சில இறகுகள், சில பறவைகள்” வண்ணதாசன் கடிதங்களின் புதிய தொகுப்பு முன்னுரை

இரண்டு நாட்களுக்கு முன் யாழினியின் கடிதம் வந்தது,
யாழினியின் முதல் கடிதம் அது. யாழினிக்கு எட்டு வயது.  மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள். சேலத்துக்காரி. நான் எழுதியதுதான் அவளுக்கு வந்த முதல் கடிதம். எனக்கு வந்திருக்கிற பதில் அவள் எழுதிய முதல் கடிதம். சரிதான். என்னுடைய வரலாறும் அவளுடைய வரலாறும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது.
என்னுடைய கடிதங்கள் பின்னொரு நாளில் அச்சாக்கப்படும் என்ற கவனத்தோடே  நான் கடிதங்களை எழுதுவதாக, ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என கோவை வைகறை நஞ்சப்பன் அவர்களால் தொகுக்கப்பட்ட என் முதல் கடிதத் தொகுப்பை ஒட்டி அம்பை அபிப்பிராயப்பட்டதாகச் சொன்னார்கள்.
’அப்படிச் சொன்னீர்களா லட்சுமி’ என்று நான் கேட்கவில்லை. அம்பை நல்ல மனுஷி. சிட்டுக்குருவிகள் மீது வரை அவருக்கு அக்கறை உண்டு.
என் மீதும் இருந்திராமல் இராது.
ஒருவேளை அக்கறைதான் அப்படிச் சொல்லவைத்ததோ என்னவோ. இருக்கட்டும். அது ஒரு பெரிய விஷயமில்லை.
ஆனால் இன்றைக்கு வரைக்கும் எதையும் நான் தீர்மானிப்பதில்லை.
டவுணில் போய் அப்பாவைப பார்க்கப் புறப்பட்டிருப்பேன். பைக் பெருமாள்புரம் முக்கு வரும் வரை இடது புறம் திரும்பி புறவழிச்சாலை வழியாகப் போகவேண்டும் என முதலில் நினைத்திருப்பேன். போலீஸ் ஸ்டேஷன் தாண்டி, எதிர்ப் பக்கம் பூத்திருக்கிற வாதமுடக்கி மரங்களைத் தாண்டி, அகதிகள் குடியிருப்பு அருகில் வந்ததும் வலதுபுறம் திரும்பி பாளை பஸ் ஸ்டாண்ட் வழியாகப் போக ஆரம்பித்திருப்பேன். இந்த எதிர்மாறான அளவுதான் என் முன் தீர்மானம் எல்லாம்.  இந்த லட்சணத்தில், 21.இ.சுடலைமாடன் கோவில் தெருவில் வைத்து எழுதி, சந்திப் பிள்ளையார் கோவில் காந்திசிலைப் பக்கத்து தபால் பெட்டியில் போடுவது, கோவை நரசிம்ம நாய்க்கன் பாளையம் வைகறை பதிப்பகத்தின் அச்சுக்கோர்ப்பில் இருபது வருடங்கள் கழித்துப் போய்ச் சேரும் என எப்படி மனக்கணக்குப் போட எனக்கு முடிந்திருக்கும்?
ஆனால் யாழினிக்கு நான் எழுதியது பிரசுரத்திற்கு என முதலிலேயே தெரியும்.
அந்த எட்டு வயதுச் சின்னப் பிள்ளையின் புத்தகம் ஒன்று இந்த நவம்பர் -14ஐ ஒட்டி வருகிறது. அதில் சேர்ப்பதற்காகவே அதை எழுதினேன் என்பது முன்னறி உண்மை. முதல் கடிதத் தொகுப்பு அச்சாகிய சமயத்தில் அம்பை சொன்னதை நிஜமாக்க எனக்கு இத்தனை வருடங்கள் தேவைப் பட்டிருக்கிறது. ஆனால் நிஜமாகிவிட்டதே. அந்த அளவில் சந்தோஷம்தான்.
எனக்கு யாழினியின் கடிதம் வந்ததே தவிர, அது தபாலில் அல்ல. கூரியரில்.
முன்பு தபால்காரர் இருந்த இடத்தில் இப்போது கூரியர் முத்துக்குமார். முத்துக்குமாருக்கு என் புனையாத, புனைந்த பெயர்கள் அத்துபடி. ’சாப்பாடு ஆச்சா?’,
’என்ன சார் தாடி?’, ‘சட்டை நல்லாருக்கு, ரெடிமேடா?’, ‘விகடன்’ ல பார்த்தமாதிரி இருந்துது’ என்று சொல்கிற அளவுக்கு நெருக்கம். எனக்கு இரண்டு தடவைகள் கருப்பு பால்பாயிண்ட் பேனாக்கள் அன்பளித்திருக்கிறார்.
2011 மாதக் காலண்டர் அவர் கொடுத்ததுதான்.. இந்த தீபாவளிக்கு ஒரு இனிப்பு பாக்கெட் கூடத் தந்தார். நான் அப்படியெல்லாம் பெரிதாக அவருக்கு ஒன்றும் செய்துவிடவில்லை. ’உடம்புக்குச் சரியில்லையா?’ என்று கேட்டிருப்பேன்.
வெயிலோடு வந்தபோது ஒரு செம்பு தண்ணீர் கொடுத்திருப்பேன். ‘பொம்பளப் பிள்ளை எத்தனாங் கிளாஸ் படிக்கு?’ என்று விசாரித்திருப்பேன். எப்போதேனும் பொங்கல் படி என்று ஏதாவது கொடுத்திருப்பேன். மகன் கல்யாணத்தை ஒட்டி, இன்னும் இரண்டு பேருக்குத் தந்தது போல, இவருக்கும் மேல் சட்டை கால்சட்டைத் துணி தந்திருப்பேன்.
அது அல்ல விஷயம்.
ஒரு நந்தகோபால் எனும் தபால்காரரை, கூரியர் முத்துகுமாராக மீண்டும், அடைந்துவிடுகிற நுட்பமான முயற்சி இது. கிட்டத் தட்ட என் 15ம் வயதிலிருந்து கடந்த ஐம்பது வருடங்களாக, என்னுடன் ஒரு தபால்காரரின் நிழல் பின்தொடர்ந்து வருகிறது. அல்லது அவருடைய இன்னொரு நிழலாக நானிருந்து வருகிறேன். திருநெல்வேலி, நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, மதுரை, சென்னை, பெருமாள்புரம், செட்டிகுரிச்சி என எல்லா ஊர்த் தபால்காரரின் சீருடைகளும் எனக்குப் பொருந்தி இருக்கின்றன.
அவர்களுடைய சைக்கிள் ரிம்களின் துருவை, அவர்களின் குடைத் துணிகளில் குத்தி விம்மிக் கொண்டிருக்கும் ஒடிந்த குடைக்கம்பியை நான் அறிவேன். அடுத்தடுத்து வெயிலிலும் மழையிலும் யாரையாவது தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதாலோ என்னவோ, எல்லா தபால்காரர் முகத்திலும் ஒரு சிரிப்பு எப்போதும் குறையாமல் இருக்கும் தெரியுமா? எப்போதாவது என்
முகத்தில் காணப்படும் அந்த அபூர்வமான சிரிப்பின் சாயல் அவர்களிடமிருந்து
நான் பெற்றுக் கொண்டதே.
ஒருத்தர் காளி வேஷம் போடுவார் பத்தாம் தசராவுக்கு.

ஒருத்தர் சொர்ணமஹால் டூரிங் டாக்கீஸில் குடும்பத்தோடு, ரொம்பக் கூச்சப்பட்டுக் கொண்டே நம் பக்கத்தில் உட்கார்ந்து, படம் போட்ட கொஞ்ச நேரத்தில் இடம் மாறிக் கொள்வார். தன்னுடைய மகள் +2வில் எடுத்திருக்கிற மார்க்கை என்னிடம் சொல்லிச் சந்தோஷப்பட்டவர் ஒருத்தர் உண்டு.
மழைக்குக் குடையைப் பிடித்துக் கொண்டு, வேப்பமரத்தடியில் ஒதுங்கி தன்னுடைய இரண்டாவது சேர்மானத்துடன் பேசி நின்ற ஒருவர், அதற்கு மறுநாள் என்னைப் பார்க்கும்போது குனிந்துகொண்டு போனார். எங்கள் அம்மா இறந்த துஷ்டி கேட்க வந்தவர், மகன் ராஜு கல்யாண வரவேற்புக்கு வந்து, ‘ரொம்ப சந்தோஷம்யா’ என்று எங்களுடன் புகைப்படத்திற்கு நின்றவர் என எத்தனை பேர்.
அவர்கள் எல்லோருமே எனக்கும், என் முகவரிக்கும் தபால் வினியோகித்தார்களே தவிர, யாரும் வெறும் தபால்காரர் மட்டும் அல்ல.
அவர் நந்தகோபால். அவர் தாஸ். அவர் பத்மநாபன்.அவர் துரைராஜ் நாயக்கர்.
நான் கல்யாணி. கல்யாணி மட்டும். கல்யாண்ஜி அல்ல. வண்ணதாசன் அல்ல.
அவ்வளவுதான்.
எழுதுகிற நேரம் தவிர்த்து, ஏன் அப்போதும் கூட, நான் கல்யாணி ஆகத்தானே இருக்கமுடியும். அவன் அவனுக்குப் புழங்கச் சௌகரியமான இடங்களிலும் வாழச் சுமூகமான மனிதர்களுடனும் தானே நடமாடிக்கொண்டிருப்பான். தன் முப்பதுக்களின் பேரொளியுடன் விரைந்து செல்லும் திருவனந்தபுரம் நெடுஞ் சாலைப் பைத்தியம் என, அவனைப் பைத்தியம் என எப்படிச் சொல்லப் போயிற்று, நெடுஞ்சாலை மனிதனைப் போல, இந்த வாழ்வின் சராசரிப் போக்குவரத்திலிருந்து விலகி, நமக்கு அறியமுடியாத ஒரு திக்கை அறிந்து அடைய விரைவு கொள்ளும் , விசையுறும் பகுதியும் என்னைப் போன்ற எல்லாச் சாராசரிகளிடமும் இருக்கும்தானே.
ஒரு முழுத் தென்னங்கீற்றுத் தோகையில், சற்றுப் பிய்ந்த ஒரே ஒரு கீற்று மட்டும் காற்றில் ஒரு பெரு நடனமிட்டு, அதன் ஊழியை அது அறிந்து ஊர்த்துவமிட்டதை எங்கள் நிலக்கோட்டை வாடகை வீட்டுத் தென்னையில் பார்த்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, அதன் மேல் பசுமை மினுமினுப்பதை, அது மிகுந்த நிம்மதியுடன் இருப்பதையெல்லாம் நான் அந்தத் தென்னங்கீற்றின் இருப்பின் வழியும் தவிப்பின் வழியும் அறிந்திருக்கிறேன்.
மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படியே வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும், சிறகொடிக்கும் வாழ்வும் உடையவர்களையே நான் அதிகம் அறிந்திருக்கிறேன்.
அவர்கள் எல்லோரும் இலக்கியம் என வரையறுக்கப்படும் பிரதேசங்களுக்கு அப்பாலும், இலக்கியவாதிகள் என அறியப்படும் இடவலமாற்றமுற்ற பிம்பங்களை விட்டு இயல்பாகவே தூர விலகியும் இருக்கிறார்கள்.  அவர்கள் வாசித்த புத்தகங்கள், அறிந்த தத்துவங்கள், பார்த்த ஓவியங்கள், கேட்ட இசையெல்லாம் மிகக் குறைவு.
என்னுடையதைப் போன்ற தெருக்களில், வளவு வீடுகளில், என்னைப் போன்றே சில அரிய பெண்களின் கனிவால் முலையூட்டப்பட்டு வளர்ந்தவர்கள். பெரிய வெற்றிகளை அறியாது, சிறிய தோல்விகளுடன் சதா ரதவீதிகளில் அலைபவர்கள். வருடத்திற்கு ஒருமுறை ஓடும் தேரும்,தீராமல் ஓடும் நதியும் அவர்களைப் பத்திரப் படுத்தி விடுகின்றன. சொரசொரத்த நாக்கால் நக்கும் கிழட்டுத் தெருப் பசுவுக்கு அவர்கள் தங்கள் முழங்கை கொடுத்து நிற்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பட்டாசலில் குப்புறக் கவிழ்ந்து படுத்திருக்கும் குழந்தைப் படங்கள் தொங்குகின்றன.
ஒரு ஈடு இட்டிலி வெந்து எடுத்துத் தட்டும் போது உண்டாகிற பக்கத்து வீட்டு வாசனை அவர்களுக்குப் பிடிக்கிறது.  அவன் இன்னும் பீர்க்கம் பூ பறித்துக் கொடுக்க மார்கழிப் பனியில் எழுந்திருக்கிறான். அவனுக்கு எதிர்த்த வீட்டு உதிரவாசகம் அண்ணாச்சி வீட்டு மதினியின் கனத்து சரிந்த மார்பு அப்படிப்பிடிக்கும். ஆனால் அதைப் பற்றி மறந்தும் ஒரு வார்த்தை கூட யாரிடமும் அவன் பேசவே மாட்டான்.
அவர்களில் ஒரு முதிர்ந்த பாட்டையா ’மண்டையைப் போடுகையில்’ அனேகமாக அவர்கள் எல்லோருமே மயானம் வரை போகிறார்கள். சாராயம் அருந்திய ஒரு கோமு அண்ணன்,
அங்கு நிற்கும் மரத்தின் வயது என்ன எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறான். அன்றைக்கும் கருநீல எருக்கலம் பூக்களின் மீது ஆரஞ்சுநிற வண்ணத்துப் பூச்சி பறக்கிறது
எனக்குக் கடிதம் எழுதுகிறவர்களும், நான் கடிதம் எழுதுகிறவர்களும் இவர்களில் ஒருவன் அல்லது ஒருத்திதான். இவர்களில் சிலர் கதையோ கவிதையோ எழுதுகிறார்கள் அல்லது வாசிக்கிறார்கள். இவர்கள் ஆறுதல் சொல்கிறார்கள். அல்லது இவர்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. தான் ஆறுதல் சொல்கிறோம் என்பதும், தனக்கு ஆறுதல் தேவைப் படுகிறது என்பதும் அவர்கள் அறியாதே அதைச் செய்கிறார்கள். மிகுந்த எளிமையும் மிகுந்த உண்மையும் உடையவர்களை நீங்கள் ‘அப்பிராணிகள்’ என்று சொல்வீர்கள். அந்த அப்பிராணியின் சொற்களை நான் சந்தேகிப்பதில்லை..
அவர்களின் அப்பட்டமான வரிகளை நம்புகிறேன். தன்னையும் பிறரையும் நம்புகிறவர்கள் மட்டுமே, இப்படிக் கடிதங்கள் பெறுவதையும் எழுதுவதையும் நம்புகிறார்கள். இவர்கள் தம்முடைய மூளைச் சாம்பலின் வழி எந்தக் கதவுகளையும் திறந்துவிடுவதில்லை. தர்க்கங்களின் மூலம் நுட்பமான சிடுக்குகளை அகற்றி, எந்தக் கானல் தீர்வுகளையும் இந்தக் கடிதங்களின் மூலம் முன்மொழிவதில்லை. ஒரு தாயக் கட்டம் விளையாடுகிற பிற்பகல் உங்களுக்கு என்ன விடுதலை தரும்? ஒரு பொதுப் பூங்காவில் அசைகிற ஆளற்ற ஊஞ்சல் உங்களுக்கு எப்போதோ பார்த்த எந்த விழுதசைவை ஞாபகப் படுத்தும்? நீங்கள் பற்றாத கையைப் பற்றவும், தொடாத தோளைத் தொடவும் ஏதுவான ஒரு உடல்மொழியை உங்கள் நெரிசல்மிக்க தினசரியின் எந்தக் கணம் தரும்?  காய்கறிச் சந்தையில் உங்கள் பாதத்தின் கீழ் நசுங்கும் தக்காளியின் விதைகளை உற்றுப் பார்க்கும் சற்று நேரத்தில் நீங்கள் உணரும் உன்னதம் எது? இவையே இவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பரிமாறிக்கொள்ளப்பட்டன.
எனக்கு இந்தப் பகிர்தல் இன்றளவும் தேவைப்படுகிறது. பரிமாறலின் வழி அடையும் ஆசுவாசம் அல்ல, நிறைவு எனக்கு முக்கியம். ஒரு சிறு கணத்தின் முழுமையில் என் எல்லா வெண்ணிதழ்களும் மலர்ந்துவிடுகின்றன என்பதால் யாருக்காவது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். யாராவது எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அது ஒவ்வொன்றும் ஒரு பருவம் போலும். அந்தந்தப் பருவத்தில் ஒருத்தர் தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். ஒருத்தருக்குத் தொடர்ந்து நான் எழுதுகிறேன். வல்லிக்கண்ணனுக்கு, நெடுங்குளம் மு.பழனிக்கு, ராமச்சந்திரனுக்கு, பரமனுக்கு, ந,ஜயபாஸ்கரனுக்கு, கோலார் அன்பழகனுக்கு, பமேலா ராதாவுக்கு, சண்முகவடிவுக்கு, லிங்கத்திற்கு, ஆனந்தனுக்கு, அசோகனுக்கு, ஜெயபாலுக்கு, ஆர். பாலுவுக்கு, ஸ்ரீதேவிக்கு, சின்னக் கோபாலுக்கு, ஜி. குப்புசாமிக்கு, தேன் மொழிக்கு, கே.கே.ராஜன் அண்ணனுக்கு, பாவண்ணனுக்கு, திருமுகமலர்ந்தபுரம் செல்வராஜுவுக்கு, இளையபாரதிக்கு, சாம்ராஜுக்கு, முத்துமணிக்கு என்று நான் விரும்புகிறவர்களுக்கும் என்னை விரும்புகிறவர்களுக்கும் இடையே எவ்வளவு கடிதங்கள்.
இங்கே சொல்ல முடிந்தவர்கள் போல, சொல்ல முடியாதவர்களுக்கும் நான் எழுதியிருப்பேன். பிரசுரிக்க முடிந்தவை போல பிரசுரிக்க முடியாத கடிதங்களும் இருக்கும். நான் உயிருடன் இருக்கும்போது எழுதிய சில வரிகள் என் உயிரறக் காத்துக் கொண்டிருப்பதாக, அல்லது அப்போதும் அவற்றின் காத்திருப்பை முடிக்க முடியாத்தாக, பூட்டிச் சாவியை வீசி எறிந்து தொலைத்தஒரு அந்தரங்கத்தின் பேழையில் இருக்கலாம். கோபுரத்தில் முளைத்த அரசங் கன்றுகள், சில நேரத்து வெயிலில் மினுமினுக்கும் ஒரு குறிப்பிட்ட ஒளிக் கணத்தில், கோபுரத்தையும் விட அழகாகிவிடுவதில்லையா, அது போல ஒன்று இரண்டு.
இந்தக் கணினி வந்த பிறகும், மின்னஞ்சல் கற்ற பிறகும் நான் மின்கடிதங்கள் அனுப்பிக் கொண்டேதான் இருக்கிறேன். மரபின் மைந்தன் முத்தையாவுக்கு, ரவீந்திரனுக்கு, எஸ்.ராமகிருஷ்ணனுக்கு, ஹமீதுக்கு, சக்திஜோதிக்கு, நா.முத்துக்குமாருக்கு,மதுமிதாவுக்கு, சலாகுதீன் சாருக்கு, இவர்கள் எல்லோரையும் விட, சமீபத்தில் மறைந்த கணபதி அண்ணனுக்கு எனநிறைய நிறையவே அனுப்பியிருக்கிறேன்.
என் கதைகளின் கவிதைகளின் எண்ணிக்கையை விட, நான் எழுதியிருக்கிற, எழுதிக்கொண்டிருக்கும் கடிதங்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமானதுதான். என் கதைகளில், கவிதைகளில் உணரப்படும் உண்மையை விடவும் என் கடிதங்களின் வழி நான் உணர்த்திய உண்மைகள் அதிகம். என்உண்மை இப்படியிருக்க, இருபது வருடங்களாகக் கேட்கிறார்கள் சிலர், இன்னும் சிலரைப் பார்த்து,
‘இன்னும் நீ வண்ணதாசன் கதைகளைத் தாண்டவே இல்லையா?’

‘இன்னும் நீ கல்யாண்ஜியின் கவிதைகளைத் தாண்டவே இல்லையா?’
இப்போது, இந்த இரண்டாவது கடிதத் தொகுப்பின் மூலம், சுலபமாக அவர்கள் கேட்க, மேலும் ஒரு கேள்வியையும் அளிக்கிறேன்.
‘இன்னும் கல்யாணியின் கடிதங்களை நீ தாண்டவே இல்லையா?’
யாரும் யாரையும் தாண்டட்டும்.
நான் யாரையும் தாண்ட முயல்வதில்லை.
என்னையே நான் கூட.
%
எல்லோர்க்கும் அன்புடன்,
கல்யாணி.சி
15.11.2011.
19.சிதம்பரம் நகர்,
பெருமாள் புரம், திருநெல்வேலி

 

(“சில இறகுகள், சில பறவைகள்” என்ற பெயரில், என்னுடைய
கடிதங்களின் புதிய தொகுப்பு ஒன்றை, சந்தியா பதிப்பகம்
வெளியிடுகிறது.)

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் முன்னுரைகள், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to சில இறகுகள், சில பறவைகள்” வண்ணதாசன் கடிதங்களின் புதிய தொகுப்பு முன்னுரை

 1. தனபாலன் சொல்கிறார்:

  மிகவும் அருமை!
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  சிந்திக்க :
  “உங்களின் மந்திரச் சொல் என்ன?”

 2. nilaamaghal சொல்கிறார்:

  அவன் அவனுக்குப் புழங்கச் சௌகரியமான இடங்களிலும் வாழச் சுமூகமான மனிதர்களுடனும் தானே நடமாடிக்கொண்டிருப்பான். //

  தன்னையும் பிறரையும் நம்புகிறவர்கள் மட்டுமே, இப்படிக் கடிதங்கள் பெறுவதையும் எழுதுவதையும் நம்புகிறார்கள்//

  ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, அதன் மேல் பசுமை மினுமினுப்பதை, அது மிகுந்த நிம்மதியுடன் இருப்பதை//

  மனிதர்கள் தவித்துக் கொண்டிருக்கும்படியே வாழ்க்கை இருக்கிறது. துடிப்பும் உயிர்ப்பும் மிக்கதாகவே அவர்கள் மனம் இருக்கிறது. தூண்டப்பட்ட மனமும், சிறகொடிக்கும் வாழ்வும் உடையவர்களையே நான் அதிகம் அறிந்திருக்கிறேன்.//

  நான் உயிருடன் இருக்கும்போது எழுதிய சில வரிகள் என் உயிரறக் காத்துக் கொண்டிருப்பதாக, அல்லது அப்போதும் அவற்றின் காத்திருப்பை முடிக்க முடியாத்தாக, பூட்டிச் சாவியை வீசி எறிந்து தொலைத்தஒரு அந்தரங்கத்தின் பேழையில் இருக்கலாம். கோபுரத்தில் முளைத்த அரசங் கன்றுகள், சில நேரத்து வெயிலில் மினுமினுக்கும் ஒரு குறிப்பிட்ட ஒளிக் கணத்தில், கோபுரத்தையும் விட அழகாகிவிடுவதில்லையா//

  யாரும் யாரையும் தாண்டட்டும்.

  நான் யாரையும் தாண்ட முயல்வதில்லை.

  என்னையே நான் கூட.//

  பாப‌நாச‌ம் அருவியில் த‌லைகொடுத்த‌ திக்குமுக்காட‌ல் வாசிப்பின்போது. எவ்வ‌ள‌வு திண‌றினாலும் அருவி அலுப்ப‌தேயில்லை அனுப‌விப்ப‌வ‌ர்க‌ளுக்கு.

 3. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  மிகுந்த எளிமையும் மிகுந்த உண்மையும் உடையவர்களை நீங்கள் ‘அப்பிராணிகள்’ என்று சொல்வீர்கள். அந்த அப்பிராணியின் சொற்களை நான் சந்தேகிப்பதில்லை..

  அவர்களின் அப்பட்டமான வரிகளை நம்புகிறேன். தன்னையும் பிறரையும் நம்புகிறவர்கள் மட்டுமே, இப்படிக் கடிதங்கள் பெறுவதையும் எழுதுவதையும் நம்புகிறார்கள். இவர்கள் தம்முடைய மூளைச் சாம்பலின் வழி எந்தக் கதவுகளையும் திறந்துவிடுவதில்லை. –

  திருப்பதி மலைக் கோவிலில் அப்பிராணி கிராமத்து பக்தர்களைக் கண்டுள்ளேன். அவர்களுக்கு கோவிந்தா கோயிந்தா என்பது தவிர வேறு ஒன்றும் தெரியாது.,

  அவர்கள் ஏசி சேர் கார் வசதியா அல்லது எந்த ரயிலில் ஏசி இரண்டாம் வகுப்பில் லோயர் பர்த் கிடைக்கும், , எந்த லாட்ஜ்ல வெந்நீர்க் குளியல் வசதி , கோவிலில் எந்த டிக்கட் கவுண்டரில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பது குறித்து எல்லாம் அறியாதவர்கள், சிந்திக்க விரும்பாதவர்கள். ஆம் அவர்கள் அப்பிராணிகள் தான்.

  அதனால் தான் வெங்கடாசலபதியும் அவர்களை மட்டுமே நமபுகிறார். அவர்களாலும் பெருமாளை நம்ப முடிகிறது.
  அவர்களால் இடையே நடக்கும் உரையாடல்கள் இன்றைய இணைய உரையாடல்களைவிட வேகமானவை,(faster than Blackberry’s speed)

 4. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமையான, என்னை ஈர்த்த எழுத்துகள்.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.
  மிக்க நன்றி ஐயா.

 5. vaanambadigal சொல்கிறார்:

  புதிய தொகுப்புகள் என்னென்ன வருகிறது. பதிப்பக முகவரி, கிடைக்குமிட முகவரியோடு ஒரு இடுகை போடுங்கள் ஐயா. வண்ணதாசன் கடிதங்களுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். தகவல் சொல்லக் கூட முடியவில்லை கடைகளால்.

 6. R.Raveendran சொல்கிறார்:

  தென் காசி , காசி விஸ்வநாதர் கோவில் கோபுர வாசலில் வீசும் தென்றல் போல சுகமானது வண்ணதாசன் அவர்களின் கடித வரிகள்.

  ஒரு பறவையின் இறகைபோல அந்த வரிகள் நம் வலிகளை வருடும்.

  காலத்திற்கேற்ப விலாசங்கள் மாறலாம் .. ஆனால் அவர் எழுதுவது நம் எல்லோருக்கும்தான் …

  சில இறகுகள் , சில பறவைகளுக்காக காத்திருக்கிறேன் …

  காதலியின் கடிதத்திற்காக காத்திருப்பதை போல….

 7. jaghamani சொல்கிறார்:

  அவர்கள் எல்லோரும் இலக்கியம் என வரையறுக்கப்படும் பிரதேசங்களுக்கு அப்பாலும், இலக்கியவாதிகள் என அறியப்படும் இடவலமாற்றமுற்ற பிம்பங்களை விட்டு இயல்பாகவே தூர விலகியும் இருக்கிறார்கள். அவர்கள் வாசித்த புத்தகங்கள், அறிந்த தத்துவங்கள், பார்த்த ஓவியங்கள், கேட்ட இசையெல்லாம் மிகக் குறைவு.

  ரசனையான கவனிப்பு.. பாராட்டுக்கள்.

 8. R.Raveendran சொல்கிறார்:

  அன்பின் எழுத்துகள்

  எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை

  யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று

  வேண்டும் எனக்கு. சின்ன

  குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு

  உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்

  எங்கு இருக்கிறது அது

  எங்கும் இல்லை

  என் நினைவுகளில் அது வளரட்டும் என்று

  கடந்து செல்லும் அந்திக் காற்றில்

  விட்டுவிடச் செல்கிறேன்

  என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது

  உன் நிழல்

  வெளியே வெளியே தெரிந்தாலும்

  நிழல்கள்

  ஒளிந்திருப்பதற்கு

  உடலைத் தவிர வேறு இடம்

  ஏது

  – தேவதச்சன்

 9. யாரும் யாரையும் தாண்டட்டும்.
  நான் யாரையும் தாண்ட முயல்வதில்லை.
  என்னையே நான் கூட – வண்ணதாசன்.
  இந்த முன்னுரையை வாசித்ததும் அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் போலிருக்கிறது. இப்போதெல்லாம் கடிதம் எழுதுவது அருகி வருகிறது. தபால்காரரைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. எனக்கு எப்போது தபால் வந்தாலும் அதை வீட்டில் கொடுத்துவிட்டு என்னை வழியில் பார்த்தால் சொல்லும் எங்க ஊர் தபால்காரரது அன்பு மறக்க முடியாது. பகிர்விற்கு நன்றி.

 10. வேல்முருகன் சொல்கிறார்:

  நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s