சின்னு எனும் சங்கீதம்

சின்னு எனும் சங்கீதம்

எஸ்.ராமகிருஷ்ணன்

வாழ்ந்து கெட்டவர்கள் எப்போதுமே தங்கள் கண்களில் மாறாத துக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மறைக்க முயன்றாலும் கடந்தகாலம் அந்த முகங்களில் மாறாத சோகமாகப் படிந்துதானிருக்கிறது. சொற்களை அளந்து பேசுவதோடு சிரிப்பைக் கூட அளவாகவே வெளிப்படுத்துகிறார்கள். அதுவும் பெண்களாக இருந்துவிட்டால் அவர்கள் கூந்தலில் கூட அந்த வேதனை ஒட்டிக் கொண்டிருக்கிறது. நடை மாறிவிடுகிறது. விருப்பமான மனிதர்களைச் சந்திப்பதைக் கூட தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒரு குடும்பத்தின்  வீழ்ச்சி என்பது எண்ணிக்கையற்ற நினைவுகளின் சிதறடிப்பு. அது வெறும் நிகழ்வல்ல. மாறாக, புயலால் முறிந்த மரம். இல்லாததை அறியாமல் தூரத்துப் பறவைகள் அதே இடத்திற்கு வந்து வானில் தத்தளித்த படியே வட்டமிடுவதைப் போல சொல்ல முடியாதவை.

சந்தோஷமான காலத்தில் தவறுகள் கூட அழகாகவே தெரிகின்றன. ஆனால் வீழ்ச்சியான காலத்திலோ எதிர்பாராத மகிழ்ச்சி கூட தேவையற்ற ஒன்றாகவே படுகிறது. அது மனிதர்களின் இயல்பை மாற்றிவிடுகிறது. சினமும் உரத்த வார்த்தைகளும் சச்சரவும் சண்டைகளும் அழுகையும் வீடு நிரம்பி சேர்ந்துவிடுகின்றன. ஒரு நாள் என்பது நீண்டதாகிவிடுகிறது. அதைக் கடந்து செல்வதற்குள் எரிச்சல்படுகிறார்கள். முடிந்தால் அதைத் தாண்டிப் போய்விட வேண்டும் என்று எத்தனிக்கிறார்கள்.

பெண்களால் துக்கத்தை மறைத்துக் கொண்டு இயல்பாக வாழ்ந்துவிட முடிகிறது. அந்த வகையில் ஆண்கள் பலஹீனமானவர்கள். அவர்கள் சந்தோஷத்தைக் கொண்டாடப் பழகியிருக்கிறார்கள். வேதனைகளைச் சந்திக்கும்போது உடைந்து போய் விடுகிறார்கள். சந்தோஷக் காலத்தில் இருந்ததைவிட கஷ்ட காலத்தில்தான் பெண்ணின் தேவையை ஆண் அதிகம் உணருகிறான். ஒரு அகல்விளக்கைப் போல பெண் தன்னிடமிருந்து வெளிச்சத்தை அவனது உலகிற்குள் பரவவிடுகிறாள். அந்த வெம்மைதான் வாழ்வின் மீது ஒருவனை நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

பெண்களின் தோற்றத்திற்கும் மனஇயல்பிற்கும் தொடர்பிருப்பதேயில்லை. அது ஒரு விசித்திரம். சந்தித்துக் கொண்ட நிமிசத்தில் இரண்டு பெண்கள் ஒன்றுகூடிவிடுகிறார்கள். பிரிக்க முடியாத நட்பு கொண்டவர் போலாகிவிடுகிறார்கள். அதுபோல பிரிந்துபோன பிறகு அதைப் பற்றிய உள்நினைப்புகளை வெளிக்காட்டிக் கொள்வதுமில்லை. இந்த நீள்கதையில் சின்னுவும் கதை சொல்பவரின் மனைவியும். சந்தித்துக் கொள்ளும் அந்த தருணமும் அதன் நெகிழ்வும் மணலில் ஈரம் படிந்து கொள்வதைப் போல அத்தனை நெருக்கமாக உணர முடிந்தது.

பல வருசத்திற்குப் பிறகு இரண்டு பெண்கள் சந்தித்துக் கொள்வதை அருகில் இருந்து பாருங்கள். அவர்கள் காலத்தை ஒரே நிமிசத்தில் அர்த்தமற்றுப் போகச் செய்து அடுத்த நொடியாக்கியிருப்பார்கள். ஒருவரையொரவர் சந்தித்துக் கொள்ளாத அத்தனை வருசங்களையும் பற்றிப் பேசிப் பேசி கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டிருப்பார்கள். துயரத்தை அழுது தீர்த்துக் கொள்கிறார்கள்.  பெண்களின் உலகை மிக நுட்பமாக அதன் தனித்துவத்துடன் தீராத அழகும் இயல்புமாகத் தனது கதைகளில் வெளிப்படுத்தியவர் வண்ணதாசன்.

வண்ணதாசன் நாவல்கள் எழுதியதில்லை. அவர் எழுதியதில் நீண்ட கதை என சின்னுமுதல் சின்னுவரை குறிப்பிடலாம். இது 2001ம் ஆண்டு வெளியானது. ருஷ்ய சிறுகதைகளின் அளவில சொன்னால் இது ஒரு சிறுகதையே. ஆனால் தமிழில் சிறுகதை என்பது பத்தோ பதினைந்தோ பக்கங்களில் முடிந்து விடக்கூடிய ஒன்று என்பதால் இதை ஒரு நீள்கதை என்று வகைப்படுத்தலாம்.

வண்ணதாசனின் ஆகச்சிறந்த கதைகளில் ஒன்றாக நான் சின்னு முதல் சின்னுவரை தேர்வு செய்வேன்.. அத்தனை நுட்பம். செறிவு மற்றும் கவித்துவம். கதையை அவர் சொல்லும்போது கூடவே நாமும் அந்தக் காட்சிகளை, மனிதர்களை அறிமுகம் செய்துகொள்ளத் துவங்குகிறோம்.

வண்ணதாசனின் கதாபாத்திரங்கள் நாம் வாழ்வில் சந்தித்த மனிதர்களே. ஆனால் நிஜவாழ்வில் அவர்களை இவ்வளவு நெருக்கமாக, அந்தரங்கமாக அறிய முடிந்ததில்லை. அவர் கதைகளின் வழியே அவர்களின் மனக்குகைக்குள் நடந்து செல்கிறார். அதன் இருண்ட பக்கங்களையும், ரகசியங்களையும் நமக்கு அறி முகம் செய்து வைக்கிறார். பலநேரங்களில் அவர்களது தனிமையும் சோகமும் நம்மைக் கவ்விக் கொள்கின்றன. அன்பு ஒன்றுதான் அவர்களின் தீராத ஆதங்கம்.

அன்பின் பொருட்டே அவரது கதாபாத்திரங்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். பகிர்ந்து கொள்கிறார்கள். கூடி வாழ்வதில் மிகுந்த விருப்பம் கொண்ட மனதுதான் இந்தக் கதைகளை எழுதுகிறது. ஏன் பிரிகிறோம் என்ற வருத்தமில்லாமல் அவர் கதைகளில் ஒருவர் கூட பிரிந்து போனது கிடையாது. இதைச் சிலர் மிகையுணர்ச்சி என்று சொல்லக்கூடும். ஆனால் வாழ்க்கை மிகைஉணர்ச்சிகளின் கலவையாகத் தானே இருக்கிறது.

இன்றைக்கும் அழுது ரகசியமாகக் கண்களைத் துடைத்துக் கொள்ளும் ஆண்களும், தெருவே வேடிக்கை பார்க்க மகள் திருமணமாகி புருஷன் வீட்டிற்குப் போகும் நாளில் தெருவே கூடி வேடிக்கை பார்ப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வெடித்து அழும் அம்மா- மகளைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறோம். வாழ்க்கையின் வசதிகள் மாறியிருக்கின்றன. அடிப்படை உணர்ச்சிகள் மாறவில்லை. ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அது தன்னை அறியாமல் மீறி வெளிப்படும்போது மிகை என்றோ குறை என்றோ எவரும் பாகுபடுத்துவதில்லை.

வண்ணதாசன் தன்னைச் சுற்றிய உலகின் மீது அதீத காதல் கொண்டவர். அது மனிதர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சிறு பூச்செடிகள் துவங்கி நாய்க்குட்டிகள் வரை அவர் கண்ணில் படும் அத்தனையும் ஈர்ப்பு உடையதாகவே இருக்கிறது. அதை ரசிப்பதோடு நின்றுவிடாமல் அதைப் புரிந்து கொள்ளவும் கவனம் கொள்ளவும் விரும்புகிறார். அப் படியே செயல்படுகிறார். அது அவரது கதைகளிலும் வெளிப்படுகிறது.

ஊரும், தெருவும் அதன் மனிதர்களும் சொல்லச்  சொல்ல அலுக்காதவை என்பதை வண்ணதாசன் கதைகள் நிரூபணம் செய்கின்றன. அந்த மனிதர்கள் ஊரைக் காலி  செய்து வேறிடம் போயிருக்கக் கூடும். அவர்கள் நினைவில் இருந்து கூட ஊர் மறைந்திருக்கும். ஆனால் வண்ணதாசன் அந்த மனிதர்களை மறப்பதில்லை. அது வண்ணதாசன் என்ற எழுத்தாளரின் சிறப்பு என்று தனித்துச் சொல்லமுடியாது. மாறாக, ஊரின் நினைவுகளைத் தனக்குள் கொண்ட கலைஞர்கள் அத்தனை பேரும் அப் படிதானிருக்கிறார்கள். அவர்கள் நினைவில் கடந்த காலம் ஒளிர்ந்த படியேதானிருக்கிறது.

மாறும் காலம் அதன் தொன்மையை  சிதறடிக்கும்போது அவர்கள் உள்ளுற அழுகிறார்கள். மாற்றத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த காலத்தின் சுவையை அவர்கள் மறக்க முடிவதேயில்லை. நினைத்து நினைத்து சந்தோஷம் கொள்கிறார்கள் அல்லது துயரப்படுகிறார்கள். திருநெல்வேலியும் அதன் மனிதர்களும் வண்ணதாசன் எழுத்தின் பிரிக்க முடியாதவை. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி அந்த மனிதர்களைக் காலத்தில் அழியாதவர்களாக்கியிருப்பதே வண்ணதாசனின் சிறப்பு.

சின்னுவின் கதையும் இப்படியானது தான். அந்தப் பெயரே அவளது சுபாவத்தை சொல்லி விடுகிறது. அது ஒரு சங்கீதம் போல கதை முழுவதும் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. நினைவில் தங்கிவிட்ட பெயர்கள் தங்கமீன்களைப் போல மிதந்து கொண்டேயிருக்கக் கூடியவை அந்தப் பெயர்கள் மட்டுமே பல நேரங்களில் போதுமானதாக இருக்கிறது. இந்தக் கதையில் வரும் சின்னுவும் அப்படிப்பட்டவள் தான்.

சின்னுவைப் பார்க்கப் போன முதல் நாளில் கதை துவங்கி அவளைப் பற்றிய விசித்திரமான தகவல்கள் வந்து சேர்ந்து இறுதியாக கையறு நிலையில் கண்ட சித்திரம் வரை விவரிக்கப்படுகிறது.

சின்னு தனது செயல்களால், மன இயல்பால் அழகியாக உயர்ந்து நிற்கிறவள். அவள் சராசரி பெண். ஆனால் சராசரியான மனது கொண்டவளில்லை. இயல்பில் அவளிடம் அன்பு உயர்ந்து நிரம்பியிருக்கிறது. சின்னுவைக் காணச் செல்லும்போது அவள் காட்டும் அக்கறையும் பேச்சும் நம் கண்முன்னே அவளை அறி முகம் செய்கிறது. திருநெல்வேலியின் அந்த வீதியும் வீடும் அதைக் காணச் செல்லும் மனிதனும் வார்த்தைகளின் வழியே நம் முன்னே நடமாடுகிறான்.

சின்னுவை ஏனோ முதல் அறி முகத்திலே எல்லோருக்கும் பிடித்துப் போய்விடுகிறது. அதுதான் அவளது சிறப்பு போலும். சின்னு சிரிப்பைத்தனதாக்கிக் கொண்டவள். அவளது சிரிப்பு சடசடவென பெய்யும் மழை போன்றது. அது அடுத்தவருக்குத் தொற்றிக்கொள்ளக் கூடியது.

அவள் சிரிப்பை விவரிக்கும்  வண்ணதாசன் ‘அது நிலா வெளிச்சம் போன்றது. தானும் அழகாகி, தான் விழுமிடத்தையும் மேலும் அழ காக்கிக் கொள்ளக் கூடியது‘ என்கிறார். எவ்வளவு கச்சிதமான விவரணை அது.

சின்னுவைப் பார்த்த முதல் சந்திப்பு அவளை மறுபடி பார்க்கத் தூண்டுகிறது. சிலரது சந்திப்பில் இது போன்ற தொக்கல் விழுந்து விடும். அது எத்தனை முறை சந்தித்தாலும் தீராது. கூடவே இருக்க வேண்டும் என்று உள்ளுற நச்சரிக்கத் துவங்கிவிடும். சின்னு அப்படித்தானிருந்தாள். அவள் ஆர்.கண்ணன் என்ற நண்பனின் மனைவி.

குடும்பத்தில் ஏதோ பிரச்சினை வந்து தன் சொத்தைப் பிரித்துக் கொண்டு கண்ணன் தனியே தொழில் செய்து பார்க்கிறார். அது எதிர் பார்த்தபடியே நடக்காமல் முடங்கி விட கடனாளியாகிறார். ஆண்களின் தவறுகள் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அது அவர்கள் குடும்பத்தின் இயல்பை உருமாற்றிவிடுகிறது. அப்படித் தான் சின்னு வாழ்விலும் நடக்கிறது. கண்ணனின் கடன்களால் தத்தளிக்கும் குடும்பத்தின் கவலைகளை சின்னு தனதாக்கிக் கொண்டு வாழ்கிறாள். அவளது சந்தோஷம் புழுதியில் விழுந்துகிடக்கும் கம்மலைப் போல மங்கி அடையாளமற்றுப் போய்விடுகிறது.

அதுவும் ஆர்.கண்ணனின் மறைவு அவளுக்குள் ஏற்படுத்திய வலி அவளை நிலைகுலையச் செய்கிறது.  துக்கம் கேட்க சின்னுவைப் போய் பார்க்க வேண்டும். ஆனால் அவளை எப்படி சந்திப்பது. அந்த மகிழ்வான முகத்தை எப்படி எதிர் கொள்வது என்ற தயக்கம் மேலோங்குகிறது. அது மரணத்தை விட கூடுதலான துயரமாக இருக்கிறது. ஆனாலும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாதே. மனைவியோடு அந்த வீட்டிற்குப் போய் துக்கம் கேட்க நினைப்பவரின் தடுமாற்றம் உன்னதமாக விவரிக்கப்படுகிறது.

சின்னு தான் நினைத்தது போல அப்பாவியில்லை. அவள் காரியக்காரி. மோசமான நடத்தை கொண்டவள் என்று கேள்விப்படும் தகவல்கள் அவன் மனதில் ஒட்டவேயில்லை. மாறாக, அதைக் கடந்து அவளைக் காணவேண்டும் என்ற வேட்கை எரிந்து கொண்டேயிருக்கிறது.

பெண்களைப் பற்றிய பொய்க் கதைகள் அவர்கள் இயல்பை மாற்றி விடுகின்றன. எல்லா பெண்களும் துர்கதைகளாலும் பொய்வதந்திகளாலும் ஏதாவது ஒரு நாளில் பிரச்சினையடைகிறார்கள். அப்போது அவளைப் புரிந்துகொள்ளத் தவறினால் அதன் இழப்பு அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியாக மாறிவிடும். எத்தனையோ குடும்பங்களில் அப்படி நடந்தேறியிருக்கிறது. யாவர் வாழ்க்கையும் நம்பிக்கையின் மீதுதான் நடந்து செல்கிறது. அந்த நம்பிக்கை சரியோ தவறோ, எந்தச் செயலாலும் மாறிவிடப்போவதில்லை. அந்த நம்பிக்கை துவளத் தொடங்கினால் குடும்பம் உடைய ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக, தனது துணையான பெண் மீது சந்தேகம் கொண்ட ஆணின் வீழ்ச்சி தவிர்க்கவே முடியாதது. ஒத்தல்லோ துவங்கி முந்திய நாள் தினத்தந்தி செய்திவரை அதைத்தான் நிரூபணம் செய்கின்றன.

வண்ணதாசனின் சின்னுமுதல் சின்னுவரை ஐம்பது பக்கங்களே கொண்டது. ஆனால் அதற்குள் எத்தனை வேறுபட்ட மனிதர்கள், சம்பவங்கள், நினைவுகள். வண்ணதாசன் கவிஞர், கூடுதலாக ஓவியர். ஆகவே அவர் சொற்களின் வழியே மனிதர்களை வண்ணமாக்கி காட்டுகிறார். அவரது கதை சொல்லும்முறை படுக்கையில் கிடந்தபடியே அருகாமையில் கதை கேட்பது போன்ற நெருக்கம் தரக்கூடியது. சின்னுவும் அப்படித்தான் விவரிக்கப்படுகிறாள்.

சின்னு ஒரு அபூர்வமான சங்கீதம். அது கேட்பவனை மயக்கக் கூடியது. நினைவு எப்போதுமே அழியாத சில வாசனைகளைக் கொண்டிருக்கிறது. அந்த வாசனைகளுக்காக ஏங்குகிறது. இந்த நீள் கதையும் அப்படியான நினைவின் நீங்காத வாசனையை வெளிப்படுத்துகிறது.

இந்தக் கதை ஒரு  புள்ளியில் முடிந்துவிடுகிறது. ஆனால் அங்கேயிருந்து வாசகன் சின்னுவைப் பற்றிய தனது அவதானிப்புகளை, கற்பனையைத் தொடரத் துவங்குகிறான். அது முடிவற்றது. எண்ணிக்கையற்ற சாத்தியங்களையும், நிகழ்வுகளையும் கொண்டது. ஒரு வகையில் அவன் சின்னுவைத் தன தாக்கி கொள்கிறான். அதுதான் இந்த நீள்கதையின் சிறந்த சாத்தியம். அதை உருவாக்கியதே வண்ணதாசன் எழுத்தின் வன்மை.

 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3065

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to சின்னு எனும் சங்கீதம்

  1. ramji_yahoo சொல்கிறார்:

    thanks for sharing

  2. ராகவன் சொல்கிறார்:

    அன்பு சுல்தான்,

    அருமையான பகிர்வு… அலாதியான பிரியக்காரர்கள்… ராமகிருஷ்ணனும், கல்யாண்ஜியும். மிக அற்புதமான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள். ஒருவரை பற்றி ஒருவர் எழுதும் போது வழியும் பிரியம் பற்றி சொல்லி மாளாது. சின்னு முதல் சின்னு வரை… பற்றிய மிக அழகான மதிப்புரை இது… சின்னுவை எல்லோருக்கும் பிடித்துவிடும் என்பது… வண்ணதாசன் அவர்களை எல்லோருக்கும் பிடித்துவிடும் என்ற கருத்துக்கும் ஒரே அர்த்தம் தான். சுஜாதா சொன்னது போல இவ்வளவு இயல்பாக எழுத வண்ணதாசனுக்கும், வண்ண- நிலவனுக்குமே இயன்ற விஷயம். எஸ்.ராவிற்கு எங்கள் அன்பும் நன்றியும்…

    ராகவன், கென்யா

பின்னூட்டமொன்றை இடுக