில் குலுக் கினார்.
”ரெண்டு பேரும் ஒரு டீ சாப்பிடலாமாண்ணே!” என்று வரைகிறவரின் தோள்பட்டையைத் தொட்டுக் கேட்டார்.
மிஷன் ஆஸ்பத்திரி வாகை மரங்களில் இருந்து சாமரம் போலப் பூக்கள் உதிர்ந்துகொண்டு இருந்தன.
நரிக்குறவ இளைஞன் தேவாங்கு வளர்க்கிறான். காலையில் வீட்டை இழந்த ஒருவன், ராத்திரி வந்து அவன் வளர்த்த செடியைப் பாதுகாக்கிறான்.
பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் ஒன்றுக்குப் போக அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனுக்கு மனமில்லை. நெரிசல் நேரக் கண்டக்டருக்கு, பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா!’ சொல்ல முடிகிறது. கட்டடத் தொழிலாளிகள் மழை பார்க்கிறார்கள். மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ சாப்பிடலாமா?’ என்று கேட்கத் தோன்றுகிறது இன்னொருவருக்கு.
இதெல்லாவற்றையும் பற்றி நமக்கென்ன? நமக்குத்தான் இருக்கிறதே இருபத்து நான்கு மணி நேரத் தொலைக்காட்சிகள். யார் அசத்துகிறார்கள், யார் கலக்குகிறார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தால் போதாதா?!
 
எஸ்.ஐ. சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to வண்ணதாசனின் அகமும் புறமும்

  1. munu.sivasankaran சொல்கிறார்:

    நடுவயது பள்ளி வாத்தியார் பிள்ளைகளை சிற்றுலா அழைத்து செல்வதுபோல் வாசகரை உங்களோடு அழைத்து செல்கிறீர்..! உலகம் உள்ளங்கையில் என்கிறார்கள்….ஆனால் ஒவ்வொருவரும் தனிமையில்….அறிவியல் சாதனங்கள் நமது பார்வையை திட்டமிடுவது அச்சம்கொள்ள வைக்கிறது..! இன்னும் ஏதேதோ எண்ணம் கிளைகிறது…!

  2. சுயம்பு சித்தன் சொல்கிறார்:

    நிஜ மனிதர்களை நேரில் பார்க்கும் பக்குவமே குறைந்து விட்டது
    இங்கு மனதுடன் சேர்ந்து இருப்பதும் குறைந்து விட்டது
    தொலைக்காட்சி பார்க்காத நேரத்தில் தொலை(அலை)பேசியில் தொலைந்தே இருக்கிறோம்
    மரமும் காற்றும் இருப்பதே அறிவதில்லை, அவை இல்லாததை வியர்க்கையில் குறைபடுவோம்
    அகமும் புறமும் இணையாது வாழ்வதே நாகரிக வாழ்க்கை முறை ஆகிவருகிறது
    அகமும் புறமும் ஒன்றாக நினைவுறுத்தி இங்கு இழுத்து வந்ததற்கு நன்றி

  3. Bar-Code சொல்கிறார்:

    சொல்ல என்ன இருக்கு
    ரசித்தேன்
    இன்னமு வாசிக்க ஆசை பிறக்குது

  4. lenin சொல்கிறார்:

    வண்ணதாசன் வாழ்க

பின்னூட்டமொன்றை இடுக